மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 15 அக்டோபர், 2015



சேவூரில் நடுகற்கள்

         அவிநாசி வட்டத்தில் உள்ள ஊர் சேவூர் .பண்டைய கொங்கு நாட்டில் இவ்வூர்கள் வடபரிசாரநாடு என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தன. இப்பகுதி வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களையும் தொல்லியல் தடயங்களையும் கொண்டதாகும். அண்மையில், கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், அவிநாசி வரலாற்று ஆர்வலர் ஜயசங்கர் ஆகியோர் சேவூர்ப்பகுதியில் கல்வெட்டு ஆய்வுக்காகச் சென்றிருந்தபோது, சேவூரில் புதிய காவல் நிலையம் கட்டப்படுகின்ற வளாகத்தில் புடைப்புச் சிற்பங்களோடு கூடிய ஒரு பெரிய கல்லைக்காண நேர்ந்தது. ஆய்வு செய்ததில், இக்கல், தொல்லியல் சின்னங்களில் ஒன்றான நடுக்ல் வகையைச் சேர்ந்தது எனத்தெரிந்தது. கட்டுமானப்பொருள்களுக்கிடையில் மண்படிந்த நிலையில் தரையில் கிடந்த இந்நடுகல் கழுவித் தூய்மைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

         நடுகற்கள் என்பவை சண்டையில் இறந்துபட்ட வீரர்களுக்கு நினைவுச்சின்னமாக எழுப்பப்படும் கற்களாகும். சண்டை, போருடன் தொடர்புகொண்டதாகவோ அல்லது, கால் நடைகளைக் கவரும்/மீட்கும் பூசல் தொடர்பாகவோ அல்லது கால்நடைகளைக் காக்கும் காவல் பணியின்போது கால்நடைகளைக் கொல்லவரும் புலியுடன் நிகழும் சண்டையாகவோ அமையும். புலியுடன் சண்டையிடும் வீரனின் சிற்பம் பொறிக்கப்பட்ட நடுகல் புலிகுத்திக்கல் என கொங்குப்பகுதியில் வழங்கப்படுகிறது. மற்றவை வீரக்கல் (Hero Stone)  எனப்படும். வீரக்கற்களில் வீரனின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பகுதியை மட்டும் கொண்ட கற்கள் ஒருவகை. வீரனின் உருவம் மற்றும் அவன் மனைவி போன்றவரின் சிற்பங்கள் அடங்கிய ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்ட கற்கள் இன்னொருவகை. இரண்டாம் வகைக் கற்கள் அடுக்கு நிலை நடுகற்கள் எனப்படும்.  சேவூரில் இருப்பது அடுக்கு நிலை நடுகல் வகையைச் சேர்ந்ததாகும். இது மூன்றடுக்கு நடுகல் ஆகும்.

         இந்த நடுகல் சற்றொப்ப ஐந்து அடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட தடித்த ஒரு பாறைக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. ஐந்தடி உயரத்தில் மூன்றரை அடி உயரத்துக்குச் சிற்பங்கள் செதுக்கப்பட்டும் மீதி ஒன்ர்றரை அடி உயரம் நிலத்தின் கீழ் நட்டு நிறுத்துவதற்கேற்றவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுகல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. காலமாறுதல்களால் ஏற்பட்ட தேய்மானத்தால் புடைப்புருவங்கள் அவற்றின் நுணுக்க வடிவத்தை இழந்து மழுங்கிக் காணப்படுகின்றன. முதல் பிரிவில் வீரன் ஒருவன் நாணேற்றிய வில்லைக் கையில் பிடித்துப்போரிடும் நிலையில் காணப்படுகிறான். வில்லுக்கு மிக அருகில் புடைப்பு மட்டுமே காணப்படுகின்றது. உருவம் முற்றாகச் சிதைந்துள்ளது. எதிரி வீரனுடன் சண்டையிடுவதாகக் கொள்ளலாம்.  வீரனின் இடப்புறத்தலைப்பகுதியில் கொண்டை முடி உள்ளது. இடைப்பகுதியில் ஆடைக்கச்சு உள்ளது. வீரனின் இன்னொருபுறத்தில் அவன் மனைவி என்று கருதும்படியான ஒரு பெண்ணுருவம் காணப்படுகிறது. பெண்ணின் தலையிலும் கொண்டை உள்ளது. ஆனால் கொண்டை தலையின் வலபுறம் உள்ளது. கணுக்கால் வரை ஆடை உள்ளது.

         இரண்டாம் அடுக்கில், நான்கு உருவங்கள் காணப்படுகின்றன. முதல் அடுக்கில் கண்ட ஆணின் கொண்டை மற்றும் பெண்ணின் கொண்டை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இரண்டாம் அடுக்கிலும் தலைக்கொண்டைகள் காணப்படுகின்றன. அத்துடன் ஆடைப்பகுதியின் அடைப்படையிலும் நோக்கும்போது, மூன்று பெண்களும், ஓர் ஆணும் காணப்படுவது தெளிவு.

         மூன்றாம் அடுக்கில், வீரன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற தோற்றம். ஒரு நந்திச்சிற்பமும் காணப்படுகிறது. மேலும் கை கூப்பிய நிலையில் இரு பெண்ணுருவங்கள். அக்டோபர்,2010-ஆம் ஆண்டு தொல்லியல் துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு காலாண்டிதழில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கடம்பூரில் இருக்கும் மூன்றடுக்கு நடுகல் பற்றிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, சேவூரின் மூன்றடுக்கு நடுகல் தெரியப்படுத்தும் கருத்தாவது : வீரன் சண்டையின்போது இறந்து படுகிறான். அவன் மனைவி அவனோடு உடன்கட்டை ஏறுதல் முறையில் உயிர் நீக்கின்றாள். அவளையும் வீரனையும் சுவர்க்கம் என்னும் மேலுலகத்துக்குத் தேவமகளிர் அழைத்துச்செல்கின்றனர். வீரசுவர்க்கம் (சிவலோகம்) சென்ற வீரன் சிவலிங்கத்தை வழிபடுகிறான்.  

         இத்தகைய அடுக்குநிலை  நடுகற்கள் கோவைப்பகுதியில் மிகக் குறைவாகவே கிடைப்பதை நோக்கும்போது இந்த நடுகல் அரியதொன்று எனலாம். பண்டைய வரலாறு மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவற்றை எடுத்துச்சொல்லும் இது போன்ற தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டும். காவல் நிலையத்திலேயே மேடை ஒன்றைக்கட்டி இந்த நடுகல்லை முறையாகப் பதித்து, நடுகல் கூறும் செய்தியை ஒரு அறிவிப்புப் பலகைவழி மக்கள் காணுமாறு செய்தால் இந்தத் தொன்மைச் சின்னம் இன்னும் பலகாலம் அழியாது நிற்கும்.    

         இந்த நடுகல்லின் காலம் கி.பி. 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

சாமிக்கல் என்னும் கை வெட்டுப்பட்டான் கல்

“தினமலர்”  நாளிதழின் திருப்பூர்ப் பகுதிச் செய்தியாளர் மகேஷ் அவர்கள் தாம் பார்த்திருந்த ஒரு நடுகல் சிற்பத்தைப்பற்றித் தந்த தகவலின்படி, சேவூரில் புளியம்பட்டிச் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு அருகில் சாலையோரம் ஒரு நடுகல் சிற்பம் இருந்தது. இது 13.4.2014-இல் வைக்கப்பட்ட நடுகல். கருங்கல்லில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பத்துடன் கூடிய நெடிய பலகைக் கல். சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவற்றின் உருவங்கள் கல்லின் உச்சிப்பகுதியில் செதுக்கப்பட்டு, அதன் கீழ்ப்புறம் இரு பெண்கள் மலர்கொண்டு பூசிக்கும் தோற்றத்தில் ஒரு சிவலிங்கமும் அதன் கீழாக உயர்த்திய நிலையில் ஒரு கையும் செதுக்கப்பட்டிருந்தன. அங்குள்ள மக்களிடம் இந்த நடுகல்லைப்பற்றிக்கேட்டபோது, அவர்கள் சொன்னதாவது:

         இந்த நடுகல்லில் காணப்படுவதுபோலவே அமைந்த பழங்கால நடுகல் சாலையோரம் இருந்தது. சரக்குந்து ஊர்தியொன்றால் அது தாக்குண்டு உடைந்து போனது. உடைந்த துண்டுகளை ஆற்றில் எறிந்துவிட்டனர். பழமையான நடுகல் திப்புசுல்தான் காலத்ததாகும். வீரன் ஒருவன் கை வெட்டுப்பட்ட நிலையில் இறந்துபடுகிறான். அவன் நினைவாக, கையை மட்டும் முன்னிலைப்படுத்தி எழுப்பப்பட்ட நடுகல். பழங்கல்லில் இருந்தவாறே உருவங்களை அமைத்து, தற்போது இக்கல் எழுப்பப்பட்டுள்ளது.  மக்கள் சாமிக்கல் என்று அழைத்து வழிபடுகின்றனர். பழங்கல் பாதுகாக்கப்படவில்லையே என்னும் வருத்தம் தோன்றினாலும் அதன் நினைவைக் காக்கின்ற முயற்சியாகப் புதியதொரு கல்லையாவது பழமையின் கருத்து மறையாமல் இருக்கும் வண்ணம் நாட்டியுள்ளனர் என்பது ஆறுதல் தருகிறது. பழங்கல்லின் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு ஆகும்.














து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.   


2 கருத்துகள்: