மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கல்வெட்டுகள் உதிர்க்கும் செய்திகள்
புறவழிச்சாலை


         கல்வெட்டு நூல்களைப் புரட்டும்போது சில செய்திகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவ்வகையான சில செய்திகளை அவ்வப்போது பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

         மன்னார்குடி ஜயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு ஒன்றில் கண்ட செய்தி இங்கே தரப்படுகிறது. வணிகர்கள் தங்களுக்குள் “சமையம்” என்ற கூட்டமைப்பைக் கொண்டிருந்தனர். அதுபோன்ற ஓர் அமைப்பு சாரிகைக்கோட்டை என்னும் வணிக நகரத்தில் இருந்துள்ளது. அதில் அந் நகரத்தில் வணிகத்தில் ஈடுபட்ட நகரத்தாரும், நகரத்துக்கு வெளியே தமிழக ஊர்களுக்குள்ளும் தமிழகம் தாண்டியும் வணிகத்தில் ஈடுபட்ட நான்குதிசை  (நானாதிசை) பதினெண்விஷையத்தாரும் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் மன்னார்குடி ஜயங்கொண்ட சோளீசுவரர் கோயிலில் விக்கிரமபாண்டியன்” ன்னும் பெயரமைந்த திருமண்டபத்தில் ஒன்று கூடித் தீர்மானம் போட்டனர். சாரிகைக்கோட்டையில் இருந்த “விக்கிரமபாண்டியன் மடிகையில் வணிகச் சமையத்தின் சார்பாகத் தன்ம காரியம்” ஒன்று நடத்தும் தீர்மானம் அது. அந்த தன்ம காரியமாவது : சாரிகைக்கோட்டை நகரத்தில்  புகும் வணிகப்பொருள்களான மிளகுப்பொதி ஒன்றுக்கு உழக்கு (அளவுள்ள) மிளகும், புடவைக்கட்டு (துணிக்கட்டு) ஒன்றுக்கு ஒரு மாகாணிப்பணமும் வரி செலுத்தவேண்டும். இந்த வரிவருமானம் கோயிலின் திருப்பணிக்கு முதலாகக் ( capital கொள்ளப்படும். மேற்படி வரியானது, நகரத்தின் உள்ளே புகாமல் புறவழியாகக் கடந்துபோகும் வணிகப்பொதிகளுக்கும் வசூலிக்கப்பட்டது.
         
         இச்செய்தியில் நம்மை ஈர்க்கும் பொருண்மை எதுவெனில், தற்காலத்தில் இருப்பதுபோல் பண்டும் நகரத்துக்கு வெளியே புறவழிச்சாலைகள் இருந்துள்ளன என்பதும், வணிகப்பொருள்கள் போகுவரத்து இடையூறுகளின்றி  எளிதாக அப்புறவழிச்சாலையில் கொண்டுசெல்லப்பட்டன என்பதும்தான்.                  

புறவழிச்சாலை என்னும் பொருண்மை தவிர வேறு செய்திகளையும் இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். அவையாவன:

  • சாரிகைக்கோட்டையில் “விக்கிரமபாண்டியன்” என்னும் பெயரில் மடிகை இருந்துள்ளது. மடிகை என்பது வணிகக் கடைத்தெருவாகும்.
  • தற்கால னடைமுறையில் ஒரு சபை கூடித் தீர்மானம் போடுவதெனில் குறைந்த அளவு உறுப்பினர் எண்ணிக்கை தேவை. (ஆங்கிலத்தில் Quorum” என அழைக்கிறோம்). அவ்வாறே வணிகர் கூட்டமும் குறைவறக்கூடியது.
  • கோயில்களில் கூட்டம் நடத்துவதற்கேற்ற பெரிய அரங்குகள் (Hall) இருந்துள்ளன. அவற்றுக்குத் தனிப்பெயர்களும் இருந்தன. (இங்கே விக்கிரமபாண்டியன் திருமண்டபம்).
இறுதியாகக் கல்வெட்டுப்பாடத்தில் சில வரிகள் :

..............................................................சாரிகை
க்கோட்டையில் விக்கிரமபா
ண்டியன்மடிகையில் நான்குதிசை
ப்பதினெண் விஷையத்தோம்

..........................................................உடையார்
ஜயங்கொண்டசோளீச்வரமுடையார் திரு
முன் விக்கிரமபாண்டியன் திருமண்ட
பத்து நிறைவர நிறைந்து குறைவறக்கூ
டி


..............................................யிச்சாரிகைக்கோட்
டையில்ப்புகுதும் மிளகுப்பொதிக்குப்பொ
தியொன்றுக்கு உழக்கு மிளகும் புடவை
க்கட்டு ஒன்றுக்குப் பண மாகாணியும்

................................................திருப்ப
ணிக்கு உடலாவுதாகவும் உள்ளுப்புகாதே புற
வழி போமவையும் இப்படி கொள்ளக்கடவ
தாகவும் ...........................

துணை நின்ற நூல் : SOUTH-INDIAN INSCRIPTIONS Volume-VI


து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


அலைபேசி : 9444939156.

1 கருத்து: