மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

தாசபாளையத்தில் மல்லாண்டை

         அண்மையில் கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் மற்றும் அவிநாசியைச் சேர்ந்த வரலாறு-கல்வெட்டு ஆர்வலர் ஜெயசங்கர் ஆகியோர் அன்னூர் பகுதியில் கள ஆய்வுக்காகச் சென்றிருந்தபோது, மக்கள் வழக்காறு மற்றும்  பழங்கால வழிபாட்டு மரபு சார்ந்த மல்லாண்டைக்கல் ஒன்றினைக் காணும் வாய்ப்பு அமைந்தது.

         கோவை மாவட்டம் அன்னூரை அடுத்து அமைந்துள்ள ஒரு சிற்றூர் தாசபாளையம். அங்கு பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே சதுரமான மேடை ஒன்றும், மேடையின்மேல் வழிபாட்டுக்கான ஒரு சிறிய கோயிலமைப்பும் காணப்பட்டன. மேடையின் நடுவில் கல்லொன்று நாட்டப்பட்டிருந்தது. அருகில் இரண்டு மூன்று வேல்கள் நிறுத்தப்பெற்றிருந்தன. ஒரு விளக்குக் கூடும் இருந்தது.  அதன் அருகிலேயே, சாலையைத் தொட்டவாறு மூன்றரை அல்லது நான்கு அடிகள் உயரத்தில் ஒரு பெருங்கல்லும் காணப்பட்டது.

         வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய கால மக்கள், தாம் போற்றிய தலைவன் இறந்துபட்டபோது, தம் வாழிடத்துக்கருகில் அவன் நினைவாகப் பெருங்கல் ஒன்றை நாட்டி வழிபடுவர். இது போன்ற தொன்மைக்கல்லைத் தொல்லியலில் நெடுங்கல் என்றும் குத்துக்கல் என்றும் குறிப்பிடுவர். இது ஒருவகை நடுகல்லாகும். இங்கே தாசபாளையத்தில் காணப்பட்ட பெருங்கல்லும் அத்தகைய நடுகல்லாய் இருக்குமோ என்னும் ஐயத்தில், அக்கம் பக்கம் இருந்த மூதாட்டிகள் இருவரையும், முதியவர் ஒருவரையும் அணுகிக் கேட்டோம். மேடை நடுவில் நாட்டப்பெற்றிருந்த கல் மாரியாத்தா என்னும் கடவுளாக வழிபடப்படுகிறது என்றும், அந்தக் குத்துக்கல் “முத்தாயி ஆத்தா”  என்னும் அம்மன் வடிவாக வணங்கப்படுகிறது என்றும் மூதாட்டிகள் கூறினர். ஆண்டுக்கொருமுறை அதைச்சுற்றிப் பச்சை ஓலைக்குடிசை அமைத்துத் தோரணங்கள் கட்டி இசைக்கருவிகளை ஒலிக்கவைத்து முளைப்பாரி ஆகியவற்றோடு மக்கள் வழிபாடு நடத்துவர். மாரியாத்தாவின் மேடைக்கோயில், அன்றாட வழிபாட்டுக்குரியது. ஆனால், முதியவர் கூறியது சற்றே மறுபட்ட செய்தியாகும். குத்துக்கல்லானது, வேளாண் நிலத்தில் நெற்களத்தில் அறுவடை நெல்லைப் படையலாக்கி வழிபட்ட மல்லாண்டைத் தெய்வம் என்றும் தற்போது மல்லாண்டைக் கல் வழிபாட்டு மரபு மறைந்துவிட்டதால் இங்கே ஊர்த்தெய்வமாக வழிபடப்படுகிறது என்றும் முதியவர் விளக்கம் அளித்தார்.

         மல்லாண்டை என்னும்  சொல் கட்டுரை ஆசிரியருக்குப் புதியதொரு சொல்லாகத் தோன்றியது. கிராமங்களின் தொடர்பு இல்லாமையால், வேளாண்மை சார்ந்த மரபுகள் அறியப்படவில்லை. மல்லாண்டை பற்றிய செய்திகளைத் திரட்டியபோது தொல்லியல் அறிஞர் முனைவர் சி.மகேசுவரன் தம் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் குறிப்பிடும் செய்திகள் குறிப்பிடத்தக்கவை. கொங்கு நாட்டில் அறுவடை செய்த தானியங்களைக் களத்திலிட்டு ‘மல்லாண்டை எனக்குறிப்பிடப்பெறும் உருண்டைக்கல்லின் முன் படையலாக்கி வழிபாடு நிகழ்த்திய பின்னரே மேற்படித் தானியங்களை வீட்டிற்கு எடுத்துச்செல்லுதல் மரபு. இம் மல்லாண்டை வழிபாடு மள்ளர் இன மக்களால் மட்டுமே நிகழ்த்தப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மல்லாண்டை வழிபாடு செழிப்பு வழிபாட்டு (வளமை வழிபாடு) மரபின்பாற்பட்டது. கொங்கு நாட்டில் இம்மரபு பரவலாக இருந்துள்ளது. கொங்கு நாட்டில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் “அரவான் பண்டிகையின் போது பாடப்பெறும் பாடலில்,

“ஊருக்கொரு கூத்தாண்டெ செய்யோணும்
களத்துக்கொரு மல்லாண்டெ செய்யோணும்

என்னும் வரிகள், மல்லாண்டையின் சிறப்பை எடுத்துக்கூறுகிறது. இது, மல்லாண்டைத் தெய்வம் நல்ல விளைச்சலை ஏற்படுத்தும் என்கிற நாட்டார் நம்பிக்கை வழக்காற்றின் வடிவமே ஆகும்.

         மல்லாண்டைக்கல், தொல்லியல் நோக்கில் புதிய கற்காலத்து குழவிக்கல்லை ஒத்துள்ளது; கீழ்ப்பகுதி சற்றே அகலமாகவும் மேற்பகுதி குறுகியும் உள்ள தோற்றம். இவ்வகைக் கற்களையே கொங்கு நாட்டு மக்கள் “மல்லாண்டைக்கல்”  என அழைக்கின்றனர். இங்கே, நாம் தாசபாளையத்தில் காண்பது சற்றுப்பெரிய அளவில் அமைந்துள்ளதாகத் தெரிகின்றது.

         வேளாண் தொழிலே அருகிவரும் இந்நாளில் மல்லாண்டைக்கல் வழிபாடு மறைந்துவிட்டதில் வியப்பில்லை. ஆனால், வரலாற்று அடையாளங்களாகத் திகழும் தொல்லியல் சார்ந்த பொருள்கள் மறைந்து கொண்டுவருவது வருத்தத்துக்குரியது. (கல்வெட்டுகளைக் குறிப்பாகச் சொல்லலாம்; முறையாகப் பாதுகாக்கப்படாமல் அவை மறைந்து வருவது வேதனைக்குரியது.) தாசபாளையத்து மல்லாண்டைக்கல் நமக்கு நாட்டார் வரலாற்றையும், மரபையும் நினைவூட்டும் வகையில் நிற்கிறது; தொடர்ந்து நிற்கும் என நம்பலாம்.

துணை நின்றது : “கொங்கு நாட்டில் மல்லாண்டை - ஒர் அறிமுகம்” - ஆய்வுக்கட்டுரை
முனைவர் சி.மகேசுவரன்.











து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக