ஆச்சிப்பட்டியில் பாளையக்காரர்
காலத்து நடுகற்கள்
முன்னுரை
அண்மையில், நந்தகுமார் என்னும் இளைஞர், ஆச்சிப்பட்டி கிராமத்தில்
அமைந்துள்ள பெருமாள் கோவிலில் பழங்காலச் சிற்பங்கள் சில உள்ளன என்றும், இரண்டு
சிலைகளில் எழுத்துகள் காணப்படுகின்றன என்றும் தகவல் தந்து நேரில் வந்து பார்க்கும்படிச்
சொன்னார். கல்வெட்டு ஆராய்ச்சியாளரான கட்டுரை ஆசிரியரும், தஞ்சைப்பல்கலையில்
பயிலும் தொல்லியல் ஆய்வு மாணவரான இரமேஷ் என்பவரும் நந்தகுமாருடன் நேரில் சென்று
ஆய்வு செய்தவகையிலும், நந்தகுமார் தம்மிடமுள்ள ஆவணங்களிலிருந்து திரட்டிய
குறிப்புகளின் அடிப்படையிலும் தெரியவரும் செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன.
ஆச்சிப்பட்டி
கோவை-பொள்ளாச்சி
சாலையில் ஆச்சிப்பட்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள கோயில்,
கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. எழுநூறு ஆண்டுப்
பழமையான கோயில் என்று கருதப்படுகிறது. கோயிலின் பழமை, இராமப்பட்டிணம்
பாளையக்காரர்களின் காலத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது.
கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில்
கோவை-பொள்ளாச்சி
சாலைக்கருகிலேயே அமைந்துள்ள இக்கோயில், கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம்
என்னும் அமைப்போடு விளங்குகிறது. கருவறை, கல் கட்டுமானத்துடன் உள்ளது.
அர்த்தமண்டபமும், முன்மண்டபமும் செங்கல் கட்டுமானங்கள். கோயிலுக்கு முன்புறம் கருட
கம்பம் என்றழைக்கப்படும் விளக்குத் தூண் உள்ளது. இது கல்லால் ஆனது. கருவறையின்
கல்கட்டுமானம் கூரைப்பகுதியுடன் நிறைவு பெற்றுள்ளது. அதை அடுத்து, வழக்கமாயுள்ள
செங்கல் கட்டுமான விமானம் காணப்படவில்லை. விமானத்தின் இடத்தில், நாற்புறமும்
சரிந்த ஓடு வேய்ந்த கூரைப்பகுதியும் கூரையின் உச்சியில் கலசமும் காணப்படுகின்றன.
கோயிலுக்குச் சுற்றுச் சுவர் இல்லை. கற்களும் கம்பிகளும் கொண்டு அமைக்கப்பட்ட வேலியே
கோயிலின் சுற்றுச் சுவர். கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகியவற்றின்
வெளிப்புறச் சுவர்கள் யாவும் சுண்ணம் பூசப்பெற்று வெண்ணிறமாகக் காணப்படுகின்றன.
பழங்காலச் சிற்பங்கள்
முன்மண்டபத்தின் தென்புறச் சுவரையொட்டி இரண்டு பெரிய பலகைக் கற்களில்
புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. ஒன்றில், நடுவில் ஓர் ஆண் சிற்பமும், ஆணுக்கு
இருபுறமும் இரு பெண்களின் சிற்பங்களும் உள்ளன. இது ஒரு நடுகல் சிற்பம்; அதாவது நினைவுக்கல்
சிற்பம். ஆணின் உருவம், ஒரு தலைவனின் சிற்பம் என்று கருதுமாறு அமைந்துள்ளது.
நெற்றிக்கு மேலே தலையில், அலங்கரித்த தலைப்பாகை. தலைமுடியை உயரத்தூக்கிச் சற்றே
இடப்புறமாய்ச் சாய்த்து முடித்த தலைப்பாகை. கழுத்தை ஒட்டிய (முத்து)மாலைகளும்,
மார்பு வரை தொங்கும் ஆரங்களும் அணிகலன்களாக விளங்குகின்றன. தோளிலும்,
முன்கைகளிலும் வளைகள் உள்ளன. செவிகளிலும் குழைகள் உள்ளன. இடது
கை இடையில் வைக்கப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது. வலது கை, தோளை நோக்கி மடக்கிய நிலையில்,
வலப்புறமுள்ள பெண்ணிடமிருந்து எதையோ பெற்றுக்கொள்வது போலத் தோன்றுகிறது.
