பட்டணம் – முசிறித்துறைமுகம்
து.சுந்தரம், கோவை.
2013-ஆம்
ஆண்டு மே மாதம் முதல் நாள், கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கல்வெட்டியல்
பட்டயப்படிப்பு மாணவர்கள் பேராசிரியர் இரவி அவர்களுடன் தொல்லியல் பயணமாக,
கேரளத்தின் பட்டணம் அகழாய்வுக்களம் நோக்கிப்புறப்பட்டோம். ஏறத்தாழ, நாலரை மணி
நேரப்பயணத்திற்குப்பின் எர்ணாகுளத்தைக்கடந்து, பரவூர் என்னும் ஊருக்கருகில் உள்ள
பட்டணம் சென்றடைந்தோம்.
தற்போது
அங்கே அகழாய்வு மேற்கொண்டிருப்பவர் முனைவர்
பி.ஜே.செரியன் அவர்கள். இதற்கு முன்னரே 2007-ஆம் ஆண்டிலும், 2008-ஆம்
ஆண்டிலும் அகழாய்வுகள் நடந்துள்ளன. 2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வு குறித்து
அதில் கலந்துகொண்ட (?) வீ.செல்வகுமார், ஆவணம்,2008 இதழில் ஒரு கட்டுரை
அளித்துள்ளார். அதில் காணப்படும் செய்திகளின் முக்கியக்கூறுகள் வருமாறு:
- சங்க இலக்கியம், மற்றும்
கிரேக்க,ரோமானிய இலக்கிய்ங்களில் குறிப்பிடப்படும் முசிறி என்னும்
சங்ககாலத்துறைமுகம் இந்தப்பட்டணம் ஊரே.
- அகழாய்வில் ஐந்து காலகட்டப் பண்பாட்டு நிலைகள்
காணப்பட்டன.
கி.மு. 500 – கி.மு. 2 நூ.ஆ. :
முதல் கட்டம் (இரும்புக்காலம்)
கி.மு. 2
- கி.பி. 4
நூ.ஆ. : 2-ஆம் கட்டம் (வரலாற்று. கா)
கி.பி. 5 -
கி.பி 10 நூ.ஆ. : 3-ஆம் கட்டம்
(இடைக்காலம்)
கி.பி. 10
- கி.பி. 15 நூ.ஆ. : 4 ( தடயங்கள் இல்லை )
கி.பி. 15
- கி.பி. 19 நூ.ஆ. : 5-ஆம் கட்டம் (நவீன காலம்)
- படகுத்துறையும், படகு
கட்டப்பயன்படும் மரத்தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- ஒற்றை மரத்தில் குடைந்து
உருவாக்கப்பட்ட படகின் அடிப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஆம்போரா வகை மதுச்சாடி,
சங்ககாலச்சேரர் காசுகள், உறைகிணறு மற்றும், கல்மணிகள், இரும்புப்பொருள்கள்,
இன்ன பிற.
- அரிக்கமேடு, அழகன் குளம்
ஆகியவற்றை ஒத்த ஒரு சங்ககாலத்துறைமுகம் பட்டணம் பகுதியில் இருந்தது.
இனி,
மீண்டும் பட்டணம் அகழாய்வுக்களம். பட்டணம் சிற்றூரில் ஒரு சிறிய தெருவின்
முனையிலேயே, அகழாய்வு நடக்கும் மனையிடம் (Site) போகும் வழி குறித்த பலகை வைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்து
சற்றுத் தொலைவு சென்றதும் அலுவலகக் கட்டிடமும், அதைக்கடந்து ஒரு தோப்புபகுதியில்
ஆய்வுப்பகுதி புலப்பட்டது. தென்னை,கமுகு,சாதிக்காய் மரங்கள் நிறைந்த தோப்பு. கமுக
மரத்தில் மிளகுக்கொடிகள் படர்ந்த அழ்கான சூழ் நிலையில் நடுவே அகழாய்வுக்குழி. ஏறத்தாழ
20 – 25 அடி நீளமும், 12 அடி
அகலமும், 6 அடி ஆழமும் கொண்ட ஆய்வுக்குழியை முற்றிலும் மூடியிருக்குமாறு
வெள்ளைத்துணியால் கட்டப்பட்ட கூடாரம். அதை மையப்படுத்தி மேலும் சில
துணிக்கூடாரங்கள். அவற்றின் கீழ், மேசைகளும்
நாற்காலிகளும். மேசைகளின் மேல், ஆய்வுக்குழியில் கிடைத்த பானை ஓடுகள் போன்ற
பொருள்கள். அவை வகைப்படுத்திய பொருள்கள். வகைப்படுத்தாத பொருள்கள் தனியே
ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருந்தன. ஓரிரு மேசையில் ஆய்வு உதவியாளர்கள் பொருள்களை
வகைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மற்றுமொரு மேசையில் வகைப்படுத்தி, அடையாளம்
கண்டு, முறையான ஆய்வுப்பெயர் எழுதி பாலிதீன் உறைகளில் இட்டு பிளாஸ்டிக்
பெட்டிகளில் வைக்கப்பட்ட பொருள்கள். ஆய்வுக்குழிக்குப்பக்கவாட்டிலேயே
குழியிலிருந்து வெளியிலெடுத்த மண்ணைக்கொட்டியதால் ஏற்பட்ட மேடு. மேட்டின் சரிவில்
நாற்காலியிட்டு அமர்ந்தவாறு அகழ்ந்த மண்ணைச்சலித்துக்கொண்டிருந்த பணியாளர்கள்.
அகழாய்வுக்குழி, தற்போது 2 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 2
மீட்டர் ஆழம் தோண்டப்படும் என்பது செரியன் அவர்கள் சொன்ன தகவல்.
அகழாய்வுக்குழியில் செங்கற்களின் அடுக்கு ஒன்று காணப்பட்டது.
பி.ஜே.
செரியன், மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் முனைவர் பிரீத்தா நாயர் ஆகிய
இருவரையும் எங்கள் குழு சந்தித்து அறிமுகம் செய்து கொண்டபிறகு அகழாய்வின்
விவரங்கள் குறித்துக்கேட்டோம். செரியன் அவர்கள் ஆய்வின் பின்னணி, நோக்கம், முன்னர்
நடந்த ஆய்வுகள், ஆய்வு வெளிப்படுத்திய செய்திகள் எனப்பல்வேறு விளக்கங்கள்
அளித்தார். கி.பி. 8-ஆம் நூற்றாண்டுவரை மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள்
உருவாகாத காலகட்டத்தில் ஒரே தமிழினமாய் இருந்தோம் என்பதைச்சுட்டிக்காட்டினார்.
முசிறி என்னும் துறைமுகம் தமிழகத்தின் முற்காலச்சேரர் காலத்தில் சிறப்பான
வணிகச்செயல்பாடுகளோடு இயங்கிய ஒரு நகரமாக இருந்தமை, உரோமானியர் தமிழகத்தோடு கொண்ட
வணிகத்தொடர்பு ஆகியவை பற்றிச்சொன்னார்.
பட்டணம் என்னும் இந்தப்பகுதிதான் பண்டைய முசிறி என்பது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும், முசிறி பற்றி பிளினி தம் பயணக்குறிப்பில் “Muziris” எனக்குறிப்பிட்டுள்ளதையும் சுட்டினார்.
மாணவர்கள் தங்கள் ஐயங்கள் பற்றிய பல கேள்விகளை எழுப்பி விளக்கங்கள்
பெற்றனர். பின்னர், செரியன் அவர்களுக்குச்சிறப்பு செய்யும் முகத்தான், அவருக்கு
எங்கள் குழு சார்பாக நினைவுப்பரிசு ஒன்றை அளித்து, அவ்ருடன் இணைந்து நாங்கள்
குழுவாக ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.
பின்னர், பிரீத்தா நாயர், அகழாய்வில் கிடைத்த பொருள்களை ஒவ்வொன்றாக
எடுத்துக்காட்டினார். கண்ணாடி மணிகள், மட்கலக்கிண்ணம், இரும்புக்கத்தி,
பலவண்ணக்கல்மணிகள், பானை மண் கொண்டு செய்த மூடி ஆகிய பல்வேறு பொருள்களைப்பார்த்தோம்.
அடுத்து, அலுவலகக்கட்டிடத்தில் சுவரில் பொருத்தப்பட்ட பல்வேறு படங்களைப்பார்த்து
ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். அவை, முன்னர் நடந்த அகழாய்வுகளின்போது
கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் விளக்கத்துடன் கூடிய படங்களாகும். இப்படங்களில் சிலவற்றில் மலையாள மொழியில்
விளக்கங்களும், சிலவற்றில் ஆங்கில மொழியில் விளக்கங்களும் இருந்தன. இப்படங்களில்
இருந்த குறிப்புகளின் அடிப்படையில் கிடைத்த பல்வேறு செய்திகளை இங்கு
தொகுத்துத்தந்துள்ளேன்.
அகழாய்வு அலுவலகத்தில் இருக்கும் விளக்கக்குறிப்புகள்
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் வடக்குப்பரூர் அருகில்,
பெரியாற்றின் டெல்டாப்பகுதியில் அமைந்துள்ள ஊர் பட்டணம். நிலத்தொல்லியல் அறிஞர் (Geo Archaeologist) கே.பி. ஷாஜன் (K.P. Shajan) என்பவரால் இப்பகுதி அடையாளம்
காணப்பட்டு, தொல்லியல் அற்ஞர்களின் கவனத்தை ஈர்த்தது. 1990-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து, தொல்லியல் ஆய்வாளர்களும்,வரலாற்று அறிஞர்களும்
இப்பகுதியை ஆய்வு செய்யத்தொடங்கினர். பாரம்பரியக்கல்வி மையம் (Centre for Heritage
Studies) என்ற அமைப்பினர் 2004-இல் சோதனை அகழாய்வினை
நடத்தி, மேற்பரப்பு ஆய்வில் கிடைத்த பொருள்களைக்கொண்டு “ முசிறி “ பற்றிய
கருத்துத்தெளிவை வெளிப்படுத்தினர். கேரள வரலாற்று ஆய்வுக்கழகம் (Kerala Council of
Historical Research) அமைப்பினர் 2007-இல் பன்னாட்டு
அமைப்பினரோடு இணைந்து அகழாய்வினைத்தொடங்கினர். முதன்முதலாகப் பன்னாட்டு அமைப்பினர்
இணைந்து நடத்தும் அகழாய்வு இதுவேயாகும்.
மலபார் கடற்கரைப்பிரதேசத்தில்
இந்தோ-ரோமன் வணிகம் நடை
பெற்ற காலம் கி.மு. 100 – கி.பி. 400 ஆகும்.
கேரளத்தோடு ரோமானியர், வட ஆப்பிரிக்காவினர், மேற்கு ஆசியாவினர் ஆகியோர்
கொண்ட தொடர்பினை வெளிப்படுத்திய முதல் வாழ்விடப்பகுதி பட்டணமாகும். கேரளத்தின்
முதல் பெருங்கற்கால வாழ்விடம் பட்டணம் என்று கருதப்படுகிறது. முதன் முதலாக
முற்காலச்சேரரின் நாணயம் கிடைத்துள்ளது பட்டணத்தின் இன்னொரு சிறப்பாகும். பட்டணம்
பண்டைய துறைமுக நகரம் என்பதற்குச்சான்றாக இங்கு கிடைத்துள்ள படகுத்துறை மற்றும்
படகுகளின் பகுதிகள் திகழ்கின்றன.
2011-ஆம்
ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வின் நோக்கங்களாகக் கீழ் கண்டவை குறிப்பிடப்படுகின்றன:
பட்டணத்தின் வடகிழக்குப்பகுதி நீங்கலாகவுள்ள மற்ற
பகுதிகள் ஆய்வு செய்யப்படுதல். பட்டணத்தைச்சுற்றியுள்ள 50 கி.மீ. பரப்பில்
மேற்பரப்பு ஆய்வு செய்தல். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து
வாழ்விடங்கள்,புதைவிடங்கள், மற்றும் தொல்லியல் தொடர்பான எச்சங்கள் ஆகியனவற்றை
அடையாளம் காணல். இதற்கு முன்னர் நான்கு கட்டங்களில் சிறு பகுதியாக வெளிக்கொணர்ந்த
படகுத்துறை செங்கற்கட்டுமானங்களை மீண்டும் கொணர்ந்து கடல் வாணிகத்தின் கூறுகளை
அறிதல். துறைமுகம் மற்றும் அதனைச்சார்ந்திருந்த நகரத்தின் வாழ்க்கை நிலை,
ஐரோப்பியர், மேற்காசியாவினர் ஆகியோர் வருகை, அவர்களோடு இங்கிருந்தவர் கொண்ட
இருவழித்தொடர்புகள் ஆகியனவற்றை அறிதல். பண்டைய முசிறிக்கும் இப்போதைய
பட்டணத்திற்கும் இடையே உள்ள தொடர்பினைக்காணல். இப்பகுதியைப்பாரம்பரியச்சின்னமாக
ஆக்குதல். அகழாய்வுக்களத்தின் அருகிலேயே ஒரு அருங்காட்சியகம் அமைத்தல்.
மேலே
குறிப்பிட்ட நோக்கத்தில், 2011-இல் முசிறி பாரம்பரியத் திட்டம் (Muziris Heritage Project) என்னும் திட்டத்தின் கீழ்
கேரள வரலாற்று ஆய்வுக்கழகம் வரலாற்று ஆய்வினைத்தொடங்கியது. ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழகம், ரோம் பல்கலைக்கழகம், பர்ஹாம் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ்
அருங்காட்சியகம் போன்ற அயல் நாட்டு அமைப்புகளும் மற்றும் இந்தியத்தொல்லியல்
ஆய்வுக்கழகமும் (Archaeological
Society of India) இவ்வாய்வில் பங்குபெற்றன.
முசிறி பற்றிய சில
குறிப்புகள்
பெரிபுளுஸ் (The Periplus of the
Erythrean Sea) குறிப்பில்:
முசிறி ஒரு செல்வச்செழிப்புள்ள நகரம். அரியாகே (ariake), எகிப்து (Egypt) ஆகிய இடங்களிலிருந்து
கப்பல்கள் இங்கு (முசிறிக்கு) வந்துபோயின. எகிப்திலிருந்து வந்தவை கிரேக்கக்கப்பல்களாகும். உயர்வகை
முத்துகள், மணிக்கற்கள், மிளகு ஆகியன ஏற்றுமதி ஆயின. பவழம் (Coral), காரீயம் (Lead),
வெள்ளீயம் (Tin)
மற்றும் Stibium ஆகியவை இறக்குமதி ஆயின.
பிளினி (Pliny) – (Pliny’s Natural History) நூலில் உள்ள குறிப்பில்:
இந்தியத்துணைக்கண்டத்தை
நோக்கி நிகழ்ந்த கடல் பயணங்கள் எகிப்திலிருந்தும், ஓசலிஸ் (Ocelis) என்னும் இடத்திலிருந்தும்
மேற்கொள்ளப்பட்டன. எகிப்திலிருந்து இந்தியாவின் இப்பகுதிக்கு
(முசிறிக்கு)க் கடல் பயணம் மேற்கொள்ளத்தகுந்த பருவ காலம் ஜூலை மாதமாகும்.
ஓசலிஸிலிருந்து பயணப்படுவோர்க்கு ஒரு வசதி உண்டு. இங்கிருந்து புறப்படுகின்றவர்கள்
ஹிப்பலாஸ் (Hippalos) என்னும் பருவக்காற்றின் துணை
கொண்டு நாற்பது நாட்களில் இந்தியாவின் முதல் வணிக நகரமான முசிரிஸ் அடையமுடியும்.
ஆனால், இப்பயணத்தில் ஓர் ஆபத்தும் உள்ளது. வழியில் நித்ரியாஸ் (Nitriyas) என்னும் இடத்தில் தங்கியிருக்கும்
கடற்கொள்ளையர்கள் தாக்குவார்கள். முசிரிஸில் பெரிய அளவில் வாணிகம் நடைபெறவில்லை.
வணிகப்பரிமாற்றங்கள் நடைபெறும் நகரங்கள் நிலப்பகுதியில் வெகு தொலைவில் உள்ளன.
வணிகப்பொருள்களை ஏற்றி உள்நாடு செல்லவும், உள்நாட்டிலிருந்து பொருள்களைக்கொணர்ந்து
இறக்கவும் படகுகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது.
ஒரே மரத்தைக்குடைந்து செய்யப்பட்ட இப்படகுகள் (dug out canoe) “ கட்டனர “ (cottonara) எனப்பட்டன. இங்குள்ள
அரசன் கலபத்ராஸ் (Caelobothros) என அழைக்கபடுகிறான். பகாரே (Bacare) என்னும் இடத்துக்கு மிளகுப்பொதிகள் படகுகள் மூலம்
கொண்டுவரப்படுகின்றன. இந்தத்துறைமுகத்தின் பெயரோ, இங்கு குறிப்பிட்ட நகரங்களின்
பெயரோ, இதற்கு முன்னர் எழுதிய நூல்களில் காணப்படவில்லை. இதிலிருந்து, இப்பகுதியில்
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.
பியூட்டிஞ்சர் வரைபடக்குறிப்பில் (Peutinger Table - Tabula
Peutingeriana): பியூட்டிஞ்சர் வரைபடம் என்னும் பெயரமைந்த இந்த
வரைபடம் தற்போது வியன்னாவின் தேசிய நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 16-ஆம்
நூற்றாண்டைச்சேர்ந்த கான்ராடு பியூட்டிஞ்சர் (Konrad Peutinger) என்பவர் இதை வைத்திருந்ததால் இப்பெயர்
ஏற்பட்டது.
இதனுடைய மூலம் 4-ஆம்
நூற்றாண்டில் இருந்தது. கடல்பயணத்தில் இவ்வரைபடம் பயன்பட்டதால், இந்தியாவை
நோக்கிப்பயணம் செய்தவர்களின் காலம் கி.பி. 2 வரை முன்னால் கொண்டு செல்ல
வாய்ப்புள்ளது. இந்த வரைபடத்தில், “ முசிரிஸ் “ என்னும் பெயர் காணப்படுகிறது.
இப்பெயர் தவிர, “லேகஸ் முசிரிஸ்“ (Lakus Muziris) என்னும் பெயருடைய ஏரியும், “அகஸ்டை“ (templ Augusti) என்னும் கோவிலும்
வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
முசிறிப்பேப்பர் (Muziris Papyrus) என்றொரு ஆவணம் கிடைத்துள்ளது. இந்த ஆவணம் தற்போது ஆஸ்திரிய நாட்டு
வியன்னாவில் தேசிய நூலகத்தில்
வைக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு ஆகும். இது ஒரு வணிக
ஒப்பந்தமாகும். முசிறியில் மேற்கொள்வதற்கான வணிகத்துக்குத்தேவைப்படும்
நிதியைக்கடன் பெறுகிறார் ஒரு வணிகர். அவரும் கடன் வழங்கும் ஒருவரும் இடையே
செய்துகொண்ட ஒப்பந்தமே இந்த ஆவணம்.
தாலமியின் ”ஜியாகரபி” (Geography)
நூலில் (கி.பி. 2-ஆம் நூற்றாண்டு) சேர அரசரின் பெயர் ”கேரபத்ராஸ்” (kerobotros)
எனக்குறிப்பிடப்பெறுகிறது. சேர நாட்டுத் தலை நகர் “கரூரா” (karoura) எனக்குறிப்பிடப்பெறுகிறது. (கட்டுரை ஆசிரியரின் குறிப்பு :
தாலமியின் குறிப்பில் உள்ள கேரபத்ராஸ் என்பதும், பிளினியின் குறிப்பில் வரும்
கலபத்ராஸ் என்பதும் ”சேர புத்ர” என்பதன் திரிந்த வடிவமே
எனக்கருதலாம்.)
சங்க இலக்கியமான அகநானூற்றில் (பாடல்-149) முசிறி பற்றிய
குறிப்பு காணப்படுகிறது.
“......................................................................
சேரலர்
சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த
வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து
கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி...............................................”
என வரும் பாடல் வரிகள்,
முசிறித்துறைமுகத்துக்கு யவனர் மரக்கலங்கள் வந்ததையும், அங்கு பொன்னை இறக்குமதி
செய்து மிளகை வாங்கிச்சென்றதையும் எடுத்துக்கூறும். பேரியாற்று நீர் கலங்கும்படி
கப்பல்கள் வந்த இடம் முசிறி என்னும் செய்தி, தற்போது பெரியாற்றின்
டெல்டாப்பகுதியில் அமைந்துள்ள பட்டணம் பண்டைய முசிறியாக இருக்கலாம்
என்பதைச்சொல்லும் இலக்கியச்சான்றாகும்.
அகழாய்வுகளின்போது கிடைத்த
பொருள்கள் – விளக்கம்
(அகழாய்வு அலுவலகத்தில் இருக்கும் காட்சிப்படங்களில்
காணப்படும் மலையாளம் மற்றும் ஆங்கிலக்குறிப்புகளின் அடிப்படையில்)
ஆண்டு 2007
1.
பானை ஓடுகளில் குறியீடுகளும், தமிழி பிராமி எழுத்துகளும்.
2.
முற்காலச்சேர அரசர் செப்பு நாணயம். நாணயத்தின் ஒரு புறம் யானை
உருவமும், மறுபுறம் அம்பு,வில், யானையைக்கட்டுப்படுத்தும் அங்குசம், (அங்குசம்,
தோட்டி என மலையாளத்தில் குறிப்பிடப்படுகிறது) அம்பும் வில்லும் சேர நாட்டின்
சின்னங்களாகும்.
3.
மணிகள் (Beads). (மலையாளத்தில் முத்துகள் என்று
குறிப்பிடப்படுகிறது.) பழங்காலச்சமூகத்தில் மணிகளுக்கு மிக முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது. ஆபரணங்களாகப்பயன்படுத்தினார்கள். பண்டமாற்றத்துக்காகவும் (exchange) மணிகள் பயன்பட்டன. (பண்டமாற்றம் என்னும்
சொல்லுக்கு மலையாளத்தில் “கைமாற்றம்” என்னும் சொல் வழங்குகிறது.) இவைகளின் தரம், நிறம் ஆகியவை
கொண்டு காலத்தைக்கணிக்க இயலும். கல் மணிகள் போலவே, கண்ணாடியில் செய்யப்பட்ட
மணிகளும் கிடைத்துள்ளன.
4.
இரும்புப்பொருள்கள் (Iron objects).
இரும்பினால்
செய்யப்பட்ட ஆணிகள், கொளுத்துகள்(?),
உளிகள்,ஆயுதங்கள், இரும்பு அயிருகள்(?) ஆகியன. (கொளுத்துகள்,அயிருகள் ஆகிய
மலையாளச்சொற்கள் எவற்றைக்குறிக்கின்றன எனத்தெரியவில்லை). பட்டணம் பகுதியில்,
மக்கள் வாழ்க்கை (ஜனவாசம்) தொடங்கியது இரும்புக்காலத்தில்தான்
என்க்கருதப்படுகிறது. Radio
carbon dating
போன்ற ஆய்வுகளுக்குப்பின்பே காலத்தைத்தெரிந்துகொள்ள இயலும்.
5.
Terra Sigillata (Arretine) Deluxe Tableware of Meditteranean origin,
Arretine/Samian ware. கிறித்துவ சகாப்தத்தின்
தொடக்ககால நூற்றாண்டுகளில் அழகிய வேலைப்பாடமைந்த பாண்டங்கள் (மேசையில்
பயன்படுத்தும் கலன்கள்) பயன்படுத்தப்பட்டன. இவ்வகைக்கலன்கள் தமிழகத்தின்
அரிக்கமேடு, அழகன்குளம் ஆகிய பகுதிகளில் மட்டுமே கிடைத்துள்ளன. தற்போது, பட்டணத்திலும்
இவ்வகை மட்கலம் ஒன்றின் விளிம்புத்துண்டு கிடைத்துள்ளது. கிண்ணத்தின் ஒரு பகுதியாக
இருக்கலாம். ஆங்கில ஆராய்ச்சி அறிஞர் வீலர்(Wheeler) இந்த மட்கலனை, அரிக்கமேடு காலத்தை
நிறுவப்பயன்படுத்தினார். காலம் கி.மு. 25 – கி.பி. 25.
6 West Asian (Yemenite and Mesopottanean) pottery.
7 ஆம்போரா ஜாடிகள் (Amphora). மத்திய தரைப்பகுதியைச்சேர்ந்த களிமண் கொண்டு செய்யப்பட்டவை.
நூற்றுக்கணக்கில் இதன் துண்டுகள் கிடைத்துள்ளன.
8
Rouletted ware. ரூலட்டெட் மட்கலன்கள். கி.மு. 200 – கி.பி. 200 காலகட்டத்தைச்சேர்ந்தவை.
9 Pottery cluster. மட்பாண்டத்துண்டுகள். வரலாற்றுக்காலத்தைச்சேர்ந்தவை
எனக்கருதப்படுகிறது.
10 Ring well. களிமண் வட்டக்கிணறு. வரலாற்றுக்காலத்தைச்சேர்ந்தது.
11 கட்டுமானம் (Structure). சுடுமண்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட கட்டடத்தின் பகுதிகள். அடிப்பகுதியில்
வரிசையாகக்காணப்படும் சுடுமண்கற்கள் இந்தோ-ரோமன் ஆய்விடங்களில் கிடைத்த கற்களை
ஒத்துள்ளன.
12
படகுத்துறை (Wharf). (மலையாளத்தில் “கடவு” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளத்தின் வெளி நாட்டுத்தொடர்புக்கு
பட்டணம் பகுதியின் நீர்வழித்தொடர்பு முக்கியமானதாக இருந்தது என்பதற்கு இந்த நீர்த்துறை கண்டுபிடிப்பே சான்று. இதன் கட்டுமானத்துக்காக
மிகவும் கடினத்தன்மை வாய்ந்த ஒரு வகைச்செங்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கீழ்ப்பகுதியில், படகுகள் கட்டி நிறுத்துவதற்குப்பயன்பட்ட மரக்கம்பங்கள் (Bollard) கண்டுபிடிக்கப்பட்டன. (படகு என்பதற்கு, “வள்ளம்”, “வஞ்சி” ஆகிய சொற்கள் மலையாளத்தில்
பயில்கின்றன).
13 Wooden dugout canoe. ஒரே மரக்கட்டையைக்குடைந்து உருவாக்கிய படகு. ( மலையாளத்தில்:
ஒற்றைத்தடி வள்ளம்). 6 மீ.ட்டர் நீளமுள்ள படகின் பகுதிகள் கிடைத்துள்ளன. இதன்
பக்கவாட்டுப்பகுதிகள் அழிந்து போயின. லக்னோ நகரில் அமைந்துள்ள National Research
Laboratory for Conservation ஆய்வுக்கூடத்தில்
வல்லுனர் குழு இந்தப்படகின் அமைப்பை மீட்டெடுக்கத்தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இப்படகின்
காலக்கணிப்பு பற்றிய ஆய்வும் அங்கே நடைபெற்றுவருகிறது.
ஆண்டு 2008
- Sherds with post
firing Brahmi letters. பிராமி
எழுத்துப்பொறிப்புடன் கூடிய பானை ஓடுகள். பானையைச்சுட்டெடுத்தபிறகு
எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன எனக்கருதப்படுகிறது.
- Roman pillared glass
bowl-fragments.
- Chinese ceramics.
- Turquoise glazed
pottery.
பச்சை வண்ணப் பளபளப்பு ஏற்றப்பட்ட மட்பாண்டச்சில்லுகள்.
- Grooved tiles. புடைப்பு வரிகள் கொண்ட ஓடுகள்.
- Russet coated painted
pottery. செந்நிறச்சில்லுகள். அவற்றின்மீது
நெளிநெளியாக வளைகோடுகள் காணப்படுகின்றன.
- Two sets of soakage
jars. ஒன்று பெரியது. மற்றது சிறியது.
- Rope made of
unidentified plant fibre. ஆய்வுக்குழியில்,
நீர்க்கசிவு கிடைத்துள்ள பகுதி (water logged area)யில், தாவரம் ஒன்றின் நார்
கொண்டு செய்யப்பட்ட கயிறு கிடைத்துள்ளது.
கட்டுரை
ஆசிரியரின் சில குறிப்புகள்:
மலையாளம், தமிழ்
மொழியினின்றும் கிளைத்து விரிந்து தனியே ஒரு அடையாளத்தைத் தனக்கென்று
ஏற்படுத்திக்கொண்ட ஒரு மொழி. வடமொழியின் தாக்கமும் கலப்பும் மிகவும்
காணப்பட்டாலும், தமிழின் வேர் இன்னமும் மலையாளத்தில் இருப்பதைக்காண்கிறோம். பட்டணம் அகழாய்விடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த
படங்களில் சில, மலையாள மொழிக்குறிப்புகளைக்கொண்டிருந்தன. அவற்றில் காணப்பட்ட
சொற்களைப்பாருங்கள்.
படிஞ்ஞாறான் தீரம் -
மேற்குக்கடற்கரையைக்குறிக்கும் சொல்.
படிஞ்ஞாறு= மேற்கு
(மலையாளத்தில்.)
தமிழில் “படு
ஞாயிறு” ; தீரம்=கரை.
இரும்பு
- இரும்பு
மும்பு
- முன்பு என்பதன் திருந்திய
வடிவம்.
அம்பு, வில் -
அம்பு, வில்
காலகட்டம்
- காலகட்டம்
ஆணி, உளி
- ஆணி, உளி
நூறு கணக்கினு -
நூற்றுக்கணக்கில்
கண்டெடுத்தியது - கண்டெடுக்கப்பட்டது
தாழத்தே -
கீழே (தாழ்வான இடத்தில்)
தெளிவு
- சான்று
நிரகளில் -
நிரைகளில் (வரிசைகளில்)
கருதாம் -
கருதலாம்
கருதுன்னு - கருதப்படுகிறது
அகழாய்வில்
கண்டுபிடிக்கப்பட்ட படகுத்துறை, மலையாளத்தில் “கடவு” எனச்சொல்லப்பட்டிருக்கிறது. ”துறை” என்பதற்குத்தமிழிலும் கடவு
என்னும் சொல் ஆளப்படுகிறது. “pass
port” என்பதற்குத்தமிழில் “கடவுச்சீட்டு” என்று சொல்கிறோம். படகு என்பதற்கு மலையாளத்தில் “வஞ்சி” என்று குறிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் நெடுஞ்சாலையில், விமான நிலையம்
செல்லும் வழியைக்குறிக்க மலையாளத்தில் “விமான தாவளம்” என்று எழுதியிருந்ததைப்பார்த்து வியப்பேற்பட்டது. ஏனெனில்,
“தாவளம்” என்பது ஆயிரம் ஆண்டுப்பழமையான கல்வெட்டுச்சொல்
ஆயிற்றே.
கொங்குநாட்டுக் கொடுமணல் அகழாய்வுக் களத்தில் இதுபோல,
விளக்கக் குறிப்புகளுடன் கூடிய ஒரு காட்சிக்கூடம் இல்லையே என்பது
வருத்தமளிக்கிறது.
து.சுந்தரம்,கல்வெட்டு
ஆராய்ச்சியாளர், கோவை
அலைபேசி : 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக