மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 5 மே, 2020


ஒரு சேதுபதி மன்னரின் செப்பேடு

முன்னுரை

திருவாங்கூர் தொல்லியல் வரிசைத் தொகுதி நூல்களில் ஒன்றான தொகுதி ஐந்தில் (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES, Vol-V) , இராமநாதபுரம் சேதுபதி அரசர்களில் ஒருவரான முத்து ராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் செப்பேட்டை விரிவாக ஆய்ந்து எழுதியிருக்கிறார் நூலின் பதிப்பாசிரியர் A.S. இராமநாத அய்யர் அவர்கள். அவருடைய ஆய்வுக்கட்டுரை (ஆங்கிலத்தில் அமைந்தது)  வாயிலாக 18-ஆம் நூற்றாண்டின் பின் பாதியின் வரலாற்றுச் செய்திகளையும், செப்பேட்டு ஆவணங்களின் அமைப்பு, மொழி போன்ற பல்வேறு செய்திகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.  அது பற்றிய ஒரு பகிர்வே இப்பதிவு.

சேதுபதிகள்

’சேதுபதி செப்பேடுகள்’ என்னும் தம் நூலில் புலவர் செ. இராசு (முன்னாள் தலைவர், கல்வெட்டியல் துறை, தஞ்சைப்பல்கலை) அவர்கள் சேதுபதிகள் யார் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். சேதுபதிகள் மறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். மறவர்கள் தமிழ்நாட்டின் தொன்மைச் சிறப்பு வாய்ந்த குடிகள். மறவர் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் உள்ளன. படைத்தலைவராக, பாலை நிலம் வாழ்பவராக, மறக்குடியைச் சேர்ந்தவராக அவர்கள் வருணிக்கப்படுகிறார்கள்.  இன்றைய மறவர் குலத்தின் முன்னோர்களா என்பது ஆய்வுக்குரியது. இரு சாரார்க்கும் தொடர்பு இருக்கக் கூடும்.

மறவர்களில் செம்பிநாட்டு மறவர் ஒரு வகையினர். இராமநாத சேதுபதிகளும், சிவகங்கைச் சீமையை ஆட்சிபுரிந்த மறவர்களும் செம்பிநாட்டு மறவர் குலத்தவரே. செம்பிநாடு கல்வெட்டுகளில், ‘செம்பி நாடு’, ‘கீட்செம்பிநாடு’, ‘வடதலைச் செம்பிநாடு’  எனப்பலவாறு குறிக்கப்பட்டது. சோழரோடு தொடர்புடையவர். சோழரின் இலங்கைப்படையெடுப்பின்போது காவலாய் நின்ற படைத்தலைவர் வழி வந்தவர்கள்.  தொன்மைப் புனைவுகளின்படி, இராமன் கடலில் கட்டுவித்த ‘சேது’ என்னும் அணையையும், பின்னர், இராமன் எழுந்தருளுவித்த ‘இராமலிங்க’த்தையும் காத்த மறவர் தலைவன் வழி வந்தோர் ஆவர். இராமநாதபுரம் வரும்முன் சேதுபதிகளின் முன்னோர் துகவூர்க் கூற்றத்துக் காத்தூரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்ப்பால் விரையாத கண்டனில் இருந்தனர் என்று எல்லாச் செப்பேடுகளும் கூறுகின்றன.

சேதுபதி அரச மரபு கி.பி. 1604-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் குறிக்கின்றனர்.  சேதுபதி பரம்பரை 11-12-ஆம் நூற்றாண்டிலேயெ தோற்றம் பெற்றது என்று இராமநாதபுரம் அரசு இதழான  ‘கெசட்டியர்’ (GAZETTEER) குறிப்பிடுகிறது. 

முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி

இக்கட்டுரையில் இடம்பெறும் செப்பேட்டு அரசரான முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, கி.பி. 1604-05 –ஆம் ஆண்டு ஆட்சி தொடங்கும் முதலாவது சடைக்கத்தேவர் என்ற உடையான் சேதுபதி முதல் குறிக்கப்பெறும் பதினைந்து அரசர்களில் இறுதி அரசராவார்.  இவரது ஆட்சிக்காலம் 1763-1772, 1782-1795  எனக் குறிக்கப்பட்டுள்ளது. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : ஆட்சிக்காலத்தை இரு கட்டங்களாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இடைப்பட்ட பத்து ஆண்டுக்காலம் என்னவாயிற்று?) இவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர் செல்லத்தேவர் விஜயரகுநாத சேதுபதி. கி.பி. 1860- இல் இறந்தபோது, அவருடைய சகோதரியான முத்து திருவாய் நாச்சியாரின் மகனான முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி (சிறார்ப் பருவத்தினர்)  ஆட்சியில் அமர்த்தப்பட்டார். (செப்பேடு வழங்கப்பட்ட 1769-ஆம் ஆண்டு இவர் பத்து வயதினராகலாம்).  ஆட்சி நிருவாகத்தை இவருடைய தாய் பார்த்துக்கொண்டார். நிருவாக உதவியில் இருந்தவர் தளவாய் தாமோதரன் பிள்ளை.  இவரின் வீரம் குறித்துப் பாட்டு வடிவிலான ”வேள்விக்கோவை" என்னும் நூல் இயற்றப்பட்டுள்ளது.

1910-11 ஆண்டுகளில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பதிவுக்குறிப்புகள் அடங்கிய ‘மெட்ராஸ் கல்வெட்டியல் ஆண்டறிக்கை’யில், முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் கல்வெட்டு ஒன்றில் (ஆண்டு 1771)  இவரது சிறப்புப் பட்டங்களான ‘ தேவை நகராதிபன், இரவிகுல சேகரன், அனும கேதனன், கருட கேதனன் ஆகிய அடைப்பெயர்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இவரது முன்னோர்கள் வைத்துக்கொண்ட பெயர்கள். தொடர்ந்து அழைக்கப்பட்ட பெயர்கள். இவை போன்ற பெருமையும் பீடும் சாற்றுகின்ற அடைமொழிகள் விஜயநகர ஆட்சியாளர்களின் கொடைச் செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்படுபவையே. பிற்கால மெய்க்கீர்த்திகளில் எழுதப்பெறும் புகழ் அடைகள். மேற்படி 1771-ஆம் ஆண்டுக் கல்வெட்டில், அரசரின் பெயர், ”முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி காத்த தேவர்” என்று வருகிறது. இதில் உள்ள ‘காத்த தேவர்’ என்னும் சிறப்பு ஒட்டுக்குச் சரியான சொல்  “கர்த்த தேவர்”  என்பதாக இருக்கக் கூடும். காரணம் வருமாறு:

விஜயநகரப் பேரரசர்க்குக் கீழ், அவர்கள் சார்பாக, அவர்களது ஆளுநர்களாய் (GOVERNORS) தமிழகப்பகுதிகளின் ஆட்சிப்பொறுப்பு வகித்தவர்கள் மதுரை நாயக்கர்கள். எனவே, மதுரை நாயக்கர்கள் தம்மை விஜயநகரப்பேரரசர்களின் “கர்த்தாக்கள்”  என அழைத்துக்கொண்டனர். தமக்கெனச் சிறப்புப் பட்டப்பெயர்களைச் சூடிக்கொள்ளவில்லை. (Sanskrit. Karta=agent; representative).  அவர்கள் விஜயநகரப் பேரரசர்களால் நியமிக்கப்பட்ட தலைவர்கள். போரின்போது படை உதவி, தாம் பொறுப்பேற்ற ஆட்சிப்பகுதியின் வரி வருவாய் ஆகிய பொறுப்புகளில் விஜய நகர அரசர்க்குக் கட்டுப்பட்டவர்கள். அதுபோலவே, சேதுபதி அரசர்களும். மதுரை நாயக்கர்களால் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்களே. எனவே, இவர்களும் “கர்த்தா’க்களே. இக்காரணத்தால், சேதுபதி அரசர்கள் தம் இயற்பெயரை அடுத்து ”கர்த்த” எனச் சேர்த்துக்கொண்டனர் எனலாம். ‘தேவர்’  என்னும் பெயர் அவர்களது குடிப்பெயரான மறவர் பெயர். எனவே, “கர்த்த தேவர்”. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  நாயக்கர் காலக் கல்வெட்டுகளில், உள்ளூர்த் தலைவர்கள் கொடை அளிக்கும்போது தம் தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டுத் தம்மை அவர்களின் “காரியத்துக்குக் கர்த்தாவான”   என்று அழைத்துக்கொள்கிறார்கள் என்பதை இங்கு ஒப்பிடலாம்.) டாக்டர் கால்டுவெல் அவர்கள் ‘கர்த்தாக்கள்’ என்பதை ஆங்கிலத்தில் ‘HIGH COMMISSIONER’ என்னும் பதவிப்பெயருக்கு நிகராகக் குறிப்பிடுகிறார்.

வேறு இரகுநாத சேதுபதிகள்

திருமலை இரகுநாத சேதுபதி என்னும் அரசர். இவரது ஆட்சிக்காலம் 1647-72 .  இவர் மதுரை திருமலை நாயக்கரால் பெருமைப்படுத்தப்பட்டவர்.  மைசூர் அரசர்களின் படையெடுப்பு, அதனுடன் தொடர்புள்ள ‘மூக்கறுப்புப் போர்’  ஆகிய போர் நிகழ்வுகளில் திருமலை நாயக்கருக்குப் பெருந்துணையாய் நின்று மதுரையைக் காத்தவர் என்னும் நிலையில், திருமலை நாயக்கர் இந்தச் சேதுபதிக்குத் “தாலிக்கு வேலி”, “பாண்டிமண்டல ஸ்தாபனாச்சார்யா”  ஆகிய பட்டங்களை வழங்கினார். திருப்பூவணம், திருச்சுழி, பள்ளிமடம் ஆகிய ஊர்களைக் கொடையாகவும் அளித்தார். ‘தாலிக்கு வேலி’  என்பது திருமலை நாயக்கரின் அரசியின் தாலிக்கு வேலியாய் நின்றவர் என்னும் பொருளில் அமைந்த பட்டப்பெயர். மதுரையைக் காத்ததற்காகப் ‘பாண்டிமண்டல ஸ்தாபனாச்சார்யா’  என்னும் பட்டப்பெயர். இந்தச் சேதுபதிக்குத் “தளசிங்கம்” என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இவரைப் பற்றி மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பார் “தளசிங்க மாலை” என்னும் நூலை இயற்றியுள்ளார்.

மற்றொரு இரகுநாத சேதுபதி, ”கிழவன் சேதுபதி”  என்னும் பெயரால் அறியப்படுபவர். இவர்,  ருஸ்தம் கான் என்னும் முகம்மதியப் படைத் தலைவரை ஒழிப்பதற்குக் காரணமானவர். முகம்மதியத் தாக்குதல்களிலிருந்து மதுரை ஆட்சியாளர்களைக் காப்பதின்மூலம் “பகைமன்னர் சிங்கம்”, ”பரராஜ கேசரி”, “துலுக்கர் தள விபாடன்”, “துலுக்கர் மோகம் தவிர்த்தான்” என்னும் பட்டபெயர்களைப் பெற்றவர். இப்பட்டப்பெயர்களை வழங்கியவர் மதுரை சொக்கநாத நாயக்கர் ஆவார்.  இப்பட்டப்பெயர்கள் எல்லாம் இவைபோன்ற காரணச் சூழல்களில் வழங்கப்பட்டவை. இவை தவிர, மிகுந்த கற்பனை அழகுக்காகச் சேர்க்கப்பட்ட பட்டப்பெயர்கள் பல உள்ளன.  இவை அரசவைப் புலவர்கள் புனைந்தேற்றியவையாகவே இருக்கவேண்டும். இவற்றில் பின்னணிக் காரணங்கள் இருக்கா.  ”கொடைக்குக் கர்ணன்”, ”பொறுமைக்கு தர்மன்”, ”மல்லுக்கு பீமன்”, ”வில்லுக்கு விஜயன்”, ’இராஜாதிராஜன்’, ’இராஜபரமேஸ்வரன்’ , ‘இராஜமார்த்தாண்டன்’, ’இராஜ கம்பீரன்’, ’இராஜகுல திலகன்’, ‘துஷ்டரில் துஷ்டன்’, ’துஷ்ட நிக்ரஹன்’ ’சிஷ்ட பரிபாலன்’, ‘பூலோக தேவேந்திரன்’ போன்ற பட்டப்பெயர்கள் இவ்வாறானவை.

முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி – தொடர்ச்சி

கி.பி. 1773-ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பனியார், கருநாடக நவாபுடன் இணைந்து நடத்திய படைத் தாக்குதலில் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி தோல்வியுற்று ஏழு ஆண்டுகள் திருச்சிச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.  கி.பி. 1769-ஆம் ஆண்டில், இவர் இராமேசுவரம் கோயிலின் மூன்றாம் சுற்றாலைக் கட்டுமானத்தை முடித்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுற்றாலைக்கான கட்டுமானப்பணி கி.பி. 1740-ஆம் ஆண்டு முத்து இரகுநாத சேதுபதி அவர்களால் தொடங்கப்பட்டது. 

சில விருதுப்பெயர்கள்

தொண்டியந்துறைக் காவலன்   -   பாண்டிய நாட்டின் மீதான சோழர்களின் படையெடுப்பின் போது அதிவீர ரகுநாத சேதுபதி என்னும் சேதுபதி செய்த உதவியின் பொருட்டுக் கிடைத்த விருதுப்பெயர்.

அனும கேதனன், கருட கேதனன்  -  விஜயநகர அரசர்கள் பக்கம் நின்று முகம்மதியப் பகைவருக்கெதிராகச் செய்த செயல்களுக்காகச் சேதுபதி அரசர்கள் பெற்ற சிறப்புச் சலுகைகள்.  அதாவது அனும, கருடக் கொடிகளைத் தாங்கிச் செல்லும் உரிமை.

சோழமண்டலப் பிரதிஷ்டாபனாச்சார்ய  -  பாண்டியர்களின் மேலாண்மையை ஏற்றுப் பாண்டியருக்குத் துணையாய்ச் சோழரை அவர்களுடைய எல்லை வரை – பட்டுக்கோட்டை, அறந்தாங்கி -  விரட்டிய காரணத்துக்காகக் கிடைத்த விருது.

கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்  -   வெற்றிகொண்ட பகுதியை மீண்டும் விட்டுக்கொடுக்காத தன்மைக்கான விருதுப்பெயர். இந்த விருதுப்பெயரை விஜயநகர அரசர்களும் சூட்டிக்கொண்டனர்.

கஜவேட்டை கண்டருளிய  -   யானை வேட்டையைப் பார்த்த நிகழ்ச்சியோடு தொடர்புடைய ஒரு விருதுப்பெயர். இந்த விருதுப்பெயரையும் விஜயநகர அரசர்கள் சூட்டிக்கொண்டனர். கல்வெட்டுகளில் இந்த விருதுப்பெயர்களைப் பார்த்த உடனே, விஜய நகரர்/நாயக்கர் காலக் கல்வெட்டுகளை இனம் கண்டுகொள்வதோடு, எழுத்துகள் சிதைந்துள்ள இடங்களில் சொற்களை இட்டு நிரப்புதலும் எளிது.

செப்பேட்டின் அடிப்படைச் செய்தி

சேதுபதி அரசர், திருவாங்கூர் அரசர் ஸ்ரீபத்மநாபதாச வஞ்சிபால ராமவர்ம குலசேகரப் பெருமாளுக்குக்  காக்கூர் என்னும் ஊரை நான்காயிரம் வராகனுக்கு விற்றுக்கொடுத்த விலையாவணமே இச்செப்பேடு.  பின்னர், இவ்வூர்,  திருவாங்கூர் அரசரால் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயிலுக்கு வழிபாட்டுச் சேவைக்காக, ‘ஸ்ரீ இராமநாதசுவாமி கட்டளை’ என்று இறைவனின் பெயராலேயே கட்டளையாகக் கொடுக்கப்பட்டது.

மேற்படி ஆவணம் எழுதப்பட்டபோது, சேதுபதி அரசர், விரையாத கண்டன் என்னும் தலை நகரில் வீற்றிருந்து நிறைவேற்றினார் என்று கூறப்படுகிறது. இந்நகரம், காத்தூர் என்னும் குலோத்துங்க சோழ நல்லூருக்குக் கிழக்கே அமைந்திருந்தது. காத்தூர், தொகவூர்க் கூற்றத்தில் இருந்ததாகச் செப்பேடு குறிக்கிறது. விரையாத கண்டன், சேது நாட்டில் இராஜசிங்கமங்கலசேகரத்தில் அமைந்திருந்தது என்று அறிகிறோம். விரையாத கண்டன், குலோத்துங்க சோழ நல்லூர் இரண்டுமே சேதுபதி அரசர்களின் தலைமையிடங்களாகச் செயல்பட்டன.

செப்பேட்டின் பாடம்

















திருவாங்கூர் அரசர் பற்றி

திருவாங்கூர் அரசரின் பெயர் செப்பேட்டில், ’ஸ்ரீபத்மநாபதாச வஞ்சிபால ராமவர்ம குலசேகரப்பெருமாள் மஹாராஜா’  என்றுள்ளது. இப்பெயர் செப்பேட்டில், ஒரே ஒரு எழுத்தைத் தவிர முற்றும் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. அந்த ஒரு எழுத்து “ள்”.  முற்றிலும் வடசொற்களின் ஒலிப்புள்ள எழுத்துகள். ஆங்கிலத்தில் ‘SRI PADMANABHADASA VANCHIBALA RAMAVARMA KULASHEKARAP PERUMA(ள்)’  என அமையும். பதிப்பாசிரியர் இராமநாத அய்யர் அவர்கள் இப்பெயரில் உள்ள “பால” (BALA)  என்னும் சொல், சமற்கிருத ஒலிப்பிலேயே சற்றுப்பிழையாக எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று கூறுகிறார். ‘BALA’ என்பது பிழையான வடிவம்; ‘PALA’ என்பது சரியான வடிவம் என்று கூறும் அவர் முன்வைக்கும் காரணம் முற்றிலும் ஏற்புடையது. ’BALA’  என்பது ‘இளம்’  என்னும் பொருளைத்தரும். இதை ‘ராம வர்மா’  என்னும் சொல்லுடன் இணைக்கும்போது ‘இளம்’ பொருள் அமைகிறது. ஆனால், அரசரின் முழுநீளப்பெயரில், ‘வஞ்சி’  என்னும் சொல் தனித்து நின்று பொருள் தராமல் போகும் வாய்ப்பே மிகுதி. மாறாக, ‘PALA’ என்பதை ‘வஞ்சி’யோடு சேர்த்து ‘வஞ்சிபால’  என்று குறிப்பிடும்போது ‘வஞ்சிக்காவலன்’ (‘வஞ்சியின் தலைவன்’) என்றமையும். இதுவே சரியான பொருளைத்தரும். ‘PALA’ என்னும் சமற்கிருதச் சொல், காவலன் (PROTECTOR) என்னும் பொருளுடையது. திருவாங்கூர்ப் பகுதியான சேர நாட்டுப்பகுதியின் அரசர் ‘வஞ்சிக் காவலன்’ என அழைக்கப்படுதல் சேர அரசர் மரபின் தொடர்ச்சி எனலாம்.

மேற்படி அரசர், திருவாங்கூர் அரச வரலாற்றில் ’தர்மராஜா’ என்னும் பெயரில் நன்கு அறியப்படுபவர்.  இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1758-1798. இவரின் நீண்ட ஆட்சிக்காலத்தில், ஐதர் அலி, திப்பு சுல்தான்  ஆகிய இருவரின் தொடர்ந்த தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வந்தன. இவர் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியின் அடியவர் என்பது இவர் இயற்றிய நாட்டிய நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாங்கூர் வட்டார ஆவணங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஓலை ஆவணம் ஒன்றில், திருவாங்கூர் ஆட்சி அரசு முழுமையும் பத்மநாபக் கடவுளர்க்குக் காணிக்கை என்னும் குறிப்பு உள்ளது. இவ்வோலை ஆவணத்தின் காலம் கொல்லம் 925 (கி.பி. 1750).

மேற்படி அரசர், கி.பி. 1784-ஆம் ஆண்டு தம் அறுபதாவது வயதில் இராமேசுவரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார். இவ்வரசர், குடிமக்கள் நலனை நன்கு பேணியவர் என்று அறியப்படுகிறார். ஆரியங்காவு சாத்தன் கோயிலுக்கு வழிபடச் செல்லும் மக்கள், திருவாங்கூர்ப்பகுதியையும் திருநெல்வேலியையும் இணைக்கும் மேற்கு மலைத்தொடரின் காட்டுக் கணவாய்ச் சாலையில் கொள்ளை, விலங்குகளின் தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  நல்ல சாலைகள், கொள்ளைத்தடுப்புப் பணிகள் வாயிலாக இத்தகைய இன்னல்களிலிருந்து மக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளித்தார் என்று ஆரியங்காவு பற்றிய ‘ஆரியவன மகாத்மியம்’ நூலில் குறிப்புகள் உள்ளன.

செப்பேட்டின் மொழியும் எழுத்தும்

செப்பேடு தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் கிரந்த எழுத்துகளின் பயன்பாடு மிகையாக உள்ளது. நல்ல தூய தமிழ்ச் சொற்களைக்கூடக் கிரந்தத்தில் எழுதியிருக்கிறார்கள் என்பது பெருங்குறை என்று பதிப்பாசிரியர் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது. இடைக்காலச் சோழர், பாண்டியர் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் நல்ல தமிழ்ச் சொற்களால் எழுதப்பட்டுள்ள நிலையில், காலப்போக்கில் விஜயநகரர்/நாயக்கர் ஆட்சிகளின்போது, ஆவணங்களில் சமற்கிருதச் சொற்கள் மிகுதியும் நுழைந்து நல்ல தமிழ் வழக்கு ஒழிந்து, தமிழ் மொழி அழகிழந்ததைக் காண்கிறோம். ஆட்சியாளர்கள் தமிழ் மொழியினர் அல்லர் என்பதே காரணம்.  இந்தச் செப்பேட்டில், தமிழ்ச் சொற்களையே தமிழ் எழுத்துகளில் எழுதாமல் கிரந்தத்தில் எழுதியுள்ளமை வருத்தம் தருகிறது. சமற்கிருதச் சொற்களையும் இந்தச் செப்பேட்டில் பிழைபட எழுதியிருக்கிறார்கள் எனப் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். பிழை, செப்பேட்டின் பாடத்தை வடிவமைத்துத் தந்தவர் மேலா அல்லது செப்பேட்டை எழுதியவர் மேலா என்பது தெரியவில்லை.  எழுதியவர் பெயர் ‘மதுரை சட்டையப்ப நாலங்கராயன் குமாரன் சட்டையப்பன்’  எனக் காண்கிறோம்.

செப்பேட்டின்  அமைப்பு

செப்பேடு, திருவனந்தபுரத்தில் உள்ள ’செல்லம்வாகை’  மாளிகையில் (PALACE)  வைக்கப்பட்டுள்ளது. பத்து அங்குல நீளம், ஐந்து அங்குல அகலம் என்ற அளவில் உள்ளது.  ஏட்டின் முதல் பக்கத்தின் மையத்தில் தெலுங்கு எழுத்தில் “ஸ்ரீ ராமநாதஸ்வாமி ஸஹாயம்”  என்னும் பொறிப்பு பெரிய அளவிலான எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.  இத்தொடர், சேதுபதி ஆவணங்களில் காணப்படும் அரச முத்திரை எனக் கொள்ளலாம்.  அரசு ஆவண மொழியாகத் தொடக்கத்தில் தெலுங்கு இருந்துள்ளது என அறிகிறோம்.


செப்பேட்டின் முதல்  பக்கம்

செப்பேட்டின் இரண்டாம் பக்கம்

செப்பேட்டில் பிழைகள்

தமிழ் எழுத்துகளின் இடங்களில் கிரந்த எழுத்துகள் பயன்பாடு

1  இதன்மேற்  -    இச்சொல்லில் ‘இ’  எழுத்து கிரந்தம்.

2  அற்பசி   -       இச்சொல்லில் ‘அ’  எழுத்து கிரந்தம்.

3  உத்திராட   -    இச்சொல்லில் ‘ரா’  எழுத்து கிரந்தம்.

4  கண்டநாடும்   -   இச்சொல்லில் ‘ண்ட’  எழுத்துகள்  கிரந்தம்.

5  கொடாதான்  -    இச்சொல்லில் ‘டா’  எழுத்து கிரந்தம்.

6  காவலன்   -      இச்சொல்லில் ‘ன்’  எழுத்து கிரந்தம்.

7  கற்ணன்    -      இச்சொல்லில் ‘ன்’  எழுத்து கிரந்தம்.

8  துலுக்கர்   -      இச்சொல்லில் ‘ர்’  எழுத்து கிரந்தம்.

9  அன்னசத்திர(ம்)   -    இச்சொல்லில் ‘அ’  எழுத்து கிரந்தம்.

10  கிறையம்    -         இச்சொல்லில் ‘ம்’  எழுத்து கிரந்தம்.

11  அவர்கள்   -          இச்சொல்லில் ‘அ’, ‘ர்’  எழுத்துகள் கிரந்தம்.

12  கட்டளை    -         இச்சொல்லில் ‘ட்டளை’  எழுத்துகள் கிரந்தம்.

13  பண்ணின    -        இச்சொல்லில் ‘ன’  எழுத்து கிரந்தம்.

14  தொண்டமண்டல  -   இச்சொல்லில் ‘ண்டமண்ட’  எழுத்துகள் கிரந்தம்.



செப்பேட்டில் காலக்கணக்கு

செப்பேட்டில் சாலிவாகன ஆண்டும் (சகம்), கொல்லம் ஆண்டும் குறிக்கப்பட்டுள்ளன.  சகம் 1691. கொல்லம் 945.  தமிழ் வியாழ வட்ட ஆண்டான விரோதி ஆண்டும் தரப்பட்டுள்ளது. இம்மூன்று ஆண்டுக்குறிப்புகளும் கி.பி. 1769-ஆண்டுடன் பொருந்துகின்றன. ஐப்பசி மாதம் ‘அற்பசி’  மாதம் என எழுதப்பட்டுள்ளது. எண்கள், தமிழ்க் குறியீட்டெண்களால்  எழுதப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமை, ‘பானு வாரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வானியல் (பஞ்சாங்கக்) குறிப்புகள்

செப்பேட்டில், தேய்பிறைக் காலத்தைக் குறிக்கும் பூர்வ பட்சம்,  சப்தமி திதி, இருபத்தேழு யோகங்களில் ஒன்றான சூலம், பதினொரு கரணங்களில் ஒன்றான கரஜ (கரசை) ஆகிய குறிப்புகள் உள்ளன.

சில நாட்டுப்பிரிவுகளும் நிலவியல் ஊர்களும்

செப்பேட்டின்படி காக்கூர் என்னும் ஓர் ஊரே கொடையாக அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வூர் தடாதகை நாட்டில் இருக்கும் கிராமம் என்பதாகச் செப்பேடு கூறுகிறது. இவ்வூரின் பரப்பை அடையாளப்படுத்துகையில் ஊர்ப்பரப்புக்கு நான்கு திசைகளிலும் உள்ள எல்லைகள் விரித்துச் சொல்லப்படுகின்றன.  எல்லைப் பெயர்களில் கதையன் கண்மாய், கருமளக்கண்மாய், குமாரக்குறிச்சிக்கண்மாய், கருசல்க்குளத்துக் கண்மாய், பத்தலைக் கண்மாய், பகையன் கண்மாய், காத்தான் ஏந்தல், பனையடி ஏந்தல், பாடுவான் ஏந்தல், பூந்தகுளம் ஆகிய நீர் நிலைகளின் பெயர்கள் சுட்டப்படுகின்றன. முதுகுளத்தூர், குமாரக்குறிச்சி என்னும் ஊர்ப்பெயர்களும் காணப்படுகின்றன.  இவ்விடப்பெயர்கள் இராமநாதபுரம் மாவட்டப்பகுதிகளில் இருக்கின்றனவா எனப்பார்க்கவேண்டும்.

சில வடமொழிச் சொற்கள் – கிரந்த எழுத்துகளில்

மேலே சுட்டியவாறு வடசொற்கள் மிகுதியும் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. சில சொற்கள் வருமாறு:

ஹநுமகேதனன்
கருடகேதனன்
சிம்ஹகேதனன்
சத்யஹரிச்சந்த்ரன்
சங்கீத ஸாஹித்ய வித்யா விநோதன்
விஜயலக்ஷ்மிகாந்தன்
அரசராவணராமன்
துஷ்டநிக்ரஹன்
சிஷ்டபரிபாலன்
பூலோக தேவேந்த்ரன்
சிவபூஜா துரந்தரன்
அநேகப்ரஹ்மப்ரதிஷ்டாபகாரன்
ஸகலஸாம்ராஜ்ய லக்ஷ்மிநிவாசன்
ராமநாதஸ்வாமி கார்யதுரந்தரன்
துலாபுருஷதானாதிஷோடஸமஹாதாநதுரந்தரர்
ஹிரண்யகர்பயாஜி


முடிவுரை

விஜயநகரரின் நேரடி ஆட்சி, அதைத்தொடர்ந்த நாயக்கர் ஆட்சி ஆகியவற்றின் தாக்கம் தமிழ் நிலத்துச் சேதுபதி அரசர்களையும் பற்றிக்கொண்ட காரணத்தால் தமிழ் மொழியின் பயிற்சியிலும் சிறப்பிலும் குறை மிகுந்தும் நிறை தாழ்ந்தும் போயின என்று நாம் கருவதற்கு இடமளிக்கும் வகையில் இச்சேப்பேடு அமைந்துள்ளது என்பது இந்த ஆய்வுப்பார்வையில் புலப்பட்டுள்ளதை  மறுக்க இயலாது.  ஆனால், தமிழ் மொழி தன்னுடைய வேரில் வளமான தொன்மையைக் கொண்டுள்ளதால் தன்னைத்தானே காத்துக்கொண்ட ஒரு விதை நெல் போல இன்றளவில் புதுப்பித்துப் புதுப்பித்து வளர்த்துக்கொண்டது எனலாம்.




பார்வை நூல்கள்:

1    திருவாங்கூர் தொல்லியல் வரிசை – தொகுதி-5
(TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES Vol-V)

2  ’சேதுபதி செப்பேடுகள்’ - புலவர் செ. இராசு (முன்னாள் தலைவர், கல்வெட்டியல் துறை, தஞ்சைப்பல்கலை)




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.





1 கருத்து:


  1. Great article with excellent idea i appreciate your post thankyou so much and let keep on sharing your stuffs


    Digital marketing agency in chennai
    Best SEO Services in Chennai
    seo specialist companies in chennai
    Best seo analytics in chennai
    Expert logo designers of chennai,
    Brand makers in chennai

    பதிலளிநீக்கு