நடுகல் சிற்பம்-1
நடுகல் சிற்பம்-1
இரு
பெண்களின் சிற்பங்களும் தலைவனின் இரு மனைவியர் என்று கருதுமாறு உள்ளன. இருவரின்
தலைமுடியும் முடியப்பட்டு வலப்புறமாகக் கொண்டையிட்ட தோற்றத்தில் உள்ளன. பெண்களும்,
செவிகள், கைகள், மார்பு ஆகிய பகுதிகளில் அணிகலன்களை அணிந்துள்ளனர். ஆணின் வலப்புறமுள்ள
பெண்ணின் இடது கை உயரத்தூக்கிய நிலயில் உள்ளது. கையில் உள்ள பொருள் இன்னதென்று
புலப்படவில்லை. இன்னொரு கையில் ஏதோவொரு
பொருளை ஆணின் கையில் கொடுப்பது போலத்தோன்றுகிறது. இடப்புறமுள்ள பெண் தன்
வலதுகையில் ஒரு மதுக்குடுவையை ஏந்தியிருக்கிறாள். இன்னொரு கையில் என்ன பொருள்
உள்ளது எனப் புலப்படவில்லை. மூன்று சிற்பங்களின் தலைப்பகுதிகளுக்கு மேல், கல்லின்
விளிம்புகளில் தோரணம் போன்றதொரு பூ வேலைப்பாடு காணப்படுகிறது. சிலைகளின் இடைப்பகுதியிலிருந்து
கால்கள் வரையுள்ள பகுதி நிலத்தின் கீழ் புதைந்துள்ளது. நிலத்திலிருந்து முழுதாகத்
தோண்டி வெளிக்கொணரும்போது சிற்பங்களின் முழு உருவங்களும் புலப்படும்.
நடுகல் சிற்பம்-2
நடுகல் சிற்பம்-2
அருகில்
உள்ள இன்னொரு பலகைக் கல்லில் நான்கு உருவங்கள் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், இவை தலைப்பகுதி வரை மட்டுமே வெளியில் தெரிகின்றன. மீதிப்பகுதி முழுதும்
தரைக்குக் கீழ் புதைந்துள்ளது. இந்தச் சிற்பக் கல்லையும் முழுதாகத் தோண்டி
வெளிக்கொணர்ந்தால் முழு உருவங்களும் புலப்படும். இரண்டு பலகைக்கற்களின் பெரிய அளவுள்ள
தோற்றம், சிற்பங்களின் அமைப்பு, வேலைப்பாடுகள், சிற்ப நேர்த்தி ஆகியவை கொண்டு இந்த
நினைவுக்கற்கள் பழமையானவை என்பதும், இவை பாளையக்காரர்கள் காலத்தைச் சேர்ந்தவை
என்பதும் புலப்படுகின்றன. இதற்குச் சான்றாக, இக்கோயிலுக்கும் இராமபட்டிணம்
பாளையக்காரர்களுக்கும் உள்ள தொடர்பு அமைகிறது. இக்கோயில், இராமபட்டிணம் ஜமீன்
வழியினர் பண்டு தொட்டு வணங்கிவரும் கோயிலாக உள்ளது.
ஜமீனின் முன்னோர்கள் எழுப்பிய கோயில் என்றும் கருதப்படுகிறது.
எழுத்துப் பொறிப்புள்ள நினைவுக்கல்
சிற்பங்கள்
கோயிலின்
முன் மண்டபத்தில், அர்த்தமண்டபத்தின் நுழைவாசலுக்கு இடப்புறம், இரு கற்சிலைகள்
காணப்படுகின்றன. உயர்நிலைத் தலைவர்களின் தோற்றத்தில் இச்சிலைகள் உள்ளன. கைகள்
கூப்பிய நிலையில் இரு ஆண்களின் சிற்பங்கள். கொண்டையுடன் கூடிய இருவரும் மார்பு,
தோள், கைகள், செவிகள் ஆகிய இடங்களில் அணிகலன்களைச் சூடியுள்ளனர். இடைக்கச்சில்
குறுவாளோடு காட்சி தரும் இருவரின் ஆடைகள் மடிப்புடன் பாதம் வரையில் உள்ளன. சிற்பங்களின்
பீடப்பகுதியில், ”திம்மண கவுண்டர்” என்றும் “அமண கவுண்டர்” என்றும் பொறிக்கப்பட்ட எழுத்துகள் காணப்படுகின்றன. எழுத்துகள், பிற்கால
எழுத்துகளாக உள்ளன. எனவே, இந்த நினைவுக்கற்கள், இக்கோயிலுக்குத் திருப்பணி
செய்த ஜமீன் வழியினர் எனக்கருதலாம். “நாயக்கர்” என்னும் பெயருடன் விளங்கிய பாளையக்காரர்
வழியினர், பின்னாளில் ஊர்த்தலைவர்களாய் மாற்றம் பெற்றபோது “கவுண்டர்” என்னும் பெயரால் அழைக்கப்பெற்றனர். ஊர்த்தலைவர்கள்,
கருநாடகத்திலும், தமிழகத்திலும் “காமுண்டர்” என்று அழைக்கப்பட்டனர் என்பது இரு மாநிலக் கல்வெட்டுகளிலும்
காணப்படும் செய்தியாகும்.
இராமபட்டணம் பாளையம் (பாளையத்தார்)
மதுரை
விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில், கி.பி. 1529-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில்
72 பாளையங்களை 72 பாளையக்காரர்கள் விசுவநாத நாயக்கரின் கீழ் ஆட்சி செய்துவந்தனர்.
கோவை மாவட்டத்தில் ஊத்துக்குளி, சமத்தூர், கொட்டாம்பட்டி, புரவிபாளையம்,
ஆவலப்பம்பட்டி, ஆச்சிப்பட்டி, நெகமம், மெட்ராத்தி, துங்காவி, மைவாடி எனப் பல பாளையங்கள்
இருந்துள்ளன. ஆச்சிப்பட்டி பாளையத்தார், சில காரணங்களால்
பொள்ளாச்சி-இராமபட்டணத்துக்குக் குடிபெயரவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆங்கிலேயர்
ஆட்சிக்காலத்தில், பாளையம் என்னும் பெயர் ஜமீன் என்றும், பாளையக்காரர் என்னும்
பெயர் ஜமீந்தார் என்றும் மாற்றம் பெற்றன.
ஆச்சிப்பட்டி பாளையத்தில், கோட்டையும், சிறைச்சாலையும் அமைந்திருந்தன என
அறியப்படுகிறது. ஆச்சிப்பட்டியிலிருந்து இராமபட்டணத்துக்குப் புலம்பெயர்ந்த
பாளையக்காரர்கள் இராமபட்டணம் பாளையத்தார் என்றும், பிறகு இராமபட்டணம் ஜமீந்தார்
எனவும் அழைக்கப்பெற்றனர். கோவை, பாலக்காடு ஆகிய மாவட்டங்களின் பல ஊர்கள்
இராமபட்டணம் ஜமீனுக்குக் கீழ் இருந்தன.
ஜமீந்தாரிணி குமர அம்மாள்
இராமபட்டணம்
ஜமீனைச் சேர்ந்தவர்கள், தம் வருவாயில் பல்வேறு கொடைகள் நல்கியுள்ளனர். ஜமீன்
குடிவழியில், ஒரு கட்டத்தில், பட்டத்துக்கு வந்தவர் சிறுவனாய் அமையவே, சிறுவனின்
தாயான குமர அம்மாள் என்பவர் ஜமீந்தாரிணியாகப் பொறுப்பேற்றார். இவர் வீரமிக்க
பெண்மணி ஆவர். தம் ஆட்சிக்குக்கீழ் உள்ள ஊர்ப்பகுதிகளுக்குக் குதிரைமீது பயணம்
சென்று நாடு காக்கும் பணியாற்றியுள்ளார் என்று அறிகிறோம். இவர், பாலக்காடு
சாலையில் நிழல் மரங்கள் நட்டுவித்துள்ளார். ஆச்சிப்பட்டி கோட்டைப்பகுதியில் இருந்த
பெருமாள் கோயில், இராமபட்டணத்து ஜமீன் குடியினர் வந்து வழிபடும் கோயிலாக அமைந்தது.
குமரகுருபர இராமநாத மலையாண்டி எர்ரப்ப
கவுண்டர்
இந்த ஜமீனின்
இறுதி ஜமீந்தார் குமரகுருபர இராமநாத மலையாண்டி எர்ரப்ப கவுண்டர் என்பவர் ஆவார். இவர்
இராமபட்டணத்திலிருந்து கோவைக்குக் குடி பெயர்ந்தார். இவர், கோவை ”காரனேஷன்” பூங்கா உருவாவதற்குக் கொடை
அளித்துள்ளார். இவர், ஒரு ‘மோட்டர் கார்ப் பிரியர்’ எனத்தெரியவருகிறது. இவர், தம்
காலத்தில் புழங்கிய ”கெடிலாக்”, ”டாட்ஜ்”, ”லாண்ட் ரோவர்” ஆகிய வண்டிகளில் திம்பம் பகுதியில் வேட்டைக்குச் செல்வதுண்டு. இவர், பல
ஆண்டுகள் ஒரு யானையை வளர்த்துவந்தார் என்றும் கூறப்படுகிறது. தம் வாழ்நாளின்
இறுதிப்பகுதியில் ஆன்மிகத்தில் மிகுதியும் ஈடுபட்ட இவர், ஒரு துறவி போல்
வாழ்ந்தவர். ஆங்கிலப் புலமை பெற்ற இவர், வேதாந்தம் பற்றிப் பல நூல்களை ஆங்கிலத்தில்
இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வழி வந்தவரே (இவரின் மகனுக்குப்
பேரன்), மேலே நாம் குறிப்பிட்ட நந்தகுமார் என்னும் இளைஞர்.
கோயில் பராமரிப்பு
கோயில்,
ஆங்கிலேயர் காலத்திலிருந்து சிதைவுற்றுக் கிடந்துள்ளது. அதை ஒருவாறு பேணிப்பாதுகாத்து
வந்தவர்கள் கோயிலின் பூசைப் பரம்பரையினரே. பல தலைமுறைகளுக்குப் பின்னர் தற்போது
பாலகிருஷ்ணன் என்பவர் பூசைப்பணியை மேற்கொண்டுள்ளார். கோயில், திருப்பணிகளால்
தற்போதுள்ள நல்ல நிலைமைக்கு வந்ததும், ஆங்கிலேயர் காலத்தில் கோயிலின்
நிலைமை, கோயிலைச் சேர்ந்த சொத்துகள் ஆகியன பற்றியும் கோயில் பூசையாளரிடம் செய்திகள்
பெறப்பட்டதும் பின்னர் குறிப்பிடப்படும்.
முடிவுரை
ஆச்சிப்பட்டி, பாளையக்காரர் வரலாற்றோடு தொடர்புடைய ஊர் என்பதும், இங்குள்ள பெருமாள் கோயில், பாளையக்காரர்கள் காலத்தில் உருவாகி, அவர்தம் குடியினர் தொடர்ந்து வழிபடும் கோயிலாக உள்ளது என்பதும், இக்கோயிலில் பாளையக்காரர்கள் காலத்து நினைவுக்கல் சிற்பங்கள் வரலாற்றுத் தடயங்களாக இன்னும் காணப்படுகின்றன என்பதும் அறியப்படுகின்றன. இந்தப் பெருமாள் கோயில், இன்றளவும் கோட்டைக்கோயில் என்னும் பெயரால் அழைக்கப்பெறுவதனின்றும், ஆச்சிப்பட்டியில் கோட்டை இருந்துள்ளமை புலப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக