மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 24 ஏப்ரல், 2017

உடுமலை அருகே தொல்லியல் தடயங்கள்
சிறியதொரு வரலாற்றுப்பயணம்


முன்னுரை

     கோவையில் இயங்கும் வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் கோவையைச் சுற்றிலுமுள்ள கொங்குப்பகுதியில் ஆங்காங்கே அமைந்துள்ள, தொல்லியல் தடயங்களைக் கொண்டுள்ள இடங்களுக்கு வரலாற்றுப் பயணமாக அழைத்துச் சென்று வரலாறு, தொல்லியல் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில், 26-03-2017 ஞாயிறன்று, உடுமலை வட்டாரத்தில் சில இடங்களூக்குப் பயணமானோம். அது பற்றிய பதிவும் பகிர்வும் இங்கே. 

காசிலிங்கம்பாளையம்-பெருங்கற் சின்னங்கள்

      தொல்லியலில், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைப் பெருங்கற் காலம் என்று வழங்குவர். ஆங்கிலத்தில், MEGA LITHIC PERIOD  எனக் குறிப்பிடப்படும். (MEGA=பெரும்; LITH=கல்) பெயருக்கேற்றவாறு, பெருங்கற்களைக்கொண்டு நினைவுச் சின்னங்களை அக்கால மக்கள் உருவாக்கினர். அது போன்ற பெருங்கற் சின்னங்களைக் கொண்டுள்ள ஓர் இடம்தான் காசிலிங்கம்பாளையம் என்னும் சிற்றூர்.  பல்லடம்-உடுமலைச் சாலையிலிருக்கும் ஜல்லிப்பட்டி என்னும் ஊரின் கிழக்கே பிரியும் ஒரு சாலையில் பயணம் செய்தால் முதலில் வருவது அய்யநாயக்கன் பாளையம். அதை அடுத்துள்ள ஊர் காசிலிங்கம்பாளையம்.

கல் வட்டம்

      காசிலிங்கம்பாளையத்தில் நாங்கள் பார்த்த பெருங்கற் சின்னம் என்பது, தொல்லியலார் குறிப்பிடும் கல் வட்டம் ஆகும். ஆங்கிலத்தில், CAIRN CIRCLE  எனக் குறிப்பிடப்பெறும் கல்வட்டம்,  இறந்தவர்களின் புதைவிடச்  சின்னங்களாகும். உருண்டையான வடிவத்தில் அமைந்த பெரும் பெருங் கற்களை ஒரு பரப்பில் வட்டமாக அடுக்கி வைத்து எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம். இந்த வட்டத்தின் நடுப்பகுதிதான் புதைவிடத்தைக் குறிக்கும் பகுதி. புதைவிடம் என்றதும், இறந்தவர்களின் உடலை அங்கு புதைத்திருப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. தமிழ் இலக்கியங்களோடு தொடர்புள்ள, சங்க காலம் என்று நாம் குறிப்பிடும் காலம், கி.மு. 500 வரையுள்ள பண்டைக்காலம் என்று சான்றுகளோடு நிறுவப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் புலிமான்கோம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ள ஒரு நடுகல்லில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துகளின் அடிப்படையில் இக்கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. சங்க காலத்துக்கு முன்னர் உள்ள காலத்தைத் தான் பெருங்கற்காலம் என்று குறிப்பிடுகின்றனர்.

                              கல்வட்டங்கள்












      காட்டு வாழ்க்கை வாழ்ந்துவந்த மக்கள், வேளாண்மை வாழ்க்கையைத் தொடங்கியதும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு ஆங்காங்கே கால்நடைப்பட்டிகளை அமைத்துக் கொண்டு, ஓரிடம் விட்டு ஓரிடம் என்ற முறையில், இடம் பெயர்ந்து வாழும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த இடப் பெயர்தலை ஆங்கிலத்தில் நொமாடிக்”  ( NOMADIC )  என்று குறிப்பிடுவர். வேளாண்மை வளர்ச்சியுற்ற காலத்து, மக்கள் இடம் பெயர்தலை விடுத்து ஓரிடத்தே நிலையாக வாழத் தலைப்பட்டனர். ஊர் உருவாக்கமும் நிகழ்ந்தது. இந்த இடத்தில், வேளாண்மையை அறிமுகப்படுத்தியவர்கள் மகளிரே என்னும் கருத்தை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. காட்டு வாழ்க்கையில், ஆண்மக்கள் வேட்டைக்குச் சென்றதும், பெண்கள் காட்டுப்பகுதிகளில் இயற்கையாய்க் கிடைக்கும் உணவுப்பொருள் தேடலின்போது வேளாண்மையின் அடிபடைக்கூறுகளைத் தெரிந்துகொண்டனர். இது உலகம் முழுவதும் நிகழ்ந்த ஒன்று.

      ஊர் வாழ்க்கையில், இறந்தவர்களைப் புதைக்கும் மரபு தோன்றியது. முழு உடலைப் புதைக்கவில்லை. இறந்தவரின் உடலை ஊருக்குப் புறத்தே ஆங்காங்கே  எறிந்தனர். இயற்கையாகவும், கழுகு போன்ற பறவைகளும் மற்ற சில விலங்குகளும் தின்றும், அழிந்துபோகவிடுவர். சில நாள்கள் அல்லது மாதம் கழித்து, எஞ்சியுள்ள எலும்புகளை முதுமக்கள் தாழிகளிலோ, அல்லது கற்களைக்கொண்டு அமைத்த சிறு அறைகளிலோ வைத்துப் புதைத்து மூடி விடுவர். இறந்தவர்கள் பயன்படுத்திய பொருள்களை உள்ளே வைத்துவிடுவர். பண்டு, இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவர் என்றும், ஆவியாக வந்துசெல்வர் என்றும், இறந்தும் அவர்கள் ஊர் மக்களைக் காப்பதாகவும், மழை, மண் விளைவு போன்ற வளங்கள் நல்குவதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவியது. புதைவிடங்களை அடையாளப்படுத்தும் முகத்தான், அதைச் சுற்றிலும் பெரும் உருண்டைக் கற்களை வட்டமாக அடுக்கிவைத்துப் பாதுகாத்தனர். ஊர் என்றால், அதற்கு ஒரு தலைவன் உண்டே. ஊர்த்தலைவனின் புதைவிடத்து நினைவுக்கல் மிகப் பெரிதாயிருக்கும். கற்களை வட்டமாக அடுக்கிவைக்காமல், நெடியதொரு கல்லைச் செங்குத்தாக் நிறுத்திவைப்பர். இதை நெடுநிலை நடுகல் என்பர். (பின்னர், கட்டுரையின் ஒரு பகுதியில் நெடுநிலை நடுகல்லைப் பற்றிய செய்தியைக் காணலாம்.)


      காசிலிங்கம்பாளையத்தில், நாங்கள் பார்த்த கல்வட்டங்கள் இருந்த பகுதி ஒரு பெரிய பரப்பு. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர், நம் பயணத்தில் பங்குகொண்ட வரலாற்று ஆர்வலர் சதாசிவம், இந்த இடத்தை முதலில் கண்டறிந்தபோது, இப்பகுதியில் எண்பதுக்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந்துள்ளன. தற்போது, நாங்கள் பார்க்கையில், இருபது அல்லது இருபத்தைந்து கல்வட்டங்கள் இருக்கக் கூடும். அவையும், முழு வட்டங்கள் என்பதாகத் தோற்றம் கொண்டிருக்கவில்லை. கற்கள் பலவாறு சிதறுண்டு போயின. ஊர் மக்கள் தொடர்ந்து மேற்கொண்ட வேளாண் நிலமாக்கும் முயற்சியில், நூற்றுக் கணக்கான உருண்டைக்கற்கள் புரட்டியெறியப்பட்டு, ஓரங்களில் ஒதுக்கப்பட்டு, கல்வட்டங்கள் ஊனமாயின. ஓரிரு இடங்களில், உருண்டைக் கற்களை வட்டமாக அடுக்குவதற்கு மாற்றாக, புதைவிடத்தை அடையாளப்படுத்த, கற்களைக் குவியலாக அடுக்கிய அமைப்புகள் காணப்படுகின்றன. இவை கற்குவை எனப்படும்.

      பெருங்கற் சின்னங்கள் இருக்கும் இடங்கள் பெரும்பாலும் பள்ளமான நீர்ப்பிடிப்புப் பகுதி அல்லது  ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள வாழ்விடத்துக்கருகில் காணப்படும். இங்கே காசிலிங்கம்பாளையத்துக்கருகிலும் நீரோடிய பள்ளம் காணப்படுகிறது. அமராவதி ஆற்றின் துணையாறான உப்பாறு அணித்துள்ளது எனத்தெரிகிறது.

மன்று (மன்றம்)

      காசிலிங்கம்பாளையத்திலிருந்து திரும்பும் வழியில், அம்மன் கோயிலின் முன்புறம் அரசு, வேம்பு ஆகிய இரு மரங்களை நடுவில் இருத்திக் கட்டப்பெற்ற ஓர் அழகிய மேடையைப் பார்த்தோம். பயணத்துக்குத் தலைமையேற்ற முனைவர் இரா.ஜெகதீசன் அவர்கள், இந்த மேடை சங்க காலத்து “மன்று”   என்னும் கருத்தை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார். சங்ககால மக்கள் வாழ்க்கையில், ஊரின் நடுவில் மக்கள் கூடிப்பேசுவது வழக்கமாக இருந்துள்ளது. இவ்வாறு கூடுவதும், கூடும் இடமும் மன்றம் (மன்று) எனப்பட்டது. இம்மன்றங்களில் ஊர்ப் பெரியோர் கூடி மக்களிடையே நிகழ்ந்த வழக்குகளைத் தீர்க்கும் பணி நடத்தினர் என்று இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். அது போன்றதொரு மன்று, இங்கே நேரில் காட்சியளித்தது.  மன்றத்தைப்பற்றிப் புறநானூறும் குறிப்பிடுகிறது.

                                  மன்று


மன்ற வேம்பின் ஒண்பூ உறைப்ப
                        -புறம்.371.

இதிலிருந்து, மன்றத்து மேடை வேப்ப மரத்தின் கீழ் இருந்ததாக அறிகிறோம். நாம் நேரில் பார்த்த இந்த மன்றமும் வேப்பமரத்தடியிலேயே இருந்தது. கூடுதலாக அரச மரமும் இணைந்திருந்தது ஒரு சிறப்பு. கல்வெட்டுகளில், குறிப்பாகச் சோழர்காலக் கல்வெட்டுகளில் “தெண்டக் குற்றம்”  என்றும் “குற்றத்தெண்டம்”  என்றும் குறிப்புகள் உள்ளன. ஊர் மக்களில் குற்றம் இழைத்தவர்க்கு மன்றங்களில் தண்டனை தருவதும், குற்றத்துக்காகச் செலுத்தும் பணமும் குற்றத்தெண்டம் எனப்படும். சங்க கால மன்றம், சோழர் காலத்தில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலும் செயல்பட்டு வந்ததைக் காண்கிறோம். 

வெற்றிலைக்கார சாமி
      


      ஊர் மன்றத்தைப் பார்த்துவிட்டு சிறிது தொலைவு சென்றதும், மற்றொரு மரத்தடி மேடையில் சில முதியோர் கூடியிருந்ததைப் பார்த்தோம். மேடையில் ஒரு பழஞ்சிற்பம் காணப்பட்டது. அது பற்றி அவர்களிடம் கேட்டபோது, அது வெற்றிலைக்காரசாமி என்றார்கள். அது ஒரு நினைவுக்கல் போன்றே காணப்பட்டது. சிலையின்மீது தொடர்ந்து எண்ணெய் பூசப்பட்டு வருவதால் வடிவமைப்பு நுண்மையாகத் தெரியவில்லை. இருப்பினும், ஓர் ஆண் சிற்பம் என்பதும், அதன் இடது தோள்ப்பகுதியில் வில் போன்ற பொருளும், இடையில் குறுவாளும் இருப்பது புலப்பட்டது. தலை முடி, இடதுபுறமாக்க் கொண்டை அமைப்பில் இருந்தது. ஒரு நடுகல்லாக இருக்கக் கூடும்.

மெட்ராத்தி-மாலக்கோயில்

      அடுத்து நாங்கள் சென்ற ஊர் மெட்ராத்தி. பல்லடம்-உடுமலைச் சாலையில் குடிமங்கலத்திலிருந்து கிழக்கே பிரியும் சாலையில், துங்காவி என்னும் ஊரைக் கடந்த பின்னர் உள்ள ஊர் மெட்ராத்தி. மெட்ராத்தியில், தென்னந்தோப்புகளின் சூழலில், மாலக்கோயில் என்றழைக்கப்படும் ஒரு கோயில் உள்ளது.

                             மாலக்கோயில்-முகப்பு


நாளிதழ்ச் செய்தி

      இக்கோயிலைப்பற்றி 2015-ஆம் ஆண்டு தினமலர் நாளிதழில் ஒரு செய்தி வெளியானது. அதில், மெட்ராத்தி ஜமீனைச் சேர்ந்த முன்னோர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுப்பிய நினைவுச் சின்னம் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரத்தாலான இந்த சதுரத்தூணில் பன்னிரண்டு படிநிலைகளில் சிற்பங்களை அமைத்திருக்கிறார்கள். வீரர்களின் உருவங்கள், போரிடும் காட்சிகள், வரிசையாக நிற்கும் பெண்களின் உருவங்கள், குதிரை வீரர்களின் உருவங்கள், மாடுகளின் உருவங்கள், சிவலிங்கம், குழலூதும் கண்ணன் எனப் பல்வேறு உருவங்கள் தூணின் நான்கு புறங்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. போரில் இறந்தவர்கள் நினைவாக அல்லது போர் நிகழ்ந்ததைக் குறிப்பிடும் வகையில் இந்த நினைவுத்தூண் அமைக்கப்பட்டிருக்கலாம். இக்கோயில் மெட்ராத்தி ஜமீனைச் சேர்ந்தவர்களின் குலதெய்வக்கோவிலாக் விளங்குகிறது. ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் ஜமீனைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். ஜமீன் குடும்பங்களில் இறப்பவர்கள் கோவில் அருகில் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.

கோயிலின் வரலாற்றுப் பின்னணி
கர்னல் காலின் மெக்கன்சி
      மேலே, நாளிதழ்ச் செய்தியில் பொதுவான செய்திகள் குறிப்பிடப்பட்டாலும், வரலாற்றுப் பின்னணியில் வேறு செய்திகள் உள்ளன. மெட்ராத்தி, ஒரு பாளையக்காரர்களுடைய ஊர். ஸ்காட்லாந்து”  நாட்டைச் சேர்ந்த காலின் மெக்கன்சி (1754-1821) கி.பி. 1783 - இல் இந்தியாவிற்கு வருகை தந்தார்.  கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு பொறியியல் பிரிவின் பணியாளராகப் பணியாற்றிய இவர்,.  பழங்கணக்குகள், இந்திய வரலாறுகள், கீழ்த்திசை மொழிகள் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்தார்.  அவர் ஏராளமான சுவடிகள், வரை படங்கள், நாணயங்கள் ஆகியவற்றைச் சேகரித்தார்.  தமிழ் நாடு தொடர்பானது மட்டுமல்லாமது சிலோன், சாவா ஆகிய பகுதிகள் தொடர்பாகவும்  அவருடைய தொகுப்புகள் இருந்தன.  அவர், பாளையக்காரர் பற்றி எழுதியுள்ள நூலில், மெட்ராத்தி நினைவுச் சின்னம் பற்றிய குறிப்பு உள்ளது. மெட்ராத்தி பாளையக்காரர்கள், தில்லி சுல்தான்களின் ஆட்சியின்போது, வட இந்தியாவில் ஒரு பகுதியின் ஆட்சியாளர்களாய் இருந்தவர்கள். அவர்களிடம் தில்லி சுல்தான்கள் பெண் கேட்டுள்ளனர். சுல்தான்களுக்கு அஞ்சி, மெட்ராத்தி முன்னோர்கள் விசய நகரப் பேரரசர் கிருஷ்ணதேவ ராயரிடம் அடைக்கலம் நாடினர். அவர்களுடைய பின்னணி, திறமைகளைக் கிருஷ்ணதேவராயர் கண்டு பாராட்டி ஆதரவு கொடுத்துச் சிறிதுகாலம் தம்முடன் இருத்திக்கொண்டார். பின்னர், அவர்களுக்கு மெட்ராத்திப் பகுதியை ஒதுக்குப் பாளையக்காரர்களாக ஆட்சிப்பொறுப்பை அளித்தார். இராயர் காலத்தில் இந்த ஊர், புது ஊராக உருவாக்கப்பட்டது. ஊரின் பெயர் தெலுங்குச் சாயலுடன் இருப்பதைக் காணலாம். மெட்ராத்தி பாளையக்காரர்கள் கம்பளத்து நாயக்கர் குலத்தினர் ஆவர். தில்லி சுல்தான்களின் ஆட்சியின்போது, இந்துக்கள் வடக்கிலிருந்து தெற்கில் இடம் பெயர்ந்து வந்துள்ளனர் என்ற வரலாற்றுச் செய்தியும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் நிறையப்பேர், பாளையக்காரர்கள் என்னும் நாயக்கர்கள் உருவாக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்தியும் அறியப்படுகின்றன. இவர்கள் படைகளுடன் கூடிய ஆட்சித்தலைவர்கள்; இராயரின்கீழ் கட்டுப்பட்டு, இராயருக்கு வரி செலுத்தவும், இராயருக்கு வேண்டும்போது படையுதவி தரவும் ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள். இராயரின் ஆட்சி நிருவாக வரலாற்றில் இதை “நாயக்கத்தனம் என்று குறிப்பிடுவர். எனவே, நாயக்கர் என்போர் ஒரு சாதியினர் அல்லர் என்பது பெறப்படும்.

நடுகல்-விஜயநகரர் பாணி (தெலுங்கர் மரபு)

                                                                           அடுக்கு நிலைத் தூண் நடுகல் 


      பல அடுக்கு நிலைகளைக்கொண்ட நெடிதுயர்ந்த தூண் வடிவிலான நடுகல் அமைப்பு தமிழகத்தில் இல்லை. இவ்வகை நடுகல் தெலுங்கர் மரபு. தெலுங்கரான பாளையக்காரர்களின் காலத்தில்தான் இவ்வகை நடுகற்கள் தமிழகத்துக்கு அறிமுகமாயின. இவ்வகை நடுகல் பண்பாடு ஆந்திரத்திலும் கருநாடகத்திலும் உண்டு. ஆனால், கருநாடகத்தில், மூன்று அடுக்குகளுக்கு மிகாது. முதல் அடுக்கில் வீர மரணம் எய்திய வீரனின் உருவம் (வீரச்செயலும் இடம் பெறுவதுண்டு), இரண்டாவது அடுக்கில், வீரனுடன் சதி”  என்னும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த அவனது மனைவி (தேவ மகளிர் அவளை மேலுலகுக்கு அழைத்துச் செல்வது போன்ற காட்சி), மூன்றாம் அடுக்கில் மேலுலகம் சென்ற வீரன் சிவலிங்கத்தை வணங்கும் காட்சி ஆகியவை சிற்பங்களாக வடிக்கப்படும். இது கன்னட மரபு.  இது கங்கர்களின் ஆட்சித் தாக்கத்தால் தமிழகம் வந்தது. தெலுங்கு மரபுள்ள தூண் நடுகற்கள், உடுமலை-பொள்ளாச்சிப் பகுதியில் கோட்டமங்கலம், சிஞ்சுவாடி, மெட்ராத்தி ஆகிய மூன்று ஊர்களில் காணலாம்.

தூண் சிற்பங்கள்

      பன்னிரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்ட இத்தூண் நடுகல்லில் ஒவ்வொரு அடுக்கிலும் போர் வீரர்களின் வரிசை, பெண்களின் வரிசை, போர்க்காட்சிகள் எனப்  பல்வேறு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கோட்டமங்கலம், சிஞ்சுவாடி  ஆகிய ஊர்களில் உள்ள தூண் நடுகற்கள் கற்களால் ஆனவை. ஆனால், இங்குள்ளது, மரத்தால் ஆனது என்பது சிறப்பு. மரத்தால் ஆனது என்றாலும், சிதைவுகளின்றி நல்ல நிலையில் காணப்படுகிறது. காலம் காலமாக இதன் மேல் எண்ணெய்ப் பூச்சு பூசப்படுவதால் சிதைவு ஏற்படவில்லை எனலாம். தூணின் உச்சியில், சிவலிங்கம், நந்தி  ஆகிய சைவத்தின் உருவங்களும், சங்கு சக்கரத்துடன் கூடிய குழலூதும் கண்ணன் உருவமும் ஒருசேரக் காணப்படுவது, சமயப் பொறையைக் குறிக்கும் எனலாம். கொங்குப்பகுதி பல நூறு ஆண்டுகளாகக் கொங்குச்சோழர் ஆட்சியில் இருந்தது. சோழர் சைவ சமயத்தைப் பேணினர். எனவே, மக்களும் சைவம் சார்ந்திருந்தனர். இந்நிலையில், விஜய நகரர்-பாளையக்காரர் ஆட்சியில், அரசு வைணவம் சார்ந்திருந்தாலும் மக்களின் போக்குக்கு இடையூறு நேராவண்ணம் வைணவத்தைச் சைவத்தோடு இணைத்தே வளர்த்தனர் எனலாம். எனவேதான், இந்த நடுகல்லில், வீரன் மேலுலகம் அல்லது சிவபதவி அடைந்தான் எனக் குறிக்க நடுகல்லில் சிவலிங்கமும் நந்தியும், வைகுண்ட பதவியை நினைவூடும் வகையில் கண்ணனும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.  மக்களை மன்னன் பக்கம் திருப்பும் முயற்சி எனலாம். மெட்ராத்தி தூண் நடுகல், போரில் இரந்த அனைத்து வீரர்களுக்குமான ஒரு நினைவுச் சின்னமாக விளங்குகிறது.

                     சைவம்-வைணவம் இணைந்த சிற்பம்

                                                      வீரனும் புலியும்


                                                       வீரனும் பன்றியும்


                                                 


நெடுநிலை நடுகல்-நாட்டுக்கல்பாளையம்



      அடுத்து நாங்கள் சென்ற ஊர் நாட்டுக்கல்பாளையம். பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் காரத்தொழு என்னும் ஊரிலிருந்து பிரியும் சாலையில் அமைந்துள்ள சிற்றூர் நாட்டுக்கல்பாளையம். இங்கே, பெருங்கற்காலத்து நினைவுச் சின்னங்களுள் ஒன்றான நெடுநிலை நடுகல் ஒன்று உள்ளது. இதனை ஆங்கிலத்தில் (MENHIR)  என்று குறிப்பிடுவர். பதினைந்திலிருந்து இருபது அடிகள் உயரத்தில் நெடியதாய் செங்குத்தாக நிற்கும் ஒரு பலகைக்கல். அடிப்புறத்தே அகலமாகத் தொடங்கி, உயரம் செல்லச் செல்லக் குறுகி முடியும் ஒரு கல். ஒரு தலைவனுக்கு எழுப்பப்பட்ட நினைவுக்கல். 

கோட்டமங்கலம்-கல்திட்டைகள்

                            கல்திட்டை-1


                                                              கல்திட்டை-1

                                                               கல்திட்டை-2

                                                               கல்திட்டை-2

      நெடுநிலை நடுகல் பார்த்தபின்னர், அடுத்து நாங்கள் சென்ற ஊர் கோட்டமங்கலம். அக்கு, தார்ச் சாலையிலிருந்து ஒரு கல் தொலைவில் புன்செய் நிலத்திடையே காணப்பட்டவை இரு கல்திட்டைகள். பெருங்கற்கால நினைவுச் சின்னங்களுள் இதுவும் ஒரு வகை. ஆங்கிலத்தில்DOLMENஎனக் குறிப்பிடுவர். பெரும் பெரும் பலகைக் கற்களை வீடு போல இணைத்த ஓர் அமைப்பு. செவ்வக வடிவிலானது. முன்புறம் சிறிய அளவிலான இரண்டு பலகைக் கற்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் இடையில் வீட்டின் நுழைவாயில் போன்று இடைவெளி. நேர் பின்புறம் ஒரு ஒற்றைக் கல் பலகை. இவ்விரண்டு அமைப்பும் செவ்வகத்தின் அகலப் பக்கங்கள். செவ்வகத்தின் நீளப்பக்கங்கள் இரண்டிலும் இரண்டு நீளமான பெரிய பலகைக் கற்கள். இவற்றின் மேலே கூரைப்பகுதியில், ஆமையின் முதுகில் காணப்படும் ஓடு போன்றதொரு மிகப்பெரிய பலகைக் கல். செவ்வகப் பரப்பை முழுதும் மூடுகின்ற வகையில் மூடுகல். உள்ளே காணப்படும் அறை போன்ற இடம், கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு, இறந்தவர் எலும்புகள், பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை வைத்து வழிபடும் இடம். இக்கல்திட்டையை அடுத்து அருகிலேயே மற்றொரு கல்திட்டை இருந்தது. இதில், மூடுபலகைக் கல்லில் ஒரு பெரிய வட்டமான துளை காணப்படுகிறது.

கொங்கல்நகரத்தில் ஒரு நெடுநிலை நடுகல்




      அடுத்து நாங்கள் பயணப்பட்டது கொங்கல் நகரம் என்னும் ஊருக்கு. மீண்டும் ஒரு நெடுநிலை நடுகல்லைப் பார்க்கும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. முன்பு பார்த்த நெடுஙகல்லைவிட அளவில் பெரியது. அண்ணாந்து பார்க்கும் வகையில், ஏறத்தாழ இருபது இருபத்தைந்து அடிகள் உயரம் கொண்ட தோற்றத்தை உடையது. ஒரு வேப்பமரம் அதை ஒட்டியவாறு வளர்ந்துள்ள நிலையில், சற்றுக்காலத்தில் மரம் பெரிதாக வளர்ந்து நடுகல்லைச் சாய்த்துவிடும் சூழ்நிலை காணப்படுகிறது. தவிர கல்லின் உச்சிக் கருகிலிருந்து கீழ்நோக்கி வரும் இடைப்பகுதி வரையிலும் கல்லின் பரப்பில் ஆங்காங்கே வெடிப்புப் போன்ற கோடுகள் உள்ளன. கல் சரிய நேருமெனில் மேல்பகுதி உடைவது திண்ணம். அதற்கேற்றவாறு, நடுகல்லின் அடிப்பகுதி அகலமாகவும், மேலே செல்லச் செல்ல அகலம் குறைந்தும் வலுவின்றிக் காணப்படுகிறது.

சோமவாரப்பட்டி-அமரபுயங்கரீசுவரர் கோவில்



      பயணத்தின் இறுதிக்கட்டத்தில் நாங்கள் பார்த்தது சோமவாரப்பட்டி என்னும் ஊரில் இருக்கும் அமரபுயங்கர ஈசுவரர் கோவில். இவ்வூரின் பழம்பெயர் அமரபுயங்கரபுரம் என்பதாகும். பழக்காலத்தில் வணிக நகரமாக இருந்துள்ளது. பெருவழியின் அருகில் அமைந்த ஊர். தென்கொங்குப்பகுதியை ஆண்ட வீரகேரள அரசருள் இரண்டாமவனான அமரபுயங்கன் என்பவனின் பேரால் அமைந்த நகரம். (வடகொங்குப்பகுதியைக் கொங்குச் சோழர்கள் ஆண்டுவந்தார்கள்.) இவனது ஆட்சிக்காலம் கி.பி. 967-990. இவன் முதலாம் இராசராச்னை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றவன். இராசராசனிடம் அடிபணியவே, இராசராசன் இவனை மீண்டும் ஆட்சியில் இருத்தி இறை செலுத்தச் செய்தான். இங்குள்ள கோயில் இறைவற்கும் அரசனின் பெயராலேயே அமரபுயங்கரீசுவரர் என்னும் பெயரமைந்தது. இக்கோயிலில் இரு கல்வெட்டுகள் உள்ளன. பரகேசரி கோனேரின்மைகொண்டான் என்னும் அரசன், தென்கொங்கில் நல்லூர்க்கால், காவடிக்கால், வாயறைக்கால் நாடுக்ளின் சிவன் கோவில்களில் பூசை நின்றுபோகவே, மீண்டும் பூசை தொடர ஆணையிட்டுக் கொடை அளித்துள்ளான். மற்றொரு கல்வெட்டில், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிகர்களும், இவ்வூர் நகரத்தாரும் சேர்ந்து இக்கோயிலுக்குக் கண்ணாடிப்புத்தூரில் உள்ள நிலத்தைக் கொடையாக அளித்துள்ளார்கள்.
  
மூவர் கண்டியம்மன் கோயில் 

                                                   மூவர் கண்டியம்மன் கோயில்


                                                          வாயிற்காவலர்-ஆண்

                                                          வாயிற்காவலர்-பெண்

                                                             கூரையில் சிற்பம்


      சிவன் கோயிலுக்கருகிலேயே அமைந்துள்ளது மூவர் கண்டியம்மன் கோயில். இக்கோயில் சற்றுப்பழமையானது. ஆனால் கல்வெட்டுகள் எவையுமில்லை. எட்டுக்கைகளை உடைய கொற்றவையின் மூலவர் சிற்பம் சிறப்பானது. 

சாம்பல் மேடு


        கண்டியம்மன்கோயில் கருடகம்பம்-பின்னணியில் சாம்பல்மேடு    


கோயிலுக்கருகில் சாம்பல் மேடு என்ற பெயர்கொண்ட இடம் பெருங்கற்கால வாழ்விடத்தைக் கொண்ட ஓரிடமாகும். இங்கு மேற்பர்ரப்பிலேயே, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பானையோட்டுச் சில்லுகளும், சங்கு வளைகளின் துண்டுகளும், சிறார்களின் விளையாட்டுப் பொருளான சுடுமண் வட்டுகளும் கிடைத்துள்ளன. அண்மையில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன், இங்கு “அமண”  என்னும் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறித்த பானைச் சில்லு கிடைத்தது இப்பகுதியின் பழமையை எடுத்துச் சொல்லும். அரசு அக்கறைகொண்டால், முறையான அகழாய்வு மூலம் பழமைச் சான்றுகள் பல கிட்டும்.



கருத்துகள், செய்திகள் - துணை நின்றோர் :

1. முனைவர். இரா.ஜெகதீசன், வாணவராயர் அறக்கட்டளை, கோவை.
2. தமிழ் மரபு அறக்கட்டளை.
3. கல்வெட்டு-காலாண்டிதழ், அக்டோபர், 2010.

------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக