மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 9 மார்ச், 2017

கருவலூர்க் கல்வெட்டு-காஞ்சிப்பெரியவர்-தி இந்து நாளிதழ்
ஒரு முக்கூடல்


கருவலூர் பெருமாள் கோயில்

         கோவை மாவட்டம், அவிநாசி-அன்னூர் சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர் கருவலூர். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட “கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் இந்த ஊரைச்சேர்ந்த ஒரே ஒரு கல்வெட்டு பதிவாகியுள்ளது. அக்கல்வெட்டு இவ்வூரில் அமைந்திருக்கும் பெருமாள் கோயிலில் உள்ளது. இப்பெருமாள்கோயில், தற்போது ஸ்ரீ கருணாகர வெங்கடரமணா திருக்கோயில் என அழைக்கப்படுகிறது.

                     கோயிலின் தோற்றங்கள்





கோயில் கல்வெட்டு

        இரு ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலுக்குச் சென்று கல்வெட்டைக்கண்டு ஒளிப்படம் எடுத்து வந்தேன். கல்வெட்டின் பாடம் பின்வருமாறு:
கல்வெட்டு தொடர் எண் : 846/2003. ஆண்டறிக்கை எண் : 594/1922.
நூலில் கொடுக்கப்பட்ட குறிப்புரை :
அரசன் (கொங்குச்சோழன் வீரராசேந்திரன்) கருவலூரில் உள்ள புரோசக்குளத்தையும் அதன் கீழ் உள்ள விளைநிலங்களையும் கருவலூர் பெருமாள் கோயிலுக்குத் திருவிடையாட்டமாக அளித்த செய்தி கூறப்பெறுகின்றது. இக்கோயில் வீரராசேந்திர விண்ணகரம் என்று அழைக்கப்பெறுகின்றது.

                           கல்வெட்டுப் படங்கள் 










1             ஸ்ரீராஜகேசரி கோனேரின்மை கொண்டான் வடபரிசார நாட்டுப்பழங்கருவலூர் வீரராசேந்திர விண்ணகரெம்பெருமான் கோயிலில் ஸ்ரீகாரிய
2    ஞ் செய்வார்களுக்கு நம்மோலை குடுத்தபடியாவது இவ்வெம்பெருமானுக்கு அமுதுபடிக்கும் பலபடி நிமந்தங்களுக்கும் திருவிளக்குக்கும்
3       குடுத்த குளமாவது கருவலூர் புரோசக்குளம் குடுத்தோம் இக்குளம்  தாங்களே அடைத்து இக்குளத்தால் விளைந்த நிலம் இவ்வெம்பெ
4     ருமானுக்குத் திருவிடையாட்டமாக இறையிலி முற்றூட்டும் செல்வதாகவும் இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்வார்களாக நமக்கு இரு
5    பதாவது முதல் நம்மோலை குடுத்தோம் இவை சோழ குலமாணிக்க மூவேந்த வேளான் எழுத்து இவை யிலாடத்தரையன் எழுத்து இவை கோதவராயன் எழுத்து இவை வில்லவராயன் எழுத்து

கல்வெட்டில் “புரோசக்குளம்  ஒன்றைக் கோயிலுக்குக் கொடையாக அளித்த செய்தி காணப்பட்டது. குளத்தால் விளைந்த நிலமும் கோயில் எம்பெருமானுக்குத் திருவிடையாட்டமாக இறையிலியாகக் கொடுக்கப்பட்டது. கல்வெட்டில் வரும் புரோசக்குளம் என்னும் பெயர் சற்றே புதுமையாகத் தோன்றியதோடு குளத்தைக் குறிப்பாகப் புரோசக்குளம்  எனக் கல்வெட்டில் குறிப்பிட்டிருப்பதன் பொருள் என்ன என்று இதுவரை புரியாமலே இருந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டக் கல்வெட்டுகள் அடங்கிய நூல்களில் வேறெங்கும் இச்சொல் காணப்படவில்லை. கல்வெட்டுச் சொல்லகராதியில் தேடியும் இச்சொல் காணப்படவில்லை. நூலில், ஒவ்வொரு கல்வெட்டின் பாடத்துக்கு முன், கல்வெட்டு அமைந்துள்ள ஊர், கல்வெட்டின் மொழி, எழுத்து, அரசு, மன்னன், கல்வெட்டு அமைந்துள்ள இடம் ஆகிய செய்திகள் தரப்பட்டிருக்கும். பின்னர், குறிப்புரை என்னும் பகுதியில் கல்வெட்டின் செய்தி சுருக்கமாகத் தரப்பட்டிருக்கும். இந்தக் குறிப்புரையிலும் புரோசக்குளம் பற்றிய விளக்கக் குறிப்பு இல்லை.

தி இந்து’  தமிழ் நாளிதழும் காஞ்சிப்பெரியவரும்

    நீண்ட நாள்கள் “புரோசக்குளம்”  பற்றிய விளக்கம் என்ன என்பதனை அறிந்துகொள்ளவேண்டும் என்ற தூண்டுதல் உள்ளத்தில் தோன்றாமலே கழிந்துகொண்டு வரும் வேளையில், ஒரு நாள், மார்ச்சு 24, 2016-ஆம் ஆண்டு, “தி இந்து”  தமிழ் நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தபோது (முகவர் மூலம் நாளிதழை நாளும் வரவழைத்துக் கொண்டிருக்கிறேன்), “தெய்வத்தின் குரல்என்னும் தலைப்பில் காஞ்சிப்பெரியவரின் கருத்துகள் வெளியாகியிருந்த பகுதி, வெகு இயல்பாய் ஈர்த்ததால் அதைப் படித்தேன். அன்றைய கட்டுரையின் தலைப்பு “ஐந்து வகை ஸ்நானம்”.  குளிப்பதில் ஐந்து வகையா? சற்றே வியப்பு. மேற்கொண்டு படித்ததில், பெரியவர் பட்டியலிட்டிருந்தார்.


                                      ”தி இந்து”  நாளிதழ்ச் செய்திக்கட்டுரை


  1. நீரை மட்டும் கொண்டு குளிப்பது “வாருணம்”.  வருணன் என்னும் கடவுளோடு தொடர்புடையது.
  2. “விபூதி ஸ்நானம். அதாவது திருநீற்றுக் குளியல். நீர் விட்டுக் குழைக்காமல் வாரிப்பூசிக் கொள்தல். தீயுடன் தொடர்புடையது. நீறு என்னும் சாம்பல் தீயின் சுடுதல் உண்டாக்கும் விளைவு.
  3.  “வாயவ்யம்”.  வளி என்னும் காற்றுடன் தொடர்புடையது. பசு மந்தை ஒன்று போகும்போது, அவை கூட்டமாகப் போவதாலேயே, காற்றின் செலவு (சலனம்) அங்கே மிகுதியாகிப் பசுக்களின் குளம்படி மண் தூளாகக் கிளம்பும். இந்தக் “கோதூளி,  திருமஞ்சனம் செய்யும்படியாக நாம் அங்கே நின்றுகொண்டால், அதுவும் ஒரு குளியல்.
  4. ஆனால், இக்குளியலையே நிலத்துடனும் தொடர்பு படுத்தலாம். பசுக்களின் குளம்படி மண், உண்மையில் நிலம் அல்லவா?
  5. எப்போதாவது வெயில் அடிக்கும்போதே மழையும் பெய்வதுண்டு. அந்த மழை நீர் வானுலகிலிருந்து வரும் நீருக்கொப்பானது. அந்த மழை நீரில் குளிப்பதற்கு “திவ்ய ஸ்நானம்”  என்று பெயர். இப்படி மழை பெய்துவிட்டால் உடனே நாம் அதில் போய் நின்றுவிடவேண்டும். எனவே, இது விசும்பின் தொடர்புடையது.

மேற்குறித்த ஐந்துவகைக் குளியல்களும் முறையே, நீர், தீ, வளி, நிலம், விசும்பு என்னும் “ஐம்பெரும் பூதத்து இயற்கைக்கானவை.

அடுத்து, இன்னொரு செய்தியைப் பெரியவர் குறிப்பிடுகிறார். அவர் குரலிலேயே பார்ப்போம்:

      “மந்திர ஜலத்தைப் புரோக்ஷித்துக் கொள்கிறோம். தலையோடு கால் விட்டுக்கொள்ளாமல் அதை விரலால்தான் தெளித்துக் கொள்கிறோம். பூஜை, ஹோமம், யாகம் முதலானவற்றிலும் கலசம் வைத்து அதிலுள்ள ஜலத்தை அபிமந்திரித்துக் கடைசியில் புரோஹிதர் தர்ப்பைக் கட்டால் அதை எல்லாருக்கும் தெளிக்கிறார். இதுவும் ஐந்து ஸ்நானங்களில் ஒன்று. இதற்கு “ப்ராஹ்மம்என்று பெயர். “ப்ரம்மம்என்றால் வேதம், வேதமந்திரம் என்பது ஓர் அர்த்தம். இதற்கு “ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர்.

புரோக்ஷம்

மேலே சுட்டிய, காஞ்சிப்பெரியவரின் கருத்திலிருந்து, புரோக்ஷம் என்பது, மந்திர நீர்த் தெளித்தலைக் குறிப்பது என்பதும், இவ்வகைக் குளியல், “பிரம்மக் குளியல்”  என்பதும் பெறப்படுகின்றன.  புரோக்ஷம்”  என்னும் சமற்கிருத ஒலிப்புடைய சொல், தமிழ் வடிவத்தில் “புரோசம்”  என்றாதல் மொழி மரபு. எனவே, புரோசக்குளம்”  என்பதற்கு மந்திர நீர்த் தெளித்தலாகிய குளியலுக்குரிய குளம் என்று பொருள் கொள்வது ஏற்புடையது எனலாம். எனவே, கருவலூர்க் கல்வெட்டின் பொருளறியப்படாத “புரோசக்குளம்”  என்னும் சொல், எதிர்பாராத ஒரு பொழுதில் விளக்கம் உற்றது. கல்வெட்டுப்படி, கருவலூர்க் குளம், கருவலூர் விண்ணகர எம்பெருமானுக்கு அமுதுபடி, திருவிளக்கு, மற்றும் பல்வேறு நிமந்தங்களுக்கு இறையிலியாகக் கொடுக்கப்பட்ட குளம் என்பதோடு, “புரோசக்குளியலுக்கும் உரியதான ஒன்று என்பது பெறப்படுகிறது. காஞ்சிப்பெரியவரும், “தி இந்துநாளிதழும் ஒரு கல்வெட்டுச் செய்தி விளக்கமுற உதவினர் என்பது நான் வியந்துபோன ஒரு நிகழ்வு.

பின் குறிப்பு

தொல்லியல் அற்ஞர் திரு. பூங்குன்றனாரிடம் பழகும் வாய்ப்புப் பெற்றிருந்தும், இது பற்றி அவரிடம் கலந்துகொள்ளவில்லை என்பது வியப்புக்குரியது. கேட்கத் தோன்றவில்லை என்பது மெய். காஞ்சிப்பெரியவரின் கருத்தைப் படித்த பின்னர், பூங்குன்றன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புரோசக்குளம் பற்றிக் கேட்டபோது, புரோசம் என்பது வேதம், வேத மந்திரம் என்னும் பொருளுடையது என நொடிப்பொழுதில் விடை பகர்ந்ததைக் கண்டு பின்னும் வியந்துபோனேன். அவரது விரல் நுனியில், நுண் மாண் நுழை புலமும், அரிதான நினைவாற்றலும் கோலோச்சுகின்றன என்றால் மிகையல்ல.


------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
   அலைபேசி : 9444939156.

2 கருத்துகள்: