மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 23 ஆகஸ்ட், 2017

கல்லணை மதகைச் செப்பனிட்ட ஆங்கிலேயர் காப்டன் ஜே.எல். கால்டெல்


முன்னுரை
இணையக் குழுக்களுள் ஒன்றான மின்தமிழ் குழுவின் அன்பர் ஒருவர் ஒரு கல்வெட்டுப் படத்தை வெளியிட்டு அதன் பாடத்தைப் படித்துத் தருமாறு கேட்டிருந்தார். அந்தக் கல்வெட்டு, பல சுவையான செய்திகளுக்கு அடித்தளமாய் இருந்தது. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.

கல்லணையில் ஓர் ஆஞ்சநேயர் கோயில்
கல்லணை வரலாற்றுப் புகழ்பெற்றது. சோழ மன்னன் கரிகாலன் கட்டியது. கல்லணையில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலின் ஒரு மூலையில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வரலாற்றுச் சிறப்புடையது. கி.பி. 1804-ஆம் ஆண்டு, கல்லணையில் இருக்கும் ஒரு மதகு ஆங்கிலேயர் ஒருவரால் செப்பனிடப்பட்ட செய்தியை அக்கல்வெட்டு சொல்கிறது.

                    கல்லணைக் கல்வெட்டு


கல்வெட்டின் செய்திகள்
கல்வெட்டஇன் படத்தை கீழே காணலாம். கல்வெட்டு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் ஏழு வரிகள் ஆங்கிலத்திலும், அவற்றை அடுத்து ஐந்து வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டின் பாடம் வருமாறு:

அ) ஆங்கிலக் கல்வெட்டின் பாடம்:

   1 Repaird this COLLING
       2  LAH & Erected the 268
       3  Upright Stones
       4   By Capt. J.L. Calddel
       5   A.D. 1804
 
ஆங்கிலக் கல்வெட்டு, கி.பி. 1804-ஆம் ஆண்டில் கல்லணையின் மதகு ஒன்றை ஆங்கிலேயரான காப்டன் ஜே.எல். கால்டெல் என்பவர் செப்பனிட்டதாகக் கூறுகிறது. செப்பனிடும் பணியின்போது 268 கற்கள் சீரமைத்து வைக்கப்பட்டன என்பதாகக் கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக அறிகிறோம். ஆங்கிலக் கல்வெட்டில் மதகு என்பதற்கு ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தாமல் தமிழ்ச் சொல்லான “கலிங்கு என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பானதொன்று. அதை ஆங்கில எழுத்துகளால் கலிங்  என்று எழுதியுள்ளனர். “கலிங்கு என்னும் சொல் மதகைக் குறிக்கும். இச்சொல், கல்வெட்டுகளில் மிகுதியாகப் பயின்றுவரும் சொல்லாகும். ஆங்கிலக் கல்வெட்டில் எழுத்துப்பிழை இருப்பதைக் காணலாம்.

)  தமிழ்க் கல்வெட்டின் பாடம்:

1 1804 இல் - த.ர
2 ராச (?) - கெவுணர்
3 மெண்டாரவற்க
4 ள் உத்திரவுப்படி
5  க்கி மகண ச- ராச -மே
6 ம்பன் ஜெம்சு  (?)
7.......................


தமிழ்க் கல்வெட்டு வரிகளிலிருந்து, முழுமையான செய்தியை அறிய இயலாது. சொற்றொடர்கள் முழுமையானதாக இல்லை. கி.பி. 1804-ஆம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. மதகு செப்பனிடுதல் பற்றிய சொற்றொடர்கள் இல்லை. அரசு ஆணையின்படி என்னும் தொடர் மூலம், செப்பனிடும் பணி அரசு ஆணையின்படி நிறைவேற்றப்பட்டது. என்பது அறியப்படுகிறது. தமிழ்க் கல்வெட்டில், ஆங்கில அதிகாரியின் பெயர் முழுமையானதாக இல்லை. அவருடைய பெயரின் முன்னொட்டாகவுள்ள “ஜே”  என்னும் எழுத்தின் விரிவான “ஜேம்சு”  என்பது குறிக்கப்பட்டுள்ளது. 1800 களில் “ஜே”  என்பது போன்ற நெடில் எழுத்துகளைக் குறிலாகவே எழுதும் வழக்கம் இருந்துள்ளது. முதல் வரியின் இறுதி எழுத்துகளும், இரண்டாம் வரியின்  முதலில் உள்ள ராச”  என்னும் எழுத்துகளும்,  சென்ற நூற்றாண்டு வரை மூத்த வயதினர் எழுதும் வழக்கப்படி மகா-ராஜ=ராஜ-ஸ்ரீஎன்பது போன்ற ஒரு தொடரைக் குறிப்பதாகலாம். 2, 3 , 4  வரிகளில் உள்ள  “கெவுணர்மெண்டாரவற்கள்என்பது கெவர்ண்மெண்(ட்)டாரவர்கள்”  என்பதன் பிழையான வடிவம் என்று கூறலாம்.  மேம்பன் என்னும் சொல்,  ”கேப்டன்என்பதைக்குறிப்பதாகலாம்.  ஐந்தாம் வரியில் காணப்படும் தொடரான மகண ச-ராச- என்பது, மீண்டும்  மகா-ராஜ=ராஜ-ஸ்ரீ என்பதையொத்த ஒரு தொடராகலாம்.


ஆஞ்சநேயர் கோயிலின் பின்னணி
கல்லணையைச் செப்பனிடும் பணியின்போது, 19-ஆவது திறப்பில் நடைபெற்ற பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எத்துணை முயன்றும் பணியை முடிக்க இயலவில்லை. ஆங்கிலேய அதிகாரி ஒரு கனவு கண்டிருக்கிறார். கனவில் காட்சியளித்த ஆஞ்சநேயர், 19-ஆவது திறப்புக் கருகில் தமக்கு ஒரு கோயில் எழுப்புமாறும் அந்தத் திறப்பைத் தாம் காத்துத் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். அதிகாரி அதைப் பொருட்படுத்தாமல் பணியைத்தொடர்ந்துள்ளார். ஓரிரு நால்களில், குரங்குகள் சில குழுவாக அவரைத் தாக்கிய நிகழ்வு நடந்துள்ளது. அவருக்கு வந்த கனவு மேச்திரி ஒருவருக்கும் வந்துள்ளது. பணியின்போது ஓரிடத்தில் தோண்டியதில் அங்கு ஓர் ஆஞ்சநேயரின் திருமேனி கிடைத்துள்ளது. அதன் பிறகே, கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும், வேளாண்மைக்காக இவ்வணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும்போது, இந்த ஆஞ்சநேயருக்குப் பூசைகள் நடைபெறுவதும், ஒவ்வோர் ஆண்டும் பயிர் விளைந்ததும் முதல் நெற்கதிரை ஆஞ்சநேயருக்குப் படையலிட்டுப் பூசை நடைபெறுவதும் வழக்கம்.

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலும் ஜே.எல். கால்டெல்லும்
சென்னையில் கதீட்ரல் சாலையில் அமைந்திருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலைக் கட்டியவர் ஜேம்ஸ் எல். கால்ட்வெல் என்பவராவர். கி.பி. 1815-இல் முதன் முதலாக இக்கிறித்தவக்கோயில் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கப்பட்டது. 200 ஆண்டுகளைத் தாண்டிய இக்கோயிலைக் கட்டிய ஜேம்ஸ் கால்ட்வெல், இந்த ஆகஸ்ட் மாதம் 20-27 தேதிகள் அடங்கிய சென்னை வாரக்கொண்டாட்டங்களின்போது நினைவு கூரத்தக்கவர். இந்த ஜேம்ஸ் கால்ட்வெல்லும், கல்லணையைச் செப்பனிட்ட ஜேம்ஸ் கால்டெல்லும் ஒருவராயிருக்கக் கூடுமா? ஆய்வுக்குரியது.

 31-08-2017 அன்று இணைத்த புதிய செய்தி:
முனைவர் நா.கணேசன் (ஹூஸ்டன்)  அவர்கள் ஜேம்ஸ்.எல். கால்ட்வெல் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர், செயிண்ட் ஜார்ஜ் கதிட்ரலைக் கட்டியவரும் கல்லணையைச் செப்பனிட்டவரும் ஒருவரே என்று கருதி இப்புதிய செய்தி இணைக்கப்படுகிறது. கால்ட்டெல் என்னும் ஆங்கிலப்பெயர் இதுவரை கேள்விப்பட்டிராத, எங்கும் படித்திராத பெயர் என்பதையும் இங்கு கருதவேண்டும்.
ஜேம்ஸ் எல். கால்ட்வெல் என்னும் பொறியாளரின் முழுப்பெயர் ஜேம்ஸ் லில்லிமேன் கால்ட்வெல் (JAMES LILLIMAN CALDWELL)  என்பதாகும். 1799-ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் மீது ஆங்கிலேயர் படையெடுத்து நடந்த போரில் (போரில் திப்பு இறந்துபடுகிறார்) கலந்துகொண்டு காயமுற்றவர். பின்னர், கல்லணையை ‘சர்வே’ செய்து 1804-இல் கல்லணையை மேம்படுதினார். அதன்பிறகு, சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலை வடிவமைத்தார். 1858-இல் ‘ஜெனரல்’  என்னும் உயர்பதவி பெற்றார். 1863-இல் மறைந்தார்.
இக்கருத்தில் வரலாற்றுப்பிழை நேர்ந்துள்ளதாகக் கருதும் வரலாற்று ஆய்வாளர்கள் தகுந்த சான்றுகளை முன்வைக்கும்போது கருத்துகள் மாறக்கூடும். வரலாற்றைச் செப்பனிடத் தொடர்ந்த ஆய்வுகளும் தேவை. ஆய்வு முடிவுக்ள் மாறுவதும் இயல்பு.

துணை நின்றவை :

1  www.Columbuslost.com
2   An Anglican treasure –Article by Sriram V. The Hindu-April 24, 2015.
நன்றி :  முனைவர் திரு.நா.கணேசன், ஹூஸ்டன்.





து.சுந்தரம், கல்வெட்டு அராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156. 

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017


கல்வெட்டு எழுத்துகள் கற்போம் இரண்டாம் பகுதி
 பயிற்சி-1

முன்னுரை

முதற்பகுதியில், பதினெட்டுப் பாடங்கள் வாயிலாகக் கல்வெட்டு எழுத்துகள் பற்றிய பயிற்சி ஓரளவு நல்லதொரு அறிமுகத்தைத் தந்திருக்கக்கூடும் என நம்புகிறேன். சற்று விரிவான பயிற்சியை இந்த இரண்டாம் பகுதியில் காணலாம். அதற்கு முன்பாக, மாணாக்கருக்கு ஒரு குறிப்பு. மாவட்ட அளவில், தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்டிருக்கும் கல்வெட்டுத் தொகுதி நூல்களை மாணாக்கர் வாங்கி வைத்திருத்தல் இன்றியமையாதது. அவற்றில் உள்ள கல்வெட்டுப் பாடங்கள், இன்றைய வழக்கில் உள்ள தமிழ் அச்சு வடிவத்தில் இருக்கும். அவற்றைத் தொடர்ந்து படிப்பதன் வழி, கல்வெட்டுகளில் பயின்று வரும் சொற்றொடர்களின் அறிமுகம் நன்கு ஏற்படும். அரசர் குறித்த தொடர்கள், கொடைப்பொருள்கள் (குறிப்பாக நிலக்கொடை, விளக்குக் கொடை)  குறித்த தொடர்கள், பாசனம் குறித்த தொடர்கள், வரிகள் குறித்த தொடர்கள், இறைவனுக்குப் படைக்கும் அமுதுபடிகள் (நைவேத்தியம்) குறித்த தொடர்கள் போன்ற பல்வேறு கல்வெட்டுத் தொடர்கள் நன்கு இனம் காணும் அளவு பதியும். இந்தப் பதிவு, கல்வெட்டுகளைப் படிக்கையில் யூகமாகப் புலப்படும். இந்த யூகத்தின் அடிப்படையில் எழுத்துகள் புலப்படும்.  இவ்வகைத் தொடர்கள், நாம் காணவிருக்கும் பயிற்சிக் கல்வெட்டுகளைப் படிக்கையில் ஆங்காங்கு விளக்கப்படும்.

பயிற்சிக் கலவெட்டின் படம் கீழே: கல்வெட்டு, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ளது. படத்தைத் தேவைக்கேற்பப் பெரிது படுத்திக்கொள்ளலாம்.




விளக்கம்:
வரி 1  எழுத்துகள் தெளிவாக இல்லாததால் பின்னர் முயன்று பார்க்கலாம்.  
அல்லது படிக்காமல் தவிர்க்கலாம்.

வரி 2 முதற் சொல்லை ஆய்வோம். மூ, ன்  ஆகிய இரண்டு எழுத்துகள் தெளிவானவை. மூன்றாவது எழுத்து, “அ” ,  “று”   ஆகிய இரண்டு எழுத்துகளின் தோற்றமும் கொண்டுள்ளது. அடுத்து வருகின்ற மாவிந் கீழ்”   என்னும் தொடரோடு பொருத்திப் பார்ப்போம். “மா”  என்பது நிலத்தின் அளவைக்குறிக்கும் சொல். நினைவில் கொள்ளவேண்டும்.  எனவே, முதற்சொல்லின் மூன்றாவது எழுத்து “று”  எனக்கொள்ளவேண்டும். தவிர “மூன்”  என்பதற்கடுத்து “அ”  உயிர் எழுத்து வருவதற்கில்லை. தொடர்ந்து படிக்கையில் “அரை”  என்பது முதல் வரியின் இறுதி. எனவே, வரி 2 கீழுள்ளவாறு அமைகிறது. (குறிப்பு:  எல்லா மெய்யெழுத்துகளும் புள்ளியிடாமல் எழுதப்பட்டவை. வேண்டிய இடங்களில் புள்ளியிட்டுப் படித்துப் பொருள் கொள்ளவேண்டும். இது பயிற்சியில் வந்திருக்கவேண்டும்)

வரி-2  மூன்று மாவிந் கீழ் அரை

வரி-3  மாந்தோட்ட நிலந் முக்கா

குறிப்பு:  ”  எழுத்து இன்றைய “க எழுத்தை நினைவூட்டும். இதைத் தவிர்க்கவேண்டும்.  ”  எழுத்தின் வடிவத்தைக் கருதுக. இதே        கல்வெட்டின் 5-ஆவது   வரியிலும், 6-ஆவது வரியிலும் ”  எழுத்தின்       வடிவம் மாறுவதையும் கருதுக. “நிலந்”  என்னும் சொல்லை உன்னுக. நிலம் என்னும் சொல் நிலந் என்றும் கல்வெட்டில் பயின்று வரும். இது நிலன் என்பதன் திரிபு. றன்னகரம் கல்வெட்டில் தந்நகரமாக எழுதப்பெறும். நிலன் என்பது நிலம் என்பதன் திரிபு. கலம்-> கலன், பலம்-> பலன், வலம்-> வலன், புலம்-> புலன், திறம்-> திறன், அறம்-> அறன் ஆகிய சொற்களைக் கருதுக.

வரி-4  முதல் எழுத்து ஓர் அரைப்பகுதியே காணப்படுகிறது. இரண்டாவது        எழுத்து முதற் பார்வையில் புலப்படவில்லை. படத்தைப் பெரிது படுத்திப் பார்க்கையில் அது “ழ”  என அறியலாம். அடுத்துள்ள எழுத்து,       பார்வைக்குப் புலப்பட்டாலும், ஐயத்தை விளைவிக்கிறது. ஆனால், “அ       என்னும் எழுத்தைத் தவிர வேறு எந்த எழுத்தோடும்        பொருந்திப்போகவில்லை என்னும் காரணத்தால் “அ”  என உறுதி        செய்கிறோம். மிகுதியுள்ள எழுத்துகள் படிக்கும்படி உள்ளன. எனவே,

வரி-4 ழ் அரையே ஒரு மாவரை

குறிப்பு:  நிலம் குறித்த சொற்களில் “மா”, “மாக்காணி”,  “காணி, “முந்திரிகை
ஆகிய அளவு குறித்த சொற்களும், கீழ் அளவு குறித்த  சொற்களும் பயில்வதால் “கீழ்”  என்னும் சொல்லும் தவறாமல் இடம் பெறும். எனவே, இவ்வரியின் முதல் எழுத்து, “கீழ்”  என்பதன் பகுதியே எனத் தெளியலாம்.

வரி-5 முதல் ஓரிரு எழுத்துகள் தெளிவில்லை. படிக்க இயலா. அடுத்து வரும் எழுத்துகள் “டக்க எனப் படிப்பது எளிது. இதை அடுத்த எழுத்து, நம்மைச் சிந்திக்க வைப்பது. எழுத்தை ஒத்திருந்தாலும், “வஎழுத்தின் தொடக்கச் சுழியினின்றும் மாறுபட்டுள்ளது. மேலும், அதையடுத்து “கைகொண்டஎனவிருப்பதாலும் முன்னெழுத்து “க”  என்றிருப்பதாலும், “கங்கைகொண்ட”  என்னும் சொற்றொடர் நம் நினைவில் தோன்றவேண்டும். “கங்கைகொண்ட”   என்ற சொல்லை அடுத்து “சோழன்”  வருவதுதானே இயல்பு? எனவே, இந்த வரியின் இறுதி எழுத்து “சோஎனப்படிக்கப்படல்வேண்டும். இங்கே, “ங”  எழுத்து, நாம் பயின்ற எழுத்தின் வடிவினின்றும் சற்றே மாறுபட்டுள்ளது. தஞ்சைக் கல்வெட்டுகளின் எழுத்துகளுக்கும் இங்குள்ள கல்வெட்டின் எழுத்துகளுக்கும் சற்று வேறுபாடுள்ளது. தஞ்சைக்கோயில் எழுத்துகளை நாம் மையப்புள்ளியாகக் கொண்டு பயிற்சியைத் தொடங்கியுள்ளதால், மற்ற எழுத்துகளை மைய வடிவத்தின் முன்னும் பின்னுமான மாற்றத்தை மனத்தில் நிறுத்தியே படிக்கத் தொடங்கவேண்டும். அவ்வாறே இந்தக் கல்வெட்டு எழுத்துகள் நம் மைய எழுத்துகளினின்றும் மாறுபட்டுள்ளன.

                                     தஞ்சைக் கல்வெட்டு எழுத்து (மைய வடிவமாக)
                                                                                ங

                 பயிற்சிக் கல்வெட்டில் “ங”


வரி-5 மூன்றாவது எழுத்தைத் தவிர மற்ற எழுத்துகள் எல்லாம் படிக்கும்படியுள்ளன. அவ்வாறு படித்தால், புகு( )கெமவிப்படி என்றமையும். மூன்றாவது எழுத்து கிரந்த எழுத்து. கிரந்த எழுத்துகளில் கூட்டெழுத்துகள் மிகுதியும் பயிலும். அவ்வாறான கூட்டெழுத்தே ஒவ்வெழுத்து. இதை நன்கு உற்று நோக்கின்,   என்னும் எழுத்து புலப்படும். அதன் இடப்புறம் இணைந்த பாதி எழுத்து “ந வுக்குரியது. எனவே, இது “ந்த என்றாகிறது. திருத்திய பாடம், புகுந்த கேமவிப்படி”  என்றாகும். “கேமவிப்படி”  என்பது ஒரு முழுமையான பொருளைத் தராததால், அதிலுள்ள “மஎழுத்தைப் பெரிதாக்கிப் பார்க்கையில் ”  புலப்படும். எனவே,

வரி-5 புகுந்த கேழ்விப்படி

வரி-6  முதல் இரண்டெழுத்துகளும் தெளிவின்மையால் படிக்க இயலா. மற்ற எழுத்துகள் “ணைக்களம் நிருபமாத்த”  என்றமையும். முன்னுரையில் கண்டவாறு கல்வெட்டுகளில் பயின்றுவரும் தொடர்களை, நிறையக் கல்வெட்டுப் பாடங்களைப் படிப்பதன்மூலம் நாம் அறிமுகம் செய்துகொள்வோம். அரசு அதிகாரிகளின் பதவிப்பெயர்களும் அவ்வகைத் தொடர்களுள் அடங்கும். திருவாய்க்கேழ்வி, ஓலைநாயகம், திணைக்கள்ம், பொத்தகக் கணக்கு, மூவேந்த வேளான், பிரமமாராயன் போன்ற பல பதவிப்பெயர்கள்  உண்டு. இங்கே “திணைக்களம்என்பதை எளிதில் யூகம் செய்யலாம். எனவே,

வரி-6 (தி)ணைக்களம் நிருபமாத்த

வரி-7  முதல் ஓரிரண்டு எழுத்துகள் தேய்ந்து போயுள்ளன. மற்றவை படிக்க இயலும் நிலையில் உள்ளன. எனவே,

வரி-7  குறித்த களத்து

வரி-8  முதல் ஓரிரண்டு எழுத்துகள் தேய்ந்து போயுள்ளன. அடுத்து சோழ  என்பது நன்கு புலப்படும். அடுத்துள்ள எழுத்து ஐயம் எழுப்பும். நன்கு பெரிதுபடுத்திப் பார்க்கையில் அது “ஈ  என விளங்கும். அதனை அடுத்துள்ள எழுத்து கிரந்தமாகையால் படிப்பது எளிதன்று. ஆங்காங்கே கல்வெட்டுகளில் வரும் கிரந்த எழுத்துகளை ஓரளவு தெரிந்துவைத்தல் தேவை. இங்கே, கிரந்தக் கூட்டெழுத்து ச்0”  என்பதாகும். எனவே,

வரி-8 சோழ ஈச்வரமுடை

குறிப்பு :  கங்கைகொண்டசோழஈச்வரமுடையார்”  என்பதான இறைவனின் பெயரமைந்த தொடர் இது என உய்த்துணரலாம்.

வரி-9  எளிதில் படிக்க இயலும். எனவே,

வரி-9  க்கு யாண்டு


குறிப்பு :  அரசனின் ஆட்சியாண்டு குறிக்கப் பெறுவதை யூகம் செய்யலாம்.

------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

நெகமம்-பட்டணத்தில் புதிய நடுகற்கள் கண்டுபிடிப்பு



2012-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள்

நெகமத்தை அடுத்துள்ள தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த நண்பர் உருத்திரன், தம் ஊருக்கருகில் உள்ள பட்டணம் கிராமத்தில் தாம் கண்ணுற்ற ஒரு சிற்பத்தைக் காணவருமாறு அழைத்திருந்தார். கோவை-பொள்ளாச்சிப் பெருஞ்சாலையில் அமைந்துள்ள கோயில்பாளையம் என்னும் ஊரிலிருந்து பிரியும் ஒரு கிளைச்சாலையின் வழியே பட்டணம் கிராமத்தை அடைந்தோம். அங்கே, சாலையின் ஓரத்தில், செடிகளின் மறைவில் ஒரு பெண்ணின் சிற்பம் காணப்பட்டது. மூன்றடி உயரத்தில், மேற்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் பிறை வடிவில் வளைவான ஒரு தோற்றத்தில் காணப்பட்ட அச்சிற்பத்தில், பெண்ணொருத்தி தன் வலது கையில் அணைத்த நிலையில் இடுப்பில் ஒரு குழந்தையைத் தாங்கி நிற்கிறாள். அவளது இரு புறத்திலும் இரு மாடுகள், அவளின் தொடைப்பகுதியில் முட்டிக்கொண்டிருப்பதுபோல் தோற்றமளித்தன. அழகான சிற்பம்.

                    2012-இல் தாய்த்தெய்வச் சிற்பம்

நடுகல் சிற்பம்-தாய்த்தெய்வ வழிபாடு
இவ்வூர் மக்கள், இந்தச் சிற்பத்தைப்பற்றி ஒரு செய்தி சொல்கிறார்கள். கருவுற்ற ஒரு பெண், மாடு முட்டியதால் இறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது போன்ற, மக்களிடையே வழங்கும் கதை மரபும் இச்சிற்பத்தின் உண்மைப் பின்னணியைத் தெரிந்துகொள்ள உதவும் சான்றுகளில் ஒன்று. இந்தச் சிற்பத்தின் ஒளிப்படத்தைப் பார்த்த தொல்லியல்  ஆய்வாளரானசென்னை சு.இராசகோபால் அவர்கள், இச்சிற்பம், தாய்த்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கலாம் எனக்குறிப்பிட்டுள்ளார்.
கல்வெட்டு உள்ளதா?
மேற்படி நடுகல் சிற்பத்தின் அடிப்பகுதி மண்ணில் புதைந்திருந்தது. புதையுண்ட பகுதியில் ஏதேனும் கல்வெட்டு இருக்குமோ என்னும் ஆவல் எழுந்தது. ஆனால், சிற்பத்தைத் தோண்டியெடுத்துப் பார்க்கும் சூழ்நிலை இல்லை. ஊர்க் கவுண்டர், ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோரிடம் கலந்து பேசி, சிற்பத்தைத் தோண்டிப் பார்க்கும் ஏற்பாட்டை உருத்திரன் செய்தபின்னர் மீண்டும் வருவதாகத் திட்டமிட்டு ஊர் திரும்பினேன். 
வேறு சிற்பங்கள்
அருகிலேயே, வேறு நடுகற் சிற்பங்கள் இரண்டு தரையில் புதைந்திருந்ததையும் கண்டோம்.

                                                                    
                           2012-இல் புதையுண்ட நிலையில்   இரு நடுகற் சிற்பங்கள்
                          (தற்போது 13-06-2017 அன்று தோண்டியெடுக்கப்பட்டவை)          


2013-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள்

பத்து மாத இடைவெள்ளிக்குப் பின்னரே, மீண்டும் பட்டணம் சென்று தாய்த்தெய்வச் சிலையைத் தோண்டியெடுத்துப் பார்க்கும் சூழ்நிலை உண்டாயிற்று. தோண்டியெடுத்த  சிற்பத்தின் பீடப்பகுதியில் எழுத்துகள் தெரிந்ததால், சிலையை நன்கு தோண்டி நிற்கவைத்துப் பார்த்ததில் மூன்று வரிகளில் கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. எழுத்துகளைப்படித்த வாசகம் பின்வருமாறு:

                       2013-இல் தோண்டியெடுத்தபோது


                                  2013-இல் தோண்டியெடுத்தபோது - கல்வெட்டுடன் 


       குறோதி வருசம் அற்ப்பிசை மீ (மாதம்) 9 உ (தேதி)
       முத்திலிவாட செட்டி உபையம்

அதாவது, தமிழ் ஆண்டான குரோதி வருடத்தில், ஐப்பசி மாதத்தில் ஒன்பதாம் தேதி, முத்திலிவாட செட்டி என்பவரால் இச்சிற்பம் உபையமாகச் செய்து தரப்பட்டது எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. எழுத்தமைதியை வைத்துப் பார்க்கும்போது குரோதி வருடம், கி.பி. 1724 அல்லது கி.பி. 1784 ஆண்டுகளோடு பொருந்தி வருகிறது. ஐப்பசி மாதம், செப்டம்பர், 1724 அல்லது அக்டோபர், 1784 என்னும் காலக்கணக்கீட்டுடன் பொருந்தி வருகிறது. இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் சிற்பம் என்பதில் ஐயமில்லை. சிலையைத் தோண்டி எடுக்கையில் ஊர்ப் பெரியவர்களிடம் நடுகல் சிற்பத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லி, ஊரின் பெருமையாக இந்த வரலாற்றுச் சின்னத்தைப் பேணவேண்டும் என்று அறிவுறுத்தியும், நடுகல்லைப் பற்றி நாளிதழ்களில் செய்திகள் கொடுத்து வெளிப்படுத்தியும், தொல்லியல் துறையினரிடம் இந்த நடுகல் சிற்பத்தை அவர்களது அருங்காட்சியகத்தில் சேர்க்க விண்ணப்பம் செய்தும் பலன் ஏதும் விளையவில்லை.

2017-ஆம் ஆண்டு ஜூன் திங்கள்- நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்
மூன்று நாள்களுக்கு முன் (ஜூன் 13, 2017), பட்டணம் கிராமத்தின் பரமசிவன் கோயிலின் பூசையாளர் (அவரது கோயிலில் இருந்த ஒரு கல்வெட்டைப் படித்துச் செய்தி வெளியிட்ட வகையில் நண்பரானவர்) சுப்பிரமணியம் என்பவர், சாலை விரிவாக்கத்துக்காக இயந்திரங்கள் கொண்டு சாலைப்பணி நடைபெறப்போவதால் நடுகற்சிற்பங்கள் பாதுகாப்பாகத் தரையின் கீழிருந்து வெளிக்கொணரவேண்டும் என்னும் நல்லெண்ணத்தால் என்னைத் தொடர்புகொண்டு நேரில் வர வேண்டுகோள் விடுத்தார். அவ்வண்ணமே நேரில சென்று சிற்பங்கள் பாதுகாப்பாக வெளியே எடுக்கப்படுவதைக் கண்காணித்து, ஊர்த்தலைவர்களிடம் இச்சிற்பங்களைத் தகுந்த இடமொன்றில் நிலை நிறுத்திப்
பாதுகாக்க வேண்டிக்கொண்டேன். அதுபோழ்து, 2012-ஆம் ஆண்டில் கண்டறிந்து, 2013-ஆம் ஆண்டில் அதன் சிறப்பை வெளிப்படுத்திய தாய்த் தெய்வ நடுகல் சிற்பம் எவ்வாறுள்ளதெனப் பார்க்கையில், உள்ளம் நொந்துபோனது. அக்காட்சியைக் கீழுள்ள ஒளிப்படம் காட்டும்.

                  2013-இல் புத்துயிர் பெற்ற தாய்த்தெய்வச் சிற்பம்
                     தற்போது மீண்டும் புதையுண்ட நிலையில்



தொல்லியல் எச்சங்களின் எதிர்காலம் என்ன?
மக்களுக்கும் மனமில்லை. தொல்லியல் துறைக்கும் மனமில்லை. தொல்லியல் துறை தங்கள் பகுதியில் புதிய எச்சங்களைத் தேடித்தேடி வெளிக்கொணர்ந்த காலங்கள் போயின. தன்னார்வலர்களின் தேடலைக் கூடப் பயன்படுத்திக்கொள்ள அத்துறை முன்வரவில்லையெனில் என் செய்ய? பூசையாளர் சுப்பிரமணியனுக்கு இருக்கும் பொறுப்புணர்வுகூடத் தொல்லியல் துறைக்கு இல்லையெனில் என் சொல்ல?

புதிய நடுகற்கள் பற்றி
தோண்டியெடுத்த இரு நடுகற்சிலைகளில் ஒன்றில் எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது. ஆனால் படிக்க இயலாத அளவு சிதைந்துள்ளது. எழுத்துப்பரப்பின்மீது மாவு பூசாத நிலையில் எழுத்துகளே இல்லை என்னுமளவு கல்லின் பரப்பு தேய்மானத்தைக்கொண்டுள்ளது. நடுவில் ஓர் ஆண்மகனும், அவனது இருபுறங்களிலும் இரு பெண்டிரும், வலது ஓரத்தில் உருவத்தில் சிறிய மற்றொரு பெண்ணும் காணப்படுகின்றனர். ஆணின் பின்புறம் வேல் போன்றதொரு ஆயுதம் காணப்படுகிறது. ஆண் கைகள் கூப்பி நிற்பது போல் உள்ளது. இடப்புறம் உள்ள பெண் தன் இரு கைகளையும் உயர்த்தியவாறும், கைகளில் எவற்றையோ ஏந்தியவாறும் காணப்படுகிறாள். வலப்புறம் உள்ள பெண் தன் கையொன்றை மடக்கியவாறு ஒரு மதுக்குடுவையை ஏந்தி நிற்கிறாள். வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லில் மதுக்குடுவை பெரும்பாலும் காணப்படுவது இயல்பு. ஆண் சிற்பத்தில் முழங்கால் வரை ஆடைக்கட்டும், பெண்களின் சிற்பங்களில் கணுக்கால் வரை ஆடைக்கட்டும் காணப்படுகின்றன.

                           கல்வெட்டுள்ள புதிய நடுகல்
                     (எழுத்துப்பொறிப்பு புலப்படாத நிலை)


                         கல்வெட்டுள்ள புதிய நடுகல்
                         (எழுத்துப்பொறிப்புடன்)


மற்றொரு நடுகல்லிலும், முதல் நடுகல் போலவே ஓர் ஆணும், இரு பெண்களும் முதன்மையாகக் காணப்படுகின்றனர் உருவங்கள் சற்றே சிதைந்துள்ளன. இதுவும் வீரனொருவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகவே இருக்கவேண்டும். நடுகற்களின் காலம் 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் எனக் கருதலாம். 


               புதிய நடுகற்கள் தோண்டியெடுக்கும் காட்சிகள்









ஊராரின் நல்ல முடிவு
நடுகற் சிற்பங்களின் வரலாற்றுப் பின்னணி, அவை பாதுகாக்கப்படவேண்டியதன் காரணம் ஆகியவற்றை ஊராரிடம்  (ஊர்க்கவுண்டர், பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர்) எடுத்துச் சொல்லியதில், அவர்கள் இந்தச் சிற்பங்களை ஊரின் ஒரு மரத்தடியில் மேடை அமைத்து அதில் சிற்பங்களை நிறுவிப் பாதுகாத்துவைப்போம்  என உறுதி கூறியுள்ளனர். இக்கட்டுரையைப் பதிவேற்றும் இன்று (15-08-2017) பூசையாளர் சுப்பிரமணியத்தைத் தொடர்புகொண்டு பேசியதில், பணி தொடங்கிவிட்டதாகவும் அடுத்த மாதத்தில் சிற்பங்களை எழுந்தருளச் செய்தல் நிறைவுபெறும் எனக்கூறினார். முயற்சிகள் நிறைவான முடிவை எட்டுவதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.  பட்டணம் ஊரார் பாராட்டுக்குரியவர்கள்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி:  9444939156.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

கங்கைகொண்டசோழபுரச் சலுப்பையும் சாளுக்கியரும்

முன்னுரை
தஞ்சாவூரில் இயங்கிவரும் தொல்லியல் கழகம், ஒவ்வொரு ஆண்டும் தொல்லியல் கருத்தரங்கம் ஒன்றைத் தமிழகத்தின் முதன்மையான பல்வேறு ஊர்களில் நடத்திவருகின்றது. தமிழகம் முழுதுமுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ளோர், தம் ஊர்ப்பகுதியின் வரலாற்றிடங்கள் அன்றிப் பிற ஊர்ப்பகுதிகளின் வரலாறு பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ள இக்கருத்தரங்கங்கள் துணை செய்கின்றன. பெரும்பாலும், வரலாற்று ஆர்வலர்கள் முதன்மை ஊர்களைப் பற்றி வரலாற்றடிப்படையில் செய்திகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், முதன்மை ஊர்களை ஒட்டியுள்ள பகுதிகளின் உள்ளூர் வரலாற்றுச் செய்திகளையும் நாட்டார் வரலாற்றுச் செய்திகளையும் தெரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பில்லை. அவ்வாறான வாய்ப்பினை மேற்சொன்ன கருத்தரங்கங்கள் தருகின்றன. அண்மையில் ஜூலை மாதம் கங்கைகொண்டசோழபுரத்தில்  நடைபெற்ற தொல்லியல் கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, கருத்தரங்க விழாக்குழுவினர் கங்கைகொண்டசோழபுரத்தின் புறவூர்ப் பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்று காட்டினார்கள். முதலாம் இராசேந்திரன் எடுப்பித்த கங்கைகொண்டசோழ ஈசுவரம் என்னும் பெரிய கோயிலைப் பற்றிச் சற்று அறிந்திருக்கும் நமக்கு, இராசேந்திரசோழன் போரில் வென்ற சாளுக்கியரோடு தொடர்புள்ள ஒரு சில செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் இப்பயணத்தால் கிட்டியது. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.

சலுப்பை-அழகர்கோயில்
கருத்தரங்கப் பார்வையாளர்கள், கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து இரு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டோம். பயணத்தில், முன்னுரையில் கூறியவாறு கங்கைகொண்டசோழபுரத்தைச் சுற்றிலுமுள்ள புறவூர்கள வந்தன. கருவாலப்பர்கோயில், சத்திரம், குண்டவெளி, கொல்லாபுரம், இளையபெருமாள் நல்லூர், மீன் சுருட்டி ஆகிய ஊர்கள். சிறிய கிராமத்துச் சாலைகள். இருபுறமும் பசுமையான வயல்வெளிகளை எதிர்பார்த்தால் ஏமாற்றமே. நீரில்லை; அதனால் வயல்களும் இல்லை. “யூகலிப்டஸ்”  என்னும் தைல மரங்களும், சவுக்கு மரங்களும் , முந்திரி மரங்களும் சாலையின் இருமருங்கிலும் ஆங்காங்கே காணப்பட்டன. எளிமையான கிராமங்கள். ஆள் நடமாட்டமின்றி, அரவமின்றிக் காணப்பட்டன. நீர்நிலைகளான குளங்களை வறண்ட குழிகளாய்க் கண்டபோது, கல்வெட்டுகளில், ஆயிரம் ஆயிரம் கலங்களாய் நெல் குவித்த இடைக்காலச் சோழரின் ஊர்களைபற்றிப் படித்த செய்திகள் நினைவுக்கு வந்து நெஞ்சை வருத்தின. இளையபெருமாள் நல்லூரை அடுத்து அழகர்கோயில் என்னும் இடத்தை அணுகினோம். மதுரையில் ஓர் அழகர்கோயில் போல இங்கும் ஓர் அழகர்கோயிலா என்னும் வியப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த அழகர்கோயில், வைணவக்கோயில் அல்ல என்றதும் வியப்பு கூடுதலானது.  இது ஒரு சித்தர் சமாதியுற்ற இடம். தோரணவாயிலாகக் கட்டியிருக்கும் நுழைவாயில். அருள்மிகு ஸ்ரீ துறவுமேல் அழகர் திருக்கோயில்-சலுப்பை”  என்னும் தலைப்பெழுத்து. கருத்தரங்கின் உள்ளூர்ச் செயலராய் இயங்கிய திரு.கோமகன் என்பார், இக்கோயிலைப் பற்றிய சில செய்திகளைக் கூறினார்.

             சலுப்பை -  துரவுமேல் அழகர் கோயில் - முகப்பு


சலுப்பை-பெயர்க்காரணம்
கோயில் அமைந்திருக்கும் இடம் சலுப்பை என்னும் பெயரில் அமைந்த கிராமம். இராசேந்திரசோழன் சாளுக்கியரை வெற்றிகொண்டதால் இப்பகுதி, சோழநாட்டின் சளுக்கியகுலநாசனி மண்டலம் என்னும் பெயர் பெற்றது. இப்பெயரின் முதற்பகுதியே சுருக்கப்பெயராய் அமைந்து சளுக்கி என்று வழங்கிற்று. நாளடைவில், சளுக்கி, சலுப்பி என்றாகிப் பின்னர் சலுப்பை எனத் திரிந்து நிலைத்துப்போனது.

துறவுமேல்
துறவுமேல் என்பதற்கான விளக்கம் புதுமையானது. துறவி ஒருவர் இறந்து சமாதியானதால் “துறவு என்னும் சொல்லொட்டு வந்தது என நினைத்தோம். அது பிழையானது. “துரவு  என்பதே சரியான சொல்; துரவு என்பது கிணற்றைக் குறிக்கும் சொல். துரவு என்பது மக்கள் வழக்கில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் சொல்லே. தோப்பும் துரவும்”  என்னும் தொடர் நாம் அறிந்த ஒன்று. கல்வெட்டுகளிலும் துரவு என்னும் சொல் காணப்படுகிறது. செவி வழிச் செய்தியின்படி, இப்பகுதி காடாக இருந்தபோது துறவி ஒருவர் இங்கு தவத்தில் இருந்தார். இந்த இடத்துக்கு அண்மையில் ஒரு வைணவக்கோயிலும், ஒரு பார்ப்பனச்சேரியும் அமைந்திருந்தன. ஒரு  நாள், பார்ப்ப்னச் சேரியிலிருந்து இரு பார்ப்பனப் பெண்கள் கிணற்றில் நீரெடுக்க வந்திருந்தபோது, துறவிக்கருகில் காணப்பட்ட ஒரு குடம், இவர்கள் பார்வையில் பொன்னிறமாகத் தோற்றம் தரவே, அப்பெண்கள் அதை எடுக்க முயன்றனர். தவ நிலையில் இருப்பினும், துறவி இந்நிகழ்ச்சியை உள்ளறிவால் உணர்ந்ததும் தவம் கலைந்துபோனது. துறவியின் சினம் அறமாய் எழுந்து அப்பெண்களை அழித்தது. இறந்த பெண்களிருவரும் கிணற்றில் இரண்டு தாமரை மலர்களாய் மாறினர். தவத்தினால் இறை நிலை எய்த இயலாது தவம் கலைந்துபோனதால் துறவி வெறுப்புற்றுக் கிணற்றுள் ஒன்றிப்போகிறார். கால்நடை மேய்ப்பர்களின் கனவில் தோன்றித் தாம் மறைந்த கிணற்றை மூடி வழிபடவேண்டுமென்று கூறுகிறார். அவ்வாறே, கிணறு மூடப்பட்டுப் பீடம் அமைக்கப்பட்டு வழிபடுதல் நடைபெறுகிறது. எனவே, கோயில் கருவறையில் உருவ வழிபாடு இல்லை. பீடம் மட்டுமே உண்டு. துறவி, துரவுமேல் அழகராக வணங்கப்படுகிறார். இவரது வழிபாட்டுச் சடங்குகளில் உயிர்ப்பலி இல்லை. ஆனால், இவரது காவல் தெய்வங்களான வீரபத்திரசாமி, கருப்புசாமி ஆகியோருக்கு உயிர்ப்பலி நடைபெறுகிறது.

                     கோயிலின் நுழைவுப்பகுதி 


                      குதிரைச் சிற்பங்கள்

                                                      
                               
யானைச் சிற்பம்
துரவுமேல் அழகராகிய சித்தருக்குப் பாதுகாப்பாக விளங்கும் யானையின்  சிற்பம் ஒன்று கோயிலின் எதிர்ப்புற வளாகத்தில், ஏறத்தாழ எழுபது அடி உயரத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. சுடுமண்/சுதைச் சிற்பமாகலாம். பழமையான சிற்பம்தான். காலக்கணிப்புக்குச் சான்றில்லை. இந்த யானையும், கோவில் வளாகத்தினுள் உள்ள குதிரையும் இரவில் வேட்டைக்குப் போய்த்திரும்புவதாக நம்பிக்கை. யானைக்கு உதவியாக ஒரு நாயும் உண்டு. ஒருமுறை, பலாக்காயைத் திருடவந்த கள்வனை நாய் குரைத்து இருப்பைக் காட்ட, யானை தன் துதிக்கைகொண்டு கள்வனை வளைத்துப்பிடிக்கிறது. இந்நிகழ்ச்சியை அழகுறக்காட்டும் சிற்பத்தொகுதி நாட்டார் கலை வண்ணத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. யானையின் கழுத்தைச் சங்கிலியும், சிறு சலங்கை மணி கோத்த கயிறும், சற்றுப் பெரிய மணிகள் கோத்த கயிறும் அணி செய்கின்றன. யானையின் முதுகில் (பட்டுத்?) துணி போர்த்தப்பெற்று, உடலின் இருமருங்கிலும் பெரிய மணிகள் (சங்கிலியால் இணைத்தவை) தொங்குகின்றன. மணிகளின் கீழ் இசைக்கருவிகளை இசைத்த நிலையில் பக்கத்துக்கு மூன்றாக ஆறு பூதகணங்கள் அல்லது மனித உருவங்கள் காணப்படுகின்றன. யானையின் இடது கால் கள்வனின் காலை மிதித்துப் பிடித்துத் துதிக்கையால் வளைத்து நெருக்குகிறது. கள்வனின் காலருகில் நாயும் பலாக்காயும் காணப்படுகின்றன.  

                       யானைச் சிற்பம்

                       இசைக் கலைஞர்கள்

                         கள்வன் - யானையின் பிடியில்

                                                                             காவல் நாய்



சளுக்கியக் காளி
இக்கோயிலின் சிறப்பு ஒன்றுண்டு. சாளுக்கியரை வெற்றிகொண்ட இராசேந்திர சோழன் சாளுக்கியரிடமிருந்து கொண்டுவந்த காளிச் சிற்பம் இக்கோயிலில் உள்ளது. கோயிலின் நுழைவுப்பகுதியிலேயே தனிக் கருவறையில் இச்சிற்பம் உள்ளது. எட்டுக்கைகளுடன், எருமை அரக்கனைக் கொல்லும் “மகிஷாசுர மர்த்தனியாக இக்காளி காட்சி தருகிறாள். வழக்கத்தில் எல்லாக் காளிச் சிற்பங்களிலும் காலடியில் எருமைத்தலை இருப்பதாகக் காட்டப்படும். ஆனால், இந்தச் சிற்பத்தில் எருமைத் தலையும் மனித உடலுமாக அரக்கன் காட்டப்படுகிறான். மனித உடலும், எருமைத் தலையும் இணைந்த சிற்ப அமைப்பு சாளுக்கியச் சிற்பக்கலை மரபிலே காணப்படும் என்று திரு. கோமகன் சுட்டிக்காட்டினார். கங்கைகொண்ட சோழபுரத்தின் வடவெல்லைக் காளியாக இச்சிற்பம் வணங்கப்படுகிறது. டாக்டர் மா.இராசமாணிக்கனார், “சோழர் வரலாறுஎன்னும் தம் நூலில், இராசேந்திரசோழன் தன் தலைநகரின் நான்கு புறங்களிலும் நான்கு காளிகளை நிறுத்தினான் என்றும், வடவெல்லைக் காளி சலுப்பையிலும், தெற்கெல்லைக் காளி வீராரெட்டி என்னும் கிராமத்திலும் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். கிழக்கெல்லைக் காளி செங்கல்மேடு என்னும் ஊரிலும், மேற்கெல்லைக் காளி இடைக்கட்டு என்னும் ஊரிலும் உள்ளதாக “நம்ம கங்கைகொண்டசோழபுரம் சோழநாடு”  என்னும் முக நூல் குறிப்பு சுட்டுகிறது.

                   சளுக்கியக் காளியும் எருமை அரக்கனும்


அகோரவீரபத்திரர்-கருப்பராயர்
அடுத்துள்ள தனிக்கருவறையில் பெரிய உருவத்துடன் அகோரவீரபத்திரரின் சிற்பம். பூசையாளர் கூறியதுபோல், இருளில் வீரபத்திரரின் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. வீரபத்திரர் கருவறைக்கு முன்பாகவே, கருப்பராயர் சிற்பம் உள்ளது. வளாகத்தில் சுடுமண் சிற்பங்களாகக் குதிரைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

                                                                                     வீரபத்திரர்

துரவு மேல் அழகர்-பீட வடிவில்
கோயிலின் முதன்மைத் தெய்வமாக வழிபடப்படும் துரவு மேல அழகரின் அடையாளமாக வெள்ளித் தகடு போர்த்திய ஒரு பீடம் உள்ளது.

                                                                       சித்தரின் துரவுப் பீடம்


கலிங்கச் சிற்பங்கள்
அடுத்து நாங்கள் சென்ற இடம் செங்கமேடு என்னும் ஊர்ப்பகுதி. இங்கே, இராசேந்திரசோழனின் வெற்றியின் அடையாளமாகக் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. செந்நிற மணற்கற்களால் ஆன இச்சிற்பங்கள் கலிங்க நாட்டுக் கலைப்பாணிக்குச் சிறந்த எடுத்துகாட்டாய் விளங்குவன என்று தொல்லியல் துறை அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது. இன்றைய ஒரிசா மாநிலத்தின் வடபகுதியே அன்றைய கலிங்கநாடு.

                      கலிங்கச் சிற்பங்கள்




சோழர் காளி
இங்கே, கலிங்கச் சிற்பங்கள் தவிர, தனிச் சிறு கோயிலில் வணங்கப்படும் சோழர் கலைப்பாணிக் காளியின் சிற்பத்தைக் காணும் வாய்ப்புப் பெற்றோம். ஓர் ஆள் உயரத்துக்கும் மேலாக ஓங்கி உயர்ந்து காணப்பட்ட காளிச் சிற்பம் அருமையானதொன்று. தீக்கதிர் முடியும் (ஜ்வாலா கேசம்), எட்டுக்கைகளும் கொண்டவளாக ஆற்றல் வாய்ந்த தோற்றம். வலது காலைக் குத்திட்டு மடித்த நிலையிலும் இடது காலை அரக்கனின் உடல்மீது மிதித்த நிலையிலும் கொற்றவை காணப்படுகிறாள். வலது செவியில் “பிரேதகுண்டலம்”  என்று குறிப்பிடப்பெறுகிற, பிணத்தையே காதணியாகக் கொண்ட அரிய தோற்றத்துடன் கொற்றவை காட்சி தருகிறாள்.

                       சோழர் காலக் கொற்றவை

                                        கொற்றவையின் செவியில்  ”பிரேத குண்டலம்”


கங்கைகொண்ட சோழபுரத்தைச் சுற்றிலும் வரலாற்றுச் சுவடுகள்
வரலாற்றுச் சுவடுகளைத் தம்மகத்தே கொண்ட பல ஊர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் புறவூர்கள்ளாக இன்றும் எஞ்சியுள்ளன. கடாரம்கொண்டான், வீரசோழபுரம், வானவன் நல்லூர், சோழன்மாதேவி, விக்கிரமங்கலம் (விக்கிரமசோழமங்கலம்), ஆயுதக்களம், சுண்ணாம்புக்குழி, உள்கோட்டை, யுத்தப்பள்ளம் ஆகியவை அத்தகைய ஊர்கள். பல ஊர்கள், அரசர், அரசியர் பெயரைத்தாங்கியுள்ளன. படைகளுக்கு வேண்டிய ஆயுதங்கள் உருவான ஊர் ஆயுதக்களம்; கட்டடங்கள் கட்ட சுண்ணாம்பைத் தந்தது சுண்ணாம்புக்குழி என்னும் ஊர்; கோட்டை இருந்த இடம் உள்கோட்டை; போர் நிகழ்ந்த இடத்தை நினைவூட்டுகின்ற யுத்தப்பள்ளம். வடநாடு நோக்கிச் சென்ற பெருவழியில் அமைந்த சத்திரம் என்னும் ஊர் தங்குமிடமாகச் சத்திரங்களைக் கொண்டிருந்தது போலும். கங்கைகொண்ட சோழபுரத்தின் மதிற்சுவர்களின் இடிபாடுக்ளிலிருந்து எடுத்த கற்களே தற்போதுள்ள அணைக்கரையில் அணைகட்டப் பயன்பட்டன என்று கருதப்படுகிறது. கங்கைகொண்டசோழபுரத்தில் இருக்கும் மாளிகைமேடு என்னும் பகுதியில் அகழாய்வு நடத்தப்பெற்று, இராசேந்திரனின் மாளிகை(அரண்மனை) கண்டறியப்பட்டுள்ளது. மேஏர்சொன்ன புறவூர்களுள் தகுதிபெற்ற ஊர்களில் அகழாய்வு நடைபெற்றால் மேலும் பல வரலாற்றுச் செய்திகள் வெளிப்படும் என்னும் சிந்தனையோடு கங்கைகொண்டசோழபுரத்தின் புறவூர்களைப் பார்க்கச் சென்ற எங்கள் பயணத்தைக் கொற்றவை முடித்துவைத்தாள்.

கட்டுரை ஆக்கத்துக்குத் துணை நின்றவர்க்கு நன்றி.

  1. திரு, கோமகன், பொறிஞர், கங்கைகொண்டசோழபுரம்.
2  நம்ம கங்கைகொண்டசோழபுரம் சோழநாடு-முகநூல்
3    தேவர்களம்- வலைப்பூ





து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.