வெள்ளையர் ஆட்சியில் வெள்ளையருக்கே தடை
டாக்டர் இ. ஹுல்ட்ஸ் தலைமையில் இயங்கிய தென்னிந்தியத் தொல்லியல் துறை, பிப்ரவரி, 1889-ஆம் ஆண்டு (திருப்பதி) திருமலையில் கோயில் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியைத் தொடங்கியது. ஐரோப்பியர் யாரும் கோயிலுள்
நுழையக்கூடாது என்னும் தடை நடைமுறையில் இருந்ததால்,ஹுல்ட்ஸ் அவர்கள் கோயிலுக்குள் நுழைய இயலவில்லை.எனவே, அவருடைய உதவியாளர் வி.வெங்கய்யா அவர்கள் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியை மேற்கொண்டார். வெளிச்சுற்றுகளில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்த பின்னர், உண்ணாழிகைச் சுற்றில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்க முனைந்தபோது, பிராமணர் என்னும் நிலையிலும் வெஙகய்யா அவர்களுக்கு நுழைவு மறுக்கப்பட்டது. வட ஆர்க்காட்டு ஆட்சியர் தலையிட்ட பின்னரும் கோயில் தானத்தார் பிடிவாதமாக மறுத்துள்ளனர். இந்நிகழ்ச்சியை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார் ஹுல்ட்ஸ் அவர்கள். இதுமட்டுமல்ல, இரண்டு மாட்டுவண்டிகள் கொள்ளும் அளவு கோயிலில் இருந்த செப்பேடுகளைப் பார்வையிட நாங்கள் எடுத்த முயற்சியும் தோல்வியைத் தழுவியது என்று ஹுல்ட்ஸ் குறிப்பிடுகிறார். முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகியோர் காலங்களிலேயே திருமலைக்கோயில் இருந்திருக்கக்கூடும் எனவும் குறிப்பிடுகிறார்.
ஹுல்ட்ஸ் அவர்களின் மேற்படி ஆண்டறிக்கையை இந்தியத் தலைமைக்கு அனுப்பும் முதன்மைச் செயலாளர் தம் கடிதத்தில்இந்நிகழ்வுக்குத் தம் வருத்தத்தைத் தெரிவித்து, எதிர் வரும் சமயம் ஒன்றில் கோயிலின் உள்சுற்றில் கல்வெட்டுகளைப் படியெடுக்க அனுமதி வழங்கப்படும் என்னும் நம்பிக்கையைத் தெரிவிக்கிறார்.
மலையப்பனை மிஞ்சிய மனித ஆற்றல்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக