மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 9 மே, 2014

அவிநாசி கல்வெட்டறிஞர் முனைவர் மா.கணேசனார்
                                                        து.சுந்தரம்,கோவை.


         



               கடந்த 8.4.2014 செவ்வாய்க்கிழமையன்று தம் 82 -ஆம அகவையில் இயற்கை எய்திய கல்வெட்டறிஞர் முனைவர் திரு. மா.கணேசனார் அவர்கள், தற்போதைய திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் பிறந்து வளர்ந்தவர். (பிறந்த தேதி 14.11.1932). செல்வச்செழிப்பு இல்லாத எளிய குடும்பச் சூழலில் வளர்ந்த அவர், தம் குடும்பம் அமைத்துத் தரமுடிந்த வாய்ப்பினைக்கொண்டு எஸ்.எஸ்.எல்.சி என்னும் பள்ளி இறுதி வகுப்பு மட்டுமே படித்துமுடித்தார். ஆசிரியப்பயிற்சி இல்லாமலே சிறிது காலம் ஆசிரியப்பணி ஆற்றியபின்னர் அப்பணியின்மூலம் சேர்த்த பணத்தைக்கொண்டும், தம் தமையனாரின் உதவிகொண்டும் திருப்பராய்த்துறையில் புலவர் பட்டம் படித்துமுடித்து ஆசிரியர் பணியில் அமர்ந்தார். சேவூர், காரமடை, அவிநாசி ஆகிய ஊர்களில் ஆசிரியப்பணி புரிந்த அவர், தம் நேரிய உழைப்பால் எம்.ஏ., பி.டி. ஆகிய பட்டங்களை முடித்து முனைவர் ஆய்வுப்பட்டத்தையும் பெற்றார். கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.


         முனைவர் பட்ட ஆய்வுக்கு, கல்வெட்டுகளே அடித்தளம் அமைத்துக்கொடுத்தன. கல்வெட்டுகளில் அளவிலா ஆர்வமும் ஆழ்ந்த அறிவும் உடையவர். கொங்கு நாட்டுப் பாடல்பெற்ற தலங்களிலுள்ள கல்வெட்டுகள் ஓர் ஆய்வு என்ற பொருளில் முனைவர் ஆய்வை மேற்கொண்டார். அது பற்றி அவரே கூறுவதைப்பார்க்க:

         “என் ஆய்வுக்காக 1978 முதல் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியை மேற்கொண்டு அவிநாசி, ஆலத்தூர், சேவூர், சூலூர், பெருமாநல்லூர் ஆகிய ஊர்களில் நான் புதிதாகக் கண்டறிந்து பல கல்வெட்டுகளை வெளிப்படுத்தினேன். இப்பணியில் ஒரு தனிமனிதனாக ஈடுபட்டுக் கல்வெட்டுகளை வெளிப்படுத்தியதைக் கண்டு நடுவணரசின் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பேரறிஞர் திருவாளர் கே.ஜி.கிருஷ்ணன் அவர்கள் என்னைப் பெரிதும் பாராட்டி ஊக்குவித்தார். முனைவர் இரா.சந்திரசேகரன், நண்பர் முனைவர் அர.பூங்குன்றன் ஆகியோருடைய ஊக்குவிப்பும் நெறிப்படுத்தலுமே கொங்கு நாட்டில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளைப் படியெடுக்க என்னை எழுச்சியுறவைத்தன. 

         கோவை மாவட்டத்தின் தொல்லியல் துறைப் பொறுப்பாளராக திரு. பூங்குன்றன் பணியாற்றியபோது அவருடைய நட்பினைப்பெற்ற கணேசனார் அவருடன் சேர்ந்து கோவை மாவட்டக் கோயில்களின் கல்வெட்டுகளைப் படித்து ஆய்வு செய்திருக்கிறார். பின்னர், கோவை மாவட்டக் கல்வெட்டுகளைத் தொகுத்து “கொங்கு நாட்டுக்கல்வெட்டுகள் கோயம்புத்தூர் மாவட்டம் என்னும் நூலாகப் பதிப்பித்துள்ளார். கோவை மாவட்டத்திலுள்ள நாற்பத்தொரு ஊர்களில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்க அவர் கொடுத்த உழைப்பு எத்துணை! நூலின் நுழைமுகத்தில் பாரதியார் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவர் முனைவர் இரா.சந்திரசேகரன் அவர்கள் கூற்று கணேசனாரின் உழைப்பையும், கல்வெட்டுத்துறைக்கு அவரின் பங்களிப்பையும் மெய்ப்பிக்கும். இரா.சந்திரசேகரன் அவர்களின் வரிகளை இங்கே தந்துள்ளேன்.

         ..... ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் படிக்கப்படாமலும் படியெடுக்கப்படாமலும் இருக்கின்றன. தத்தம் முயற்சியில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் அவற்றைத் தேடித்திரட்டி வருகிறார்கள். அத்தகைய ஆய்வாளர்களுள் முனைவர் மா. கணேசன் தலைசிறந்தவர். ...............         கல்வெட்டுகளைத் தேடவும், படியெடுக்கவும் அவர் அலைந்த அலைச்சல்... அவர் மேற்கொண்ட சிரமங்கள்..... மிகமிக அதிகம்.
ஆனால் புதியனவற்றைக் கண்டவுடனே எல்லாத் துன்பங்களும்   அழிந்து போய் மீண்டும் புத்துணர்ச்சி.... தன் வாழ்நாளையே கல்வெட்டுகளுக்காக அர்ப்பணித்தவராக இயங்கிக்கொண்டிருக்கிறார் இன்னும்... இன்னும். ஓய்வே இல்லாமல். கொங்குநாட்டு வரலாற்றின் நடமாடும் ஆவணமாக இயங்கிக்கொண்டிருக்கும் அவிநாசி முனைவர் மா. கணேசன் ....

                   பேரூர்  தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் ந.இரா. சென்னியப்பனார் அவர்கள் நூலின் அணிந்துரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

         நண்பர் மா.கணேசன் அவர்கள் தற்காலத்தில் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளை வெளிக்கொண்டு வரப் பெருமுயற்சி செய்துள்ளார்.  நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை அரிதின் முயன்று படித்தறிந்து படியெடுத்துள்ளார். எங்கேனும் கல்வெட்டுள்ளதென்று கேள்விப்பட்டால் செலவையும், காலத்தையும், உணவையும் பொருட்படுத்தாது பெரிதும் முயன்று படித்து வெளிக்கொணர்ந்துள்ளார். (முனைவர் பட்டத்துக்கான) ஆய்வு மேற்கொண்டபோது தாமாகவே முயன்று நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை வெளிக்கொணர்ந்தார். அந்தணர்,கம்மாளர்,இடையர்,தேவரடியார் முதலியோர் பெற்ற உரிமைகள் பற்றிய கல்வெட்டுகள் இவருடைய மிகச்சிறந்த கண்டுபிடிப்பாகும். திருமுருகன்பூண்டியில் திருவாதிரைத்திருவிழாவை ஒட்டி நடைபெறும் பாவைவிழாவின்போது ஆலாலசுந்தரநங்கை, சவுண்டைய நங்கை,திருவுண்ணாழி நங்கை ஆகியோர் கருவறை வரை சென்ற கல்வெட்டுச்செய்தி இவரால் வெளிக்கொணரப்பட்டது. இச்செயலுக்காகச் சைவ உலகமும் தமிழ் உலகமும் நன்றிக்கடப்பாடு உடையதாக இருக்கவேண்டும்.

        
         புதுதில்லி இலக்கிய வரலாற்று ஆய்வுப்பெருமன்றத்தின் துணையுடன் 1992 முதல் 1995 முடிய பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிலவுடைமையும் வேளாண்மை வளர்ச்சியும் என்ற தலைப்பில் மிகச்சிறந்த ஆய்வை நிறைவு செய்து தந்துள்ளார். நீர்ப்பாசன முறை, வாய்க்கால் அமைக்கும் முறை,அந்நிலத்துக்கு  வரிவிலக்குக் கொடுத்தமுறை முதலிய செய்திகளை மிகச்சீரிய முறையில் இதுவரை வரலாற்றறிஞர் யாரும் விளக்காத முறையில் வெளிக்கொணர்ந்துள்ளார். சர்க்கார் பெரியபாளையம் கொங்கில் குறும்பில் குரக்குத்தளியாய் (தேவாரம்) எனப்புகழப்படும் கோவிலில் காணப்பெறும் வணிகம் பற்றிய மிகப்பெரிய கல்வெட்டை வெளிக்கொணர்ந்துள்ளார். ... பல்கலைக்கழகங்களும், கல்வி நிலையங்களும், ஆராய்ச்சிக்கழகங்களும் செய்யவேண்டிய பெரும்பணியைத் தனிப்பட்ட ஒருவர் செய்திருப்பது எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத அருஞ்செயலாகும்.  

         தமிழகத் தொல்லியல் கழகத்தைச்சேர்ந்த கல்வெட்டறிஞர் முனைவர் சு.இராசகோபால் அவர்கள் கூறுவதை இங்கே தருகிறேன்.

         ஆவணக்கூட்டங்கள், கோடைகாலக் கல்வெட்டுப் பயிற்சி, தொல்லியல் தொழில் நுட்பப்பணியாளர் கழக நிகழ்வு முதலிய விழாக்களின் மூலம் அவரை நன்கு அறிவேன். ஒருமுறை, பயிற்சியாளர்க்கு அவி நாசிக்கோயிலை விளக்கிய பாங்கும், சீனக்குடை தொடர்பான கல்வெட்டை அறிமுகப்படுத்திய முகமலர்ச்சியும் இன்றும் நினைவில் உள்ளன. சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டில் கேரள வணிகர்களின் கையொப்பங்கள் வட்டெழுத்தில் உள்ளமையையும் காட்டி மகிழச் செய்துள்ளார். தமிழகத்தொல்லியல் தொய்வு கண்ட காலத்தில் கொங்குக் கல்வெட்டுகள் தொகுதி வெளியிட்டு இடைவெளி நிரப்பிய தொண்டும் நினைவில் உள்ளது.

         திரு.மா.கணேசனாருடன் எனக்கு ஏற்பட்ட பழக்கம் தொடர்பான  நிகழ்வுணர்வு (அனுபவம்) பற்றிச் சிறிது இங்கே கூற விழைகிறேன்.   அவர் பிறந்து வளர்ந்த ஊரான அதே அவிநாசியில் நானும் பிறந்து வளர்ந்தாலும் அவரை நேரில் கண்டு பழகும் வாய்ப்பு 2008-ஆம் ஆண்டுதான் கிடைத்தது. என்னைவிடப் பதினான்கு ஆண்டுகள் அகவையில் மூத்தவர். அவிநாசியில் என் பள்ளிப்பருவத்தின்போது, அவர் வேறு ஏதோவொரு ஊரில் ஆசிரியர். பார்க்கும் வாய்ப்பில்லை. ஆனால், என் தம்பி அவரிடம் படித்திருக்கிறான். என் குடும்பத்தாரை அவர் குடும்பத்தினர் நன்கறிவர். 1970-ஆம் ஆண்டு நான் கல்லூரிப்படிப்பு முடித்து பணி நிமித்தம் ஊரைவிட்டுச் சென்றவன், பணிக்காலத்தை முடித்து 2006-ஆம் ஆண்டில் கோவையில் நிலைகொண்டுவிட்டேன். 2008-ஆம் ஆண்டில், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தொல்லியல் பகுதி நேரப் பட்டயப்படிப்பு மாணவனாகச் சேவூர் சுந்தரபாண்டிய விண்ணகரம் என்றழைக்கப்பெற்ற வைணவத்திருக்கோவிலின் கல்வெட்டுகளைக் காணச்சென்றபோது கணேசனார் கல்வெட்டுகளைப் படித்துக் காண்பித்து விளக்கம் தந்த அந்நிகழ்வை மறக்கவியலாது. அதற்குப்பின் கல்வெட்டுகள் தொடர்பாக நிறையத் தெரிந்துகொண்டது அவரிடம்தான். கல்வெட்டுகளின்பால் எனக்கிருந்த ஆர்வத்தையும், ஈடுபாட்டையும், வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்துகளையும் என்னால் ஓரளவு படிக்க இயன்றதையும் பார்த்து, “நீங்கள் தொல்லியல் துறையிலேயே பணியாற்றியிருப்பின் இந்நேரம் வல்லுநராக வளர்ந்திருப்பீர்கள்”  என அவர் பாராட்டியது கல்வெட்டு ஆய்வில் நன்கு செயலாற்ற அவர் கூற்றிலேயே சொல்லவெண்டுமானால் என்னை எழுச்சியுற வைத்தது.

         கணேசனார் முன்பு எப்போதோ ஒரு கன்னடக்கல்வெட்டைக் கண்டறிந்து வைத்திருந்தார். அதைப் படித்து அதன் செய்தியை வெளிக்கொணர இயலாமல் போனது பற்றி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தபோது குறிப்பிட்டார். அக்கல்வெட்டு அவினாசி அன்னூர் சாலையில் கருவலூர் அருகே நரியம்பள்ளி என்னும் சிற்றூரில் சாலையோரத்திலேயே அமைந்துள்ள கோபாலசாமி கோவிலின் முன்புறத்தில் ஒரு பலகைக் கல்லில் எழுதப்பட்டிருந்தது. நெடுநாள் படிக்கப்படாமல் இருந்த அக்கல்வெட்டு படிக்கப்பட்டு அதன் செய்தி வெளிப்படுவதற்குக் காலம் இப்போதுதான் கனியவேண்டும் என்பது இறை எண்ணமோ என்னுமாறு, நானும் அவரும் இணைந்த வேளை அமைந்தது. எனக்கு, கன்னட மொழியைப் படிக்கவும் படித்துப்பொருள் கொள்ளவும் இயலும் என்று நான் கூறியவுடன் அவர் மகிழ்ந்தார். பின்னர் இருமுறை நாங்கள் அக்கோவிலுக்குச் சென்று ( ஒரு ஒளிப்படக்காரரையும் உடன் அழைத்துச் சென்றோம் ) செங்கல் பொடி கொண்டும், சுண்ணப்பொடி கொண்டும் பூசி ஒருவாறு படிக்கும் நிலையில் ஒளிப்படம் எடுத்துப் படித்துப்பார்த்து செய்தியறிந்து ஜூன் 21, 2010 தேதியிட்ட தினமலர் நாளிதழில் வெளியிட்டோம். கி.பி. 1760-61 ஆம் ஆண்டில் மைசூர் அரசின் கோயமுத்தூர் மண்டல அதிகாரியாக ஆட்சி செய்த மாதையன் காலத்தில் இக்கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சத்தியமங்கலத்துக்கு வடக்கே தெற்கணாம்பியில் எழுந்தருளியுள்ள கோபாலசாமி விண்ணகர ஆழ்வார்க்கு நித்திய வழிபாடுகளுக்கும், நந்தா விளக்கு எரிப்பதற்கும் படித்தரமாக, அவிநாசி தாலூகா கஞ்சப்பள்ளியை அடுத்துள்ள அய்யம்பாளையத்தில் சில நிலங்களையும் வரிகளையும் ஸ்ரீரங்கப்பட்டணம் கோவிந்தையன் என்பவர் தானமாக வழங்கியுள்ளார் என்னும் செய்தி இருந்தது. இதில் சிறப்பு என்னவெனில், “சங்கரையன் மகன் மாதையன்”  என்னும் தொடர் கல்வெட்டில் இருந்ததுதான். வேறெந்தக் கல்வெட்டிலும் மாதையனின் தந்தை பெயர் கிடைத்திராத நிலையில் இக்கல்வெட்டில் மாதையனின் தந்தை பெயர் குறிப்பிடப்பெற்றிருந்தது கண்டு கணேசனாருக்குப் பெருமகிழ்வு ஏற்பட்டது. இதுவரை கிடைக்கப்பெறாத ஒரு வரலாற்றுக் குறிப்பு கிடைத்தது சிறப்பான கண்டுபிடிப்பாக அமைந்தது.

         அவர் காட்சிக்கெளியர். விருந்தோம்பும் நற்பண்பினர். அவருடைய இரங்கல் கூட்டத்தில் அன்பர்கள் கூறியவாறு பட்டிமன்றக் கூட்டங்களை நடத்தித் தமிழ்ப்பணி ஆற்றியவர். எடுப்பான குரலும், தெளிவான தடையற்ற மொழிப்பொழிவும் பெற்றவர். திருக்குறள் போலக் குறளான உருவம் பெற்றிருப்பினும், அதே திருக்குறளையொத்த அறிவுச்செறிவு நிரம்பப் பெற்றவர். கல்வெட்டியல் கழகம் நடத்திய ஆவணம்”  விழாவுக்குக் கடைசியாக (ஆண்டு 2012) காரைக்குடிக்கு வந்திருந்தார். அவரோடு ஒன்றாக விழாவில் கலந்துகொண்டு மகிழ்வுற்றது மறக்கவியலாது. விழா மண்டபத்திலும், வள்ளல் அழகப்பச்செட்டியாரின் மாளிகையிலும் அவரோடு சேர்ந்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டேன். அவர் கலையையும், கலைஞரையும் சுவைத்து மகிழும் உள்ளத்தினர் என்பதை அவ்விழாவின்போது உணர்ந்தேன். விழாவில் கலந்துகொண்ட சின்னத்திரைக் கலைஞரான இளைஞர் சக்தி சரவணனுடன் கணேசனாரும் அவர் நண்பரான பழனியப்பனும் நானும் ஒன்றாக நின்று ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்ததையும் மறக்கவியலாது. ஒளிப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டதே அவர்தான்.   

         முடிவாக, கோவை மாவட்டக் கல்வெட்டுகள் எல்லாம் அவர் பெயரைச் சொல்லாமல் சொல்லும். அவரை நினைத்தே என் கல்வெட்டு ஆராய்ச்சிப்ப்பணி தொடரும் எனக்கூறி இக்கட்டுரையை  நிறைவு செய்கிறேன்.











து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.


        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக