தளியில் பாளையக்காரர்காலக் கல்வெட்டு
தளி-வரலாற்று
நோக்கில்
திருப்பூர்
மாவட்டம், உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள தளி என்னும் ஊர், வரலாற்றுச் சிறப்புடைய
ஓர் ஊராகும். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலேயருக்கு எதிராக
அப்போதிருந்த பாளையக்காரர்கள் போரிட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த
கட்டபொம்மன் வஞ்சனையால் ஆங்கிலேயரால் 16-10-1799 அன்று தூக்கிலிடப்பட்டான். அவர் தம்பி ஊமைத்துரை மற்ற
பாளையக்காரர்களோடு சேர்ந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டபோது தளி பாளையக்காரர்
மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரும் சேர்ந்துகொண்டார். 1801-ஆம் ஆண்டு
பிப்ரவரி 2-ஆம் நாள் தொடங்கி நூற்று நான்கு நாள்கள் நடைபெற்ற போரில்
ஊமைத்துரைக்கு ஆதரவாக 14 பாளையக்காரர்களை ஒன்றிணைத்து அதற்குத் தலைமையேற்றவர்
இந்த எத்தலப்ப நாயக்கர், எத்தலப்ப நாயக்கரை அடக்குவதற்காக அப்போதைய
ஆங்கிலேய அரசு தந்திரமாக ஒரு தூதுக்குழுவை அவரை சந்திக்க அனுப்பிவைத்தது.
கட்டபொம்மனின் நண்பரான எத்தலப்ப நாயக்கர், கட்டபொம்மனைச் சதியால் தூக்கிலிட்டதற்கு
எதிர்வினையாகத் தனது படை வீரர்களை அனுப்பி ஆங்கிலத் தூதுக்குழுத் தலைவனை மட்டும்
தனியே கைது செய்து அவனைத் தூக்கிலிட்டார்.
வெள்ளையர் இந்தியரைத் தூக்கிலிடும் செயலுக்கிடையில், இந்தியர் ஒருவர் வெள்ளையனைத் தூக்கிலிட்ட துணிவான அருஞ்செயல புரிந்தவர் என்னும் பெருமை எத்தலப்ப நாயக்கருக்கு உண்டு. வெள்ளையனைத் தூக்கிலிட்ட இடம், இன்றும் ஜல்லிப்பட்டிக்கும் தளிக்கும் இடையில் தூக்குமரத்தோட்டம் என்னும் பெயரில் உள்ளது. திருமூர்த்தி அணைப்பகுதியில், தளி பாளையக்காரர் குடிவழியினரின் நினைவுச் சிலைகளை ஒரு மேடையில் அமைத்துக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
அணையின் தோற்றங்கள்
ஆய்வுக்களப் பணியாளர்கள்
மேடையில் நினைவுச் சிற்பங்கள்
அணைக்கரைப் பாறை
கோவை
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், இராவணாபுரம் குழந்தைவேலு, தமிழ்ப்பல்கலை-கல்வெட்டு ஆய்வு
மாணவர் சமத்தூர் இரமேஷ் ஆகியோர் திருமூர்த்தி அணைப்பகுதியில் ஆய்வு நோக்கில்
களப்பயணம் மேற்கொண்டபோது, அணைக்கருகில் இருக்கும் இராமன் என்பவர், அருகில் அணைக்கரை என்னும் இடத்தில் ஒரு
கல்வெட்டு இருப்பதாகத் தகவல் தரவே, அவரோடு சென்று பார்வையிட்டனர். திருமூர்த்தி
அணைக்கருகில் சற்றுத் தொலைவில் தடுப்பணை ஒன்று உள்ளது. அப்பகுதி அணைக்கரை என்றும்,
அங்குள்ள பாறை அணைக்கரைப் பாறை என்றும் வழங்கப்படுகிறது. ஒரு சிறிய தடுப்பணை; அதை
ஒட்டியுள்ள ஒரு பாறையில் கல்வெட்டு அமைந்துள்ளது. கல்வெட்டின் அருகிலேயே, அதன் வலப்புறத்தில் பாறையில், சூலத்தின் புடைப்புச் சிற்ப்மும் செதுக்கப்பட்டுள்ளது.
அணைக்கரை
அணைக்கரைப் பாறை-கல்வெட்டும்
க்ளப்பணியாளர்களும்
திரிசூலம்-புடைப்புச் சிற்பம்
பாறைக்கல்வெட்டும் செய்தியும்
கல்வெட்டு-முதற்பார்வையில்
கல்வெட்டு - சுண்ணப்பூச்சுக்குப் பின்னர்
பாறையின்
சரிவான பகுதியில், ஓரளவு சமதளமாக உள்ள பரப்பில், ஆறுவரிகளில் கல்வெட்டு வரிகள்
காணப்படுகின்றன. பாறையின் மேலேயே கோடுகளால் நீள்சதுரம் ஒன்றை அமைத்து, அச்சதுரப்
பரப்புக்குள் ஆறுவரிகளில் கல்வெட்டைச் செதுக்கியுள்ளனர். கல்வெட்டில் அணையைக்
கட்டியவர் யார் என்னும் குறிப்பு உள்ளது. நாயக்கர் கால இராயர் மாயண நாயக்கர்
என்பவரின் தளவாயாக இருந்த வாயண நாயக்கர் இந்த அணையைக் குரோதன ஆண்டு சித்திரை மாதம்
பத்தாம் தேதி கட்டியதாகக் கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டின் பழங்கால எழுத்து
வடிவத்தை நோக்கும்போது, கல்வெட்டு கி.பி. பதினாறாம் நூற்றாண்டு அல்லது பதினேழாம்
நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதலாம். தமிழகத்தில், மதுரையைத்
தலைநகராகக்கொண்டு நாயக்கர் ஆட்சியைத் தொடங்கிய விசுவநாத நாயக்கர், அவரது தளவாயும்(படைத்தளபதி), பிரதானியும்(முதலமைச்சர்) ஆன அரியநாத முதலியுடன் இணைந்து ஆட்சி
நிருவாகத்தைப் பாளையங்களாகப் பிரித்தார். பாளையங்கள் உருவாக்கத்தில் பெரும்பங்கு
அரியநாத முதலியையே சாரும். விசுவநாத நாயக்கரின் ஆட்சிக்காலம் கி.பி. 1529-1564. எனவே,
பாளையக்காரர் அமைப்பு கி.பி. 1564-ஆம் ஆண்டுக்கு முன்பே நடைமுறையில் வந்துள்ளதால்,
கல்வெட்டின் காலத்தைக் கி.பி. பதினாறாம் நூற்றாண்டு என்று கொள்ளும் வாய்ப்பு மிகுதி. கல்வெட்டில்
சக ஆண்டு, கலியாண்டு ஆகிய விவரங்கள் தரப்படவில்லையாதலாலும், அறுபதுவட்டத் தமிழ்
ஆண்டான குரோதன ஆண்டு, தை மாதம் பத்தாம் நாள் என்னும் செய்தி தரப்பட்டுள்ளதாலும், கி.பி.
பதினாறாம் ஆண்டில் வருகின்ற குரோதன ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி.
1565 என்றோ, அல்லது அதை அடுத்து வருகின்ற கி.பி. 1625 என்றோ கொள்வது பொருத்தமாகலாம்.
எனவே, கல்வெட்டு ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை என்றும், தடுப்பணையும் நானூறு ஆண்டுகள்
பழமையானது என்றும் கருதலாம். அணையைக் கட்டுவித்தவர் பெரும்பதவியில் (தளவாய்ப்
பதவி) இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டுப்பாடம்
1 குறோதந வருஷம் சித்திரை
2 மாத்ம் 10 உ இந்த அணை
3 இராயதருவுக்க(ள்)
4 மாயண நாயக்கர்
5 தளவாய் வாயண நா
6 யக்கர் தன்மம்
துணை நின்ற நூல்கள் :
1. The
Poligar System in the Tamil Country : Its Origin and Growth.
By C. S.
Srinivasachari, M.A. Professor of History, Pachaiyappa’s College , Madras [ A
paper read at the Eleventh Public Meeting of the Indian Historical Records
Commission, held at Nagpur in December 1928]
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக