மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015



கல்வெட்டு எழுத்துகள் கற்போம் –  10


பல்லவர்க்கு அடுத்து சோழர்களின் கல்வெட்டுகளில், நாம் அடிப்படையாகப் பயின்றுவரும் முதலாம் இராசராசனின் தஞ்சைக்கல்வெட்டுகளுக்கு முற்பட்ட எழுத்துகளின் வடிவ வேறுபாட்டை இரு கல்வெட்டுகளின் வாயிலாகப் பார்ப்போம். முதலாவது கல்வெட்டு கி.பி. 895-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. முதலாம் ஆதித்தனின் தக்கோலம் கல்வெட்டு. முதலாம் ஆதித்தன், பிற்காலச் சோழப்பேரரசுக்கு அடித்தளமிட்ட விசயாலயனின் மகனாவான். இவனுடைய ஆட்சிக்காலம் கி.பி. 871-907. கல்வெட்டின் பார்வைப்படி கிழே தரப்பட்டுள்ளது.

         பல்லவ அரசன் அபராசிதனின் கீழ் ஒரு குறுநில மன்னனாக இருந்த விசயாலயன், பல்லவருக்கும், வரகுணபாண்டியனுக்கும் இடையே நடைபெற்றபோரின்போது பல்லவர் பக்கம் நின்று பல்ல்வனுக்கு வெற்றியைத் தேடித்தந்ததோடல்லாமல், முத்தரையரைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றினான். விசயாலயன் மகனான முதலாம் ஆதித்தன் காலத்திலும் பல்லவர்-வரகுணபாண்டியனிடையே நடந்த போரில், ஆதித்தன் பல்லவர் பக்கம் நின்று வெற்றி ஈட்டித்தந்தான். பல்லவன் சில ஊர்களை ஆத்தித்தனுக்குத் தந்தான். ஆதித்தன் சோழநாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்தில், பல்லவ அரசன் அபராசிதனையே எதிர்த்துப்போரிட்டு வென்று பல்லவரின் தொண்டை நாட்டைக்கைப்பற்றி, சோழநாட்டோடு இணைத்துக்கொண்டான். விசயாலயன் காலத்திலும், ஆதித்தன் காலத்திலும் சோழரோடு துணை நின்றவர்கள் கங்கமன்னர்கள். ஆதித்தனின் கீழ் குறு நிலமன்னராயிருந்த கங்க மன்னன் பிருதிவிபதி, தக்கோலம் கோயிலுக்கு ஆனிமாதம் சூரிய கிரகணத்தன்று 317 கழஞ்சு எடையுள்ள ஒரு வெள்ளிக்கெண்டிகையை அளித்தான். இந்தச் செய்தியைத் தாங்கிய கல்வெட்டுதான் நாம் இங்கே காண்பது.

முதலாம் ஆதித்தனின் தக்கோல கல்வெட்டு-பார்வைப்படி


கல்வெட்டின் பாடம்:

(ஸ்வஸ்திஸ்ரீ) கோவிராசகே
சரி பன்பக்கு யாண்டு
இருபத்து நாலாவது ஆ
னித்தலைப்பிறையால்
தீண்டின (ஸூர்யக்3ரஹணத்)
தி நான்று திருவூறல் மாதேவ
ர்க்கு மாரமரையர் மகனார்
பிரிதிபதியார் குடுத்த வெ
ள்ளிக்கெண்டி நிரை முன்நூ
ற்று ஒருபத்தேழு கழஞ்சு
இது பன்மா(ஹேச்0வரர் ரக்‌ஷை)


சில குறிப்புகள்:

  • தலைப்பிறை -  வளர்பிறையில் முதல் நாள்
  • திருவூறல் தக்கோலத்தின் பழம்பெயர் (கல்வெட்டில் உள்ளபடி)
                தக்கோலம் தற்போது அரக்கோணத்துக்கருகில் உள்ள ஊர்.
  • பிரிதிபதி கங்க அரசன் பிருதிவிபதி
  • கெண்டி மூக்குள்ள செம்பு

 இன்னொரு கல்வெட்டு அடுத்த பாடத்தில்.


தக்கோலம் கல்வெட்டின் பார்வைப்படியை எழுத உதவியது : முனைவர் சூ. சுவாமிநாதன்
அவர்களின் “கல்லெழுத்தில் காலச்சுவடுகள்” நூலில் உள்ள ஒளிப்படம்.
அது இங்கே :




து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக