மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 11 மே, 2014

அலங்கியம் பிள்ளையார் கோயில் கல்வெட்டு1


அலங்கியம் பிள்ளையார் கோயில் கல்வெட்டு2

அலங்கியம் பிள்ளையார் கோயில் கல்வெட்டு3

அலங்கியம் பிள்ளையார் கோயில் கல்வெட்டு4

அலங்கியம் பிள்ளையார் கோயில் கல்வெட்டு5

அலங்கியம் பிள்ளையார் கோவில் கல்வெட்டு
                                                        து.சுந்தரம், கோவை


         அண்மையில், விழுப்புரம் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சி. வீரராகவன், கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து. சுந்தரம் ஆகியோர் தாராபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, அலங்கியம் ஊரில் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி அருகே இருந்த பிள்ளையார் கோவிலின் அடித்தளத்தில் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். பிள்ளையார் கோவில் பழமையான கோவிலாகவே காட்சியளித்தது. கோவிலுக்கருகிலேயே, கோவில் பொறுப்பாளரான ஓமியோபதி மருத்துவர் சோமசுந்தரம் என்பவர் இருந்தார். அவர், வேறொரு ஊரிலிருந்து இவ்வூருக்கு வந்தபோது, பிள்ளையார் கோவில் பராமரிப்பின்றி, செடிகளும்,புதர்களும் மண்டிய நிலையில், வழிபாடு அற்றுச் சற்றே பாழடைந்த சூழ்நிலையில் இருந்ததாகவும், அவர், தம் சொந்தச்செலவில் கோவிலின் அகப்புறப்பகுதிகளைச் செப்பனிட்டுத் திருப்பணியாகக் கருவறை விமானம், முன்மண்டபம் ஆகியவற்றை அமைத்து, ஐயப்பன் மற்றும் முருகன் ஆகிய இறைவர் திருமேனிகளை எழுந்தருளுவித்து, வழிபாடுகள் நடக்க ஏற்பாடுகளைச் செய்ததாகத் தெரிவித்தார். கோவிலின் அடித்தளம் முழுதும் பல வருடங்களாக மஞ்சள் நிறச்சுண்ணாம்பு பூசப்பெற்றதால்,  எழுத்துகள் மறைந்து காணப்பட்டன.

         முதல் கட்ட ஆய்வாக, கோவிலின் வடக்குப்பகுதியில் சில கல்வெட்டுகளை, அவற்றின் மீதிருந்த சுண்ணாம்புப்பற்றினைச் சுரண்டியெடுத்துத் தூய்மைப்படுத்திக் கல்வெட்டுகளின் வரிகளைப்படித்து ஆய்வு செய்தனர். முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்த சில செய்திகள் இங்கே தரப்பட்டுள்ளன.

         கல்வெட்டொன்றில், கொங்கு நாட்டை ஆண்ட கொங்குச்சோழன் வீரராசேந்திரன் பெயரும், அவனுடைய ஆட்சியாண்டு இருபத்தேழு என்பதும் குறிக்கப்பெறுவதால், கல்வெட்டு அவனுடைய இருபத்தேழாவது ஆட்சியாண்டான கி.பி. 1234-ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பது பெறப்படுகிறது. (வீரரசேந்திரனின் ஆட்சிக்காலம் கி.பி. 1207 முதல் கி.பி. 1256 வரை ஆகும்) எனவே, கோவில் 750 ஆண்டுகள் பழமை உடையது எனக்கருதலாம். அலங்கியம் ஊர், பொங்கலூர்க்கால் நாட்டைச்சேர்ந்ததாக இருந்தது. பழங்கொங்கு நாட்டில், வடபரிசார நாடு, பூந்துறை நாடு, தென்கரை நாடு, பொங்கலூர்க்கா நாடு, கரைவழி நாடு என நாட்டுப்பிரிவுகள் இருபத்துநான்கு இருந்தன. அலங்கியம் ஊர், பொங்கலூர்க்கா(ல்) நாட்டுப்பிரிவைச்சேர்ந்ததாக இருந்தது. இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ள கீரனூரும் பொங்கலூர்க்கா நாட்டில் அமைந்திருந்தது என்பதை அந்தக்கோவிலின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
         இந்தக்கோவிலுக்கு, அரசு உயர்பதவி ஒன்றை வகித்திருந்த விக்கிரம சோழ விருதராயன் என்பான் நிலம் கொடையாகக் கொடுத்திருந்தான் என்பதைக் கல்வெட்டிலிருந்து அறிகிறோம். இந்த நிலத்துக்கு எல்லைகள் கூறப்பட்டுள்ளன. எல்லைகளைக் குறிப்பிடும்போது கனகராயன் செய் மற்றும் பிடாகை ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன. செய் என்பது ஒரு குறிப்பிட்ட பரப்புள்ள வயலைக்குறிக்கும். பிடாகை என்பது ஊர்ப்பகுதியிலேயே அமைந்த உட்கிடை கிராமத்தைக்குறிக்கும். நிலத்தின் விளைச்சலிலிருந்து கிடைக்கும் வருவாய்(நெல்) கோவிலின் வழிபாடு, மற்றும் அமுதுபடி (நைவேத்தியம்) ஆகியவற்றுக்காகச் செலவிடப்பட்டது. நிலம் சார்பாக அரசுக்குக் கட்டவேண்டிய வரியான இறை மற்றும் புரவு எனப்படும் நிலவரி  ஆகியனவற்றிலிருந்து கொடை நிலத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.  மேலும், வெட்டி, முட்டாவாள் ஆகிய உழைப்பைத் தருவதினின்றும் விலக்கு தரப்பட்டது. வெட்டி, முட்டாவாள் என்பவை அக்காலத்துச் சமுதாயக்கடமையை உணர்த்துபவை ஆகும். நில உடமையாளர்கள், தாங்கள் அரசுக்குச் செலுத்தவேண்டிய நிலவரி தவிர, சமுதாயத்துக்காக அரசு உடல் உழைப்பைக்கோரும்போது கட்டாய உழைப்பைக் கொடுக்கக்கடமைப்பட்டவர்கள் ஆவர். ஏரி குளங்களைத் தூர் எடுக்கும் பணி, வாய்க்கால் வெட்டும் பணி போன்றவற்றுக்கு ஆள் தருவது கட்டாய உழைப்பாகும். மற்றொரு கல்வெட்டின்படி, கொடை நிலத்தின் வருமானம் கோவிலின் அமுதுபடிக்காக அல்லது அடியார்க்கு உணவு அளிப்பதற்கு வேண்டிய காய்கறிகளுக்காகச் செலவிடப்பட்டது. காய்கறிகளைக் கல்வெட்டு விஞ்சனம் எனக்குறிப்பிடுகிறது. மற்றுமொரு கல்வெட்டு வரியானது, இரு தூணிப்பதக்கு நெல் கோவிலுக்கு அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. தூணி, பதக்கு என்பவை அக்காலத்தில் வழக்கில் இருந்த முகத்தல் அளவையைக் குறிப்பன. ஒரு பதக்கு என்பது தற்போதைய பதினாறு படி அளவுக்கும், ஒரு தூணி என்பது தற்போதைய முப்பத்திரண்டு படி அளவுக்கும் இணையானது. இன்னொரு கல்வெட்டில் பசானம் என்னும் சொல் காணப்படுகிறது. பசானம், சித்திரை மாத அறுவடைக்காலத்தைக் குறிக்கும்.  இவ்வாறு, இந்தக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள், 750 ஆண்டுகளுக்கு முன் இருந்த சமுதாயச் சூழ்நிலை, கோவில் கொடை, நீர்ப்பாசன மேலாண்மை ஆகிய பல்வேறு செய்திகளை அறியச்செய்கின்றன.

         மீதமுள்ள கல்வெட்டுப்பகுதிகளையும் ஆய்வுக்குட்படுத்தும்போது, மேலும் பல அரிய செய்திகள் தெரியவரும்.

து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.



1 கருத்து:

  1. மிக்க நன்றி ஐயா.

    அந்த கோவிலிலிருந்து ஒரு நூறு நூற்றம்பைது அடிகளுக்குள் தான் எனது தாத்தாவின் வீடு இருந்தது. volley ball கிரவுன்ட் அருகே. சமிபமாக தான் விற்றோம். அந்த ஆயுர்வேத மருத்துவரை கூட தெரியும்.

    2000 - 2003 வரை அங்கு தான் இருந்தேன். அந்த கோவிலின் வழியாக எத்தனை முறை நடந்திருப்பேன். அப்போதெல்லாம் இவ்வளவு மகத்தான வரலாறு கொண்டது அந்த கோவில் என்று தெரியாது. இப்போது படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது.

    நல்ல பணியில் ஈடுப்பட்டிருக்கிறீர்கள். இன்னும் எத்தனை ஊரில் வரலாறு அறியப்படாமல் எவ்வளவு கோவில் இருக்கிறதோ? இதையெல்லாம் வெளி கொண்டுவரும் உங்கள் முயற்சிகளும் வரலாற்றில் இருந்து மறையாது. மீண்டும் நன்றி. உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு