மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சின்ன நெகமத்தில் பாளையக்காரர்  கல்வெட்டு 

பாளையக்காரர்கள் – ஒரு முன்னுரை
         விசயநகரப்பேரரசின் தோற்றம்
        கி.பி. 1336-ஆம் ஆண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விசயநகரப் பேரரசு உருவானது. பின்னர் கி.பி. 1378-இல், விசயநகர அரசின் இளவரசரான குமார கம்பணன் மதுரையை வெற்றிகொண்டார். தொடர்ந்து தமிழகம், கேரளம் ஆகிய இரண்டும் விசயநகர ஆட்சியின்கீழ் வந்தன. விசயநகர அரசு பல நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் இந்த ஆட்சிப்பிரிவுகளுக்குத் தலைவர்களாக மண்டலாதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்குத் தனியே படையும் உண்டு. பின்னர், 15-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் “நாயக்கர்கள்”  என்னும் படைதலைவர்களின் உருவாக்கம் நிகழ்ந்தது.

       கிருஷ்ணதேவராயரின் நாயக்கத்தனம்
       எனினும், நாயக்கர் உருவாக்கம் முழுமையான வடிவமும் சிறப்பான நிலையும் பெற்றது கிருஷ்ணதேவராயரின் காலத்தில்தான். அரசின் ஆட்சிப்பரப்பில் ஆங்காங்கே இருக்கும் உள்ளூர்ப்படைதலைவர்கள் நாயக்கர்என்னும் பதவிநிலையில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு சிறிதும் பெரிதுமாக ஆட்சிப்பரப்பு (நிலப்பரப்பு) தரப்பட்டு அதை ஆளும் உரிமையும் தரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட அளவுகொண்ட படையை இந்த நாயக்கர்கள் வைத்துக்கொள்ளலாம். இந்தப்படையில், குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை ஆகிய மூன்றும் உண்டு. இப்படையைக் கட்டிக்காக்க ஒரு குறிப்பிட்ட வருவாயை அரசுக்கு அளிக்கவேண்டும். அரசர் (கிருஷ்ணதேவராயர்), இந்த நாயக்கர்களைத் தம் முழுக் கட்டுக்குள் வைத்திருந்தார். நாயக்கர்கள் தம் ஆட்சியின் வரிவருவாய்களில் மூன்றில் ஒரு பங்கை அரசுக்குச் செலுத்தவேண்டும். மிகுதியுள்ள மூன்றில் இரு பங்கு நாயக்கர்களின் படையைப் பேணுவதற்குச் செலவிட. இப்படை, அரசருக்காகப் பேணப்படும் ஒன்று. அரசர் எப்போதெல்லாம் அழைக்கிறாரோ அப்போதெல்லாம் அவர் பணிக்காகச் செல்லவேண்டும். இந்த நடைமுறை “நாயக்கத்தனம்என்று அழைக்கப்படுகிறது. இராயர் இந்த நடைமுறையை ஒரு அரசியல் தந்திரமாகவே கையாண்டார் எனக்கூறப்படுகிறது. ஏனெனில், முகம்மதியரின் தாக்குதல்களை எப்போதும் சந்திக்கவேண்டிய சூழ்நிலையில் அரசு இருந்தது. அதற்குத் தேவைப்படும் படையனைத்தையும் அரசே நிர்வகிக்க இயலாது. நாயக்கத் தனம் இங்கேதான் பயன்பட்டது.  
        இராயரின் முதல் நாயக்கன் – சாளுவ நாயக்கன் (வீரநரசிங்க நாயக்கன்) என்பான். சோழமண்டலம்(தமிழகம்) மற்றும் கொல்லம்(கேரளம்) ஆகியன இவனது ஆட்சியின்கீழ். பெரியதொரு நிலப்பரப்பு. மிகப்பெரிய அளவில் வருவாய். இவனது வருவாய் பதினொரு இலட்சம் பொன் (Pardaos) என்று வெளிநாட்டு வரலாற்றுப்பயணியான நூனிஸ் என்பார் குறிப்பிடுகிறார்.  

               இராயரின் ஆட்சியின்கீழ் கொங்கு
        கி.பி. 1518 வாக்கில் இராயர் உம்மத்தூர் அரசரை வென்று, கொங்குப்பகுதியைக் கைப்பற்றினார்.  
       பாளையக்காரர் தோற்றம்
      கி.பி. 1529-இல், மதுரை நாயக்கராகப் பதவியேற்ற விசுவநாத நாயக்கர், பின்னர் விசயநகர ஆட்சியின்கீழிருந்து விடுபட்டு, தன்னாட்சி செய்யும் அரசரானார். அவருடைய அமைச்சரும் படைத்தலைவருமான தளவாய் அரியநாத முதலியார் எழுபத்திரண்டு பாளையங்களை உருவாக்கி அவற்றின் தலைவர்களைப் பாளையக்காரர் என்ற பதவியில் அமர்த்தினார். மதுரைப்பகுதியில் தெலுங்கு நாயக்கர்கள் பாளையக்காரர்களாக இருந்தனர். ஆனால், கொங்குப்பகுதியில் பெரும்பாலும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பாளையக்காரர்களாக இருந்தனர். தெலுங்கு நாயக்கப் பாளையக்கார்ரும் இருந்துள்ளனர்.

சின்ன நெகமம்
         சின்ன நெகமம், பெரிய நெகமத்தை அடுதுள்ள ஒரு சிறிய ஊர். அண்மையில், கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் நெகமம் பகுதியில் ஆய்வுக்குச் சென்றிருந்தபோது, சின்ன நிகமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி என்பவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர், சின்ன நெகமத்தில் அமைந்துள்ள  செல்வ சென்ராயப்பெருமாள் கோவிலில் பூசை செய்துவருவதாகவும், அக்கோவில் சுவரில் கல்வெட்டு ஒன்று இருப்பதாகவும் தெரிவித்தார். அவருடன் அக்கோயிலுக்கு நேரில் சென்று கல்வெட்டை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

குறிப்பு (இன்று -  14-10-2016 சேர்க்கப்பட்டது.)
திருப்பூரிலிருந்து இயங்கிவருகின்ற வீரராசேந்திரன் வரலாற்று ஆய்வுமையத்தினர்   சென்ற ஆண்டே இக்கோயில் கல்வெட்டினைக் கண்டறிந்து, கல்வெட்டின் முதன்மைச் செய்திகளை நாளிதழில் வெளியிட்டுள்ளனர். கல்வெட்டை அவர்கள் பார்த்தபோது சுண்ணம் பூசப்பட்டிருந்ததால் சுண்ணத்தைச் சுரண்டியெடுத்துக் காவி வண்ணத்தை அதன் மீது பூசி, கல்வெட்டினைப் படிக்கும் நிலைக்குக் கொணர்ந்தனர். எனவேதான் இப்போது கல்வெட்டினை எளிதாகப் படிக்க இயன்றது. கல்வெட்டைக்கண்டறிந்து செய்தி வெளியிட்ட முதல் கட்டக் கண்டுபிடிப்பு அவர்களைச் சார்ந்ததே. இங்கே பகிர்ந்து கொள்வது அக்கல்வெட்டின் செய்தியை உள்ளடக்கிய ஒரு கட்டுரை ஆக்கமே ஆகும். 

செல்வசென்ராயப்பெருமாள் கோயில்

      சின்ன நெகமத்தில் இருக்கும் இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், கருடகம்பம் என்றழைக்கப்படும் விளக்குத்தூண் ஆகிய அமைப்புடன் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தின் தெற்குச் சுவரின் இடப்பக்கமாக அதன் கீழ்ப்பகுதியில் பதின்மூன்று வரிகளைக்கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கோயில் சுவர் முழுதும் வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்டிருப்பினும், கல்வெட்டு அமைந்திருக்கும் பகுதி மட்டும் சுண்ணாம்புப் பூச்சு இல்லாமல் செங்காவி வண்ணம் பூசப்பட்டிருப்பதால் எழுத்துகள் தெளிவாகப் புலப்படும் நிலையில் இருந்தது.











கல்வெட்டு தெரிவிக்கும் செய்திகள்

1         கல்வெட்டின் காலம்
கல்வெட்டு “ஸ்ரீ றாம செயம் எனத்தொடங்குகிறது. அதனை அடுத்து கலியுக சகாப்தம் 4941-ஆம் ஆண்டும், சாலிவாகன சகாப்தம் 1762-ஆம் ஆண்டும், தமிழ் ஆண்டுகளில் ஒன்றான சார்வரி ஆண்டின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளைக்கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி. 1840 என்று உறுதியாகின்றது. கல்வெட்டில் ஆவணி மாதம் குறிக்கப்பட்டுள்ளதால், 1840-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

                          கல்வெட்டு

                     கல்வெட்டு-மூன்று பகுதிகளாக




2         நெகமம் பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
கல்வெட்டில் நெகமம் ஊரானது நிகமம் என்று குறிக்கப்பெறுகிறது. நிகமம் என்பது வணிக நகரைக் குறிக்கும் பெயராகும். எனவே, பழங்காலத்தில் நெகமம்  ஒரு வணிக நகரமாக இருந்தது என்று அறிகிறோம். அதோடுமட்டுமல்லாமல், நெகமம் நாயக்கர் காலத்திலிருந்த ஒரு பாளையம் என்றும் அறிகிறோம். நிகமம் பாளையக்கார்ரின் பெயர் கொண்டம நாயக்கர் என்றும், அவர் பாலமவார் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.




3         முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர்
மேற்படி பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மகன் பெயர் சுப்பராய தேவய நாயக்கர் என்றும் அவருடைய மகனின் பெயர், அதாவது கொண்டம நாயக்கரின் பேரன் பெயர் முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர் என்பதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இந்த முத்துவல்லக்கொண்டம் நாயக்கரின் மாமனார் பெயர் ஆவலச்சோத்தய நாயக்கர் என்றும், இவர் ஆவலப்பம்பட்டியின் அதிகாரர்  (தலைவர்) என்றும், அவரது குலம் சேனை சல்லிவார் குலம் என்றும் கல்வெட்டு கூறுகிறது.




4         வெள்ளையம்மாள்-கோயில் திருப்பணி
ஆவலச்சோத்தய நாயக்கரின் மகளான வெள்ளையம்மாள் என்பவரை மேற்படி முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர் மணந்ததாகவும், இந்த வெள்ளையம்மாள் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோவிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. கருவறை (கல்வெட்டில் கெற்பகிரி என்பது பெயர்), அர்த்தமண்டபம் (கல்வெட்டில் அஷ்த்தகிரி என்பது பெயர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானத்திலிருந்து கல் கட்டுமானமாக வெள்ளையம்மாள் கட்டுவித்துள்ளார். மகாமண்டபம், திருமதிள் (மதில் சுவர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானமாகக் கட்டியுள்ளார். இவை தவிர கல்லாலான கருடகம்பம், தீர்த்தக்கிணறு, துளசி மண்டபம், மடப்பள்ளி ஆகியனவும் வெள்ளையம்மாளால் கட்டுவிக்கப்பட்டன என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆக கோவில் முழுமையும் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளார்.




5         பாளையக்காரர், வெள்ளையம்மாள் ஆகியோரின் சிற்பங்கள்
கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நால்வரின் உருவங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். முன்மண்டபம் நான்கு கல் தூண்களைக்கொண்டுள்ளது. அவற்றில் மூன்று தூண்களில், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும்

1.       பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
2  அவரது பேரன் முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர்
3 முத்துவல்லக்கொண்டம நாயக்கரின் மனைவியான வெள்ளையம்மாள்

ஆகியோரின் கற்சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. சிற்பங்களின் மேற்பகுதியில் அவரவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல கோயில்களில் மண்டபத்தூண்களிலோ, விளக்குத்தூண்களிலோ அவற்றைக் செய்வித்த ஆண் மற்றும் அவர் மனைவி ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பெயர் பொறித்துள்லதைப் பெரும்பாலும் அரிதாகவே காண இயலும். இங்கே, பெயர் பொறித்த உருவங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக உள்ள தூணில் முத்தம்மாள் என்பவருடைய சிற்பம் உள்ளது. இவர் பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மனைவி என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இரு தூண்களில் இரு ஆண்களின் சிற்பங்களூம், அவர்களுக்கு நேர் எதிரே இரு பெண்களின் சிற்பங்களும் காணப்படுவதால் இதை யூகிக்கலாம்.



6         கோயிலின் பழமை
திருப்பணி செய்யப்பட்ட காலம் கி.பி. 1840 என்பதால், கோயில் அதற்கு முன்பே செங்கல் கட்டுமானத்தோடு இருந்திருக்கும் என்பது கண்கூடு. எனவே, ஏறத்தாழ கோயில் 200 ஆண்டுகள் பழமையானது என அறிகிறோம். கோயில், போயர் குலத்தவரின் குலக்கோயில் என்பதைத் தற்போதுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
7 சில செய்திகள்
·         கி..பி. 1798-1805 காலகட்டத்தில், பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிட்டனர். இறுதியாக, ஆங்கிலேயர் பாளையக்காரரை ஒழித்தனர். எதிர்ப்புக்காட்டாத எஞ்சிய பாளையக்காரர்களுக்கு ஜமீந்தார் பதவியை ஆங்கிலேயர் அளித்து ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இணைத்துக்கொண்டனர். வரி வசூல் உரிமையை மட்டும் அவர்களுக்கு அளித்து, படை வைத்திருக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டனர்.
·         இவ்வாறு, ஜமீந்தார் பதவி நிலவியிருந்த ஆங்கிலேயர் காலத்திலும், தங்களின் பாளையக்காரர் பெயர் மரபை மறவாது காட்டும் எண்ணம் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோயிலின் கல்வெட்டில் வெளிப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
·         கல்வெட்டின் காலம் கி.பி. 1840. இந்த ஆண்டு கி.பி. 1840-ஆம் ஆண்டை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த ஆண்டில்தான் ஆங்கிலேய ஆட்சியர் பிளாக் பர்ன்”  (Black Burn)  மதுரைக்கோட்டையை அழித்து நகரை விரிவாக்கம் செய்தார்.
·         சின்ன நெகமம் கல்வெட்டில், காலக்கணிப்புக்குத் தேவையான பல குறிப்புகள் உள்ளன. கலி ஆண்டு(4941), சக ஆண்டு(1762), தமிழ் வியாழ வட்ட ஆண்டு(சார்வரி), ஆவணி மாதம் முதல் தேதி என்னும் குறிப்புகளுடன் பஞ்சாங்க்க் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:

திதி -  சப்தமி (கல்வெட்டில் - சத்தமி )
நட்சத்திரம் – அனுஷம் (கல்வெட்டில் – அனுசம்)
             (கல்வெட்டில் – நச்சேத்திரம்)
யோகம் – வைதிருதி (கல்வெட்டில் – வைதிரிதி)
கரணம் – வணசை (கல்வெட்டில் – வணிசவா)
          (கல்வெட்டில் – கறணம்)
ஓரை – குரு (கல்வெட்டில் – வியாளன்)
        (கல்வெட்டில் – ஓறை)
முக்குண வேளை – சாத்வீகம் (கல்வெட்டில் – சாற்றுமீக)
இலக்கினம் – கன்னி (கல்வெட்டில் – கன்னிகா)
·         கல்வெட்டில் காணப்படும் சில சொற்கள்
கெற்பகிரி – கர்ப்ப கிருஹம் என்பதன் திரிபு
அஷ்த்தகிரி – அர்த்தமண்டபத்தைக் குறிப்பது.
சுதிறி – சகோதரி என்பதன் திரிபு.
பெண்சாதி – மனைவியைக் குறிப்பது.
சீறணம் -  அழிவு, சிதைவு
சீறண உத்தாற(ம்) -  அழிவுபட்டதைப் புதுப்பித்தல் (திருப்பணி).
(ஜீர்ணோத்தாரணம் என்று தற்போது குறிப்பிடுகின்றனர்).

·         கல்வெட்டில் காணப்படும் பிழைச் சொற்கள்
றாம – ராம
கிளமை – கிழமை
கறணம் – கரணம்
பாழையகாரர் - பாளையக்காரர்
சுப்பறாய – சுப்பராய
னாயக்கறவறுடைய – நாயக்கரவருடைய
மாமனாறாகிய – மாமனாராகிய
அதிகாரறாகிய – அதிகாரராகிய
றாயமானிய – ராயமானிய
துழசி – துளசி
றாம செயம் -  ராம செயம்


 குறிப்பு : விளக்குத்தூணுக்கருகில், நடுகல் சிற்பத்தை ஒத்த ஒரு சிற்பம் காணப்படுகிறது.
                     கோயிலுக்குப்பணி செய்த வேறு கொடையாளர் (கணவன்-மனைவியர்) ஆக 
                      இருக்கக்கூடும்.

                                                                             நடுகல் சிற்பம்





து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக