மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017


                   தேன்கனிக்கோட்டை-சாலிவாரம் கல்வெட்டு


        அண்மையில்,தேன்கனிக்கோட்டை வட்டம் , சாலிவாரம் கிராமத்தில் கல்வெட்டு ஒன்று  கண்டறியப்பட்டது.  அது   பற்றி,  27.02.2017  தினகரன்    நாளிதழில்   வந்துள்ள   செய்தியும்,    கல்வெட்டுப்   படமும்    (இணையத்தில்   பதியப்பட்டவை)    பார்த்தேன். கல்வெட்டு    வரிகளை   ஓரளவு    தெளிவாகப் படிக்க இயன்றது. படித்ததில்   தெரிந்த செய்திகளை இங்கே  பகிர்ந்துகொள்கிறேன்.

                                                                நாளிதழ்ச் செய்தி-1


                                                             நாளிதழ்ச் செய்தி-2


                                                                  கல்வெட்டு

கல்வெட்டுப்பாடம்:


ஸ்வஸ்திஸ்ரீமது மஹாமண்டலேச்வரந் த்ரிபு
2 வந மல்ல தழைக்காடு கொங்கு நங்கி
3 லி கொயாற்றூர் உச்சங்கி பாநுங்கல் கொண்
4 ட புஜபல வீர கங்கப் பொய்சள தே(வர்)
5 ப்ருத்விராஜ்யம் பண்ணிச் செல்லா நி
6 (ன்ற) த்தாக்ஷி சம்மற்சரத்து முடிகொண்ட
7 (சோ)ழ மண்டலத்து ராஜேந்த்ர சோழ வளநாட்டுச் சி..
8 நாட்டுக் கட்டுக் காமுண்டர் பனையந் (கந்நர)

கல்வெட்டு,  ஹொய்சள அரசர்கள் காலத்தது. காரணம், கல்வெட்டில், “பொய்சள தேவர் பிருதிவிராச்சியம் பண்ணி”  என வருகிறது. முடிகொண்ட சோழ மண்டலம்,   முதலாம் இராசராசனின்    ஆட்சிக்காலத்தில்    ஏற்படுத்தப்பட்ட கருநாடகப்பகுதியான  கங்கநாட்டு நிலப்பகுதியாகும். அதன் உட்பிரிவுகளில் ஒன்றே இராசேந்திர சோழ வளநாடு. கல்வெட்டின்  முதல் நான்கு வரிகளில் போசளரின்  மெய்க்கீர்த்திவரிகள் காணப்படுகின்றன . தழைக்காடு போசளரின் தலைநகர். கொங்கு,  நங்கிலி,  கொயாற்றூர்,  உச்சங்கி,  பானுங்கல்  ஆகியன போசளரின்   ஆட்சிக்குட்பட்ட   (அவர்கள்   கைப்பற்றி ஆட்சி செய்த)  பகுதிகள்.   வீரகங்க போசளதேவர் என்னும் அடைமொழிப்பெயர், விஷ்ணுவர்த்தனன் என்னும் பிட்டிதேவனுடைய கல்வெட்டுகளிலும்,     இரண்டாம் வீர வல்லாளனின்  கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. எனவே, கல்வெட்டு இவ்விருவரின் ஆட்சிக் காலங்களுள் ஒன்றைச் சேர்ந்ததாக இருக்கலாம். விஷ்ணுவர்த்தனனின்   ஆட்சிக்காலம்   கி.பி. 1104  முதல்  கி.பி. 1141  வரை.   இரண்டாம் வீரவல்லாளனின் ஆட்சிக்காலம் கி.பி. 1171 முதல் கி.பி. 1219  வரை.    கல்வெட்டில், அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் சுழற்சியாண்டுகளில் ஒன்றான ”இரத்தாக்ஷி”  ஆண்டு குறிப்பிடப் பெறுகிறது.   (ஆண்டைக்  குறிக்கும்   வடசொல்லான    சம்வத்சரம்    என்பது  கல்வெட்டில்
சம்மற்சரம்   என்று    எழுதப்பட்டுள்ளது.)     இரத்தாக்ஷி    ஆண்டு,     விஷ்ணுவர்த்தனன் ஆட்சிக்காலத்தில் வருவதிலை. இரண்டாம் வீரவல்லாளனின் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1204-இல் இரத்தாக்ஷி ஆண்டு வருகிறது. எனவே, கல்வெட்டு, இரண்டாம் வீரவல்லாளனின் காலத்தது 
எனக் கொள்ளலாம். கல்வெட்டில்,  கட்டுக் காமுண்டர் பனையன் (கன்னர) என்பவர் குறிக்கப்பெறுகிறார். 

கல்வெட்டு தமிழ் மொழியில் தமிழ் எழுத்தும் கிரந்தமும் கலந்து எழுதப்பட்டுள்ளது.  தமிழ். எழுத்துகள் நீல வண்ணத்தில்   காட்டப்பட்டுள்ளன.   சிவப்பு வண்ண    எழுத்துகள்   கிரந்த எழுத்துகள். 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
து. சுந்தரம்., கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக