மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 1 மே, 2016

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  17


கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

கல்வெட்டு  1


கல்வெட்டுப் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்
2 திர தேவற்கு யாண்டு 40
3 வது வைகாசி திங்க வடபரிசா
4 ர நாட்டில் சேவூரில் வெள்ளா
5 ன் உகையரில் தேவந்தேவநேந் 
6 ஆளுடையா திருமுருகந்பூண்டி
7 நாயநாற்கு சந்தியாதீபம் ஒந்(று)
8 க்கு சீபண்டாரத்தில் ஒடுக்கி(ன)
9 பழஞ்சலாகை அச்சு ஒன்றுக்
10 கும் சந்திராதித்தவரை செல்
11 வதாகக் கல்வெட்டுவித்தே
12 ந் இது பந்மாஹேஸ்வர
13 க்ஷை

குறிப்புகள் :

  • சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்
  • கல்வெட்டின் காலம் கி.பி. 1247. அரசன் வீரராசேந்திரன், கொங்குச்சோழன்.
  • வடபரிசார நாடு - கொங்குப்பகுதியில் பண்டு வழங்கிய இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் ஒன்று.
  • உகையர் - கொங்கு வெள்ளாளர்களில் ஒரு பிரிவு
  • சீபண்டாரம் - கோயில் கருவூலம்; ”ஸ்ரீ” என்பது வடமொழி எழுத்தைத் தமிழாக்கியது.
  • ப்ழஞ்சலாகை அச்சு - கொங்குப்பகுதியில் புழக்கத்தில் இருந்த பழங்காசு.
  • வெள்ளாளன் தேவன் தேவன் என்பவன், திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சந்திவிளக்கு எரிப்பதற்காகக் காசு கொடை அளித்த செய்தி கூறப்படுகிறது.

 கல்வெட்டு  2


கல்வெட்டுப் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ விசையாபுதைய சாலிவாகன சகாத்தம் (உ)
2 1458ன் மேல் செல்லாநின்ற துன்
3 முகி வரு. அற்பசி மீ 7 தேதி துவாதெசியும் புத
4 வாரமும் உத்திர நக்ஷரமும் பெற்ற னாள் ஸ்ரீ
5ன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ஸ்ரீ வீரப்பி
6 றதாப ஸ்ரீவீர அச்சுத்தராயமகாராயர் பிறுது
7 வி ராச்சியம் பண்ணி அருளாநின்ற காலத்து அந்
8 த அச்சுதராயமகாராயற்கு தெக்ஷிணாபுமாதெ
9 ண்டமான் காவேரிவல்லபன் கடகசூறைக்காற்
10 றன் விருதன் வாயுவந்தி விருதுகஜாசிங்கன் பெ
11 க்கெத்துராசுல ஒக்கெத்துகண்டன் மண்டலி
12 க மகலராசன் உறையூற்புரவாதீசுரன் பொன்னா
13 ம்பலநாத ஸ்ரீபாதசேகர காசிபகோத்திரத்
14 து ஆபஸ்தம்ப சூத்திரத்து சூரிய வங்கித்தில் சோ
15 ழகுல ஒங்கர சென்னையதேவ மகாராசாவின் பு
16 த்திரரான ஸ்ரீமன்மகாமண்டலேசுர வாலையதேவமகா
17 ராசா நம்முடைய சுவாமி அச்சுத்தராயமகாராயற்கு பு

குறிப்புகள் :

  •  கல்வெட்டின் காலம், கல்வெட்டில் சாலிவாகன சகாத்தம் 1458 எனக்குறிப்பிடப்பெறுகிறது. சாலிவாகன ஆண்டு, சக வருடம், சகரை ஆண்டு ஆகிய அனைத்தும் சாலிவாகன சகாப்தத்தைக்குறிப்பதாகும். இந்த ஆண்டுடன் 78 ஆண்டுகளைச் சேர்க்க கிறித்தவ ஆண்டு பெறப்படும். எனவே இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1536. விஜய நகர அரசர்கள் காலம். இங்கு, அரசர் அச்சுதப்ப நாயக்கர். கல்வெட்டில் கொடுக்கப்பட்ட துன்முகி தமிழ்வட்டத்து ஆண்டு கி.பி. 1536-ஆம் ஆண்டுடன் மிகச்சரியாகப்பொருந்துவதைக் காணலாம். ஒரு சில், கல்வெட்டுகளில், இக்காலக் குறிப்புகள் பொருந்தாமல் போவதுண்டு. (இந்த 2016-ஆம் ஆண்டும் துன்முகி/துர்முகி என்பதை நோக்குக.) தமிழ் மாதமான ஐப்பசி மாதம், கல்வெட்டில் அற்பசி மாதம் எனக்குறிக்கப்பெறுகிறது. இது போன்ற பெயர்களை நினைவில் கொள்ளுதல் கல்வெட்டுகள் படிக்க் உதவும். காலக்குறிப்பில், புதவாரம், துவாதசி திதி, உத்திர நட்சத்திரம் ஆகிய குறிப்புகள் விளக்கமாகத் தரப்பட்டுள்ளதை நோக்குக.
  • கல்வெட்டுக்காலத்தில், விஜயநகர அரசரின் சார்பாக கொங்குமண்டலத்தின் மகாமண்டலேசுவரனாக நிர்வாகம் செய்தவன் வாலையதேவமகாராசன். அவனுடைய கோத்திரமும், சூத்திரமும் தரப்பட்டுள்ளன. 
  • விஜயநகர அரசருக்கும், மண்டலாதிபதிக்கும் பல்வேறு விருது/சிறப்பு அடைமொழிகள் தரப்பட்டுள்ளன. 

------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக