மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

நம்பியூர்-கோபி-பகுதியில்
தொல்லியல் தடயங்களைத்தேடி ஒரு பயணம்

முன்னுரை

   அண்மையில், திருப்பூருக்கு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு என் நெருங்கிய உறவுக்கார இளைஞர் - என்னுடைய கல்வெட்டுகள் தொடர்பான தேடல்களை நன்கு அறிந்தவர் - தாம் கோபியிலிருந்து பயணப்பட்டுத் திருப்பூர் திரும்பும் வழியில் நம்பியூருக்கு அருகில் போத்தம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் கல்வெட்டு ஒன்றைப் பார்த்ததாகத் தகவல் தெரிவித்தார். உடனே அதனைப் பார்க்கும் ஆவல் மிகவே, கோவையிலிருந்து நம்பியூர் செல்ல முடிவாயிற்று. பயணத்தில் தொல்லியல் ஆர்வலர்களான நண்பர்களையும் உடன் அழைத்துச்செல்ல எண்ணி ஓரிரு நண்பர்களுக்குத் தகவல் தந்தேன். கோவைப்பகுதியில் இருக்கும் நண்பர்கள் இருவருக்கு வர இயலவில்லை. அவர்களில் ஒருவர் அவிநாசியில் ஆசிரியப்பணியில் இருக்கும் இரமேஷ் அவர்கள். அவர், ஏற்கெனவே இந்தக் கல்வெட்டை நேரில் பார்த்து ஆய்வு செய்திருக்கிறார். எழுத்துகளின் தெளிவின்மை காரணமாகக் கல்வெட்டுச் செய்தியை முழுமையாகப் படிக்கவில்லை என்று அவர் படித்த அளவில் கல்வெட்டு வரிகளை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். (அவ்ற்றின் துணை கொண்டு கல்வெட்டு மீளாய்வு செய்யப்பட்டது.)

    சத்தியிலிருந்து, ஆசிரியர் பணியிலிருக்கும் ஃபவுசியா வந்திருந்தார். இவர், வரலாறு, தொல்லியல் புலங்களில் மிகுந்த ஈடுபாடும் கற்றல் விருப்பும் கொண்டவர். தனியே, தமக்குத் தெரிந்த இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து வைத்திருப்பவர். இவருடைய நண்பர் கோபியைச் சேர்ந்த சிவக்குமார் என்னும் இளைஞர்; தொழில் முறையில் வணிகத்தை ஏற்றிருந்தாலும் வரலாற்று ஆர்வமுடையவர். இத்துறையில் ஈடுபட்டுத் தம்மை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தவருக்குச் செயல்வடிவில் ஒரு தொடக்கமாக இப்பயணம்  அமைந்தது. நம்பியூரில் நாங்கள் மூவரும் சந்தித்துப் போத்தம்பாளையம் பயணப்பட்டோம்.

போத்தம்பாளையம் பெருமாள் கோயில்

                                                                     கோயிலின் தோற்றம்

                                                       வரலாற்று ஆர்வலர்கள்-கோயில் நிர்வாகியுடன்


     போத்தம்பாளையம், அவிநாசி-கோபி சாலையில் நம்பியூருக்கும் சேவூருக்கும் இடையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். சாலையிலிருந்து மேற்கே பிரியும் ஒரு சிறிய சாலையில் பத்து நிமிடப்பயணத்தில் பெருமாள் கோயிலை அடையலாம். கோயிலின் பெயர், வேணுகோபாலசாமி கோயில். பாமா, ருக்குமணி ஆகிய இறைவியரை இருபுறமும் கொண்டுள்ள வேணுகோபாலன். அகன்றதொரு வளாகத்தைப் பெற்றிருந்த கோயில்  வடிவில் சிறியது. ஒரு சிறிய கருவறையும் அதையடுத்து ஓர் அர்த்தமண்டபமும் உள்ளன. கருவறை கல்கட்டுமானத்தால் ஆனது. கருவறையின்மேல் ஒருதள விமானம். கோயில் கட்டிடக்கலையில் நாகர விமானம் எனக் குறிக்கப்படும் சதுர வடிவம் கொண்டது. விமானத்தின் தளப்பகுதியில் நான்கு புறமும் நடுவில் கோட்டமும், அதன் இருபுறமும் சில புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. அவற்றில், மனித உருவங்களும் , யானை போன்ற விலங்கு உருவங்களும் காணப்படுகின்றன. விமானத்தின் நான்கு புறச்சரிவுகளிலும் மகர தோரணங்கள் உள்ளன. விமானத்தின் உச்சியில் கலசம். வழக்கமாகச் செங்கல்லால் அமையும் விமானம் போலன்றி, இது காரையால் மட்டுமே கட்டப்பட்டது எனக் கோயில் தானத்தார் கூறினார். கோயில் முழுதும் காவி வண்ணப் பூச்சு. அர்த்தமண்டபத்தை அடுத்துள்ள முன்மண்டபம், சுற்றுச் சுவரால் மூடப்பட்ட மண்டப அமைப்பைக் கொண்டுள்ளதல்ல; தற்கால அமைப்பில், இரும்புக்குழல் கம்பங்களும், மேலே வேயப்பட்ட உலோகக் கூரையும் கொண்டது.

நினைவுக்கல் சிற்பம்



    முன்மண்டபத்தில் அர்த்தமண்டப வாயிலின் வலப்புறமாக, வடக்கு நோக்கிய நிலையில் ஒரு நினைவுக்கல் சிற்பம் காணப்படுகிறது. சிறிய மேடையொன்றில் இச்சிற்பம் நிறுத்தப்பட்டுள்ளது. ஓர் ஆணின் உருவமும், ஒரு பெண்ணின் உருவமும் கொண்ட சிற்பம். கோயில் கட்டுவித்தவராயிருக்கக் கூடும்; அல்லது கோயிலில் திருப்பணி செய்தவராய் இருக்கக் கூடும். மனைவியருடன் உள்ளார். ஆணின் சிற்பத்தில், ஆணின் வலக்கையில் சேகண்டி எனப்படும் இசைக்கருவியும், இடக்கையில் சங்கும் காணப்படுகின்றன. பெண் சிற்பம், இரு கைகளைக் கூப்பி வணங்கும் நிலையில் காணப்படுகிறது. வைணவச் சிறப்புச் சின்னங்களான சங்கும், ஆழியும் (சக்கரம்) ஆண், பெண் இருவரின் தோள்ப்பகுதிகளில் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண், பெண் இருவரும் கழுத்து, கைகள், கால்கள் ஆகியவற்றில் அணிகலன்கள் பூண்டிருக்கிறார்கள். இருவருமே கால்கள் வரை ஆடை அணிந்துள்ளனர். ஆடை மடிப்புகள் கோடுகளால் புலப்படும்படி செதுக்கப்பட்டுள்ளது. இருவரின் கால்களுக்கு நடுவில் அமைந்த இடைவெளியில், ஒரு காளை மாட்டுச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் வடிக்கப்பட்டவர், கால்நடைச் சமுதாயத்தைச் சேர்ந்த இடையராய் இருக்கலாம் என்ற கருத்தை இக்காளை மாட்டுருவம் சுட்டுகிறது. புடைப்புச் சிற்பமாக இருப்பினும், பலகைக் கல்லில், சிற்பங்களின் கழுத்துப்பகுதியிலும், இடைப்பகுதியிலும் சிறு சிறு துளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிற்பங்களின் வடிவமைப்பு பிற்காலத் தோற்றம் கொண்டிருப்பதால், சிற்பத்தின் காலம் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்ற் கொள்ளலாம்.

பலகைக்கல் கல்வெட்டு



      அர்த்தமண்டபத்தினுள், தென்மேற்கு மூலையில், ஒரு பலகைக் கல் நிறுத்தப்பட்டுள்ளது. அதில்தான் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேல் பாதிப்பகுதியில் புடைப்பு உருவங்களும், கீழ்ப்பாதிப் பகுதியில் எழுத்துகளும் உள்ளன. நாயக்கர் ஆட்சிக்காலத்திலிருந்து கல்வெட்டுகளில் கதிரும், நிலவும் செதுக்கப்படும் வழக்கம் உள்ளது. செய்யப்பட்ட தன்மம் (கொடை), கதிரும் நிலவும் உள்ளவரை அழியாது, இடைநிறுத்தம் இல்லாது தொடரவேண்டும் என்னும் கருத்தின் குறியீடாகவே இது கொள்ளப்படுகிறது. கல்வெட்டு வாசகத்திலும் “சந்திராதித்தியவரை”  என்ற தொடர் இதைக்குறிக்கும். இவ்வழக்கத்தையொட்டி, இக்கல்வெட்டின் தலைப்பகுதியில் இரு ஓரங்களில் கதிரும் நிலவும் செதுக்கப்பட்டுள்ளன. நடுப்பகுதியில், வைணவக் குறியீடான திருமண் (நாமம்) உருவம் உள்ளது. அடுத்த நிலையில், ஆழியும் சங்கும் ஒரு பீடத்தின் மீது நிறுத்தப்பட்டதுபோல் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களுக்குக் கீழ், பத்து வரிகள் கொண்ட எழுத்துப்பொறிப்பு உள்ளது. எழுத்து மொழியும், சொற்களைச் சரியாகக் கையாளும் திறமையும் இல்லாத ஒரு கல்தச்சர் எழுத்துகளைப் பொறித்திருக்கவேண்டும். காரணம், பிழையான சொற்கள். எழுத்துகளின் வரிவடிவமும் திருத்தமாக இல்லை. கல்வெட்டு வரிகளில் காலக் குறிப்பு எதுவுமில்லை, சர்வதாரி வருடம் என்பதைத் தவிர. கல்வெட்டின் எழுத்தமைதி, சர்வதாரி என்னும் ஆண்டுக்குறிப்பு ஆகியன கொண்டு, கல்வெட்டின் காலம் கி.பி. 1888 ஆகலாம் எனக் கருத வாய்ப்புள்ளது. எனவே, நினைவுக்கல்லின் பழமையும், கல்வெட்டின் பழமையும் இருநூறு ஆண்டுகளுக்குள் அமைகின்றன. கோயிலின் பழமையையும் இருநூறு ஆண்டுகள் அளவில் நிலைநிறுத்தலாம். கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு :

கல்வெட்டுப்பாடம்

1 சுமணயன சிலை (சபை?)
2 சறுவதரி வருச
3 ம் அப்பிசை மதம்
4 15 தேதி செல்லி
5 ன குப்பயி மள்
6 பாகாயி சி
7 (லை?) வய்த ன்ம
8 முதல் பெரு ம்
9 த(க)ன கொபால்
10 ...............ப்பட

முன்னரே குறித்தவாறு, கல்வெட்டை எழுதியவர் மொழியறிவுக் குறைபாடு கொண்டவராக இருக்கவேண்டும் ஏனெனில், சொல்லவந்த சேதி என்ன என்பதைச் சரியாக எழுதத் தெரியவில்லை என்பதை மேலே கல்வெட்டின் வாசகம் தரும் குழப்பத்திலிருந்து உணரலாம். சர்வதாரி என்னும் சொல் தமிழ் ஆண்டைக்குறிக்கும் வடசொல். அதனை த்மிழ்வடிவத்தில் “சருவதாரிஎன எழுதலாம். ஆனால், இங்கே, இடையின “ரிஎழுத்து, வல்லின “றி என்பதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், “தாரி என்னும் நெடில், “தரி”  என எழுதப்பட்டுள்ளது. முதல் வரியில் சு ம ண ய ன”  ஆகிய எழுத்துகள் எந்தப்பொருளையும் தரவில்லை. முதல் வரியின் இறுதிச் சொல், “சபைஎன்றும், “சிலை”  என்றும் படிக்கும் வகையில் குழப்பமாக எழுதப்பட்டுள்ளது. “மாதம்”  என்பது “மதம்”  என எழுதப்பட்டுள்ளது. குப்பயி”, “பாகாயி”  ஆகிய சொற்கள் காணப்படுகின்றன.  மீண்டும் சிலை”  என்று பொருள்படும்படி ஒரு தெளிவற்ற சொல். “வைத்த”   என்னும் சொல்லை “வய்தஎன்று எழுதியிருப்பதாக நாம் யூகம் கொள்ளுமாறு ஒரு சொல் மயக்கம். இதேபோன்று,  “முதல் பேரு”  என்பதன் பொருள் தெளிவாகவில்லை. “கொபால” (கோபால)  என்னும் சொல், இறைவனின் பெயரான “வேணுகோபால”  என்பதைக் குறிக்கிறதா, இல்லை, “தனகோபால்”  என்னும் வேறொரு ஆள் பெயரைக் குறிக்கிறதா என்பதும் மிகுந்த ஐயத்தை எழுப்புகிறது. முதல் வரி, “சுவாமி சிலைஎன்று ஊகிக்கும்படியாகவும் உள்ளது. முடிவாக, கல்வெட்டு, இறைவனின் சிலையைச் செய்து கொடுத்தது பற்றியோ, கோயிலுக்குச் செய்த ஏதோவொரு தன்மத்தைப்பற்றியோ கூறுகிறது எனக் கொள்ளலாம். அந்தச் செயல் நடைபெற்ற ஆண்டு சர்வதாரி என்பது மட்டும் தெளிவாகிறது. அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழாண்டுகளின் சுழற்சியில், கி.பி. 1888, கி.பி. 1828 ஆகிய இரு ஆண்டுகளில் சர்வதாரி ஆண்டு அமைகிறது. இவ்விரு ஆண்டுகளில் ஓர் ஆண்டினைக் கல்வெட்டின் காலமாகக் கொள்ளலாம்.

தும்பிக்கை ஆழ்வார்

தும்பிக்கை ஆழ்வார் என்னும் வினாயகரைப்பற்றி இணையத்தில் (விக்சனரி) காணப்பட்ட செய்தி இங்கு தரப்படுகிறது.

இந்து சமயக் கோட்பாடுகளில் வினாயகரை வணங்காமல் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிய வினாயகரை வழிப்பட்டேயாகவேண்டும். வினாயகர் சிவபெருமானின் மகன். தீவிரமாக திருமாலை வழிபடும் வைணவர்கள் சிவன் தொடர்புடைய எதையும் கொண்டாடமாட்டார்கள். ஆனால் இந்து சமய நெறியின்படி ஒரு காரியத்தை தொடங்கும்போது வினாயகரை வழிபடுவது கட்டாயம். இந்த நிலையில் வைணவர்கள் வினாயகரையே வைணவ சமய சம்பந்தப்பட்டவராக்கி, வினாயகர், கணபதி என்றெல்லாம் அழைக்காமல் ' தும்பிக்கை ஆழ்வார்' என்று வைணவப் பெயரிட்டே வணங்கினார்கள். பெரும்பாலும் வினாயகரின் திருவுருவத்தை வழிபடாமல் சொல்லும் மந்திரங்களில் அவரை வேறு பெயர்களால் கொண்டாடுவர். சில சந்தர்ப்பங்களில் திருவுருவம் தேவையென்றால் விநாயகருக்கு திருநீறு (விபூதி) அணிவிக்காமல் வைணவ முறைப்படி திருமண் (நாமம்) இட்டு வணங்குவார்கள். சில வைணவக் கோயில்களில் வினாயகரை இந்தக் கோலத்தில் மிக அரிதாக இன்றும் காணலாம்..எனினும் இந்த வழக்கம் தற்காலத்தில் வைணவர்களிடையே பெரிய அளவில் நடைமுறையில் இல்லை என்றே கொள்ளலாம்..

                                                                       தும்பிக்கை ஆழ்வார் 


இததகைய பிள்ளையாரின் சிற்பம் இக்கோயிலில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு தனிச் சன்னதியைக் கட்டி அதில் வைணவப்பிள்ளையாரை எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். பிள்ளையாருக்கு இரு கைகள் மட்டுமே உள்ளன. ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் ஆழியும் ஏந்தியிருக்கிறார்.

ஒண்டி முனியப்பன் கோயில்


     அடுத்து, நாங்கள் செல்ல வேண்டிய இலக்கு, கோபி-சத்தி சாலையில், பங்களாப்புதூர், தூக்கநாயக்கன்பாளையம் ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள மத்தாளக்கோம்பு என்னும் இடம். போகும் வழியில் பங்களாப்புதூர்ச் சாலையின் ஓரத்திலேயே ஒரு முனியப்பன் கோயில். ஒண்டிமுனியப்பன் என்னும் பெயருடைய இந்தக் காவல் தெய்வம் நாட்டார் வழிபாட்டு மரபில் நீண்ட காலமாக இங்குள்ளது. கிராமத்து மக்களின் நம்பிக்கைத் தெய்வமும் கூட. அவருக்கு  ஏன் ஒண்டி முனியப்பர் என்று பெயர்? காரணம் தெரியவில்லை. ஒற்றையாய் இருப்பது காரணமாகலாம். பல கோயில்களில், ஒன்றுக்கு மேற்பட்ட முனியப்பன் சிலைகளைக் காண்கிறோம். இப்பகுதி மக்கள் த்ம் உள்ளக்கிடக்கையை வேண்டுகோளாக முனியப்பனிடம் வைக்கிறார்கள். வேண்டுவதை நிறைவேற்றித்தரும் ஆற்றல் பெற்றவர் முனியப்பன் என்று மக்களுக்கு அசையாத நம்பிக்கை.

உருவாரம்



         கிராமத்து எளிய மக்கள் தம் எளிய விருப்பங்கள் நிறைவேறவும், தம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் இடர்கள் நீங்கவேண்டியும் முனியப்பனிடம் நேர்ந்துகொண்டு, நேர்த்திக் கடன் கழிக்கும் பாங்கில், மண் பொம்மைகளைச் செய்து கோயில் வளாகத்தில் வைத்து வழிபடுகிறார்கள். இப்பொம்மை உருவங்களை உருவாரம் என்று அழைக்கிறார்கள். நிறைய மனித உருவங்கள்; பெரியவர்கள், சிறார் ஆகியோரின் உருவங்கள். கால்நடைகள், நாய்கள் ஆகியவற்றின்  உருவங்களும் உள்ளன. அவற்றின் ஊறுகளையும் முனியப்பன் களைகிறார். பாம்பைக் கண்ட அச்சம் விலகப் பாம்புப்பொம்மைகள். கால்களின் ஊறு களையத் தனியே பொம்மைக் கால்கள். படிப்பு வரவேண்டிப் புத்தகத்துடன் மாணவன் பொம்மை. ஒரு மரத்தில் இரும்புச் சங்கலிகள். அவை எதைக்குறிக்கின்றன எனத் தெரியவில்லை.

மத்தாளக்கோம்புப் பிள்ளையார்

                                                                     விநாயகர் கோயில் 

                                                                 மத்தாளக்கோம்பு விநாயகர்


           மத்தாளக்கோம்பில் ஒரு புதுமையான பிள்ளையார் கோயில் கொண்டிருக்கிறார். பழமையான அரசமரத்தடியில். மத்தாளக்கோம்பு விநாயகர் என்னும் பெயருடன் விளங்கும் இந்த விநாயகர் சிற்பம் புதுமையானது; மாறுபட்டது. இரு கைகளுடன் திகழும் விநாயகர் தம் இடது கையால் வடிவில் உள்ள தும்பிக்கையைத் தாங்கிப்பிடித்திருக்கிறார். நீள்வட்ட வடிவில் தலை; ஆனைமுகத்தில், ஆனைச்செவியைக் காணவில்லை. செவிப்பகுதியிலிருந்து சரியும் தோள்பட்டைகள் இரண்டும் பருத்தும், கைகள் இரண்டும் மெலிந்தும் காணும் முரணிய தோற்றம். உருண்டும் திரண்டும் வழக்கமாய்க் காணப்படும் “குண்டு வயிற்றைக் காணவில்லை. சதுரவடிவில் புடைத்த வயிற்றுப்பகுதி. வயிற்றை ஒட்டி, மடித்த குள்ளக் கால்கள். தும்பிக்கை இல்லையெனில் அது ஒரு பிள்ளையார் சிற்பம் என நம்ப இயலாது. சிற்ப வேலைப்பாடுகள் எவையுமின்றி வடிக்கப்பட்ட ஒரு பழங்கற்சிலை. அழகு இங்கு முதன்மையல்ல; “நான் தும்பிக்கையைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறேன். அதை மட்டும் பார்; நீ நம்பிக்கையை விடாமல் பற்றிக்கொள்”  என்று சொல்லாமல் சொல்லும் குறிப்பின் உருவம்தான் இந்தப் பிள்ளையார்.

மத்தாளக்கோம்புச் சுனைநீர்க் குளம்



                                                     மத்தாளக்கோம்பு நீரூற்று- நாளிதழ்ச் செய்தி

    மத்தாளக்கோம்பில், பிள்ளையார் கோயிலக்கருகில் ஒரு சிறிய குளம் உள்ளது. உண்மையில், இது குளமல்ல. இயற்கையாய் அமைந்த ஒரு நீரூற்று. ஐந்நூறு ஆண்டுகளாய் வற்றாமல் ஊற்றெடுத்து வரும் நீர் நிலை. குளம் போல் தேங்கிப் பின்னர் வழிந்து அடுத்துள்ள வாய்க்கால் வழியே வெளியேறி, வாநி (பவானி)யாற்றுடன் கலக்கிறது. இந்த நீரூற்று பற்றி, தூ.நா. பாளையம் வரலாற்று ஆராய்ச்சியாளர் இராமசாமி அவர்கள் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே நாளிதழொன்றில் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தியில் அவர், அங்கே படிக்கட்டுகளில் கல்வெட்டு காணப்படுவதாகவும், கல்வெட்டு படிக்கப்படும்போது மேலும் சில செய்திகள் தெரியவரும் என்றும் குறிப்பிடுகிறார். ஆசிரியர் பவுசியா அவர்களும் முன்பு இங்கு வந்திருந்தபோது கல்வெட்டைக் கண்டிருக்கிறார். கல்வெட்டைப் படிக்கும் ஆவலிலேயே நாங்கள் தற்போது இங்கு வந்தோம்.

குளத்துப் படிக்கற்களில் கல்வெட்டு



    குளத்தின் படிக்கட்டுகளில் உள்ள இரண்டு கற்களில் எழுத்துகள் காணப்பட்டன. கற்களின் மேற்பரப்பு செம்மைப்படுத்தப்படாமல், கரடு முரடாக இருந்த நிலையிலேயே அவற்றின்மீது எழுத்துகளைப் பொறித்திருக்கிறார்கள். எனவே, கற்களில் இயல்பாய் இருக்கும் பள்ளங்களினூடே எழுத்துகளும் இருப்பதால், எழுத்துகள் புலப்படவில்லை. சுண்ணப்பொடியை நீரில் குழைத்து, கற்களின்மீது பூசிக் காயவிட்டபின், ஓரளவு எழுத்துகள் புலப்பட்டாலும் கல்வெட்டு வாசகங்களை முற்றாகப் படிக்க இயலவில்லை. சில சொற்களை மட்டும் படிக்க இயன்றது. நீரூற்றைச் சுற்றியும் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்துக் குளம்போல் கட்டிக்கொடுத்தவர் யார் என்பதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மூக்கண்ண கவுண்டர் என்பவர் இந்தப் பணியைச் செய்துள்ளார்.

முடிவுரை

     மத்தாளக்கோம்பு பிள்ளையார் கோயிலையும், நீரூற்றையும், கல்வெட்டையும் பார்த்து முடித்ததும், இப்பகுதியின் தொல்லியல் தடயங்களைத் தேடி மேற்கொண்ட  எங்கள் பயணம் நிறைவுற்றது. பயண இறுதியில், தூ.நா. பாளையத்தில், வரலாற்று ஆராய்ச்சியாளர் இராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினோம். அவர், மத்தாளக் கோம்பு பற்றி அவர் வெளியிட்ட நாளிதழ்ச் செய்தியைக் காண்பித்தார்.



து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாள்ர், கோவை.
அலைபேசி : 9444939156.




1 கருத்து:

  1. கல்வெட்டு தகவல்களை தொகுக்கும் தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு