மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 10 செப்டம்பர், 2016

விஜயநகரம் ஹம்பி பயண நினைவுகள்-1

கி.பி. 1336-ஆம் ஆண்டு. இந்தியநாட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு, தென்னிந்திய அரசியல் சூழ்நிலையையே மாற்றியமைத்ததாகச் சொல்லப்படுகிறது. விஜயநகரம் என்னும் ஒரு வெற்றித் திருநகரமும் ஓர் அரசும் உருவான நிகழ்வுதான் அது.. வரலாற்றில் அது ஒரு திருப்பம். தென்னிந்திய அரசுகள் யாவும் முடங்கிப்போயிருந்த நிலையில் அவையனைத்தையும் இணைத்து ஒரு பேரரசு உருவாக அடித்தளம் இட்ட நிகழ்வு. அந்தப்பேரரசு இந்தியப்பண்பாட்டை, குறிப்பாகத் தென்னிந்தியப்பண்பாட்டைக் காத்தது எனில் மிகையல்ல. அரசியல், கலை, பண்பாடு, வணிகம் போன்ற பல நிலைகளிலும் புகழின் உச்சியில் விளங்கிய அப்பேரரசின் தலைநகரான விஜயநகரம் இன்று ஹம்பி என்னும் பெயரில் அழிவின் எச்ச உருவாகக் காணப்படுகிறது. எச்சத்தின் பரப்பு மட்டுமே ஏறத்தாழ பதினாறு கி.மீ. தொலைவினை ஆரமாகக்கொண்டது எனில், உயிர்ப்புடன் விளங்கிய காலத்தில் அத்தலைநகரின் சிறப்பும் அழகும் பெருமையும் எவ்வாறிருந்தன என்று கற்பனை செய்யலாம். தற்காலம் இங்கு வருகின்ற வெளிநாட்டுப்பயணிகள் ஹம்பியை பண்டைய உரோமானிய பாம்ப்பே”  நகரத்துடன் ஒப்பிடுகின்றனர்.

ஹம்பி நகரைக் காணவேண்டும் என்று ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், வேளாண் தொழிலில் மேன்மையும் வரலாற்று அறிவும் மிக்க ஓர் உழவரும், தொல்லியலில் பட்டயப் படிப்பு முடித்த வரலாற்று ஆர்வலரும் கல்லூரியொன்றில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும் ஆன முனைவர் ஒருவரும் (ஆக மூவர்) கடந்த ஈராண்டுகளாகத் திட்டமிட்டு, ஜூன், 2016 ஒன்பதாம் நாள் பயணத்தைத் தொடங்கினோம். 16 கி.மீ. ஆரப்பரபினைக் காணப் பலநாள்கள் வேண்டும் என்னும் சூழலில் ஜூன் பத்து, பதினொன்று ஆகிய இரு நாள்களின் பகல்போதுகளில், உண்ணும் நேரம் நீங்கலாகக் கிடைத்த நேரத்தில் காணமுடிந்த இடங்கள் எவ்வளவு இருக்கமுடியும்? குறைவான எண்ணிக்கையே என்றாலும் நாங்கள் கண்ட ஹம்பியின் காட்சிகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். காட்சிப்பகுதிகள் மொத்தம் எண்பத்துமூன்று என்று தொல்லியல் துறையினர் பட்டியலிட்டுள்ளனர். அவை என்ன என்று இத்தொகுப்பின் இறுதியில் கூறுகிறேன். (அந்த மூவர்: உழவர் இராமசாமி, தூக்கநாயக்கன்பாளையம்,சத்தி, பேரா.கருப்புசாமி, வாசவி கல்லூரி, பவானி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம், கோவை)

ஜூன் பத்தாம் நாள் காலை காட்சிப்பயணம் தொடங்கியது. பெல்லாரி மாவட்டம், ஹொசப்பேட்டையிலிருந்து கமலாபுரம் சென்று அங்கிருந்து ஹம்பி சென்றோம்.
சந்திரசேகரர் கோயில்
கமலாபுரத்திலிருந்து செல்வோர் ஹம்பியில் நுழைந்தவுடன் முதலில் காணக்கிடைப்பது சந்திரசேகரர் கோயிலாகும். நுழைவாயிலில் மூன்று நிலை கொண்ட கோபுரம் உள்ளது. உள் நுழைந்து சென்றால் இரண்டு கருவறைகள், அவற்றின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன.
குறிப்பு : குறிப்பு என்னும் இப்பகுதி ஆங்காங்கே எழுதப்படும். அடிப்படையில் பல செய்திகள் நமக்குத் தெரியாமல் இருக்கின்றன. அதிலும் கோயில் கட்டடக்கலை, சிற்பங்கள் ஆகியன பற்றிய சில பொதுப்படையான நுணுக்கங்கள் நம்மில் பலருக்குத் தெரிந்திரா. இவை, இப்பகுதியில் ஓரளவு குறிக்கப்படும். (கல்வெட்டுகளைப்பற்றிச் சற்றே தெரிந்து வைத்திருந்தாலும் கோயில் கட்டடக்கலை, சிற்பங்கள் ஆகியன பற்றித்தெரிந்துகொள்வதில் நானும் மாணவனே.) இவை பற்றித்தெரிந்தவர்கள் குறைகளைச் சொல்லித்திருத்தலாம். கோபுரம், விமானம் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. கருவறைக்குமேல் எழுப்பப்படுவது விமானம். கோயிலின் நுழைவுப்பகுதியில் இருப்பது கோபுரம்.

                மூன்று நிலைக்கோபுரம் - உச்சியில் சாலை அமைப்பு


இங்கே, சந்திரசேகரர் கோயிலில் இரு விமானங்கள் உள்ளன. இரு கருவறைகள் இருந்தால் இந்த அமைப்பை துவிகூட”  (இருகூடங்கள்) என அழைக்கிறார்கள். இக்கோயில், பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் கட்டுமானம். ஒன்று சிவன் கருவறை. மற்றது இறைவியாருடையது. சிவன் கருவறை விமானம் திராவிட விமானம்; இறைவியின் விமானம் சாலை விமானம்.
குறிப்பு : கருவறை விமானங்கள் நாகரம், திராவிடம், வேசரம், சாலை எனப்பலவகைப்படும். வட்டமான விமானம் வேசரம்; சதுரமான விமானம் நாகரம். எண்கோணவடிவமாக இருப்பின் திராவிடம். (எண்கோணவடிவம், ஏறத்தாழ ஒரு வட்டத்தை ஒத்திருக்கும்.) கோபுரங்களின் உச்சியில் காணப்படும் கலசங்களுடன் கூடிய நீண்டதொரு அமைப்பு சாலை விமானம். 

                     கோபுரத்தின் சுவர்ப்பகுதி - தூண்கள் 
                     தூண்களுக்கிடையில் கும்பபஞ்சரம்

கோபுரத்தின் சுவர்ப்பகுதி தனியே காட்டப்பட்டுள்ளது. இதில் மூன்று முழுத்தூண்களும், ஓர் அரைத்தூணும் உள்ளதைக் காணலாம். தூண்களுக்கிடையில் காணப்படுவது கும்பபஞ்சரம் என்று அழைக்கப்படும். பெயருக்கேற்றவாறு அதன் கீழ்ப்பகுதியில் ஒரு கும்பத்தின் உருவம் உள்ளது. கும்பத்தின் இருபுறமும் அழகான தோகை போன்ற வேலைப்பாடு கும்பத்தை அணி செய்கிறது. இதைவிட மிக அழகாக வடிக்கப்பட்ட கும்பபஞ்சரம் ஹம்பியிலேயே வேறொரு கோயிலில் உள்ளது. அதன் படம் கீழே:


                                 கும்பபஞ்சரம்


இரு கருவறை விமானங்களும் ஒருங்கே காட்சிதரும் படங்கள் கீழே.   


              இடப்புறம் சாலை அமைப்பு, வலப்புறம் திராவிட அமைப்பு


              இடப்புறம் திராவிட அமைப்பு, வலப்புறம் சாலை அமைப்பு


மேலேயுள்ள படத்தில் முன்புறம் காணப்படும் மண்டபத்தின் தூண்களில் பல்வேறு சிற்பங்கள் காணப்பட்டன. மண்டபத்தின் முகப்புத்தோற்றம் கீழே:



மண்டபத்தூண் சிற்பங்களுள் ஒரு சில நம்மைக் கவரும். இடையன் ஒருவன் கையில் கோலுடனும், உடல் முழுக்கப் போர்த்தியவாறும், ஒரு காலை மடக்கி நின்றவாறு இருக்கும் சிற்பம் ஒன்று. இதுபோன்ற சிற்பத்தை நம் தமிழகக் கோயில்களிலும் தவறாமல் காணலாம். இது போன்ற சிற்பத்தைப் பார்த்தவுடன் இனி, இது விஜயநகரத்துக் காலத்துப்பாணி என்று எளிதில் அடையாளம் காணலாம். (இந்தப்பாணி, பின்னர் வந்த நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்தது).

           இடையனின் சிற்பம் - கையில் கோல், உடல்மீது போர்வை



இரு கருவறைகளின் சுவர்ப்பகுதியில், இருவகையான தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. தேவகோட்டம் என்பது ஒரு சிறிய கோயிலைப்போலத் தோற்றமளிக்கும் ஓர் அமைப்பு. (Niche). இறையுருவங்களை இங்கே வைப்பதுண்டு. (நம் ஊர்க்கோயில்களில், தெற்குச் சுவரில் காணப்படும் தட்சிணாமூர்த்தியின் இறையுருவத்தையும், அந்தச் சிற்ப உருவம் அடங்கிய கூட்டையும் நினைத்துக்கொள்க) இங்கே, ஒரு தேவகோட்டத்தில் சாலை அமைப்பும், மற்றொன்றில் பொதுவான அமைப்பும் காணப்படுகின்றன. சாலை அமைப்புத்தேவகோட்டத்தின் இருபுறமும் இரு கும்பபஞ்சரங்கள் இருப்பதையும் காணலாம்.

                      சாலை அமைப்புத் தேவகோட்டம்- கும்பபஞ்சரங்கள்



                    தேவகோட்டம் பொதுவான அமைப்பு

நுழைவாயில் கோபுரத்தின் சுற்றுச்சுவரை நன்கு பார்க்கவேண்டும். கல்லால் எழுப்பப்பட்ட சுவராயிருப்பினும், முழுக்கட்டுமானமும் கற்களால் கட்டப்படவில்லை. சுவரின் உட்புறமும், வெளிப்புறமும் கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. இவையிரண்டுக்கும் இடையில் செங்கல் கட்டுமானம் உள்ளது. கற்கள் பெயர்ந்து, உள் கட்டுமானம் (செங்கல் கட்டுமானம்) தெரிவதை நோக்குக. இந்த அமைப்பால் சுவரின் பருமை கூடுகிறது. 




காட்சிகள் தொடரும்.

---------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக