மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 4 மே, 2016

கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோயில்
        
கோயம்பேடு

        சென்னையின் மிகப்பெரிய அடையாளங்களுள் கோயம்பேடு பகுதியும் ஒன்று. தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறிகள் விற்பனைச் சந்தையும்,  மிகப்பெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் அங்கேதான் உள்ளன. இவற்றின் அருகே நெடிதுயர்ந்த அடுக்குமாடி வீடுகள் அடங்கிய ஒரு பெருந்தொகுதியும் உண்டு. வளைந்து,வளைந்து மேலும் கீழுமாய்ப் பல மலைப்பாம்புகள் நெளிந்தோடுவதன் தோற்றத்தையொத்த கான்கிரீட்சாலைகளை இணைக்கும் மிகப்பெரிய பாலங்களின் தொகுதியும் அங்கே உண்டு. பரபரப்பான இப்பகுதியில், சிவன் கோயில் ஒன்று, தான் இருக்குமிடம் சொல்லாமல் அமைதியாக நிற்பதைச் சென்னையில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தும் நான் கண்டிலன். தற்போது, பணி ஓய்வில், சென்னையை விட்டு நீங்கிக் கோவை வந்துசேர்ந்து, கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் திறம் பெற்ற பின்னர், சென்னை சென்றபோது, ஒரு நாள் கோயம்பேட்டில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்றேன்.

கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோயில்



         கோயிலுக்குச் சென்றிருந்த நேரம் மாலை மங்கி இருள தொடங்கும் நேரம். கோயிலின் கருவறை கஜபிருஷ்டம்”  என்னும் அமைப்பை உடையது. அழகாகத் தமிழில் தூங்கானை மாடம் என்று வழங்கும். கருவறை, சதுரமாக அமையாமல் வட்டமாக யானையின் பின்புறத்தை ஒத்த வடிவத்தில் அமைந்திருக்கும். கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றுக்கும் கருவறை அதிட்டானப்பகுதிக்கும் இடையில் அகழி போன்ற ஒரு பள்ளம். திருச்சுற்றில் போதிய வெளிச்சம் இல்லை. கைப்பேசியின் ஒளியில் சுவரில் உள்ள சில கல்வெட்டுப்பகுதிகளை ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டேன். ஒளிப்படங்களை இல்லத்தில் கணினியில் பார்த்துப்பார்த்து கல்வெட்டுப் பாடங்களைப் படித்தேன்.

கல்வெட்டுகள் சொல்லும் நாட்டுப்பிரிவு

         கல்வெட்டுப்பாடங்கள் பல்வேறு செய்திகளைக் கூறின. சென்னைப்பகுதியானது, சோழர் ஆட்சியின்போது ஜயங்கொண்டசோழ மண்டலத்தில் அமைந்திருந்தது. சோழர் ஆட்சியின்போது மண்டலம், வளநாடு, கோட்டம் அல்லது கூற்றம், நாடு ஆகிய நிலப்பிரிவுகள் இருந்தன. தொண்டை மண்டலம் முழுதும் ஜயங்கொண்டசோழ மண்டலம் என்னும் பெயரில் இருந்தது. எனவே சென்னைப்பகுதியும் ஜயங்கொண்டசோழ மண்டலத்துள் அடக்கம். வளநாட்டுப்பிரிவில் இப்பகுதி குலோத்துங்கசோழவளநாட்டிலும், புலியூர்க்கோட்டத்திலும் சேர்ந்திருந்தது. நாட்டுப்பிரிவாக மாங்காடு நாடு என்னும் பிரிவு கல்வெட்டில் குறிப்பிடப்பெறுகிறது. மாங்காடு, இப்போதும் இப்பகுதியில் இருப்பதைக் காண்கிறோம். கோட்டத்தைக் குறிக்கும் புலியூரும் (பல நாடுகளை உள்ளடக்கியதால்) சென்னையைச் சுற்றியுள்ள பெரும்பரப்பில் எங்கோ இருக்கவேண்டும். (சரியான தகவல்களைத் தேடியிருக்கவேண்டும்; ஆனால் செய்யஇயலவில்லை.) கல்வெட்டுகளில், கோயம்பேடுஎன்றே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் “குறுங்கால் ஆண்டார்என்னும் பெயரில் குறிப்பிடப்பெறுகிறார். (இங்கேயுள்ள “ஆண்டார்என்னும் வழக்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் “ஆளுடையார்என்று வழங்குவதைக் காண்கிறோம். பெரும்பாலான கோயில்களில் இறைவனின் பெயர், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் பெயரினின்றும் வேறுபடும். இங்கே, இப்பொழுதும் இறைவனின் பெயர் “குறுங்காலீசுவரர் என்னும் பெயரால் பழமையை இழக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோயம்பேடு என்னும் ஊர்ப்பெயரும் தன் பழம்பெயரை இழக்காமல் இருப்பது சிறப்பு. இறைவன் பெயர் குறுங்கால்”  ஈசுவரர் என்று எவ்வாறு அமைந்தது? குறுங்கால்என்பது எதைக்குறிக்கும்? என்பன போன்ற குறிப்புகள் தெரியவில்லை. சரியான காரணத்துடன் கூடிய செவிவழிக்கதை இருக்கக்கூடும்.

மூன்றாம் குலோத்துங்கன்

         கல்வெட்டுகளில் சோழ அரசன் மூன்றாம் குலோத்துங்கன் பெயர் காணப்படுகிறது. இவ்வரசன் கி.பி. 1178 முதல் கி.பி. 1218 வரை நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான். பாண்டியரை வென்று “மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய என்ர விருதினைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டவன். இந்த விருதுப்பெயர், இக்கோயில் கல்வெட்டுகளில் வருகின்றது. கல்வெட்டுகளில் இவனுடைய ஆட்சியாண்டு 25 என வருவதால், இக்கோயில் கல்வெட்டுகள் கி.பி. 1203 ஆண்டளவில் பொறிக்கப்பட்டவை என்பது உறுதியாகின்றது. எனவே, கோயில் 800 ஆண்டுகள் பழமைகொண்டது எனத்தெளியலாம்.

கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள்

·         ஒரு கல்வெட்டு, இதே ஊரைச்சேர்ந்த பேரையன் மகன் காளி ஆண்டான் என்ற திருஞானசம்பந்தன், கோயிலில் சந்திவிளக்கு எரிப்பதற்காகப் பசு ஒன்றையும் காசுகள் சிலவும் கொடையாகத் தந்துள்ளான் எனத் தெரிவிக்கிறது. கோயிலில் பூசைப்பணி புரிந்த சிவப்பிராமணர்கள், கொடையாளி கொடுத்த பசுவையும் காசுகளையும் பெற்றுக்கொண்டு சந்திவிளக்கு எரிக்கும் அறச்செயலை இடையூறின்றிக் கதிரவனும், நிலவும் உள்ளவரை பொறுப்பேற்றி நடத்துவதாக உறுதிமொழி அளிக்கும் செய்தி கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு பொறுப்பேற்ற சிவப்பிராமணர்கள் பலரது பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன.
·         சிவப்பிராமணர் பெயர்கள்:
ஆளும்பிரான் பட்டன், குழைச்சோனாண் குலோத்துங்கசோழ பட்டன், சிவஞானதேவன், பெருமாள் பட்டன்.                                    
·         சிவப்பிராமணர்களிப்பற்றிக் குறிப்பிடுகையில், அவர்கள் “காணியுடைய சிவப்பிராமணர்கள்  என்று சுட்டப்பெறுகின்றனர். கோயிலில் பூசைசெய்யும் பணியினை வழிவழியாக உரிமை பெற்றவர்களே காணியுடையவர்.
·     ஆளும் பிரான் பட்டனின் பெயர் அவனுடைய கோத்திரமான “கவுதம”  கோத்திரத்துடன் சேர்த்துச் சொல்லப்படுகிறது.
· இன்னொரு கல்வெட்டில், கோயம்பேடு ஊரைச்சேர்ந்த வடுகநாதன் என்பாரின் மகள் கோயிலில் சந்தி விளக்கெரிக்க “மாடை”  என்னும் காசு இரண்டை “உபையமாக (கொடையாக)க் கொடுத்த செய்தி வருகிறது.
   கல்வெட்டில், இப்பெண்ணின் பெயர் “றியாண்டாள்”  எனக் காணுகிறது. இப்பெயர், காறியாண்டாள் என்பதாக இருக்கக் கூடும். காரியாண்டாள் என்னும் பெயர் காறியாண்டாள் என ரகர, றகர வேறுபாடு பெற்றது.
 
·         “மாடைஎன்பது ஒரு காசு வகை. பொன்னால் ஆனது எனக்கருதலாம். பல்வேறு அரசர்களின் காலங்களில் பல்வேறு பெயர்களுடன் மாடைக்காசு புழக்கத்தில் இருந்தது. இங்கேயுள்ள கல்வெட்டில், “புசபலப்புதுமாடை  என்ர பெயருள்ள மாடைக்காசு குறிக்கப்பெறுகிறது.

                        “புசபலப்புதுமாடை    இடம்பெறும்  கல்வெட்டு



கல்வெட்டின் பாடம்

1.       ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் பாண்டி....
2.       தலையுங்கொண்டருளிய சீ குலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு...
3.       ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர்க்கோட்டமான குலோத்து.....
4.       னாட்டு  மாங்காடு நாட்டுக் கோயம்பேட்டு உடையார் குறுங்காலாண்டார்க்கு இவ்............
5.       ன் வடுகநாதன் மகள் (கா)றியாண்டாள்   சந்திராதித்தவரை செல்வதாக வைத்த சந்திவிள.........
6.       ...................இக்கோயிற்காணி உடை(ய) ....... பிரான் ..............
7.       .............................சோழ(பட்டன்) உள்ளிட்டோமும் இக்கோத்திரத்து........
8.       (ப)ட்டன் சிவஞானதேவன் உள்ளிட்டோமும் கைக்கொண்ட புசபலப்புது....
9.       ....இம்மாடை இரண்டும் உபையமாகக் கைக்கொண்டு இவ்விரண்டை........
10.    மாதமுதல் இச்சந்திவிளக்கு ஒன்று   சந்திராதித்தவரை எரிப்போமாக ....
11.    டோம் பெருமாள் பட்டன் குழை(ச்)சோனாண் குலோத்துங்கசோழ பட்(டன்)....
12.    மும் ஆளும்பிரான் பட்டன் சிவஞானதேவன் உள்ளிட்டோமும் இவ்வனை(வோ)...
13.    பன்மாஹே(ஸ்வ)ர (ரக்ஷை)


குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள். மற்றவை கி.பி. 13-ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள்.


                                                             மேலும் சில கல்வெட்டுப் படங்கள் 






         இதுகாறும் கூறியவற்றால், 800 ஆண்டுப்பழமையான குறுங்காலீசுவரர் கோயிலைப்பற்றியும் அதற்கும் பழமையான கோயம்பேடு ஊரைப்பற்றியும் வரலாற்றுப்பின்னணியில் பல செய்திகளை நாம் அறிய இக்கோயில் கல்வெட்டுகள் சான்றாக விளங்குவதைக் காண்கிறோம். வரலாறு சொல்லும் இக்கல்வெட்டுகளை, வருங்காலத்தில், திருப்பணிகள் செய்யும் பேரால் அழித்துவிடாமல், சிதைந்து போகாமல் பாதுகாப்புடன் பேணுவதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் அடிப்படைக் கருத்து. இதைக் கண்ணுறும் சென்னைவாழ் கோயம்பேட்டு அன்பர்கள் மேற்படி வரலாற்றுச் செய்திகளைச் சுருக்கமாக பிளெக்ஸ்”  பதாகையொன்றில் அச்சிட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைத்தால் அத்தகு அறச்செயலுக்காக அவர்களை வணங்குகிறேன்.

  
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக