மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 15 மே, 2016

மொக்கணீசுவரர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு


கல்வெட்டு அறிஞர் மா. கணேசனார்

         அவிநாசியைச் சேர்ந்த மறைந்த கல்வெட்டு அறிஞர் முனைவர் மா.கணேசன் அவர்கள் 1980களில் கோவை மாவட்டக் கல்வெட்டுகளைப் படியெடுத்து நூலாகப் பதிப்பித்தவர். அவரது ஆய்வுகளில், சேவூருக்கருகில் அமைந்துள்ள குட்டகம் என்னும் ஊரில் இருக்கும் மொக்கணீசுவரர் கோயிலும் ஒன்று. அக்கோயிலில், வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டினை அவர் கண்டறிந்தார். ஆனால், அக்கல்வெட்டு நீண்டகாலமாகப் படிக்கப்படாமலேயே இருந்தது. இக்கட்டுரை ஆசிரியரிடம் இக்கல்வெட்டைப்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

2014-ஆம் ஆண்டில் வட்டெழுத்துக்கல்வெட்டு ஆய்வு

         2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இக்கல்வெட்டு, கட்டுரையாசிரியரால் ஆய்வு செய்யப்பட்டுக் கல்வெட்டின் பாடமும் பெருமளவு படிக்கப்பட்டது. முழுமையாகப் படித்தபின்பே சரியான செய்தி வெளிப்படும் என்னும் காரணத்தால், மீண்டும் கல்வெட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அண்மையில், 2016 மே மாதம் 8-ஆம் தேதி, தஞ்சை-தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விழுப்புரம் வீரராகவன் அவர்கள் திருப்பூருக்கு வந்திருந்தபோது, நானும் (இக்கட்டுரை ஆசிரியர்) அவரும் இணைந்து இகல்வெட்டினை முழுமையாக ஆய்வு செய்துவிடவேண்டும் என்னும் முனைப்போடு செயலில் இறங்கினோம். (கட்டுரை ஆசிரியரும் தஞ்சை-தொல்லியல் கழக உறுப்பினரே.) வீரராகவன் அவர்கள் ஓர் அற்புதமான தொல்லியல் ஆய்வாளர். முறைப்படி கல்வெட்டுகளையும் புடைப்புச் சிற்பங்களையும் வெள்ளைத்தாளில் படியெடுத்து கல்வெட்டுகளின் வடிவங்களையும், புடைப்புச் சிற்பங்களின் வடிவங்களையும் நம் கண்முன்னே உயிரோட்டமாக ஆக்கித்தருவதில் வல்லவர். அவிநாசியைச் சேர்ந்த வரலாறு மற்றும் கல்வெட்டு  ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் தன்னார்வலர் ஜெயசங்கரும் எங்களுடன் இணைந்துகொண்டார். வீரராகவன் அவர்களது பணி வாயிலாகக் கல்வெட்டு முழுமையாகப் படியெடுக்கப்பட்டு அதன் பாடம் படிக்கப்பட்டது. கல்வெட்டின்மேல் ஒட்டிய வெள்ளைத்தாளுடன் எடுக்கப்பட்ட கல்வெட்டின் ஒளிப்படத்தைப் பார்த்தாலே, படியெடுத்ததன் நேர்த்தி புலப்படும்.

கோயிலின் தோற்றம்

         மொக்கணிசுவரர் கோயில் ஒரு பழமை வாய்ந்த கோயிலாக இருந்துள்ளது. கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்காலக் கட்டுமானத்துடன் தற்போது கோயில் தோற்றமளித்தாலும் பழமையான் கட்டுமானத்தின் எச்சங்கள் தற்போதும் கோயிலில் உள்ளன. சேவூர்ப்பகுதியில் ஒரு வணிக வழி இருந்துள்ளதாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன. சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடுகொண்ட வணிகர் ஒருவர் இப்பகுதிக்கு வருகையில் இங்கு இளைப்பாறி உணவு உண்ணுமுன் சிவ பூசை செய்ய முனைந்தார். உதவிக்கு வந்தவர், தாம் எப்போதும் கொண்டுவரும் சிவலிங்கத்திருமேனியைக் காணாது, குதிரைக்கு உணவான கொள்ளுப்பயறு நிரம்பிய பையை லிங்க வடிவில் திரட்டி மண்ணில் பதித்து விட்டதாகவும், வணிகர் சிவபூசையை முடித்தெழுந்தபோது, உதவியாளர் மீண்டும் கொள்ளுப்பையை எடுக்க முனைந்ததில், கொள்ளுப்பை சிவலிங்கமாக உருவெடுத்திருந்ததைக் கண்டு வியப்பெய்தி வணிகரிடம் சொல்ல, அங்கு ஒரு சிவன் கோயில் எழுப்பப்பட்டதாகவும் செவி வழி வரலாறு ஒன்று இக்கோயிலைப்பற்றி நிலவிவருகிறது.. இச்செவிவழிச் செய்திக்கு வேறு மாற்று வடிவங்கள் முன்வைக்கப்படலாம். எனினும், அடிபடைக்கருத்து மொக்கணி சிவலிங்கமாக வழிபடப்பட்டது என்பதேயாகும். கொள்ளுப்பை, மொக்கணி என்னும் பெயரால்  வழங்கப்பட்டதன் காரணமாக இறைவன் பெயர் மொக்கணீசுவரர் என்றாயிற்று.  

                          கோயிலின் தோற்றம்  
  



12-13 -ஆம் நூற்றாண்டு எச்சங்கள்






                வட்டெழுத்துக் கல்வெட்டு - மூலத்தோற்றம்

                கல்வெட்டு படித்தல் - முதல் முயற்சியின்போது


கல்வெட்டின் பழமை ஆயிரம் ஆண்டுகள்

         கோயிலின் திருச்சுற்றுப்பாதையில் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பலகைக்கருங்கல்லில் வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. வட்டெழுத்து என்பது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையுள்ள தமிழி (அல்லது தமிழ் பிராமி) என்னும் தமிழ்த் தொல்லெழுத்திலிருந்து தோன்றிய எழுத்து வடிவமாகும். தமிழி எழுத்திலிருந்து தோன்றிய மற்றொரு எழுத்து வடிவம் தமிழ் எழுத்து. இரண்டு எழுத்துகளும் ஒன்றாகத் தோன்றி வளர்ச்சியுற்றாலும், சோழர் ஆட்சியின்போது தமிழகம் முழுதும் தமிழ் எழுத்துக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டதால், காலப்போக்கில் வட்டெழுத்தின் பயன்பாடு மறைந்தது. இருப்பினும், வட்டெழுத்து, மக்கள் எழுத்தாக நீண்ட காலம்வரை அதாவது கி.பி. 12-ஆம் நூற்றாண்டுவரை கொங்குநாட்டில் வழக்கில் இருந்துள்ளது. கொங்குநாட்டை ஆட்சி செய்த கொங்குச்சோழ அரசன் வீரராசேந்திரன் காலத்திலும் (கி.பி. 1207-1256) கொங்கு நாட்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்தது. பிரமியத்தில் இவன் காலத்து வட்டெழுத்துக் கல்வெட்டு இருக்கிறது.

                            கல்வெட்டு படியெடுத்தல்







         மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில் இருபது வரிகள் காணப்படுகின்றன. எழுத்துகள் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் முதல் வரி, “ (ர பதி) மூர்க்கஸ்ரீ பராக்கிரம சோழ தேவர்க்குத் திருவெழுத்திட்டு”  என்று தொடங்குகிறது.  முதல் ஒன்பது வரிகளில் இவ்வரசனுடைய மெய்க்கீர்த்தி கூறப்படுகிறது. பதினோராவது வரியில் இந்த அரசனது ஆட்சியாண்டு “அஞ்சாவது என்று குறிப்பிடப்படுகிறது. கோவை மாவட்டக்கல்வெட்டுகள் நூலில் கொங்குச்சோழ அரசர்களில், மூர்க்க பராக்கிரம சோழன் பெயர் காணப்படாமையாலும், அதேபோழ்து, கலிமூர்க்க விக்கிரம சோழன் என்னும் அரசன் கி.பி. 1004 முதல் கி.பி. 1047 வரை ஆட்சியில் இருந்துள்ளதாகக் குறிப்புள்ளதாலும் அவனைப்பற்றிய குறிப்புகளைத்தேடியபோது, திருப்பூர் மாவட்டக்கல்வெட்டுகள் நூலில், தாராபுரம் வட்டம் பிரமியம் என்னும் ஊரின் வலஞ்சுழிநாதர் கோயிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் “கோக்கலிமூர்க்க விக்கிரமச்சோழன்”  என்னும் அரசனின் கல்வெட்டில் மேற்படி மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக்கல்வெட்டில் வருகின்ற அதே மெய்க்கிர்த்தி வரிகள் காணப்ப்டுவதைப் பார்த்தேன். அரசனின் பெயர் மாறினாலும் மெய்க்கீர்த்தி ஒன்றே. அரசன்பெயரைத் தெளிந்துகொள்ள தொல்லியல்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் அர.பூங்குன்றன் அவர்களைத் தொடர்புகொண்டபோது, கலிமூர்க்க விக்கிரமச்சோழனுக்கு “பராக்கிரமச் சோழன்என்று வேறொரு பெயரும் இருந்ததாகவும், அன்னூர்க்கோயிலில் ஒரு வரி மட்டும் உள்ள வட்டெழுத்துக்கல்வெட்டொன்றில் பராக்கிரம சோழன் பெயர் வருவதாகவும், ஆனால் இக்கல்வெட்டு நூலில் சேர்க்கப்படவில்லை என்றும் சொன்னார். எனவே, கல்வெட்டு, கலிமூர்க்க விக்கிரமச்சோழன் காலத்தைச் சேர்ந்தது என்பது உறுதியாயிற்று. ஆட்சியாண்டு ஐந்து என்பதால்  இக்கல்வெட்டு கி.பி. 1009-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டது என்று உறுதியாகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்டது என்பது கல்வெட்டின் சிறப்பு. 
         வழக்கமாக அரசர்களின் மெய்க்கீர்த்திகளில், அரசனது போர் வெற்றியும் புகழும் இடம்பெறும். ஆனால், இவ்வரசனின் மெய்க்கீர்த்தியில், இவன், குடிமக்களிடம் ஆறில் ஒன்றை வரியாகக் கொண்டான் என்றும், அல்லவை கடிந்து குடிபுறம் காத்தான் என்றும், பெற்ற குழவிக்கு உற்ற நற்றாய் போல் குடிமக்களைக் காத்து நாடு வளம் பெருக்கினான் என்றும் கூறப்படுகிறது. இதுவும் இக்கல்வெட்டில் காணப்படும் சிறப்பாகும். கொங்குநாட்டை நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட அரசர் இருவரில் இவன் ஒருவன். இன்னொருவன் வீரராசேந்திரன் ஆவான்.

கல்வெட்டின் செய்தி

         கல்வெட்டில், இக்கோயில் எழுப்பப்பட்ட செய்தி காணப்படுகிறது. கொங்கு நாட்டில் பழங்காலத்து இருந்த இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் வடபரிசார நாடும் ஒன்று. இந்த் நாட்டுப்பிரிவில், பேரூர், அவிநாசி, சேவூர் போன்ற ஊர்கள் அடங்கும். வடபரிசார நாட்டில் இருந்த குடவோடான இராசவிச்சாதிர நல்லூரில் வாழும், முள்ளிகள் என்னும் வெள்ளாளர் பிரிவைச் சேர்ந்த கோவன் விச்சாதிரன் என்பானின் மனைக்கிழத்தி  எறுளங்கோதை என்னும் பெண்மணி இக்கோயிலை எடுப்பித்தாள் என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. இதனால், மொக்கணீசுவரர் கோயில் கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்னும் கருத்து மாற்றம் பெறுகிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இக்கோயில் கட்டப்பட்டது என அறிகிறோம். வெள்ளாளர் குலப்பெண் ஒருத்தி கோயில் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 10, 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்டிரின் சமூக நிலை இக்கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. அவர்களுக்கு இருந்த பொருளாதார உரிமை, கோயில் கட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் உரிமை ஆகியன தெளிவாகின்றன. கொங்குப்பகுதியில் பழங்காலத்தில் எழுப்பப்பட்ட சிறு கோயில்கள் (கற்களால் கட்டப்பெற்றவை) எளிமையான வடிவில் கட்டப்பட்டன என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். கருவறையும் அதனை அடுத்து அர்த்தமண்டபமும் மட்டும் எழுப்பப்பட்டன. பெரும்பாலும், கருவறையின்மேல் பகுதியில் விமானம் கட்டப்படவில்லை. வெள்ளாளர் குலப்பெண் கோயில் கட்டும்போது, அதுபோலவே எளிமையாகக் கட்டப்பெற்றுப் பின்னர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டளவில் சற்றே விரிவாகக் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், கோயிலில், கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் எவையுமில்லை. இருப்பினும், கோயில் வளாகத்தில் கி.பி. 12-13 நூற்றாண்டைச் சேர்ந்தன எனக் கருதத்தக்க சில சிற்பங்களூம், உடைந்த தூண்களும், பழமையான ஒரு மண்டபப் பகுதியும் காணப்படுவது இக்கருத்தை ஏற்கத் துணைசெய்கிறது. இக்கோயில் வளாகத்தில் விசயநகர அரசர் காலத்தைச் சேர்ந்த ஒரு பலகைக்கல்வெட்டும் காணப்படுகிறது. இக்கல்வெட்டு, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு விசயநகர அரசர் அச்சுதராயர் காலத்தைச் சேர்ந்தது. மொக்கணீசுவரர் கோயிலுக்குச் சேவூரில் இருக்கும் நிலங்கள் தானமாகக் கொடுக்க்ப்பட்ட செய்தியைச் சொல்லும் இக்கல்வெட்டில், கோயில் அமைந்திருக்கும் குட்டகம் ஊரானது குடக்கோட்டூர் என்று குறிப்பிடப்படுகிறது.

                     படியெடுத்தல் - பாதிப்பணியில்


                                  படியெடுத்தல் - முழுமை பெற்றபின்


குடவோடு என்னும் இராசவிச்சாதிர நல்லூர்

         மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில், குட்டகம் ஊரானது, குடவோடான இராசவிச்சாதிர நல்லூர் என்று குறிப்பிடப்பெறுகிறது. எனவே, இவ்வூர் குடவோடு என்னும் பெயரிலிருந்து குடக்கோடு (குடக்கோட்டூர்), குட்டகம் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்மாற்றம் பெற்றுள்ளதை அறிகிறோம். இராசவிச்சாதிரன் என்பான் கலிமூர்க்க பராக்கிரம சோழனின் கீழ் இப்பகுதியில் ஆட்சி அதிகாரம் பெற்ற ஒரு தலைவனாய் இருந்திருக்கலாம்; அரசன், குடவோடு ஊருக்கு இந்த இராசவிச்சாதிரன் பெயரில் சிறப்புப் பெயர் வழங்கியிருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு. முள்ளிகள் என்னும் வெள்ளாளர் குலப்பிரிவு இருந்துள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

எறுளங்கோதை
கோயில் எடுப்பித்த வெள்ளாளர்குலப் பெண்ணின் பெயர் அழகிய தமிழ்ப்பெயராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எறுளம் என்பது ஒரு மரத்தையும், அதன்வழி ஒரு மலரையும் குறிப்பதாகத் தமிழ் அறிஞரும் மொழி ஆய்வாளருமான நா.கணேசன் அவர்கள் கூறுவது எறுளங்கோதை என்னும் தமிழ்ப்பெயரும், மனைக்கிழத்தி என்னும் அழகான தூய தமிழ்ச் சொல்லும், பழங்கல்வெட்டுகளில் நல்ல தமிழ் வளர்க்கப்பட்டதை எடுத்துரைக்கின்றன.

மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக்கல்வெட்டு பாடம்

  1. (ர பதி) மூர்க்க ஸ்ரீபராக்ரம சோழ(தே)
  2. வர்க்குத் திருவெழுத்திட்டுச் செ
  3. ங்கோலோச்சி வெள்ளிவெண்குடை மி
  4. ளிரவேன்தி ஆறில் ஒன்று கொ
  5. ண்டல்லவை கடின்து நாடு வள
  6. ம் படுத்து நை குடியோம்
  7. பிக் கோவீற்றிருன்து குடி
  8. புறங்காத்துப் பெற்றகுழ
  9. விக்குற்ற நற்றாய்போல் செ
  10. ல்லாநின்ற திருநாள் யாண்டு
  11. அஞ்சாவதில் இத்திருக்கோ
  12. யில்லெடுப்பிச்சேந் வட
  13. பரிசாரத்தில் குடவோ
  14. டாந இராசவிச்சாதிர நல்
  15. லூரிருன்து வாழும் வெள்
  16. ளாளந் முள்ளிகளில் கோ
  17. வன் விச்சாதிரந் மநை
  18. க்கிழத்தி எறுளங்கோ
  19. தையேன் என் நி
  20. ............  ந் தாந்

குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.


முடிவுரை

         வரலாற்றுச் சிறப்பும், ஆயிரம் ஆண்டுப் பழமைப்பின்னணியும் உள்ள குட்டகம் ஊரும், அதன் கோயிலும், வட்டெழுத்துக் கல்வெட்டும் நம் செல்வங்கள் என்னும் பெருமையுடன் இவ்வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்போம்.




  














து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக