மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 3 செப்டம்பர், 2015

சமணம் பற்றி சில குறிப்புகள்



கருநாடக அரசுத் தொல்லியல் துறையினரால் வெளியிடப்பெற்ற எபிகிராபியா கர்நாடிகா என்னும் கல்வெட்டுத் தொகுதிகளை அவ்வப்போது படிப்பதுண்டு. சமணம் பற்றிய பல குறிப்புகள் அவற்றில் காணப்படுகின்றன. சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

  • ஹொய்சள அரசன் விஷ்ணுவர்த்தனின் படைத்தலைவராக இருந்தவர் புனிசமய்யா(புணிசமய்யா) என்பவர் ஆவார். புணிச தண்டாதிபன் என அழைக்கப்பெறுகிறார். இவர் ஒரு ஜைனக்குடும்பத்தினர். இவர் படைத்தலைவர் பணியோடு அமைச்சர் பணியையும் இணைத்தே நடத்தியவர். எனவே இவருக்கு சந்திவிக்ரஹி  என்னும் பெயர் அமைந்தது. ஆங்கிலத்தில் சந்திவிக்ரஹி என்பதற்கு “MINISTER FOR WAR AND PEACE”   என்று மேற்படி நூலில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சாமராஜபுரத்தில் உள்ள பழமையான பார்சுவ நாத பசதியைக் கட்டுவித்தவர் இவரே. எனவே, இது இவர் பெயரால் “புணிச ஜினாலயம் என்று அழைக்கப்பெறுகிறது.

  • அஜித முனீந்திரர் என்பவர் திராவிடச் சங்கத்தைச் சேர்ந்த ஒரு சமண முனிவர். திராவிடச்சங்கம், திராவிளச் சங்கம் என்று மேற்படி நூலில் குறிக்கப்பெறுகிறது. இதேபோல், திராவிடான்வயம், அருங்களான்வயம் மூலசங்கம், கொண்டகுந்தான்வயம்  ஆகிய சமண அமைப்புகளின் பெயர்கள் குறிக்கப்பெறுகின்றன. சங்கம் என்பதிலும் கணம் (க3ணம்), கச்சா (க3ச்சா), ஆகிய உட்பிரிவுகள் இருப்பதைக் காண்கிறோம். காட்டாக, மூலசங்கத்தில் கானூர் கணம், தேசி கணம், திந்த்ரினிக கச்சா, புஸ்தக கச்சா ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இவை தவிர காலோக்ர கணம் (காலோக்3ர க3ணம்), சேன கணம் ஆகிய பெயர்களும் காணப்படுகின்றன. (மொத்தம் எத்தனை சங்கங்கள், எத்தனை உட்பிரிவுகள் உள்ளன என்பதை அறிந்தவர் விளக்கக் கூடும்.)

  • பசதி (ப3சதி3) என்பது ஜைனக்கோயிலைக்குறிக்கும் சொல்லாகும். கோயிலை ஒட்டி மடமும் இருப்பதுண்டு. ஜினாலயம் என்னும் பெயரும் இருப்பதை மேலே பார்த்தோம். ஒரு சில கல்வெட்டுகளில் “சைத்யாலயம்  என்னும் தொடரும் காணப்படுகிறது. சைத்யம்என்பது பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய இரு சமயங்களுக்கும் பொதுவான வழக்காக இருப்பதாகத் தோன்றுகிறது.  ஒரு கல்வெட்டில், கி.பி. 1872-இல் சாலிகிராமம் என்னும் ஊரில் பட்டணசெட்டி ஒருவர் புதிய “பசதி ஒன்றைக் கட்டுவித்து அனந்தநாதரின் திருமேனியை எழுந்தருளச்செய்தமையும், மற்றொரு கல்வெட்டில், அவரே கி.பி. 1878-இல் அதே ஊரில் “சைத்யாலயம் ஒன்றைக் கட்டுவித்து அனந்தநாதரின் திருமேனியை எழுந்தருளச்செய்தமையும் காணப்படுவதை நோக்குகையில், ‘பசதி”  என்பது இருப்பிடத்துடன் கூடிய சமணக்கோயில் என்றும், “சைத்யாலயம் என்பது சமணக்கோயில் மட்டுமே என்றும் கருத இடமளிக்கிறது. (பட்டண செட்டி என்பவர் ஒரு வணிகர் என்றும் பெரும்பாலான வணிகர், சமணத்தைச் சார்ந்திருந்தனர் என்றும் கொள்ளலாம்.)
  • ஜைனத்துறவிகளின் சமாதி, நிசீத்தி(நிசீத்3தி4) என்று அழைக்கப்படுகிறது.
  • சல்லேகனை என்னும் வடக்கிருந்து உயிர்துறத்தல் என்பதுபோல, சுமரணவிதி என்னும் நோன்பு முறையும் வழக்கத்தில் இருந்துள்ளது. அதேபோல், சன்யசனம் என்னும் உண்ணா நோன்பிருந்து சமணத்துறவிகள் உயிர் துறத்தலும் வழக்கத்தில் இருந்துள்ளது. சாமரஜநகர் அருகிலுள்ள மங்கலம் கிராமத்துக்கல்வெட்டு குணநந்தி கர்மபிராகிருதி பட்டாரர் என்னும் சமணர் முப்பத்தொரு நாள்கள் சன்யசன உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த செய்தியைச் சொல்லுகிறது.
  • ஜைனர், கருநாடகப்பகுதியில் கன்னடமொழி மற்றும் கன்னட இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பெரும்பணியாற்றியுள்ளனர்.
  • சமணக்கல்வெட்டுகள்பத்ரமஸ்து ஜினசாசனாய எனத்தொடங்குகின்றன.
  • சமணத்துறவிகள் குகைத்தளத்தை இருப்பிடமாகக் கொண்டு உறைந்ததால் அவர்களை ‘குகைவாசி’, “குகை பட்டாரகர் என்றே மக்கள் அழைத்தனர்.
  • இலட்சுமிசேன பட்டாரகர் என்பவர் தில்லி, கொல்லாபுரம் (தற்போது மராட்டியத்தில் உள்ள கோலாப்பூர்?), ஜினகாஞ்சி, பெனுகொண்டா ஆகிய நான்கு ஊர்களுக்கும் சமணத்தலைவர் என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • ஹுஸ்கூரு என்னும் ஊரில் உள்ள தமிழ்க் கல்வெட்டு, கங்கர் தலைநகரான தலைக்காட்டில் “ஆனை பசதிஎன்னும் சமணக்கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது.
  • மைசூரில் உள்ள சாந்தீஸ்வர பசதியில் சர்வாண யக்‌ஷன், கூஷ்மாண்ட யக்‌ஷிணி ஆகியோரின் திருமேனிகள் இருந்தன.



து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக