மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 31 ஜனவரி, 2017

              கோதவாடியில் சில வரலாற்றுத் தடயங்கள்

         கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்  கோதவாடி. நிலவுக்கு விண்கலம் அனுப்பிய விஞ்ஞானி அண்ணாதுரையின் சொந்த ஊர். அருகில் அமைந்துள்ள தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் உருத்திரன்,  கோதவாடிப்பகுதியில் சில பழஞ்சிற்பங்கள் உள்ளன என்று கூறியதை அடுத்து அப்பகுதியை ஆய்வு நோக்கில் சென்று காண விருப்பம் ஏற்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ்ஆங்கில நாளிதழின் எழுத்தாளர் கொங்குப்பகுதியின் வரலாற்றுச் செய்திகளை அந்நாளிதளில் எழுதி வெளிக்கொணர்ந்து வருபவர் மீனாட்சிசுந்தரம் அவர்கள், இக்கட்டுரை ஆசிரியர், உருத்திரன் ஆகியோர் கோதவாடிப்பயணம் மேற்கொண்டனர்.

ஒட்டாலம்மன்  
         வடசித்தூர் வழியாகக் கோதவாடியை அடைந்ததும் அங்கு சாலை ஓரத்திலேயே இருந்த ஒரு சிற்பத்தை உருத்திரன் காட்டினார். தார்ச் சாலையின் ஓரத்தில் ஒரு சிறிய மரத்தடியில் அச்சிற்பம் இருந்தது. அது ஒரு பெண்ணின் சிற்பம். இரண்டடி உயரத்தில் சிறியவடிவம். பெண் தன் கையில் ஒரு குழந்தையை வைத்திருக்கிறாள். அவளது உடலை ஒட்டிய நிலையில் உடலின் இருபுறமும் பெண்ணை முட்டுகின்ற தோற்றத்தில் இரு மாடுகளின் உருவங்கள். பெண்ணின் தலை கொண்டை முடிந்த தோற்றம். காதுகளில் காதணிகள் உள்ளன. கைகளில் வளைகள் காணப்படுகின்றன. கணுக்கால் வரையிலான ஆடை. சிலையின் அருகில் மண்ணாலான ஒரு விளக்கு மாடம். சிலை முழுதும் ஆங்காங்கே திருநீற்றைப் பூசிக் குங்குமம் இட்டிருக்கிறார்கள். மக்கள் வழிபாட்டில் அச்சிலை உள்ளது  என்பது தெளிவாகப்புலப்பட்டது.

                                           ஒட்டாலம்மன் சிற்பம்

                                                 

                          ஒட்டாலம்மன் சிற்பம் - மண்ணைத் தோண்டியபின்



         இது போன்ற ஒரு சிலையை ஏற்கெனவே நெகமத்துக்கருகில் கண்டறிந்து செய்தி வெளியிட்டுள்ளோம். அதில் சிலையின் பீடப்பகுதியில் இரண்டு வரிகளில் கல்வெட்டு எழுத்துப்பொறிப்பு இருந்தது. இச்சிலையிலும் அவ்வாறு எழுத்துப்பொறிப்புகள் கிடைக்கக்கூடும் என்னும் ஆவலில் அப்பகுதி மக்களிடம் பேசிச் சிலையைத் தோண்டச்செய்தோம். ஆனால், எழுத்துப்பொறிப்பு எதுவும் காணப்படவில்லை. ஊர் மக்கள், இச்சிலையை ஒட்டாலம்மன் என்னும் பெயரிட்டு வணங்கி வருகின்றனர். ஜெயக்குமார் என்னும் இளைஞர் நாள்தோறும் சிறிய அளவில் பூசை செய்துவருகிறார்.
அவரது கனவில் ஒட்டாலம்மன் குழந்தையுடன் தோன்றிக் குழந்தைக்கு உணவளித்துப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மறைகிறாள். எனவே, சிலைக்கு உணவுபடைத்துப் பூசை நடக்கிறது.

         கருவுற்ற போயர்குலப்பெண் ஒருத்தி மாடுமேய்க்கும்போது மாடு பாய்ந்து இறந்து போனதாகவும் அவளே ஒட்டாலம்மன் என்னும் சிறுதெய்வமாக வழிபடப்படுகிறாள் என்பது ஒரு செவி வழிச்செய்தி. மற்றொரு செவிவழிச்செய்தியில், வேளாண்பணிக்குச் சென்ற கணவனுக்கு உணவு எடுத்துச் செல்லும் வழியில் கருவுற்ற அப்பெண் மாடு முட்டியதால் இறந்து போகிறாள். குழந்தையைக் கருவில் சுமந்த நிலையில் இறந்துபோவதால் குறியீட்டாகக் கையில் குழந்தையுடன் சிலையை வடித்துள்ளனர். சிலையை வடித்துவைத்தவர் மாகாளி ஆச்சாரி என்னும் சிற்பி என்பது ஒரு செய்தி.

         வீரச்செயல் நிகழ்வொன்றில் இறந்துபடும் வீரன் நினைவாகவும், வீரனோடு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொள்ளும் அவன் மனைவி நினைவாகவும் நடுகல் எடுத்து வணங்கும் மரபு இருப்பது போலவே, கருவுற்ற பெண் குழந்தைபெறுமுன்னர் இறந்துபோக நேர்ந்தால் நடுகல் எடுப்பதும், சுமைதாங்கி நிறுத்துவதும், தண்ணீர்ப்பந்தல் அல்லது கிணறு அமைப்பதும் மரபாக இருந்துள்ளன. அவ்வகையில் கோதவாடிச் சிற்பம் ஒரு நடுகல் எனலாம். இதன் காலம் கி.பி. 16 கி.பி 19 நூற்றாண்டளவினதாகலாம்.

ஆல்கொண்ட திருமால் கோயில்

                                              ஆல் கொண்ட திருமால்  கோயில்


                                              மாடுகளின் உருவாரப்பொம்மைகள்


         அடுத்து, ஊர்மக்களில் சிலர், அருகில் மாலக்கோயில் என்னும் ஒரு கோயிலில் புலிகுத்திக்கல் சிற்பம் ஒன்றுள்ளதாகக் கூறவே மாலக்கோயில் சென்றோம். பொதுவாக மாலக்கோயில் என்பது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட மக்கள் குழுவினர் வழிபடும் ஒரு கோயிலிடமாகவோ அல்லது நினைவுக்கல் (தூண் வடிவில்) எழுப்பிய இடமாகவோ இருப்பதைக் காண்கிறோம். கோயிலிடமாக இருந்தால் அங்கே கோயிலின் இறைவனாகக் கோபாலன் என்னும் கிருஷ்ணன் எழுந்தருளியிருப்பது கண்கூடு. நினைவுக்கல்லாக இருந்தால் அது கால்நடை வளர்ப்புச் சமுதாயத்தில் காவல் பணியில் புலி அல்லது நரி போன்ற விலங்குகளோடு போரிட்டுக் கொன்று இறந்துபடும் காவல் வீரன் நினைவாக எழுப்பப்படும் தூண்கல்லாக இருக்கும். இதை அடுக்கு நிலை நடுகல் என்றும் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுவர்.
  
         இங்கே கோதவாடி மாலக்கோயில், “ஆல் கொண்ட திருமால் கோயில் என்னும் பெயரோடு விளங்கும் ஒரு கிருஷ்ணன் கோயிலாகும். இக்கோயிலின் உட்புற வளாகத்தில் நிறைய சுடுமண்ணாலான மாட்டுருவங்கள். ஆநிரை உடைமையாளர்கள், மாடுகளுக்கு நோய் வராமல் இருக்க இக்கோயில் இறைவனை வேண்டிக்கொண்டு இம்மண்ணுருவங்களை இங்கே வைத்திருக்கிறார்கள். பசுமாடுகளின் முதல்சுரப்புப் பாலையும் இங்குள்ள இறைவற்குப் படைக்கிறார்கள்.

புலிகுத்திக்கல்

          இக்கோயிலின் வெளிப்புறம் அமைந்த வளாகத்தில் ஒரு புலிகுத்திக்கல் இருக்கிறது. இது கால்நடை வளர்ப்பு மேலோங்கியிருந்த காலச் சூழலில் இறந்துபட்ட காவல் வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும்.  வீரன் ஒருவன் புலியின் வாய்ப்பகுதியில் தன் நீண்ட வாளைப் பாய்ச்சிக்கொண்டிருப்பதுபோல வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பம். புலி தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றியவாறு முன்னங்கால்களால் வீரனைத் தாக்குவது போன்ற தோற்றம். வழக்கமாக இது போன்ற புலிகுத்திக்கல் சிற்பங்களில் வீரன் தன் வாளைப் புலியின் நெஞ்சில் பாய்ச்சியவாறு இருப்பதைக் காணலாம். இங்கே சற்று மாறுபட்டுப் புலியின் வாய்க்குள் வாள் பாய்ச்சுவதுபோல் அமைந்துள்ளது. கி.பி. 16-17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலச் சூழலில் இந்நடுகல் சிற்பம் அமைந்துள்ளது. ஊரார் இப்புலிகுத்திக்கல்லை “நரி கடிச்ச இராமய்ய கவுண்டர் கல் என அழைக்கின்றனர். சில இடங்களில் புலிகுத்திக்கல்லில் இருக்கும் புலியின் உருவத்தை மக்கள் நரியெனக் கொள்வதால் ஏற்படுகிற பெயர் மயக்கம்..

                                 புலிகுத்திக்கல்




  
       இதே வளாகத்தில் முதலியாம்பாளையம்-விநாயகர்கோயில் என்னும் பெயரில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. முதலியாம்பாளையம் என்னும் சிற்றூர் முன்னர் இருந்துள்ளதாகவும் அது அழிந்துபட்ட பின்னர் கோதவாடி ஊர் தோன்றியதாகவும் மாலக்கோயில் பூசையாளர் அங்கப்பண்டாரம் என்பவர் தெரிவித்தார். பூசை மற்றும் பிற வழிபாட்டுக்காக இக்கோயிலுக்கும் பூசையாளர்வழியினர்க்கும் பதினேழு ஏக்கர் நிலம் வழங்கிச் செப்புப்பட்டயமும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். செப்புப்பட்டயச் சான்று தற்போது இல்லை. நாயக்கர் ஆட்சியின்போது (கி.பி.16-17 நூற்றாண்டாகலாம்) இப்பகுதி கால் நடை வளர்ப்புச் சமுதாயத்தின் ஒரு குடியிருப்பாக (Settlement) இருந்திருக்கவேண்டும் என்பதற்கான சான்றெச்சங்களாகவே இந்நடுகல்லும், மாலக்கோயிலும், ஒட்டாலம்மன் சிலையும் அமைகின்றன என்பதில் ஐயமில்லை. கோதவாடி என்னும் பெயரில் உள்ள பின்னொட்டு “வாடி என்பது முல்லை நில ஊர்பெயர்களில் வரும் “பாடி என்பதனோடு இயைந்துபோகிறது.


         நாயக்கர் ஆட்சியின்போது, போர் நிகழ்வுகள் ஓய்ந்த நிலையில், வடுகப்படைவீரர் வழி வந்தோரே இங்கு குடியிருப்பைத் தோற்றுவித்து வேளாண் தொழிலையும், கால்நடை வளர்ப்புத் தொழிலையும் மேற்கொள்ளத்தொடங்கினர் என்று கொள்ளலாம் என இப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் பாஸ்கரன் கூறுவது கருதத்தக்கது.

 குறிப்பு:
------
நரி கடிச்ச இராமய்ய கவுண்டர் கல் என மக்கள் வழங்குவது, புலியின் உருவத்தை நரியெனக்கொண்ட மயக்கம் என்பதாக மேலே குறித்துள்ளேன். புலியின் உருவத்துக்கும் நரியின் உருவத்துக்கும் வேறுபாடு அறியாதவர்களாகப் பண்டைத்தமிழ் மக்கள் இருந்திருப்பார்கள் என நம்ப இயலவில்லை. இக்கட்டுரை எழுதிச் சில நாள்கள் கழித்துப் பழங்குடி மக்களின் பண்பாடு, வாழ்க்கை, தொன்மங்கள் மற்றும் வனம் பற்றிய புதினம் ஒன்றில் (ஆசிரியர்; ச.பாலமுருகன், பவானி) புலியைப் பெருநரி”  என்று பழங்குடி மக்கள் அழைத்ததாகக் குறிப்பிடுகிறார். அந்த வழக்கு, முல்லை நில மக்களால் தொடர்ந்து பின்பற்றப்பட்டிருக்கவேண்டும்.

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக