மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 16 டிசம்பர், 2015

கோவைப்பகுதியில் நடுகல் சிற்பங்கள்
1.

சோமனூர்-இச்சிப்பட்டி நடுகல்
  
         கோவை, சோமனூருக்கு அருகில் இச்சிப்பட்டி சிற்றூரில் சாலையோரம் வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் காணப்படுகிறது. சாலையோரத்தில் உள்ள ஒரு மரத்தடியில் இருக்கும் இந்த நடுகல் சிற்பம் ஒரு புடைப்புச் சிற்பமாகும். இச்சிற்ப அமைப்பில் காணப்படும் சிறப்பு, திருவாசி அமைப்பாகும். திருவாசி, கொடி வேலைப்பாடுடன் அமைந்துள்ளது. வீரன், தலையின் வலப்புறத்தில் கொண்டையோடு காணப்படுகிறான். வலக்கையில் நீண்ட வாளும், இடக்கையில் குறுவாளும் ஏந்தியிருக்கிறான். செவிகள், கழுத்து, முன்கைகள், தோள்கள் ஆகியவற்றில் அணிகலன்கள் காணப்படுகின்றன. முழங்கால்வரை ஆடை உள்ளது. இடைப்பகுதியில் ஆடைக்கச்சுகள் பெரிதாகக் காணப்படுகின்றன. சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் பீட அமைப்பில் பலகைக் கற்களைப் பரப்பி, அவற்றின்மீது அகல்விளக்குகளை ஏற்றி மக்கள் வழிபடுகின்றனர். நாயக்கர் காலச் சிற்ப அமைப்பாகலாம்.
  


2.

கோவை-வடசித்தூர் நடுகல்

               கோவைப்பகுதியில் கிணத்துக்கடவு மற்றும் நெகமம் ஆகிய இரு ஊர்களுக்கும் அருகே அமைந்துள்ள ஒரு சிற்றூர் வடசித்தூர். வடசித்தூரின் எல்லையில் சோழியாத்தா கோவிலுக்குப் போகும் வழியில் கோணக்காடு என்னும் இடத்தில் கி.பி. 15-16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  நடுகல் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. வீரன் ஒருவனின் உருவமும், அவனது இரு புறங்களிலும் இரு பெண்களின் உருவங்களும் புடைப்புச் சிற்பமாக ஒரு பாறைக்கல்லில் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இருவரும் அவன் மனைவியர் எனக்கருதலாம். மூன்று உருவங்களும் பீடங்களோடு அமைக்கப்பட்டுள்ளன. வீரன் பெரிய மீசையுடன் ஒரு கையில் ஊன்றிய வாளும் மற்றொன்றில் கேடயம் போன்ற ஆயுதமும் ஏந்திய நிலையில் காணப்படுகிறான். வீரனின் இடைக்கச்சில் குறு வாள் உள்ளது. இரு பெண்களும் கைகளைக் கூப்பி வணங்கும் நிலையில் இருக்கிறார்கள். மூவருக்கும் தலையில் கொண்டை உள்ளது. வீரன் இடுப்பு ஆடையுடனும், பெண்கள் கணுக்கால் வரை ஆடையுடனும் காணப்படுகின்றனர். மூவருக்குமே, செவிகள், கழுத்து, கைகள் ஆகிய உறுப்புகளில் அணிகள் உள்ளன. பெண்களின் இரு புறமும் இரண்டு குடுவைகள் செதுக்கப்பட்டுள்ளன.  நடுகல் சிற்பம் ஒரு மேடையில் நிறுத்தப்பெற்று  மக்களால் வணங்கப்படுகிறது.


 3.


கிணத்துக்கடவு-கோதவாடி புலிகுத்திக்கல்

          கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்  கோதவாடி. இங்கே, மாலக்கோயில் என்று ஒரு கோயில் உள்ளது. இக்கோயில், ஆல் கொண்ட திருமால் கோயில் என்னும் பெயரோடு விளங்கும் ஒரு கிருஷ்ணன் கோயிலாகும். இக்கோயிலின் வெளிப்புறம் அமைந்த வளாகத்தில் ஒரு புலிகுத்திக்கல் இருக்கிறது. இது கால்நடை வளர்ப்பு மேலோங்கியிருந்த காலச் சூழலில் இறந்துபட்ட காவல் வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும்.  வீரன் ஒருவன் புலியின் வாய்ப்பகுதியில் தன் நீண்ட வாளைப் பாய்ச்சிக்கொண்டிருப்பதுபோல வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பம். புலி தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றியவாறு முன்னங்கால்களால் வீரனைத் தாக்குவது போன்ற தோற்றம். வழக்கமாக இது போன்ற புலிகுத்திக்கல் சிற்பங்களில் வீரன் தன் வாளைப் புலியின் நெஞ்சில் பாய்ச்சியவாறு இருப்பதைக் காணலாம். இங்கே சற்று மாறுபட்டுப் புலியின் வாய்க்குள் வாள் பாய்ச்சுவதுபோல் அமைந்துள்ளது. கி.பி. 16-17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலச் சூழலில் இந்நடுகல் சிற்பம் அமைந்துள்ளது. ஊரார் இப்புலிகுத்திக்கல்லை நரி கடிச்ச இராமய்ய கவுண்டர் கல் என அழைக்கின்றனர். சில இடங்களில் புலிகுத்திக்கல்லில் இருக்கும் புலியின் உருவத்தை மக்கள் நரியெனக் கொள்வதால் ஏற்படுகிற பெயர் மயக்கம்..




 4.


கிணத்துக்கடவு-பெரியகளந்தை கல்திட்டை

          கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்தில், கிணத்துக்கடவுக்கருகில் அமைந்துள்ள ஊர் பெரியகளந்தை. இங்கு ஆதீசுவரர் கோயில் என்னும் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அண்மையிலேயே தொல்லியல் சின்னமான கல்திட்டை ஒன்று காணப்படுகிறது. வீடு போன்ற அமைப்பில் மூன்று புறமும் மேல்பகுதியிலும் பலகைக்கற்களால் மூடப்பட்ட தோற்றத்திலும், நான்காவது முகமாக முன்புறம் வாயில் போன்ற அமைப்பில் திறந்துள்ள தோற்றத்திலும்,  கட்டப்பட்ட  இக்கல்திட்டை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலாம். இக்கல்திட்டையில், இடு துளை ஒன்றும் உள்ளது. இக்கல்திட்டையில் காணப்பெறும் ஒரு சிறப்பு என்னவெனில், பிற்காலத்தினர், கல்திட்டையின் அறை போன்ற பரப்பில் புலியைக் கொன்ற வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் சிற்பங்களை அமைத்துள்ளனர். இரண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. முதல் சிற்பத்தில் வீரன் ஒருவன், குதிரையுடன் இருப்பதாகக் காட்சி. இரண்டாவது சிற்பத்தில் பாய்ந்து தாக்குகின்ற நிலையில் காணப்படும் புலியின் உருவம். புலியோடு வீரன் போரிடும் வழக்கமான காட்சியில் அமையாது, வீரனும் புலியும் தனித்தனியே காட்டப்பட்டிருகிறார்கள்.





 5.

பெருமாநல்லூர் நடுகல்

      கோவை-ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள ஊர் பெருமாநல்லூர். இவ்வூருக்கருகில் பொங்குபாளையம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இங்கு இடிந்த நிலையில் சதுர வடிவிலான அமைப்புடன் ஒரு சிறு கோயில் காணப்படுகிறது. நான்கு மூலைகளிலும் கல் பாறைத்தூண்கள். கூரைப்பகுதியில் மூடுகற்கள். கற்களைக்கொண்டு அமைக்கப்பட்ட ஒரு சிறிய நுழைவாயில். உள்ளே, பாறைக்கல் ஒன்றில் புடைப்புச் சிற்பமாக நடுகல் காணப்படுகிறது. ஒரு வீரனும் அவன் மனைவியுமாக அமைந்துள்ள சிற்பம். வீரன் தன் வலது கையில் வாள் ஒன்றினை உயர்த்திப்பிடித்த தோற்ரம். இடது கை அவனது தொடைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.  தலையில்  நேர்முகமாக அமைந்த கொண்டை. மார்பில் அணிகளும், இடையில் ஆடைக்கச்சுகளும் உள்ளன. பெண்ணின் சிற்பத்தில் வலப்புறமாக அமைந்த கொண்டையும், இடைப்பகுதியில் ஆடை அமைப்பும் காணப்படுகின்றன. ஊரார் இதை குப்பாத்தம்மன் கோயில்”  எனப்பெயரிட்டு வணங்குகிறார்கள்.












து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக