மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 7 மார்ச், 2016

அறச்சலூர் பிராமிக்கல்வெட்டு

வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய தொல்மாந்தர்

         வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய தொல்மாந்தர்  தாங்கள் பார்த்தவற்றை நினைவுபடுத்திக்கொள்ளவும், தங்கள் எதிரில் இல்லாதவர்க்குக் காலம் இடம் கடந்து செய்தி தரவும் படங்கள், குறியீடுகள் ஆகியவற்றைத் தாங்கள் தங்கியிருந்த குகைப்பாறைகளில் வரைந்தனர். இத்தகைய பாறை ஓவியங்களே எழுத்துகளுக்கு அடித்தளங்களாயின. எழுத்துகள் கிடைத்த காலத்திலிருந்துதான் வரலாறு தொடங்குகிறது என அறிஞர்கள் வகுத்திருக்கிறார்கள்.

தொன்மை எழுத்துகள்

         குறியீடுகளிலிருந்து எழுத்து வந்தது என்று கருதப்படுகிறது. மிகத்தொன்மையான எழுத்து வடிவத்துக்குச் சான்றாக, இந்திய அளவில் இன்றுள்ள பலவேறு எழுத்துகளுக்கு முன்னோடியாக விளங்குபவை கரோஷ்டி, பிராமி என்ற இரு தொன்மை எழுத்துகளே ஆகும்.  இன்று வழக்கிலுள்ள, இடமிருந்து வலமாக எழுதப்படும் எழுத்துகளுக்கு முன்னோடி பிராமி எழுத்தாகும். வலமிருந்து இடமாக எழுதப்படும் அரபி, பாரசீகம் முதலிய எழுத்துகளுக்கு முன்னோடி கரோஷ்டியாகும். இந்தியா முழுதும் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்து, தமிழகத்தில் தமிழ்-பிராமி என அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியை மட்டுமே எழுதப்பயன்பட்ட இவ்வெழுத்து “தமிழி என்றும் அழைக்கப்பபடுகிறது.

சமணக்குகைத்தளங்களும் தமிழ்-பிராமியும்

         தமிழ்-பிராமி எழுத்துகள் தமிழகத்தில் ஏறத்தாழ முப்பது ஊர்களில் மலை சார்ந்த குகைத்தளங்களில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் சிறு குன்றுகள் மற்றும் உயர்ந்த மலைகளில் இயற்கையாக அமைந்த குகைத்தளங்களில் காணப்படுகின்றன. இக்குகைத்தளங்களில் பெரும்பாலும், மக்களையும் ஊர்களையும் விட்டு ஒதுங்கி மிக எளிமையாக வாழும் தன்மையினரான சமண முனிவர்கள் தங்கியிருந்தனர். அவர்கள், தங்களின் தனிமைத்தவத்தோடு, கல்வி, அடைக்கலம், மருத்துவம் ஆகிய மூன்று அறங்களையும் கடைப்பிடித்தனர். அவர்களது அறநெறி வழிகாட்டலில் ஈர்க்கப்பட்ட மக்கள் அவர்கள்பால் கொண்ட பெருமதிப்பின் காரணமாக இக்குகைத்தளங்களில் துறவிகள் படுத்துறங்க எளிமையான கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்தனர். மழை நீர் குகைத்தளங்களில் செல்லாமல் தடுக்க குகைப்பாறையின் முகப்பில் விளிம்புப் புடைப்புகளை வெட்டிக்கொடுத்தனர். குடிநீருக்காகச் சுனைகளையும் அமைத்துக்கொடுத்தனர். இவ்வகையான அறச்செயல்களைக் கல்வெட்டுகளாக வெட்டிப் பதிவுசெய்தனர். கல்வெட்டுகள் இவ்வறச்செயல்களைத் “தம்மம் , “அறம்”  என்னும் சொற்களால் குறிப்பிடுகின்றன.

         இவ்வகைக் குகைத்தளங்கள் எளிமையானவை, ஒதுக்குப்புறமானவை. எனினும் அக்குகைத்தளங்களிலிருந்து பார்க்கும்போது அவற்றின் எதிரே மிகப்பரந்த சமவெளியினைக்காணமுடிகிறது. நெடுந்தூரத்து நிகழ்வுகளை நோக்கும் வண்ணம் அவற்றின் குறுக்கே எவ்விதத் தடைகளும் இல்லாத குகைத்தளங்களாக அவை அமைந்திருப்பதைக்காணலாம். தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ள இடங்கள் பெருவழிகளை அடுத்தும், பண்டைய நகரங்கள் மற்றும் வணிகச்சிறப்புடைய ஊர்களை அடுத்தும் இருப்பதைக் காணலாம்.    
      

அறச்சலூர் சமணக்குகையும் தமிழ்-பிராமிக் கல்வெட்டும்

         தமிழ்-பிராமிக்கல்வெட்டுகள் காணப்படும் ஊர்கள் முப்பது என்று மேலே குறிப்பிட்டோம். அவற்றில் பதினான்கு ஊர்கள் மதுரை மாவட்டத்தைச்சேர்ந்தவை. நெல்லை, விழுப்புரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரண்டிரண்டு ஊர்கள். கொங்குப்பகுதியில் சேலம் மாவட்டத்தில் ஒன்றும், கரூர்ப்பகுதியில் ஒன்றும், ஈரோடு பகுதியில் ஒன்றும் என மூன்று ஊர்களில் கல்வெட்டுகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில், ஈரோட்டுக்கருகில், ஈரோடு-காங்கயம் சாலையில் அமைந்துள்ள அறச்சலூர் கல்வெட்டைச் சென்ற 27-02-2016 அன்று கட்டுரை ஆசிரியரும், அவிநாசி வரலாற்று ஆர்வலர் ஜெயசங்கரும் சென்று பார்த்தனர். தமிழகத்தின் தொன்மையான எழுத்தைக்கொண்டிருக்கும் கல்வெட்டு நம் பகுதியில் அறச்சலூரில் இருக்கும் வரலாற்றுப்பெருமை நம்மில் பலருக்குத் தெரியாது என்னும் காரணத்தாலும், இச்செய்தி நாளிதழில் வெளியிடப்பட்டு அதன் மூலம் அறச்சலூர் ஊர்மக்களுக்குத் தம் ஊரின் சிறப்பு புலப்படவேண்டும் என்னும் காரணத்தாலும் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

அமைவிடமும் மலைப்பாதையும்

         அறச்சலூர், முன்னர் குறிப்பிட்டவாறு, ஈரோடு-காங்கயம் சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். ஊரை அடைந்து அங்கே இருப்பவர்களிடம் சமணக்குகையைப்பற்றியும் கல்வெட்டைபற்றியும் கேட்டோம். நன்கு தெரிந்தவர் கிடைக்கவில்லை. பின்னர், அப்பகுதியில் கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் கேட்டபோது அவ்வூர் இளைஞர் சுரேஷ் என்பவர் அறிமுகமானார். அவர் வழிகாட்ட நாங்கள் பின்தொடர்ந்தோம்.. கல்வெட்டு அமைந்திருக்கும் மலை நாகமலை என்னும் பெயருடையது. காங்கயம் சாலையில் ஓரிடத்தில் வாய்க்கால் ஒன்றும், வாய்க்காலை ஒட்டி ஒரு சிறிய சாலையும் உள்ளன. இந்தச்சாலையில் சிறிது தொலைவு சென்று மலையடிவாரத்தை நோக்கியுள்ள ஏற்றமான மண் பாதையில் சற்றுத்தொலைவு சென்றதும் கருவேல முள்மரங்கள் நிறைந்த பகுதி தென்பட்டது. அந்த முள்மரங்களினூடே சிறிது தொலைவு நடந்து சென்றதும் மலையின் அடிவாரப்பாறைப்பகுதி தென்பட்டது. 




பாறைகளுக்கிடையில் பத்துப்பதினைந்து நிமிடங்கள் ஏறிச்சென்றதும், ஒரு பாறைப்பிளவு தென்பட்டது. அருகில் சென்றோம். குறுகலான ஒரு குகைத்தளம். முகப்பிலிருந்து சற்றே உள்பகுதியில் நுழைந்ததும், நாம் நிமிர்ந்து நின்ற நிலையிலிருந்து குனியவேண்டிய நிலை. குனிந்து சென்று அமர்ந்தோம். சமணத்துறவிகளுக்கு வெட்டிக்கொடுத்த படுக்கைகள் (நன்கு பார்த்தால்தான் அவை படுக்கைகள் எனத்தெரியும்) இருந்தன. ஒரு படுக்கையின் தலைப்பகுதியில் இரு வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. குகைத்தள வாயிலில் நின்று எதிரே பார்த்தால் தடைகளற்ற பரந்தவெளி தெரிந்தது. 







            















கல்வெட்டும் அதன் செய்தியும்  

         இந்தக்கல்வெட்டைப் பார்க்கக் கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்களும் மாணவர்களும் வந்துபோயிருக்கின்றனர் என அறிந்தோம். எனவே கல்வெட்டின்மீது சாக்கட்டியால் விளம்பியிருந்தது வியப்பை அளிக்கவில்லை. 


                         விளம்பிய நிலையில் கல்வெட்டு:

விளம்பிய நிலையில் அதைப்படிக்க முடிந்தாலும், எழுத்துகளின் சரியான வடிவத்தை ஓரளவு தெரிந்துகொள்ள சாக்கட்டி விளம்பலை நீர்கொண்டு கழுவித் துடைத்துவிட்டு, எழுத்துகளின் பொறிப்புப் பள்ளங்களில் நீரில் கலந்த வெள்ளைச் சுண்ணத்தூளைப்பூசிக் காயவிட்டுப்பார்த்தோம். ஓரளவு எழுத்துகளின் வடிவம் புலப்பட்டது. கல்வெட்டின் பாடம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் வெளியிட்ட “தமிழ்-பிராமி கல்வெட்டுகள் நூலில் காணப்படுகிறது. பாடம் வருமாறு:

வரி 1     எழுத்தும் புணருத்தான் மணிய்
வரி 2     வண்ணக்கன் தேவன் சாத்தன்




மணிவண்ணக்கனான தேவன் சாத்தன் (இசை) எழுத்துகளைச் சேர்த்தமைத்தான் என்பது இதன் பொருளாகும். இசை எழுத்துகள் பற்றிச் சிலப்பதிகார உரையில் (சிலம்பு 17:13 உரை)  அடியார்க்குநல்லார், “பாலைஎன்னும்  படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் குறிப்பிடுகிறார். அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர். இந்தச்சதுரப்பாலையின் வடிவத்தில் ஒரு கல்வெட்டு அருகிலேயே  பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு சிதைந்துள்ளது. மேலே குறிப்பிட்ட நூலில் கொடுக்கப்பட்ட கல்வெட்டுப் பாடம் வருமாறு:

வரி 1     த  தை  தா  தை   த

வரி 2    தை  தா  தே  தா  தை

வரி 3    தா  தே  தை  தே  தா

வரி 4    தை  தா  தே  தா  தை

வரி 5    த  தை  தா  தை   த

இந்தச்சதுரத்தில், இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக எப்படிப் படித்தாலும் ஒன்றுபோல் அமைந்துள்ளதைக்காணலாம்.

எழுத்துப்புணருத்தான் கல்வெட்டு – சில விளக்கங்கள்
இக்கல்வெட்டுக்குப் பாடபேதங்களும் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கவை கீழ் வருமாறு. 

முதலாவது:

வரி 1     எழுத்துப் புணருத்தான் மணிய்
வரி 2     வண்ணக்கன் தேவன் சாத்தன்

இரண்டாவது:

வரி 1     எழுத்தும் புணருத்தான் மலைய்
வரி 2     வண்ணக்கன் தேவன் சாத்தன்

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (15)
“மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல்” (104)
என்னும் தொல்காப்பிய விதிப்படி, மெய்யெழுத்துகள் புள்ளிபெற்று அமையவேண்டும். அதுபோலவே, , ”  ஆகிய நெடில் எழுத்துகளும் குறிலாக்க் காட்டும்போது புள்ளிபெறும் மரபு இருந்துள்ளதைத் தொல்காப்பியம் கீழ்வருமாறு கூறுகிறது:

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே

அறச்சலூர்க் கல்வெட்டில் இந்த விதிமரபு கடைப்பிடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கல்வெட்டின் முதல் எழுத்தாகிய “எகுறிலில் புள்ளி இருப்பதைக் காணலாம்.

வட்டெழுத்தின் தொடக்க நிலை

இக்கல்வெட்டின் எழுத்துகள் பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து தோன்றுவதற்கு அடிப்படையான மாற்றத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் நேர்கோடுகளால் அமைந்த பிராமி எழுத்தின் திருந்திய வடிவம் சற்றே மாறுபட்டு வளைவுகள் நிரம்பப்பெற்றதாக உருக்கொண்ட நிலையை இங்கு காண்கிறோம். மேலும், பிராமி எழுத்துகள் போலன்றி, எழுத்துகள் தலைக்கோடு பெற்றுள்ளதைக் காணலாம்.
கல்வெட்டில் வரும் வண்ணக்கன் என்னும் சொல் ஆய்வுக்குரியது. புறநானூறுப்பாடல்-198 வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் என்னும் புலவர் பாடியது. புறநானூற்றுக்கு உரை எழுதிய ஔவை.சு.துரைசாமிப்பிள்ளை தம் குறிப்புரையில், வண்ணக்கன் என்னும் பெயர் பொன்னோட்டம் பார்க்கும் தொழிலினரைக் குறிப்பதாகும் என்று கூறுகிறார். இது, பொன்னின் தரத்தையும், பொற்காசின் தரத்தையும் பார்ப்பவர் என்று பொருளாகிறது. இந்த வண்ணக்கன், மலை வண்ணக்கனா அல்லது மணி வண்ணக்கனா என்னும் ஐயம் ஏற்படக்காரணம், கல்வெட்டில் இந்தப்பெயரில் வரும் ஓர் எழுத்து, “ணிமற்றும் “லைஎன இருவேறு வகையில் படிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் மேலே குறிப்பிட்ட நூலில், முடிவாக “மணிஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, நூல் குறிப்பில், “மணி என்பதைவிட மலை என்பதே எழுத்தின் அடிப்படையில் ஏறத்தாழ சரியாக உள்ளதுஎனக் கூறப்பட்டுள்ளது. எழுத்தைக் கல்லில் பொறித்த சிற்பி இந்த ஓர் எழுத்தை மட்டும் தெளிவாகச் செதுக்காமல் விட்டது இவ்வாறான ஐயம் எழ இடமளித்தது எனலாம். மலை வண்ணக்கன் என்பது மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த வண்ணக்கன் என்ற குடியைச் சேர்ந்தவன் எனப்பொருள்படும். ஆனால், அறச்சலூருக்கு அண்மையில் உள்ள கொடுமணல் என்னும் ஊரில் செய்யப்பட்ட அகழாய்வில் சங்ககாலத்திய வண்ணமணிகள் செய்யப்பட்ட தொழிற்கூடங்கள் அறியப்பட்டுள்ளதால் மணிகளைச் சோதிப்பவன் என்பதும் பொருந்துகிறது.       

இப்போது கல்வெட்டின் எழுத்துகளைப் பார்த்து “மணிவண்ணக்கன்” , “மலைவண்ணக்கன்ஆகியவற்றில் மிகையாக எது பொருந்திவருகிறது எனக் காண்போம்.



                                     
                                                                கல்வெட்டின் மூலம்


                                                         

                                          
                                                        கலவெட்டின்  பார்வைப்படி - பிராமி வடிவம்



                                            கலவெட்டின்  பார்வைப்படி -  வட்டெழுத்தாக மாற்றம்



                                 ம    ணி/லை  ய்

முதல் எழுத்து -  “ம”   

                                 பிராமி வடிவம்  

                              வட்டெழுத்தாக மாற்றம்  

இரண்டாவது எழுத்து - “ணி”

                                      பிராமி வடிவம்  


                               வட்டெழுத்தாக மாற்றம்           


இரண்டாவது எழுத்து - ”லை”
                       


                                             பிராமி வடிவம்  

கல்வெட்டில் உள்ள எழுத்தை “லை” எனக்கொண்டால், பிராமி வடிவ “லை”  எழுத்துக்கும் கல்வெட்டில் உள்ள வட்டெழுத்தாக மாற்றம் கொண்ட “லை” எழுத்துக்கும் ஒற்றுமை இல்லை என்பது புலப்படும். எனவே, கல்வெட்டில் உள்ள எழுத்து “ணி” எழுத்தோடு ஒத்துப்போகிறது. ஆதலால், “மணிவண்ணக்கன்”  என்ற பாடம் சரியெனத்தோன்றுகிறது. 

       இத்தகு சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகளை 1960-ஆம் ஆண்டில் கண்டறிந்தவர் ஈரோட்டுப்புலவர் இராசு அவர்கள். இவர் பின்னாளில் முனைவர் பட்டம் பெற்றுத் தஞ்சைப்பல்கலையில் கல்வெட்டுத்துறையின் தலைவராக இருந்து பணிஓய்வு பெற்றவர்.
புகழ்பெற்ற இக்கல்வெட்டு, தொல்லியல் துறையின் தகவல் பலகைகூட இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் தூய்மையின்றி உள்ளது வருத்தமளிக்கும் செய்தியாகும். ஊர்மக்களின் ஒத்துழைப்போடு இந்த இடத்தைத் தூய்மைசெய்து, ஒரு தகவல் பலகையை நிறுத்திக் கல்வெட்டு அழியாமல்  பாதுகாப்பது அவசியமாகிறது.



து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக