மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 31 டிசம்பர், 2016

தேவனூர் புதூர் நரிகடிச்சான் கோயில்

         கொங்கு நாடு பழங்காலத்தில் காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தைப் பெருமளவில் கொண்டிருந்தது. எனவே, கொங்குச்சமுதாயமும் நீண்ட காலம் கால்நடை வளர்ப்புச் சமுதாயமாகவே அமைந்திருந்தது. வேளாண்மை பெருமளவில் இல்லை. பத்து-பதினொன்றாம் நூற்றாண்டில் சோழர் கொங்குநாட்டைக் கைப்பற்றிக் கொங்குச்சோழரைக்கொண்டு ஆட்சி நடத்தியபின்னரே வேளாண்மை பெருகியது.  கால்நடை வளர்ப்பில் அவற்றைப் பேணுதல் என்பது தலையாய பணி. அவற்றை அடைத்து வைக்கப் பட்டிகள் இருந்தன. ஆனால், ஊரைச் சூழ்ந்துள்ள காடுகளிலிருக்கும் புலிகளால் கால்நடைகளுக்கு மிகுந்த ஆபத்தும் இருந்தது. புலிகளால் வேட்டையாடப்படுவதனின்றும் கால்நடைகளைப் பாதுகாக்க வீரர்கள் காவலிருந்தனர். அவ்வீரர்கள் காவல் பணியின்போது புலிகளை எதிர்கொண்டு அவற்றுடன் சண்டையிட்டுக் கால்நடைகளைக் காத்தனர். சிலபோது, வீரர்கள் இறந்துபடுதலும் நிகழும். அவ்வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஊர்மக்கள் அவர்க்குக் கல் நாட்டி வழிபாடு செய்தனர். அவ்வகைக் கற்கள் நடுகற்கள் எனப்பட்டன. அவற்றில், புலியுடன் போரிடும் தோற்றத்தில் வீரனின் சிற்பங்களை வடித்தனர். கோவைப்பகுதியில், இவ்வாறான நடுகற்கள் புலிகுத்திக்கல் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. சில ஊர்களில், இவற்றை நரிகடிச்சான் கல் எனவும் அழைக்கின்றனர்.

         அது போன்ற நரிகடிச்சான் கல் ஒன்று, திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தேவனூர்புதூரில் இருக்கின்றது. கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து. சுந்தரம், அவிநாசியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது இராவணாபுரத்தைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவரும் உடனிருந்தார். இந்தப்பகுதி மக்கள் இக்கோயிலை நரிகடிச்சான்கோயில் என அழைக்கின்றனர் என்னும் தகவலை அவர் தெரிவித்தார். ஆய்வு விவரங்களாவன.

                                                               கோவிலின் முன்புறத் தோற்றம்                


                       தேவனூர் புதூரில், நவக்கரை பாலத்தருகில் மேற்சொன்ன நரிகடிச்சான் கோயில் அமைந்துள்ளது. சாலையோரத்தில் ஒரு வேப்பமரத்தின் அருகில் அமைந்துள்ள இக்கோயில் ஆறடி நீளமும் ஐந்தடி அகலமும் கொண்ட ஒரு சிறிய  கருவறை அமைப்பைக்கொண்டுள்ளது. கருவறைபோன்ற இந்தக்கட்டுமானம் முழுதும் கற்களால் அமைக்கப்பெற்றது. கருவறையின் வாயில் போன்ற முன்புறத்தில், ஐந்தடி உயரமுள்ள இருகற்கள் இருபுறம் நிற்கவைக்கப்பட்டு, நடுவில் ஒருவர் உள்ளே நுழையுமளவு வாயில் திறப்பு அமைக்கப்பட்டிருந்தது. கருவறையின் இரு பக்கவாட்டுப்பகுதிகளிலும் பின்புறத்திலும் ஐந்தடி உயரமுள்ள மூன்று மூன்று கற்கள் இணைக்கப்பட்டிருந்தன. கருவறையின் கூரைப்பகுதி சற்றே பெரிய அளவிலான ஐந்தரை அடி உயரமுள்ள மூடுகற்கள் மூன்றைக்கொண்டு அடுக்கப்பட்டிருந்தது. எல்லாக்கற்களும் சுண்ணாம்புக் காரைப்பூச்சு கொண்டு நன்கு இணக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் புலிகுத்திக்கற்கள் திறந்த வெளி நிலத்தில் ஒரு பலகைகல்லில் புடைப்புச் சிற்பமாகவே காணப்படும். ஆனால், இங்கே பெரிய கற்களாலான ஒரு கட்டுமானத்துக்குள் சிற்பம் காணப்படுவது சிறப்பானது. கருவறையைச் சுற்றிலும் திறந்த வெளியும் அதை அடைத்தவாறு கற்களை அடுக்கிச் சுற்றுச்சுவரும் அமைத்திருக்கிறார்கள். சுற்றுச்சுவர் கட்டுமானத்திலும் முன்புறத்தில் இரு கல் தூண்களைக்கொண்டு ஒரு வாயிலை அமைத்திருக்கிறார்கள்.

                         கோயிலின் தோற்றங்கள்


         கற்களால் அமைந்த மேற்கண்ட அறைக்குள் மூன்று அடி நீளமும் இரண்டரை அடி உயரமும் கொண்ட புடைப்புச்சிற்பத்தில், வீரன் ஒருவன் தன் இடது கையால் புலியின் வாய்க்குள் சிறிய வாளைப் பாய்ச்சியவாறும், தன் வலது கையால் நீண்டதொரு வாளைப்புலியின் வயிற்றுப்பகுதியில் பாய்ச்சியவாறும் காணப்படுகிறான். இரண்டு வாள்களுமே புலியின் உடலைத்துளைத்து உடலுக்கு மறுபுறம் வெளிவந்துள்ளவாறு உள்ளன. புலி தன் பின்னங்கால்களால் நின்றவாறு முன்கால்களைத் தூக்கி வீரனின் வலது கையைப்பற்றிக்கொண்டு தாக்கும் நிலையில் காணப்படுகிறது. வீரனின் கால்களும், புலியின் பின்னங்கால்களும் நாம் பார்க்க இயலாதவாறு பலகைச் சிற்பம் சற்றே நிலத்தில் புதைந்துபோய்விட்டது. வீரன் தலையில் தலைப்பாகை இருப்பதுபோல் தோன்றுகிறது. தலையின் வலப்பக்கம் கொண்டை காணப்படுகிறது. கழுத்திலும் காதிலும் அணிகள் உள்ளன. இடையில் ஆடைக்கச்சு காணப்படுகிறது. இடைக்கச்சில் குறுவாள் ஒன்று இருப்பதுபோல் புலப்படுகிறது. நீண்ட நாள்களாகச் சிற்பத்துக்கு எண்ணை பூசப்பட்டுவருவதன் காரணமாகச் சிற்பநுணுக்கங்களை அறிய முடியவில்லை. வீரனுக்கும் புலிக்கும் இடையில் ஒரு நீண்ட தண்டு காணப்படுகின்றது. புலிக்கெனத் தனிச் சிற்பம் அமைத்து வெளியே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

                         வீரன் புலியைக் குத்தும் சிற்பம்


                                                     தனியே புலிக்கொரு சிற்பம்


         மொத்தத்தில், ஒரு கோயிலின் தோற்றத்தைக் கற்களைக்கொண்டே அமைத்திருப்பதை நோக்கும்போது புலியைக் கொன்ற வீரன் அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒரு குறுந்தலைவனாக இருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு. மக்கள் இந்த நடுகல் சின்னத்தைக் கோயிலாக வழிபடுவதனால் பல நூற்றாண்டுகளைக் கடந்த தொல்லியல் தடயமான நடுகல் அழிவினின்றும் காக்கப்பட்டு வருதல் மகிழ்வையே அளிக்கிறது. இப்பகுதி மக்கள், வழிபாட்டோடு நின்றுவிடாமல், ஒரு தொல்லியல் சின்னம் நம் பகுதியில் உள்ளது என்னும் பெருமையை உணர்ந்து இந்த நடுகல் கோயிலைப் பாதுகாப்பார்களாக.








து.சுந்தரம், கல்வெட்டு அராய்ச்சியாளர், கோவை.

அலை பேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக