மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 6 நவம்பர், 2017

குடிமங்கலம் கல்வெட்டு

முன்னுரை
24-10-2017 அன்று இணைய நண்பர் சேஷாத்திரி ஸ்ரீதரன் அவர்கள் எனக்கு ஒரு கல்வெட்டுப் படத்தை அனுப்பியிருந்தார். அதைப் பார்த்ததும் நான் மிக வியப்புற்றேன். வியப்புக்குக் காரணம் உண்டு. கல்வெட்டுகளின் படங்களை அவர் பகிர்வதும், அவற்றின் பாடங்களை நான் படித்துக் கல்வெட்டுகள் கூறும் செய்திகளைப் பதிவதும் வழக்கமாக நடைபெறுபவைதாம். ஆனால் இந்தக் கல்வெட்டுப்படம் மாறுபட்டது. 2011-ஆம் ஆண்டு நான் கண்டறிந்து படித்து ஆவணப்படுத்திய ஒரு கல்வெட்டின் படம் மீண்டும் என்னிடமே வந்தடைந்து படிப்பதற்காக என் முன்னால் காட்சியளித்தது. நான் வியப்படைந்ததில் வியப்பில்லை.  கல்வெட்டுப் படத்துடன் கல்வெட்டின் பாடத்தையும் நண்பர் அனுப்பியிருந்தார். செய்தியும் படமும் கிட்டிய மூலம், தென்கொங்கு சதாசிவம் என்பவரின் பதிவு என்பதையும் குறிப்பிட்டிருந்தார். கல்வெட்டின் முதல் பக்கத்தை ஆவணப்படுத்திய பின்னர் எனக்கு நண்பரானவர் தென்கொங்கு சதாசிவம். நானும் அவரும் பல இடங்களுக்கு ஒன்றாய்ச்  சுற்றியிருக்கிறோம். கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளோம்.  அவர் என்னுடைய பல கல்வெட்டுச் செய்திகளைப் பகிர்ந்துகொள்வதுண்டு. அவ்வாறு அவர் பதிந்த மூலத்தையே நண்பர் சேஷாத்திரி அவர்கள் தற்போது  பகிர்ந்துள்ளார். சதாசிவம் பதிந்துள்ள கல்வெட்டுப் பாடம் நிறையப் பிழைகளைக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல; ஆவணம்இதழில் ஆவணப்படுத்திய பாடத்திலும் சில பிழைகள் உள்ளன. இப்போது மீண்டும் படிக்கையில் சில திருத்தங்களைக் கண்டறிய முடிந்தது. எனவே, திருத்தங்களுடன் கூடிய சரியான பாடத்தையும், கல்வெட்டு கண்டறியப்பட்ட பின்னணியையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கல்வெட்டுகளைத் தேடி
2010-ஆம் ஆண்டு. தமிழ்ப்பேராசிரியரும் கல்வெட்டு அறிஞருமான அவிநாசி மா.கணேசன் அவர்களோடு கல்வெட்டுகளைப் பார்த்தும் படித்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த காலம். கோவை மாவட்டக் கல்வெட்டுகள்”  (தமிழகத் தொல்லியல் துறை வெளியீடு) நூலை அடிப்படையாகக் கொண்டு நூல் பிடித்தவாறு, கல்வெட்டுகள் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்வையிடுதல், படித்தல், கல்வெட்டுப் பாடங்களைப் புரிந்துகொள்ளல் என்பதாகக் களப்பணிப் பயணங்கள் மேற்கொண்டிருந்தேன். அவ்வாறு செல்லும் இடங்களில் சந்திப்போரையெல்லாம் “இது போன்று கல்வெட்டுகள் வேறெங்காவது கண்டதுண்டா அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டுக் கேட்டுத் தேடும் பணியையும் சேர்த்துக்கொண்டேன். தேடலின் முதல் பயணம் சூலூருக்கு அருகில் அமைந்த செலக்கரச்சல் சிவன் கோயிலாகத்தான் இருக்கும் என நினைவு. அப்பயணத்திலிருந்தே களப்பணி பற்றிய நாட்குறிப்பும் எழுதத் தொடங்கியாயிற்று.

4-2-2011 அன்று செலக்கரச்சல் பயணம். முதலில் சூலூர்; அங்கிருந்து செலக்கரச்சல். கல்வெட்டு நூல் குறிப்புப்படி செலக்கரச்சல் சிவன் கோயிலில் ஆறு கல்வெட்டுகள் இருக்கவேண்டும். ஆனால், கோயில் ஏற்கெனவே புதுப்பிக்கப் பட்ட நிலையில் கல்வெட்டுகள் இருந்த குமுதப்படைத் துண்டுகளும், ஜகதிப்படைத் துண்டுகளும் கோயிலுக்கு அருகில் ஊர்த் தெருக்களில் ஆங்காங்கே கேட்பாரற்றுக் குப்பைக் கழிவு போல எறியப்பட்டுப் புழுதியில் புரண்டு கிடந்தன. அவற்றையெல்லாம் ஒளிப்படம் எடுத்துப் பின்னர் செய்தி எழுதி இரு நாளிதழ்கள்களில் வெளியிட்டேன். செலக்கரச்சலிலிருந்து திரும்பும் பயணத்தில் நகரப் பேருந்தில் சிந்திலுப்பு தங்கையன் அறிமுகமானார். (நானே அறிமுகப் படுத்திக்கொண்டேன் என்பதுதான் மெய்.) அவரிடம் பேசியதில், பல்லடம்-உடுமலைச் சாலையில் குடிமங்கலம் நால் ரோடு”  அருகில் பெரிய பாறையில் கல்வெட்டு இருப்பதாகச் சொன்னார். நால் ரோடு பகுதியில் உள்ள வேளாண் அலுவலகத்தில் பணிபுரியும் பழநிச்சாமி என்பவரைப் பார்க்கவென்றும் குறிப்புக் கொடுத்தார்.

குடிமங்கலம் கல்வெட்டு
5-3-2011 அன்று, குடிமங்கலம் நோக்கிப் பயணம். குடிமங்கலம், உடுமலைக்கருகில் அமைந்துள்ள ஓர் ஊர். பல்லடம் வழியே நால்ரோடு அடைந்து பழநிச்சாமி அவர்களையும் பார்த்த பின்னர், அருகில் இருந்த அரசு மருத்துவ மனை வளாகத்தில் ஐந்தே முக்கால் அடி உயரத்தில், மூன்றரை அடி அகலத்தில் நெடிய தோற்றத்தில் காணப்பட்ட கல்வெட்டைப் பார்த்ததும் மலைப்பு; மகிழ்ச்சி. கல்வெட்டைப் படியெடுக்க வாய்ப்பில்லை. தற்போதுபோல் சுண்ணப்பொடி, மைதா/கடலை மாவு ஆகியவற்றில் ஒன்றைப் பூசிப்படமெடுக்கப் பழகவில்லை. ஒளிப்படக்கருவியில் படங்கள் எடுத்துக்கொண்டேன்.

கல்வெட்டுப் பாடம் படிப்பு
கல்வெட்டுப் படங்களைக் கணினி மூலம் படிக்க முயன்றதில், கல்வெட்டின் முதல் பக்கத்தை மட்டுமே படிக்க இயன்றது. கல்வெட்டின் முதல் பக்கத்தில் கல்வெட்டு வரிகள் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால், இரண்டாம் பக்கத்தில் நிலவும் கதிரும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. முழு வட்டமாகக் காணப்படுவது கதிரைக் குறிக்கும். பிறை வடிவில் உள்ளது நிலவைக்குறிக்கும். கல்வெட்டில் “இந்த தன்மம் சந்திராதித்தவரையும் செல்லக்கடவதாக”  என்று குறிப்பிடுவதற்கேற்றவாறு நிலவும் கதிரும் உருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு குறிப்பிடும் தன்மம் தடையின்றி நெடுங்காலம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதன் பொருளாகவே நிலவும் கதிரும் உள்ளவரை என்னும் தொடர் கல்வெட்டுகளில் தவறாமல் இடம்பெறும். இரண்டாம் பக்கத்தில் வாமனரின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பானது. நிலக்கொடை பற்றிய கல்வெட்டு என்பதால், மூன்றடி நிலம் கேட்ட வாமனரின் உருவம் பொறிக்கப்பட்டது என்னும் கருத்து முற்றும் பொருந்துகிறது. கல்வெட்டுப் பாடம் கீழ்வருமாறு:

                    கல்வெட்டின் முதல் பக்கம்   


கல்வெட்டின் பாடம் முதல் பக்கம்.

1 ஸ்வஸ்திஸ்ரீ விஜயோத்3பு4தய சாலிவாகன சகாத்தம் உ
2 1458 ன் மேல் செல்லா நின்ற துன்
3 முகி வரு. அற்பசி மீ 27 உ துவாதெசியும் புத
4 வாரமும் உத்தர நக்ஷரமும் பெற்ற னாள் ஸ்ரீ
5ன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ஸ்ரீவீரப்பி  
6 றதாப ஸ்ரீவீரஅச்சுதராய மகாராயர் பிறுது
7 விராச்சியம் பண்ணி அருளாநின்ற காலத்து அந்
8 த அச்சுதராய மகாராயற்கு தெக்ஷிணாபுயா தெண்
9 டமான காவேரிவல்லபன் கடகசூறைக்கா
10 றன் விருதின் வாயுவந்தி விருதகஜாசிங்கன் பெ
11 க்கெத்து ராசுல ஒக்கெத்து கண்டன் மண்டலீ
12 க மகலராசன் உறையூற் புரவராதீசுரன் பொன்னா
13 ம்பலநாத ஸ்ரீபாதசேகர காசிபகோத்திரத்
14 து ஆபஸ்தம்ப சூத்திரத்து சூரிய வங்கித்தில் சோ
15 ழகுல ஒங்கர சென்னையதேவ மகாராசாவின் பு
16 த்திரரான ஸ்ரீமன் மகாண்டலேசுர வாலையதேவ மகா
17 ராசா நம்முடைய சுவாமி அச்சுத்தராய மகாராயற்கு பு
18 ண்ணியமாக தென்பொங்கலூற்கா நாட்டுப் பூளை
19 யபாடிக் கால்பள்ளியான பெரியமங்கலம் நம்முடை
20 ய சுவாமி அச்சுத்தராயற்கு புண்ணியமாக பிராம
21 ண சத்திரத்துக்கு ஸ்ரீலட்ஷிமி நாராயண பிறீதியாக து
22 வாதெசி புண்ணிய காலத்தில் சயீரண்ணிய உத
23 க தானம் தராபூறுவமாக சறுவமானியமாகக் கு
24 டுக்கையில் இந்த பிராமண சத்திரத்து பெரிய ம
25 ங்கலத்து னாற்பாங்கெல்லைக்கு விபரம் கீழ்பா
26 ங்கு எல்லை உடையார்கோயில் குளத்தேரி வ
27 ட கீழை மூலை தான்தோன்றிக்கு வழிக்கு மேற்கு
28 நாச்சியப்ப நயினான் காட்டுக்கு வடக்கு நட்ட வாம
29 முத்திரைக் கல்லு தென் மேலை மூலைக்கு எல்
30 லை சுங்கரரி முடக்குக் கரையில் ஒற்றைப்புளியி
31 ல் நட்ட வாமன முத்திரைக் கல்லு வடமேலை மூலை
32 க்கு எல்லை தும்முரேவுக்கு கிழக்கு கொண்டன்
33 பட்டி எல்லைக்கு தெற்கு நட்ட வாமன முத்திரைக்
34 கல்லு வட கீழை மூலைக்கு எல்லை பூளைய பா
35 டி வழிக்கு மேற்கு பிள்ளையாண்டான் குட்டை
36 க்கு தெற்கு நட்ட வாமன முத்திரை கல்லு இந்த னா
37 ற்பாங்கெல்லைக்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை
38 தோட்டம் தொடுகை மாவடை மரவடை ச.....டை
39 ....................................................மகமை கத்தி காவிலி புற...
40 .....................................................நிதி நிஷேம் செல தரு பாஷா


குறிப்பு:  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம். பச்சை வண்ண எழுத்துகளால் காட்டப்பெறுகின்ற “வாமன முத்திரைக் கல்லு”  என்னும் சொல் சிறப்புடையது. விளக்கம் பின்னர் வரும் பகுதியில் காண்க.


ஆவணத்தில் பதிதல்
கல்வெட்டின் பாடத்தையும் சுருக்கச் செய்தியையும் எழுதித் தொல்லியல் கழகத்துக்கு அனுப்பி வைத்தேன். அந்தப் பதிவு 2011-ஆம் ஆண்டின் “ஆவணம்”  இதழில் வெளியானது.

மீண்டும் குடிமங்கலம்
10-8-2013 அன்று, நண்பர் விழுப்புரம் தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன் அவர்களோடு குடிமங்கலம் சென்றேன். அவர், கல்வெட்டில் மை பூசிப் படியெடுப்பதில் வல்லவர். மைப்படி எடுப்பதற்குரிய தாளினைக் கல்வெட்டின்மீது ஒட்டி, அதன்பின்னர் மைபூசி எடுப்பது வழக்கமாகச் செய்வது. குடிமங்கலம் கல்வெட்டு ஏறத்தாழ ஆறு அடி உயரமும் மூன்றரை அடி அகலமும் கொண்ட பெருங்கல்லாயிருந்ததனால், கற்பரப்பின்மீது நேரடியாகவே மையை ஒத்தி எடுத்துப் படி எடுத்தார். எழுத்துகள் மிகத் தெளிவாகத் தெரிந்தன. இரு பக்கங்களின் பாடங்களும் கிடைத்தன. இருவரும் இணைந்து ஆவணம்-2014 இதழில் ஆவணப்படுத்தினோம்.

                 கல்வெட்டின் இரண்டாம் பக்கம்

கல்வெட்டின் பாடம் இரண்டாம் பக்கம்.

1 றும் எற்பேற்பட்ட சகல சுவாமியங்களும் பெரி
2 யமங்கலத்தில் பிராமண சத்திரத்துக்கு நடந்துவ
3 ரக்கடவதாகவும் இந்த தன்மம் ந்திராதித்தவரையும்
4 செல்லக்கடவதாகவும் என்று ஸ்ரீமன் காண்ட
5 லேசுர வாலைய மகாராச நம்முடைய சுவா
6 மி அச்சுத்தராயற்கு ப் புண்ணியமாக பிராமண
7 சத்திரத்துக்கு வைத்த தென்பொங்கலூற்கா
8 நாட்டுப் பெரியமங்கலத்துப் பிராமண சத்தி
9 ரத்து தன்மம் சாதனம் இந்த சத்திரத்தை பிராம
10 ணால் ஆராகலும் நன்றாக நடத்தி வந்தான் அ
11 ந்த பிராமணனே இந்தக் கிறாமத்தையும் அனு
12 பவித்துக்கொண்டு இந்த பிராமண சத்திரத்தையும்
13 நன்றாக நடத்திக்கொண்டு வரக் கடவானாக(வும்)
14 இந்த தன்மத்துக்கு யாதொருவர் அகிதம் பண்
15 ணினவர்கள் கெங்கைக் கரையிலே கபிலை
16 ப்பசுவையும் பிராமணரையும் மாதா பிதாவை
17 யும் குருக்களையும் கொன்ற பாவத்திலே போ
18 கக் கடவராகவும்

19-23            வரிகள் கிரந்தம்-சமற்கிருதம்

24 பூவிரியுங்காவறை தென்பொங்கலூற்கா நாட்
25 டில் வாவிதெறியும் பெரியமங்கலத்தைக் கூவ
26 நகாமன்னிளையாந் தென்னுறையும் ................
27 அருளால் மறையோற் கன்னமி..........................
28 கண்டான்

குறிப்பு:  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

கல்வெட்டுச் செய்திகள்
விஜய நகரப் பேரரசின் அரசர்களுள் “துளுவ குடிவழியில் கிருஷ்ணதேவராயருக்குப்பின் ஆட்சியேற்றவர் அவரின் தம்பி (மாற்றாந்தாயின் மகன்) அச்சுத தேவ ராயர் ஆவார். அவரது ஆட்சிக்காலம் கி.பி. 1529 முதல் கி.பி. 1542 வரை (பாண்டியநாட்டு .வரலாற்று ஆய்வு மையம்-குறிப்பேடு). அவரது ஆட்சிக்காலத்தில், கி.பி. 1536-ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது இக்கல்வெட்டு. கல்வெட்டில் கொடுக்கப்பட்ட சாலிவாகன ஆண்டும், தமிழ் ஆண்டான துன்முகி ஆண்டும் கி.பி. 1536 ஆங்கில ஆண்டுடன் முற்றிலும் பொருந்துகிறது. கொங்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்றான தென்பொங்கலூர்க்கா நாட்டைச் சேர்ந்த பூளையபாடிப் பெரியமங்கலத்தில் இருக்கும் நிலம் இப்பகுதியின் பிராமணச் சத்திரத்துக்குக் கொடையாக அளிக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. அன்றைய பூளையபாடி இன்று பூளவாடி என்னும் பெயரில் பல்லடம்-உடுமலைச் சாலையில் உள்ளது.

கொடையாளி வாலையதேவ மகாராசா என்பவன். இவன் விஜய நகர் அரசர் அச்சுதராயரின் ஆட்சியில்,  கொங்குமண்டலத்தை நிருவாகம் செய்யும் மகாமண்டலேசுவரர் பதவியில் இருந்தவன். இவன் சென்னைய தேவ மகாராசாவின் மகன் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. காசிப கோத்திரத்து ஆபஸ்தம்ப சூத்திரத்தைச் சேர்ந்தவன் என்றும், சூரிய வம்சத்தைச் சேர்ந்தவன் என்றும் கல்வெட்டு விரிவாகச் சொல்கிறது. கல்வெட்டின் நான்கு வரிகள் இவனுடைய மெய்க்கீர்த்தியைச் சொல்வதாக அமைகின்றன. இவன் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் கொங்குப்பகுதியில் ஒரு அதிகாரியாய் இருந்தவன்; பின்னர் அச்சுதராயர் ஆட்சிக்காலத்தில் தென்மண்டல அலுவலனாக உயர் பதவியில் இருந்துள்ளான். விஜய நகர அரசர்கள் இவனுக்குப் பரவலான ஆட்சி அதிகாரம் அளித்துள்ளனர் எனலாம். ஏனெனில், இவன் தன் பெயரில் பாலையன் புள்ளிப் பணம் என்னும் நாணயம் அச்சிட்டு வெளியிட்டுள்ளான். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் குன்னத்தூரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கல்வெட்டு இச்செய்தியைக் குறிக்கிறது.

இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 180/1967-68
கல்வெட்டு வரிகள்:
    “ஸ்வஸ்திஸ்ரீ .............   குறுப்பு நாட்டுக் குன்றத்தூரில்........நாயனார் இலக்ஷ்மிநாராயணப் பெருமாள் கோயிலில்........பெருமாள் திருமுன்பே சந்தியா தீப விளக்கு எரிப்பதாக வாங்கின இராசி பாலையன் புள்ளி 12.....

குடிமங்கலம் கல்வெட்டில் வாலையதேவன்”  என இருப்பதையும், குன்னத்தூர் கல்வெட்டில் நாணயத்தின் பெயரில் “பாலையன்”  என்றிருப்பதையும் உன்னுக. தமிழில், “பா”   எழுத்து “வா”  எனத் திரிந்து வழங்குதல் இயல்பு.

பிற்காலக் கல்வெட்டுகளில் பாலயதேவன், வாலயதேவன் என்றும், பாலசுப்பன், வாலசுப்பன் என்றும் எழுதப்பெறுவது வழக்கம்.
                 -புலவர் செ.இராசு நூல்: தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50

கொங்குமண்டல சதகங்கள் எழுதிய மூன்று ஆசிரியர்களுள் ஒருவர் பெயர் வாலசுந்தரக் கவிராயர் என்பதையும் இங்கு நினைவில் கொள்ளலாம். அவரது இயற்பெயர் பாலசுந்தரக் கவிராயர் என்பது தெளிவு.  

ஈரோடு மாவட்டம், காங்கயம் வட்டம் அகிலாண்டபுரம் அகத்தீசுவரர் கோயில் கல்வெட்டு, இவன் கி.பி. 1532-இல் “தெக்ஷிணபுச”  என்னும் மண்டலத் தலைவனாக இருந்து பிருதிவி இராச்சியம் பண்ணி அருளாநின்றமையைக் குறிக்கிறது.

இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 246/1920
கல்வெட்டு வரிகள்:
         “...............ஸ்ரீ வீர அச்சுதரா
          யர் மகாராயர் காரியத்து
          க்கு கடவதான திம்மாத ணா
          யக்க உடையாற்கு தெக்ஷண
          புசமான வாலைய தேவ மகா
          ராசா பிறுதிவி இராச்சியம் ப
          ண்ணி அருளாநின்ற கலியுக சகா
          த்தம் 4633 க்கு மேல்
          செல்லா நின்ற திருநல்லி ஆண்
          டு நந்தன வரு.......................


கல்வெட்டில் 28-29, 31, 33, 36 ஆகிய வரிகளில் முத்திரைக் கல்லு என்பதாக  வரும் தொடரை முதலில் “வர்மன் முத்திரைக் கல்லு எனப்படித்து ஆவணப்படுத்தினேன். இப்போது மீள்படிப்பில் இத்தொடர், “வாமன முத்திரைக் கல்லு எனத் தெளிவு கிடைத்தது. மேலே குறிப்பிட்டவாறு பச்சை வண்ண எழுத்துகளால் காட்டப்பெறுகின்ற “வாமன முத்திரைக் கல்லு”  என்னும் சொல் சிறப்புடையது. கல்வெட்டில் ஒரு பக்கத்தில் தலைப்புப் பகுதியில், வாமன அவதாரத்தின் புடைப்புச் சிற்பம் காட்டப்பெற்றுள்ளது. இது வைணவம் சார்ந்த ஒன்று. விஜய நகரப் பேரரசை உருவாக்கிய சங்கம அரசர்கள் ஹரிஹரர், புக்கர் ஆகியோர் சைவத்தைத் தழுவியவர்களாக இருந்தனர். அவர்களது குல தெய்வம் விரூபாட்சர். பின்னால் வந்த துளுவ அரசர்கள் வைணவம் சார்ந்தவர்கள். எனவே, குடிமங்கலக் கல்வெட்டில் வாமன அவதாரச் சிற்பத்தைப் பொறித்துள்ளதில் வியப்பில்லை. ஆனால், வாமன முத்திரைக் கல்லு என்பது கொடைநிலம் பற்றியது.

சோழர் கல்வெட்டுகளில் திருச்சூலக்கல், திருவாழிக்கல் ஆகியவை குறிப்பிடப்பெறுகின்றன. கொடையாக அளிக்கப்பட்ட நிலங்களில் எல்லையைக் குறிக்க இந்தக் கற்கள் நாட்டப்பெற்றன. இவை எல்லைக்கற்கள் எனப்படும். கொடை நிலம் சிவன் கோயிலுக்கெனில் திருச்சூலக்கல்; விண்ணகரக் கோயிலுக்கெனில் திருவாழிக்கல். திருச்சூலக்கல்லில் சூலம் பொறிக்கப்பட்டிருக்கும்; திருவாழிக்கல்லில் ஆழி (திருமாலின் சக்கரம்) பொறிக்கப்பட்டிருக்கும். விஜயநகர ஆட்சியின்போது, தமிழகத்தில் சோழர்காலந்தொட்டு நிலவிய மேற்குறித்த எல்லைக் கற்களோடு மூன்றாவதாக “வாமன முத்திரைக் கற்களும் பயன்பாட்டில் இருந்துள்ளதைக்  குடிமங்கலம் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். எல்லைகளைக் குறிக்கும்போது, ஆறு, வாய்க்கால், வதி, மயக்கல்(மன்னறை), ஏரி, குளம், பெருங்கோயில், நாட்டார் தெய்வங்களின் சிறு கோயில்கள், தனியாரின் பெயரில் அமைந்த வயல் நிலங்கள் ஆகியவற்றின் பெயர்கள் இடம்பெறும். இவைபோன்ற குறிப்புகளைக் காட்ட இயலாதபோது எல்லைக்கற்களின் இருப்பிடங்கள் அடையாளம் காட்டப்பெறுகின்றன. விஜயநகரர் ஆட்சியில் கருநாடகப்பகுதியில் இவற்றை எல்லெ கல்லு   (தமிழின் உருவைத்தான் கன்னடம்  ஏற்றது என்பதற்கு இது ஒரு சான்று) என்பர். கோயிலுக்குத் தன்மமாகக் கொடுப்பதால் இவற்றைத் “த4ர்மத3 கல்லு  என்றும் குறிப்பர். கருநாடகக் கல்வெட்டுகளில், திருச்சூலக்கல்லை லிங்க முத்3ரெய கல்லு என்றும், திருவாழிக்கல்லை “வாமன முத்3ரெய கல்லு  என்றும் குறிப்பிடுவார்கள். இவற்றில் முறையே சிவலிங்க உருவமும், வாமனரின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். வாமனர் ஒரு கையில் குடையும் ஒரு கையில் நீர்ச் செம்பும் வைத்திருப்பார். விஜய நகரர் காலத்துக் கருநாடக வழக்கம் குடிமங்கலத்தில் அப்படியே மாற்றமேதுமின்றிப் பயின்று வந்துள்ளது. இதுதான் “வாமன முத்திரைக் கல்லு என்பதன் சிறப்பு. கல்->கல்லு  என உகரம் பெற்றதைக் காண்க. கொங்குப்பகுதியில் “வாமன முத்திரைக் கல்லு என்னும் தொடர் இதுவரை பார்த்த கல்வெட்டுகளில் காணப்படவில்லை. குடிமங்கலம் கல்வெட்டில்தான் முதன்முதலாகக் காணப்படுகிறது எனக் கருதுகிறேன். கல்வெட்டில் குறிக்கப்பெறும் நாச்சியப்ப நயினான் காடு, ஒற்றைப்புளி, கொண்டன் பட்டி, பிள்ளையாண்டான் குட்டை ஆகிய இடங்களைக் குடிமங்கலம் பகுதியில் தேடி இனம் கண்டால் நான்கு வாமன முத்திரைக் கற்கள் கிடைக்கக்கூடும்.

கொடை நிலத்தின் பரப்பு அதன் எல்லைகளைக் குறிப்பதன் வாயிலாக அறியப்படும். கல்வெட்டில் கொடை நிலத்தின் எல்லைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. எல்லைகளைக் குறிக்கையில் உடையார்கோயில் குளம், நாச்சியப்ப நயினான் காடு, பூளையபாடி வழி, பிள்ளையாண்டான் குட்டை ஆகிய சில இடப்பெயர்கள் காணப்படுகின்றன. உடையார் கோயில் என்னும் கோயில் இப்போதும் உள்ளதா என்பது ஆய்வுக்குரியது.

நான்கெல்லைகளுக்குட்பட்ட கொடை நிலத்தைச் சேர்ந்த நஞ்சை, புஞ்சை வயல்கள், தோட்டம் ஆகியன கொடை பெற்றோரின் பயன்பாட்டு நுகர்வுக்கு உரியன. கல்வெட்டில் தோட்டத்துக்கு அடுத்து தொடுகையும் காணப்படுகிறது. (தொடு=தோண்டு). கல்வெட்டுச் சொல்லகராதியில் இச்சொல் இல்லையெனினும், இது கிணற்றை குறிப்பது கண்கூடு. தோட்டம்-துரவு, தோப்பு-துரவு  என்னும் சொல் வழக்கு இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் சோழர் கல்வெட்டுகளில் பயிலும் “மேல் நோக்கிய மரமும் கீழ் நோக்கிய கிணறும்”   என்னும் தொடரால் இதை உணரலாம்.  அடுத்து மாவடை, மரவடை என்னும் சொற்கள். இவை முறையே கொடை நிலத்திலிருக்கும் மரங்கள், விலங்குகள் மூலம் வரும் வருவாயைக் குறிக்கும். மகமை என்பது வணிகர்கள் தாமாகவே தம் விற்பனையிலிருந்து கோயில், சத்திரம் போன்ற அறநிலையங்களுக்குச் செலவளிக்க வசூலிக்கும் ஒரு வகையான வரி. (புலவர் செ.இராசு). அடுத்துக் காணப்படுகின்ற கத்தி காவிலி”   என்பதன் பொருள் தெரியவில்லை. அடுத்து, நிதி நிஷேபம் செல தரு பாஷா(ணம்)  என்னும் தொடர், கொடை கொடுத்த நிலத்தில் புதையல், நீர், மரம், மணிகள் கிடைத்தால் கொடை பெற்றவர் பயன்படுத்தலாம் என்பதைக் குறிக்கும். (புலவர் செ.இராசு)

இறுதியாக, பிராமணச் சத்திரத்தை நன்றாக நடத்திவரும் பிராமணன் பெரியமங்கலம் கிராமத்தின் பொறுப்பையே ஏற்கலாம் என்றும், இந்தத் தன்மத்துக்குத் தீங்கு (அகிதம்) செய்தவர்கள், கங்கைக் கரையில் பசுவையும், பிராமணனையும், பெற்றோரையும், ஆசானையும் கொன்ற பாவத்தை அடைவார்கள் எனக் கல்வெட்டு அறிவுறுத்துகிறது. இதை “ஓம்படைக்கிளவி என்று கல்வெட்டியலில் குறிப்பிடுவர். கல்வெட்டின் இறுதியில் ஐந்து வரிகள் கிரந்த எழுத்துகளில் சமற்கிருதத் தொடர்கள் காணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து செய்யுள் வடிவில் தமிழில் எழுதப்பட்ட வரிகள், வளமிக்க தென்பொங்கலூர்க்கா நாட்டுப் பெரியமங்கலத்தில் மறையோர்க்கு அன்னமிடச் சத்திரம் நிறுவப்பட்டது என்பதாகச் சுருக்கமாகக் கல்வெட்டின் கருத்தைச் சொல்லி நிறைவு செய்கிறது.

முடிவுரை
பல்வேறு செய்திகளைத் தன்னகத்துக் கொண்ட சிறப்பானதொரு கல்வெட்டாகக் குடிமங்கலக் கல்வெட்டு திகழ்ந்து கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு ஒரு பயிற்சிப்பட்டறையாய் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. விஜய நகர ஆட்சியில் கல்வெட்டுகளில் தமிழின் ஆட்சி மங்கியது என்பதற்கும் இக்கல்வெட்டு சான்றாய் உள்ளதென்பதில் ஐயமில்லை.










து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
மின்னஞ்சல் :  doraisundaram18@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக