மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020


நீரும் நெருப்பும்

முன்னுரை


தொல்லியல் அறிஞர் ஹுல்ட்ஸ்  (E. HULTZSCH) அவர்கள் மதராஸ் கல்வெட்டாய்வாளராகப் பணி புரிந்தபோது, கி.பி. 1893-ஆம் ஆண்டு தம் களப்பணியைப் பற்றி எழுதியது தென்னிந்தியக் கல்வெட்டுகள் - மூன்றாம் தொகுதியில் வெளிவந்துள்ளது. காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் அமைந்திருக்கும் கூழம்பந்தலுக்குக் களப்பணியாகச் சென்றவர், அருகில் உள்ள உக்கல் என்னும் சிற்றூருக்கும் சென்றிருக்கிறார்.  மேற்படி தொகுதி நூலில் உக்கல் கல்வெட்டுகளைப் பதிப்பித்துள்ள ஹுல்ட்ஸ் அவர்களின் குறிப்பிலிருந்து, தலைப்பை ஒட்டிய (நீரும் நெருப்பும்) சில கல்வெட்டுகளைப் பற்றிய பதிவு இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது. 

உக்கல் -  விண்ணகரக் கோயில்

முன்னர்க் குறிப்பிட்டவாறு, உக்கல் என்னும் சிற்றூர், காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில்  கூழம்பந்தலுக்கு ஒரு கல் (மைல்) தொலைவில் அமைந்துள்ளது. ஹுல்ட்ஸ் அவர்கள் இவ்வூருக்குச் சென்றபோதே இங்கிருந்த விண்ணகரக்கோயில்  பழமையானதாகவும்,  சிதைந்த நிலையிலும் இருந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். கோயிலின் கருவறைப்பகுதியின் அதிட்டானப்பகுதி மட்டுமே உள்ளது. விமானத்தின் மேல்பகுதி  யாவும் சிதைந்து போனது. கருவறைக்கு எதிரேயுள்ள மண்டபம் எக்கணத்திலும் இடிந்து விழக்கூடும் என்னும் நிலையில் காணப்பட்டது என்பது அவர் குறிப்பு.

கோயில் கல்வெட்டுகள்

கருவறை அதிட்டானத்திலும், மண்டபத்திலும் மொத்தம் பதினேழு கல்வெட்டுகள் காணப்பட்டன.  (தற்போது,  இக்கல்வெட்டுகள் யாவும் பாதுகாப்பாக உள்ளனவா என்பது தெரியவில்லை.). ஹுல்ட்ஸ் அவர்கள் பதிநான்கு கல்வெட்டுகளைப் பதிவு செய்துள்ளார். மற்ற மூன்று கல்வெட்டுகளும் படிக்கும் நிலையில் இல்லை. கல்வெட்டுகளில் இக்கோயில், “புவனமாணிக்க விஷ்ணுகிருஹம்”   என்று குறிக்கப்பட்டுள்ளது. ’புவன மாணிக்கம்’   என்பது இக்கோயிலைக் கட்டுவித்த, பெயர் அறியா அரசனின் விருதுப்பெயராக இருக்கக்கூடும். (விஷ்ணுகிருஹம் என்னும் சொல்லே ’விண்ணகரம்’ என்னும் தமிழ் வடிவம் பெற்றது எனலாம்). இக்கோயிலில் உள்ள ,  முதலாம் இராசராசன் காலத்துக் கல்வெட்டு ஒன்று,  கோயிலில் உறையும் இறைவர் பெயர் “திருவாய்மொழி தேவர்” என்று குறிப்பிடுகிறது. வைணவ நூலான ‘நாலாயிரப் பிரபந்தம்’  என்னும் நூலின் ஒரு பகுதி ‘திருவாய்மொழி’ என்று வழங்கும். இந்நூலை இயற்றியவர் சடகோபர் என்கிற நம்மாழ்வார் ஆவார்.  இராசராசன் காலத்தில் இறைவர் திருமேனிக்கு இந்த வைணவப் பெயர் சூட்டப்பட்டதை நோக்குகின்றபோது, மேற்படி நூல் மேன்மையாகக் கருதப்பட்டு வந்துள்ளது என அறிகிறோம். அதோடு, இராசராசனின் ஆட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்தவர் நம்மாழ்வார் என்னும் கருத்து முடிபை எட்ட  இந்தப் பெயர்சூட்டல் வழி வகுக்கின்றது எனலாம் . 

இக்கோயிலில், கம்பவர்மன் காலத்தவை என இரு கல்வெட்டுகளும், சோழர் காலத்தவை எனப் பதினொரு கல்வெட்டுகளும், இராட்டிரகூட அரசன் மூன்றாம் கிருட்டிணன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் ஆகப் பதிநான்கு கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. இவற்றில், கம்பவர்மன் கல்வெட்டுகளே காலத்தால் பழமையானவை. இவற்றில், ஊர்ப்பெயர் உட்கல், உட்கர் என இருவகையில் அமைகின்றன. சோழர் கல்வெட்டுகளில் உக்கல் என்னும் பெயரே உள்ளது.  சிறப்புப் பெயர்களாக,  சிவசூளாமணி மங்கலம், விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலம், அபராஜிதச் சதுர்வேதிமங்கலம்  ஆகிய பெயர்களும் கல்வெட்டில் பயில்வதினின்றும், இவ்வூர் பல அரசர்களின் விருதுப்பெயரைத்தாங்கிய பிரமதேயமாக (பிராமணர்க்குக் கொடையாக அளிக்கப்பட்ட ஊர்)  இருந்துள்ளது என அறியலாம். இவ்வூர், தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த காலியூர்க்கோட்டத்தில் பாகூர் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது என்று கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.

ஊரின் நிருவாக அமைப்புகள்

சதுர்வேதிமங்கலங்களின் ஊர்ச்சபை , சபை அல்லது மகாசபை என வழங்கும்.  ஊர் நிருவாகம் இச்சபையின் பொறுப்பு.  ‘சம்வத்சர வாரியம்’,  ‘ஏரி வாரியம்’ , ‘தோட்ட வாரியம்’ ஆகிய உட்குழுக்கள் சபையின் கீழ் இயங்கின.  சம்வத்சர வாரியம் என்பது,  அதன் பெயருக்கேற்ப அந்தந்த ஆண்டுக்கான ஒரு நிருவாகக் குழுவாகலாம். ஏரி வாரியம் என்பது, ஏரி தொடர்பான செயல்களை மேற்பார்வை செய்யும் குழு. தோட்டம் என்பது கிணற்று நீர்ப்பாசனம் பெறும் நிலங்களை மேற்பார்க்கும் குழுவாகும். சபையின் நிருவாகச் செயல்பாடுகள் மற்றும் செயல் முடிவுகள் தொடர்பான ஆவணங்கள் யாவும் ஊரின் ‘மத்தியஸ்தர்’  எனும் பதவியில் இருந்தவரால் எழுதப்பெற்றன.  சில போது இவர், ‘ஊர்க் கரணத்தான்’  என்றும் அறியப்படுகிறார்.

கல்வெட்டுகள் காட்டும் கொடைகள்

கல்வெட்டுகள் பல்வேறு வகையான கொடைகள் பற்றிப் பேசுகின்றன. இறைவனுக்குப் படைக்கப்படும் அமுதுபடிக்காகவும், அன்றாட வழிபாட்டின்போது பயன்படும் எண்ணெய்க்காகவும், நந்தவனம் அமைத்து அதைப் பேணுவதற்காகவும்,  வேதம் வல்ல பிராமணர் உண்பதற்காகவும் கொடைகள் அளிக்கப்பட்டன.  கொடைப்பொருள்களாக நிலம், பொன்,  நெல்  ஆகியவை அளிக்கப்பட்டன.  ஒரு  கல்வெட்டில், வேதம் வல்ல பன்னிரண்டு பிராமணர்க்கு உணவளிக்க இருநூறு கழஞ்சுப் பொன்னும், இன்னொரு கல்வெட்டில் இரண்டு பிராமணர் உண்பதற்காக நானூறு காடி நெல்லும் அளிக்கப்பட்டன என்னும் செய்தி உள்ளது. (400 காடி நெல் என்பது ஏறக்குறைய 133 மரக்கால்) அமுதுபடிக்காக ஐந்நூற்றைம்பது குழி நிலம் கொடை அளிக்கப்பட்டது.

நீர்

கட்டுரைத் தலைப்புப்படி, நீரும் நெருப்பும் கொடைக்கான பின்னணியாக எவ்வாறு அமைகின்றன எனப்பார்ப்போம்.  உக்கல் விண்ணகரத்தின் கருவறை மேலைச் சுவரில் உள்ள  ஒரு கல்வெட்டு முதலாம் இராசராசன் காலத்தது. கி.பி. 1014-ஆம் ஆண்டில் அவனது இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டது.  இக்கல்வெட்டு,  இராசராசனின் பணிமகனான கண்ணன் ஆரூரன் என்பவன், “ஸ்ரீராஜராஜக் கிணறு” என்று  இராசராசனின் பெயராலாயே ஒரு கிணற்றை வெட்டுவித்தான் என்று கூறுகிறது. இவன் ஆவூர் என்னும் ஊரைச் சேர்ந்தவன். கிணறு யாருக்குப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  உக்கல் ஊரினின்றும் செல்லுகின்ற மேலைப்பெருவழி என்னும் ஒரு பெருவழிச் சாலையில் பயணம் செய்வோருக்குப் பயன்படும் வகையில் கிணறு வெட்டப்பட்டு அதன் அருகிலேயே தண்ணீர்ப்பந்தல் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கிணற்றிலிருந்து   நீர் இறைக்கப்பட்டு  ஒரு தொட்டியில் நிரப்பப்படுகிறது. தொட்டித்தண்ணீரைத் தண்ணீர்ப்பந்தலில் மட்கலங்களில் (மண் பானைகளில்)  ஊற்றிவைத்துப் பயணிகளுக்கு வழங்குவதற்காக ஓர் ஆளும், கிணற்றிலிருந்து நீர் இறைத்துத்தருவதற்காக ஓர் ஆளும் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

நீர் இறைக்கும் ஆளுக்கு நாள்தோறும் இரண்டு குறுணி (பதினாறு நாழி/படி) நெல் ஊதியமாக அளிக்கப்படுகிறது. இதே போலத் தண்ணீர்ப்பந்தலில் இருந்துகொண்டு பயணிகளுக்கு  நீர் தருகின்ற பணியைச் செய்பவனுக்கும் நாள்தோறும் இரண்டு குறுணி நெல் ஊதியமாக வழங்கப்பட்டது. கல்வெட்டு இவர்களை  நீர் இறைப்பார் என்றும், தண்ணீர் அட்டுவார் என்றும் குறிப்பிடுகிறது. தண்ணீர்ப்பந்தலில் பயன்பாட்டுக்குத் தேவையான மண் பானைகளை வனைந்து தருகின்ற மண்ணாளர்க்குத் (குயவர்) திங்கள்தோறும் இரண்டு தூணி ( எட்டுக் குறுணி)  நெல் ஊதியமாக வழங்கப்பட்டது.  இந்த ஊதியங்களெல்லாம் ஆறு மாதங்களுக்கு எனக் கல்வெட்டு கூறுகின்றதன் மூலம், வழிப்பயணிகளுக்குத்  தண்ணீர் தருகின்ற தண்ணீர்ப்பந்தல் ஏற்பாடு, இக்காலம் போல் அல்லாமல் ஆண்டில் ஆறு மாதங்களுக்கு  இயங்கியது என அறிகிறோம். மட்கலங்களைக் கல்வெட்டு குசக்கலம் என்று குறிக்கின்றது. நீர் இறைப்பானைப்பற்றி இக்கல்வெட்டில் கூறியிருந்தாலும், நீர் கிணற்றிலிருந்து எவ்வாறு இறைக்கப்பட்டது என்னும் குறிப்பு காணப்படவில்லை.  ஆனால், அடுத்து வருகின்ற கல்வெட்டில், ஏற்றம் பற்றிய குறிப்பு வருவதினின்றும், ஏற்றம் அமைத்து நீர் இறைத்தார்கள் என்பது பெறப்படுகிறது. கிணறு வெட்டுவித்துத் தண்ணீர்ப்பந்தல் அமைப்பது முப்பத்திரண்டு அறங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


கல்வெட்டின் பாடம் :




நெல்லின் அளவீடுகள்

நீர் இறைப்பவனுக்கும், நீர் அட்டுவானுக்கும் நாள்தோறும்  இரண்டு குறுணி நெல் ஊதியம். தற்காலத்து ஒரு லிட்டர் முகத்தல் அளவினைச் (ஐம்பது-அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் படி என்று வழங்கிய அளவுடன் ஒப்பிடலாம்) சோழர் காலத்தில் நாழி என்று குறிப்பிட்டனர்.  எட்டு நாழி கொண்டது ஒரு குறுணி.

8  நாழி  =   1  குறுணி
12 குறுணி =  1 கலம்

நீர் இறைப்பானுக்கும், நீர் அட்டுவானுக்கும் நாள் ஒன்றுக்கு இரண்டு குறுணியாக, ஆறு மாதத்துக்கு -  நூற்றெண்பது நாள் (சோழர் காலக் கணக்கீட்டில் ஒரு மாதம் முப்பது நாள்களைக் கொண்டது)  -  நெல் எழுநூற்று இருபது குறுணி. அதாவது அறுபது கலம். குசக்கலம் இடுவார்க்கு ஆறு மாதத்துக்கு நாற்பத்தெட்டு குறுணி . அதாவது நான்கு கலம்.  ஆக இவ் ஆள்களுக்கு அறுபத்து நான்கு கலம் நெல்.  இவை தவிர, ஆண்டு தோறும் கிணறு, தொட்டி  ஆகிய இரண்டையும் புதுப்பித்துச் செம்மையான நிலையில் வைத்துக்கொள்ள இரண்டு கலம் நெல் கொடையாளியால்  ஒதுக்கப்பட்டது.  இந்த ஏற்பாட்டினைக் கல்வெட்டு, புதுக்குப்புறம் எனக்குறிக்கிறது. ஆக மொத்தம் ஆண்டுக்கு அறுபத்தாறு கலம் நெல் பயன்பட்டது. இந்த நெல்லுக்காகத் தேவைப்படும்  பொருள்,  அதாவது வரி வருவாயும், விலைப்பணமும்  கொடையாளி கண்ணன் ஆரூரனிடமிருந்து சதுர்வேதிமங்கலத்துச் சபையார் பெற்றுக்கொள்கின்றனர்.  நெல் அளப்பதற்கு ”அருமொழி தேவன்”  மரக்கால் பயன்பட்டது. ”அருமொழி தேவன்”  என்பது இராசராசனின் இயற்பெயர்.  இப்பெயரே, நெல் அளக்கும் கருவிக்குப் பெயராக இடப்பட்டது. இவ்வழக்கம் சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்தது. இறைவனின் பெயரால் “ஆடவல்லான்”   என்று ஒரு அளவைக்கருவி இருந்தமையும் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.  மரத்தால் செய்யப்பட்ட கால் (அளவுக்கருவி) மரக்கால் என்று வழங்கப்பட்டிருக்கவேண்டும். குறுணி அளவு கொண்ட மரக்கால் பிற்காலத்தில்,  அந்த ‘குறுணி’யின் அளவையே  குறித்தது போலும். முன்னர்க் குறித்தவாறு, பழங்காலத்து ‘நாழி’ ,  ‘படி’  என்று பின்னாளில் வழங்கியது.  ’படி’ வழங்கிய காலத்தில்  (ஐம்பது-அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்)  ’மரக்கால்’  அளவும் வழங்கியது. (எட்டுப் படி = ஒரு மரக்கால். இது பழங்காலக் கணக்கு முறையை ஒட்டி உள்ளது எனபதைக் காண்க).

குறியீடுகள்

நெல்,  குறுணி,  2 தூணி,  கலம்  ஆகிய  சொற்களைச் சுருக்கெழுத்து வடிவில் குறியீடுகள் மூலம்  இக்கல்வெட்டில் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்குறியீடுகள் வருமாறு :

நெல் =   ஜ
குறுணி = ங
2 தூணி = வத
கலம் =  கள

நீர் ( தொடர்ச்சி ) -   ஏரியும் ஓடமும்

நீரோடு தொடர்புள்ள மற்றொரு கல்வெட்டு,  முதலாம் இராசேந்திர சோழன் காலத்தது. அவனது நாலாம் ஆட்சியாண்டான கி.பி. 1016-இல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.  இராசேந்திரனின் பணிமகனான அரையன் பலதேவன் என்பான் செய்த கொடையைக் கூறுகிறது. இவன், வெண்குற்றக் கோட்டத்துக் குவளை கோடு நாட்டுக் குவளைகோடு என்னும் ஊரினன். இவன், இந்த ஊரில் இருக்கும் ஏரிக்கு இரண்டு ஓடங்களைக் கொடையாக வைக்கிறான். ஏரியில் கரைகளுக்கிடையிலான நீரை  மக்கள் பணச்செலவின்றிக் கடக்கும் வகையில் இவ்வோடங்களின் பயன்பாடு ஒரு தன்மமாகச் செயல்பட்டது. இதன் செலவினங்களுக்காக மேற்படி பலதேவன் ஊர்ச் சபையாரிடமிருந்து மூவாயிரம் குழி நிலத்தை விலைக்கு வாங்கி முதலீடாக வைக்கிறான். இந்நிலத்துக்கு அருகில் இருக்கும் ஐந்து ஏற்றங்களையும் விலைக்கு வாங்கிக் கொடையளிக்கிறான். ஓடங்கள் கொடைப்பொருளாக அமையும் கல்வெட்டுகள் எண்ணிக்கையில் மிக அரிது.  அவ்வகையில் இக்கல்வெட்டு சிறப்புப் பெறுகிறது.  நிலத்தின் எல்லைகள் குறிக்கப்பெறுகின்றன. நிலத்தின் பரப்பு  மூவாயிரம் குழி.

2000 குழி = ஒரு வேலி நிலம்

எனவே, கொடை நிலம் (3000 குழி)  ஒன்றரை வேலி அளவுள்ளது. நிலத்தை அளக்கப் பதினாறு அடிக் கோல் பயன்பட்டது. கல்வெட்டில், எல்லைகளைக் குறிக்கும்போது மணலீடு என்னும் ஒரு சொல் வருகின்றது. இச்சொல், மணல் மேட்டினைக் குறிப்பதாகும்.

கொடை நிலத்தின் விலை ஆவணத்தை எழுதிப்பதிவு செய்தவன் இவ்வூரின் மத்தியஸ்தனான இரண்டாயிரத்து நானூற்றுவன் ஆவான். இவன் இவ்வூர்க் காளிதேவிக்கடியான்  என்பதாக ஒரு குறிப்புள்ளது. பொற்றிக்குறி காளி என்னும் பெயரில்  ஒரு கொற்றவைக் கோயில் இவ்வூரில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

கல்வெட்டின் பாடம் :







நெருப்பு

’நீரும் நெருப்பும்’  என்னும் தலைப்பில் மேலே இரு கல்வெட்டுகளில் நீரைப்பற்றிய செய்தியைப் பார்த்தோம். உக்கல் விண்ணகரக் கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டில் நெருப்பு பற்றிய செய்தி  காணப்படுகிறது. இக்கல்வெட்டு, இரண்டாம் ஆதித்தனின்  காலத்தைச் சேர்ந்தது. இவன், முதலாம் இராசராசனின் தமையன் ஆவான்.  கரிகாலன் என்னும் சிறப்புப் பெயராலும் அறியப்படுகிறான். ’வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி’ என்னும் புகழ்ப்பெயரைத் தாங்கியே இவனது கல்வெட்டுகள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற பெரிய லெய்டன் செப்பேட்டில் இவன் வீரபாண்டியனோடு புரிந்த போரில் காட்டிய வீரம் குறிக்கப்பட்டுள்ளது. இவன் உத்தம சோழனுக்கு முன்னரே இளவரசுப் பட்டம் பெற்றவன்.  உத்தம சோழ்ன் கி.பி. 970-அம் ஆண்டு அரியணை ஏறியவன். எனவே,  மேற்படிக் கல்வெட்டு கி.பி. 970-ஆம் ஆண்டுக்குச் சற்று முந்தியதாகிறது.

கல்வெட்டின் பாடம் :





இக்கல்வெட்டு, புலியன் மகன் சேனை என்பான்  உக்கல் கிராமத்தில் இருக்கும் மண்டபத்துக்கு ஆறு மாதம் தண்ணீரும்  தீயும்  கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்கிறான். அதற்கான செலவினங்களுக்காக நிலம் கொடையளிக்கிறான். இவன் உக்கலில் இருந்து வாழ்கின்றவன்; ஆனால் சிக்கார் என்னும் ஊரைச் சேர்ந்த வெள்ளாளன். மண்டபம் என்பது ’பிரஹ்மஸ்தானம்’ என்னும் ஊர்ப்பொது மண்டபம் என்று கல்வெட்டு குறிக்கிறது. உக்கல் கிராமத்தில் மேலைப் பெருவழி ஒன்று இருந்ததாக முன்னரே குறிப்பிட்டோம். பெருவழியில் அமைந்த இம்மண்டபத்தில் பிராமணர் போக்குவரத்து இருந்தது. அவ்வாறு தங்குபவர்க்கு  நீரும் நெருப்பும்  கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நீர் வழங்கியதைக் கல்வெட்டு,  “தண்ணீர் அட்டுவது”  எனக்குறிக்கிறது. நெருப்பு வழங்குவதை “அக்னிஷ்டை” இடுவது எனக்குறிக்கிறது.  நீரின் பயன்பாடு அறிந்த ஒன்று.  நெருப்பின் பயன்பாடு பற்றிய வெளிப்படையான குறிப்பு கல்வெட்டில் இல்லை எனினும்,  மண்டபத்தில் தங்கிச் செல்கின்றவர்க்கு  நீரைக் காய்ச்சிக்கொள்ளவோ, உணவு சமைத்துக்கொள்ளவோ நெருப்பு பயன்பட்டிருக்கவேண்டும்.  அதற்கான விறகுகள்,   விறகடுப்புகள்  ஆகியன அமைத்துத் தந்தனர் எனலாம்.

கொடையாளி, மண்டபத்துத் தொட்டியின் முன்புறத்தில்  ஏத்தம் எடுத்துத் தருவதாகவும் கல்வெட்டு குறிக்கிறது.   இக்குறிப்பின் மூலம், இந்தத் தங்கும் மண்டபத்து வளாகத்தில் கிணறு,   நீரிறைக்க  ஏற்றம், நீரைத் தேக்கும் தொட்டி ஆகியவை பயன்பாட்டில் இருந்தன என அறிகிறோம்.   கல்வெட்டில், ஏற்றம் என்னும் சொல் ஏத்தம் என்றே  பயிலுகிறது.  ஏற்றம்->ஏத்தம்.  ‘ற’கரம்  ‘த’கர  மாற்றம் பெறுதல் இயல்பு. கிராமத்தில்,  சம்வத்சர வாரியப்பெருமக்கள் என்பவர்கள் ,   ஓராண்டுப் பதவியில் இருப்பவர்கள்,  அந்தந்த ஆண்டுக்க்குரிய கிராமச் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பில் இருப்பவர்கள் ஆவர்.  இவர்களே  மேற்படி தன்மத்தை  மேற்பார்க்க வேண்டும் என்று கல்வெட்டு குறிக்கிறது. கல்வெட்டின் இறுதியில்,  இத்தன்மத்துக்கு ‘விரோத’மாய் நின்றார்  கங்கை-குமரியிடைச் செய்த பாவத்தைப் பெறுவார்கள் என்னும்  குறிப்பு உள்ளது.    தவிர, இருபத்தைந்து பொன் தண்டம் கட்டவேண்டும்.

நீரும் நெருப்பும் -  கூரம் செப்பேட்டில்


புகழ்பெற்ற, பல்லவரின் கூரம் செப்பேட்டில் கூரம் ஊரில் ஊர்ப்பொது மண்டபம் எடுத்த செய்தியும்,  கூரத்து மண்டபத்துக்குத் தண்ணீருக்கும் தீக்கும் கொடைப்பொருளில் ஒரு பங்கினை ஒதுக்கிக் கொடுத்த செய்தியும் காணப்படுகின்றன. செப்பேட்டின் வரிகள் பின்வருமாறு :

வரி – 61   ஊருள் மண்டகம் எடுத்த
வரி – 74   கூரத்து மண்டகத்துக்கு தண்ணீர்க்குந் தீக்கும் ஒரு பங்காக

மற்றொரு கல்வெட்டிலும், 

“அம்பலந் தண்ணீரட்டுவார்க்கும் தீயெரிப்பானுக்குமாகப் பங்கொன்றும்

என்று கூறப்பட்டுள்ளது. (SII Vol- II  99)

திருக்கழுக்குன்றத்துக் கோயிலில் உள்ள கன்னரதேவன் என்றழைக்கப்படும் இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டில்,

“ ....................நக்கடி பட்டன் பக்கல் விலை கொண்ட
பூமி களரிச்செறுவும் கிணறும் தண்ணீர் அட்டுவ
தற்கும் அக்னிய் இடுவதற்குமாக .............”

என்று குறிக்கப்பட்டுள்ளது.


 மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து,  நீர், தீ  ஆகிய இரண்டின் பயன்பாடு தேவைப்படும் இடங்களில் – அவை மக்கள் கூடும் மண்டபங்கள்,  கூடங்கள் -  இவ்விரண்டுக்குமான ஏற்பாடுகளைச் செய்து தருகின்ற செயல் ஒரு அறச்செயலாகவே நடந்தேறியுள்ளது என்று அறிகிறோம். 

உக்கல் கோயிலின் தற்கால நிலை


கோயிலின் தற்கால நிலை, கல்வெட்டுகளின் பாதுகாப்பு பற்றித் தெரியவில்லை என மேலே குறிப்பிட்டோம்.  TAMIL-ONE INDIA  என்னும் இணைய தளத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள்  எழுதிய கட்டுரையில்,  ’இவ்வூர்க்கோயிலும் கல்வெட்டுகளும் பாதுகாக்கப்படாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன’  என்று குறிப்பிட்டு இராசராசன் கல்வெட்டு ஒன்றினை விளக்கி எழுதியுள்ளமை, இன்னும் இக்கோயில் கல்வெட்டுகள் சில எஞ்சியுள்ளன என்று அறியத்தருகின்றது.  




பார்வை நூல்கள் :

1      தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-3 
      (SOUTH INDIAN INSCRIPTIONS  Vol-III)

  2   எபிகிராஃபியா இண்டிகா தொகுதி-3 
      (EPIGRAPHIA INDICA Vol-III)

  3   தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-1 
      (SOUTH INDIAN INSCRIPTIONS  Vol-I) 

  4   தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-2 
      (SOUTH INDIAN INSCRIPTIONS  Vol-II)

    5      https://tamil.oneindia.com
     உக்கல் கோயிலின் ராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு
           - முனைவர் மு. இளங்கோவன்





துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக