கூத்தம்பூண்டி
கொங்குப்பாண்டியர் கோயிலும், அதியன் குடைவரைக்கோயிலும்
முன்னுரை.
கூத்தம்பூண்டி என்னும் ஒரு சிற்றூர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்
வட்டத்தில் உள்ளது. வரலாற்றுப் பின்னணியுள்ள இவ்வூர் பற்றி பலருக்கும் தெரிய
வாய்ப்பில்லை.. கோவையில் இருக்கும் என்போன்றவர்க்கு மட்டும் எப்படித்தெரியும்?.
கோவை வாணவராயர் அறக்கட்டளை சார்பாகத்
திங்களொருமுறை வரலாற்று உலா செல்லும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. சென்ற ஞாயிறன்று (23-10-2016) நிகழ்ந்த
உலாவின்போது, கூத்தம்பூண்டியின் வரலாற்றுப் பின்னணியை நன்கறிந்த முனைவர் திரு.
ஜெகதீசன் அவர்கள் (இவரே சுற்றுலாப் பொறுப்பாளர்), எங்களைக் கூத்தம்பூண்டிக்கு
அழைத்துச்சென்றபோதுதான் கூத்தம்பூண்டி பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. அவருக்கு
நன்றி சொல்லவேண்டும்.
மார்க்கண்டீசுவரர் கோயில்
கூத்தம்பூண்டியில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மார்க்கண்டீசுவரர் கோயில் உள்ளது. ஊருக்கு ஒதுங்கிய நிலையில் தனித்து நின்றது கோயில். சற்றுத் தொலைவிலிருந்து
காணும்போதே அதன் பழமையும் அழகும் கண்களில் நின்றன. எந்த வண்ணப்பூச்சும் இல்லாத பழமைப்
போர்வை. கருவறை, அதனை அடுத்து அர்த்தமண்டபம். தரையோடு தரையாக “ஜகதி” என்னும் அதிட்டானப்பகுதி. கற்றளிப்
பகுதியின் இறுதியில் உள்ள ”பிரஸ்தரம்” என்னும் கூரையிலும், விமானத்திலும் செங்கற்கள்
வெளியே தெரியும்படியான சிதைவுகள் புலப்பட்டன. விமானத்தில் சுதைச் சிற்பங்கள்
காணப்படவில்லை. விமானத்தின் கலசப்பகுதியிலும் சுதைக் கட்டுமானமே எஞ்சி நின்றது.
உலோகக் கலசம் இல்லை. விமானத்தின் சிகரம் நாகர (சதுரம்) அமைப்பைக் கொண்டுள்ளது. இறைவர்
மார்க்கண்டீசுவரர் கருவறையையடுத்து இறைவி ஆனந்தவல்லியின் கருவறை. அதிட்டானத்தில்,
ஜகதி, குமுதம் ஆகிய இரண்டு உறுப்புகளுக்கு மேல் சுவர்ப்பகுதி முழுதும்
செங்கற்கட்டுமானத்தைப் பெற்றுள்ளது. எளிமையான் தோற்றம். பிற்காலத்தில்
இணைக்கப்பெற்றதாக இருக்கலாம்.
கோயிலின் பல்வேறு தோற்றங்கள்
மார்க்கண்டீசர் கருவறை விமானம்
இறைவி ஆனந்தவல்லி கருவறை விமானம்
கருவறைச்சுவரில் கோட்டம்
கல்வெட்டு
கல்வெட்டும் சண்டீசர்
சிற்பமும்
கொங்கு நாட்டின்
எல்லைப்பகுதியில் இருக்கும் பொங்கலூர்க்கா நாட்டில் கூத்தம்பூண்டி அமைந்திருந்தது.
இதனை இக்கோயிலில்
இருக்கும் ஒரே ஒரு கல்வெட்டு உறுதி செய்கின்றது. கல்வெட்டு, கொங்குப்பாண்டியனான
இராசகேசரி வீரபாண்டியனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. கல்வெட்டில்,
இந்த ஊரின் பெயர் ஆன்பரமான கூத்தம்பூண்டி என்று குறிப்பிடப்பெறுகிறது. பூண்டி
என்பது ஊர்க்குடியிருப்பைக் (settlement) குறிப்பதாகலாம். வீரபாண்டியனின்
ஆட்சிக்காலம் கி.பி. 1265-1285 என வரலாற்று அறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளதால், கல்வெட்டு
13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கோயில் பாண்டியர் கட்டிடக்கலைப்பாணியில் அமைந்த
அருமையான கோயில். ஆனால், கோயிலில்
10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு சிலைகள் உள்ளன. ஒன்று, கோயிலின் தெற்குக்
கோட்டத்தில் இருக்கும் சண்டிகேசுவரர் சிற்பம். சோழர் கலைப்பாணியில் அமைந்த அழகான
சிற்பம். “ஜடாபாரம்” என்னும் தலை
அலங்காரத்துடனும், செவிகளில் “கர்ணகுண்டல”ங்களுடனும், வலக்கை மழுவேந்திய நிலையிலும், இடக்கை தொடையில்
இருத்தப்பட்ட நிலையிலுமாக சண்டேசுவரர் சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறார். புன்னகை
இதழ்களோடு கூடிய அழகான முகம். கழுத்தில், கைகளில், கால்களில் அணிகள். தடித்த முப்புரி
நூல். வயிற்றுப்பகுதியில் உதரபந்தம் என்னும் ஓர் அணிகலன்.
சண்டேசர் சிற்பம்
சண்டேசர் சிற்பம்
கண்ணப்ப நாயனார்
மற்றொரு சிற்பம், வடக்குச்
சுவர்ப்பகுதியில் இருக்கும் வில்லேந்திய சிற்பம். இச்சிற்பம், தனிச்சிற்பம்.
கோட்டத்தில் வைக்கப்படவில்லை. சுவரில் சாத்திவைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை
இராமர் என்று கோயிலார் குறிப்பிட்டாலும், இது வேடரான கண்ணப்ப நாயனாருடையது.
கோயிலின் இன்னொரு சிறப்பு இதன்
சுற்றுச் சுவர். செங்கற்களாலான சுற்றுச்சுவரின் மேற்பகுதி அழகான வேலைப்பாடு
கொண்டது. சிறிய மாடம் போன்றும் சன்னல் போன்றும் தோற்றம் தருகின்ற ஓர் அமைப்பில்
கட்டப்பட்டுள்ளது. கரை கட்டியதுபோல இரண்டு செங்கல் வரிசைகள்; அதன் இடைப்பகுதியில்,
கோட்டம் (Niche) போன்ற உள் வெளி. இந்த உள்வெளி முழுதும்
இடைவெளி விட்டுவிட்டு முன்புறத்தில் எட்டிப்பார்க்கும் சிறு சிறு புடைப்புகள். ஒரு
செங்கல்லை அதன் நீளமும் அகலமும் ஒருசேரக்காணும் முகப்பகுதியை முன்புறம் இருத்தி,
அதன்மேல் மூன்று செங்கற்களை அவற்றின் அகலப்பருமையை முன்புறம் இருத்தி
அடுக்கியிருக்கிறார்கள். செங்கற்களை நுண்மையாய் அடுக்கிய இந்த வேலைப்பாடு சிறப்பான
வேலைப்பாடு.
வேலைப்பாடு நிறைந்த சுற்றுச்சுவர்
பெருங்கற்காலச் சின்னங்கள்
கோயிலை ஒட்டியுள்ள
விளைநிலத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த புதையிடம் உள்ளது. இங்கு,
பெருங்கற்காலச் சின்னங்களில் ஒன்றான கல்திட்டைகள் மூன்று காணப்படுகின்றன.
எழுத்துச் சான்றுகள் கிடைதுள்ள சங்ககாலத்தை வரலாற்றுக் காலத்துடன் இணைப்பார்கள். எழுத்துக்காலத்துக்கு
முன்புள்ள காலம் பெருங்கற்காலம் ஆகும். எனவே, இங்குக் காணப்படும் கல்திட்டைகள்
கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை. கூத்தம்பூண்டி, 2500 ஆண்டுகளுக்கு
முற்பட்ட மக்கள் வாழ்ந்த ஒரு வரலாற்று இடமாக இருந்துள்ளது என்பது அறியப்படுகிறது. இறந்தோருக்கு
நினைவிடம் எழுப்பி வழிபாடு செய்யும் பெருங்கற்கால மரபில் நடுகல், கல்பதுக்கை,
கல்வட்டம், கல்திட்டை, முதுமக்கள் தாழி எனப் பல்வேறு அமைப்புகளின் பயன்பாடு
இருந்தது. பெருங்கற்காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு குடியினரும் ஒவ்வொரு வகையான அமைப்பைப்
பயன்படுத்தினர் என்று ஓர் ஆய்வுக்கருத்து உள்ளது. அவ்வகையில், இங்கு வாழ்ந்த
மக்கள், கல்திட்டைகளை அமைத்துள்ளனர் எனலாம். கல்திட்டைகள் கொங்குப்பகுதியில் சற்று
அரிதாகவே காணப்படுகின்றன. கல்திட்டைகள் என்பன நிலத்துக்கு மேற்பகுதியில்
எழுப்பப்படுவன; கல் பதுக்கைகள் என்பன நிலத்துக்கடியில் அமைக்கப்படுவன. தாழிகளை
நிலத்தில் புதைத்து அமைப்பது முதுமக்கள் தாழி எனப்படும். அவை இருக்கும் இடத்தைச்
சுட்டும்வகையில், தாழிகளைப் புதைத்த நிலத்தின் மேற்பரப்பில் சுற்றிலும்
பெருங்கற்களை வட்டமாக அடுக்கியிருப்பர். இவ்வகைச் சின்னம் கல்வட்டம் எனப்படும்.
நடுகல் வழிபாட்டிலும், சிறிய அளவில் கற்களும், பெரிய அளவில் நெடிதுயர்ந்த கற்களும்
பயன்பட்டன. பெரிய அளவிலானவை நெடுநிலை நடுகற்கள் எனப்படும். அதுபோன்ற ஒரு நெடுநிலை
நடுகல்லும் இப்பகுதியில் இருப்பதாகச் சொன்னார்கள்.
கல்திட்டைகள்
இங்குள்ள கால்திட்டைகள், “ப” வடிவில் மூன்றுபுறங்களில் பலகைக்கற்களை அடைத்தவாறு நிறுத்திச்
சுவர்போல அமைத்து, முன்புறம் அடைக்காமல் விட்டு, மேற்புறத்தில் கூரைபோல இரண்டு
பலகைக்கற்களைக்கொண்டு மூடிய நிலையில் எழுப்பப்பட்டுள்ளன. சுவர்ப்பகுதியிலும்
இரண்டிரண்டு கற்கள். மூன்று திட்டைகளில் ஒன்றில் மட்டுமெ இவ்வாறான முழு அமைப்பு
காணப்படுகிறது. மற்ற இரண்டில் ஒன்றில் மூடுகற்கள் இல்லை. மற்றொன்றில்
சுவர்ப்பகுதிக்கல் ஒன்றும், மூடுகல் ஒன்றும் இல்லை. வேளாண்மைக்கு நடுவில் இந்த
எச்சங்களாயினும் மிகுந்துள்ளதே என ஆறுதல் அடையலாம். இங்குள்ள மக்கள், இவற்றைப்
பாண்டியன் வீடு என அழைக்கிறார்கள். பெரும்பாலான ஊர்களில் பெருங்கற்காலச்
சின்னங்கள் உள்ள இடங்களை ஒன்றுபோல,
பாண்டியன் குழி, பாண்டியன் வீடு, குள்ள மனிதர் வாழும் இடம், பாண்டவர்
குழி/வீடு என அழைப்பதைக் காணலாம்.
இந்தக் கல்திட்டைகளை அடுத்துள்ள
நிலங்களின் மேற்பரப்பில், பெருங்கற்கால வாழ்விடங்களில் கிடைக்கும் கருப்பு
சிவப்புப் பானைச் சில்லுகள், இரும்புத் தாது கலந்த மூலப்பொருள்கள் ஆகியன
கிடைப்பது, இபகுதியின் பழமைக்குத் தக்க சான்று.
கூத்தம்பூண்டி
வலசு-குடைவரைக்கோயில்
அடுத்து நாங்கள் சென்ற இடம்
கூத்தம்பூண்டிக்கருகில் உள்ள கூத்தம்பூண்டி வலசு. கள்ளிமந்தையம் ஊருக்குச்
செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்ப்பகுதி. கரட்டு வலசு என்றும்
அழைக்கப்படும் இப்பகுதியை நெருங்கும்போது மலைக்கரட்டுகள் தென்பட்டன. மலைக்கரட்டை
நோக்கி நடக்கையில் ஒரு மாட்டுப்பண்ணையும், அதனையடுத்து கத்தரிச் செடி பயிரிடப்பட்ட
பசுமையான விளைநிலமும் இருந்தன. விளைநிலத்தையொட்டி, மலைப்பாறை எழும்பி நின்றது. ஒரு
பெரும் சுவர் போலப் படர்ந்து நின்ற அப்பாறையை நெருங்கியதும் குடைவரைக்கோயிலின்
தோற்றம் புலப்பட்டது. யானையின் முதுகிலிருந்து சரியும் உடல் பரப்பை மிகப்பெரிய
அளவில் கற்பனை செய்தால் கிடைக்கும் தோற்றம். அந்தப் பாறைப்பரப்பு, முதலில்
சற்றேறக்குறைய இரண்டு அடி அகலத்துக்குச் சட்டமிட்டாற்போலச் சதுரமாக உட்புறம்
குடைந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பு. அதில், ஐந்து கருவறைக்கான வெளிப்புற வடிவம்
குடையப்பட்டுள்ளது. கோயில்களில் காணப்படும் கோட்டத்தை நினைவூட்டியது.
ஒவ்வொன்றிலும் இறைத்திருமேனியை வைப்பதற்கான ஒரு பரப்பு. அருமையான ஒரு
குடைவரைக்கோயில் முழுமையடையாமல் நின்றுவிட்டது. கொங்குநாட்டில், ஏற்கெனவே
அதியன் மரபைச் சேர்ந்த அரசன் ஒருவன் 8-ஆம் நூற்றாண்டளவில் நாமக்கல்லில்
குடைவரைக்கோயிலை எடுப்பித்து அதற்கு “அதியேந்திர விஷ்ணு கிருகம்” என்று பெயரிட்டுள்ளான். இது முழுமையான கோயிலாகக் கட்டப்பட்ட ஒன்று.
இதே போலக் கரூரையடுத்துள்ள தான்தோன்றிமலையில் அதியன் ஒரு குடைவரைக் கோயிலைக்
கட்டத்தொடங்கி, அது இடையில்
நின்றுபோனதாகக் கூறப்படுகிறது. இதில், கோட்டமும் கோட்டத்தில் சிலைகளும் இருக்கும்.
தான்தோன்றிமலையில் கட்டப்பட்ட குடைவரைக்கோயிலும் பெருமாள் கோயிலே. இங்கே,
கூத்தம்பூண்டியில் சிலைகள் இல்லை. இதுவும் அதிய அரசன் கட்டியதாகக் கருதப்படுகிறது.
கோயிலின் உருவம் மட்டும் வெட்டப்பட்டு, சிலைகள் இல்லாமல் விட்டுச் சென்றதுபற்றிக்
குறிப்புகள் இல்லை. திருச்சியில் உள்ள குடைவரைக்கோயில் அறுவகைச் சமயத்தார்க்குமாக
எடுக்கப்பட்டதுபோல, இங்கு ஐந்து சமயத்தார்க்காக ஐந்து கருவறைகள் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று
கருதப்படுகிறது. விடுபட்ட ஆறாவது சமயம்
எது என்பது தெரியாது. இக்குடைவரைக் கோயிலின் அமைப்பு மதுரை ஆனைமலையில் உள்ள இலாடன்
கோயில் அமைப்பை ஒத்துள்ளது. இக்குடைவரைக் கோயிலைக் கட்டிய அதிய அரசனின் பெயர்
குணசீலன் எனக்கருதப்படுகிறது. இக்குடைவரைக்கருகிலேயே, மற்றொரு குடைவரை
தொடக்கநிலையில் செதுக்கல்களோடு காணப்படுகிறது. மலையின் அடுத்த பக்கத்திலும்
கோட்டுக் கீறல்களோடு செதுக்கல்கள் உள்ளன என்கிறார்கள். மலையின் இருபுறங்களிலும்
குடைவரைகள் உள்ள அமைப்பை மதுரை-வரிச்சியூர் குடைவரையில் காணலாம். அங்கே, உதயகிரி, அஸ்தமனகிரி என மலையின்
இருபக்கங்களிலும் இரண்டு கருவறைகள் உண்டு. ஒன்று உதயகிரீசுவரர், மற்றது
அஸ்தமனீசுவரர். அந்த அமைப்பில் இங்கு கூத்தம்பூண்டியிலும் கட்ட எண்ணியிருக்கலாம்.
ஆனால், பணி முற்றுப்பெறவில்லை எனலாம். உள்ளூர் மக்கள் இவ்விடத்தைப் பெருமாள்மலை என அழைக்கிறார்கள்.
குடைவரை இருக்கும் மலைக்கரடு
குடைவரைக்கோயில்
கொங்கு நாட்டு எல்லை-நீட்சி
கொங்குநாட்டின் எல்லை பழநி வரையில் இருந்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள்
கூறியுள்ளனர். தற்போது, அகழாய்வுப்பேராசிரியர் கா. ராஜன் அவர்களின் மாணாக்கரான
யதீஸ்குமார் என்பவர், முனைவர் பட்டத்துக்கான ஆய்வின்போது (அமராவதி நதிக்கரை
நாகரிகம் என்னும் ஆய்வு) மாந்தரன் என்னும் இடத்தில் கோக்கண்டன் மாந்தரன்
என்னும் அரசனின் கல்வெட்டைக் கண்டறிந்தபின்னர், ஒட்டன்சத்திரம் வட்டத்தின்
பாதியளவு வரை கொங்குப்பகுதி நீண்டிருந்தது என்று அறியப்பட்டுள்ளது. எனவே,
கூத்தம்பூண்டியைச் சேர்த்து மூன்று குடைவரைக் கோயில்களைத் தனக்குள் கொண்டுள்ளது
என்னும் பெருமையைக் கொங்குநாடு பெறுகிறது.
முடிவுரை
கூத்தம்பூண்டி. கொங்குநாட்டில் எங்கோ ஒரு
எல்லைப்பகுதியில் அமைந்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுத் தடயங்களைத் தன்னகத்தே
கொண்டு அதன் பெருமையும்
வரலாற்றுப்பின்னணியும் சற்றும் வெளியுலகுக்குத் தெரியாவண்ணம் அடக்கத்தோடு நிற்கும்
பேரூர். அதன் உண்மை வரலாற்றுப்பின்னணியை வெளிக்கொணர்வதில் மகிழ்ச்சியும்
பெருமையும் கொள்கிறோம். இது போன்ற பல வரலாற்றுத் தடயங்களை வெளிக்கொணர்வது
ஆங்காங்கே உள்ள வரலாற்று ஆர்வலர்களின்
கடமையாகும்.
செய்திகள் - துணை நின்றவர் : முனைவர் திரு. ஜெகதீசன் அவர்கள்.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக