மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 24 ஜூலை, 2015




வேதாரணியம் யாழ்ப்பாணம் பண்பாட்டு உறவுகள்
இலங்கைப்பேராசிரியர் முனைவர் மகேசுவரன் அவர்களின் பொழிவு.


         தஞ்சையை மையமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழகத் தொல்லியல் கழகத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா  அண்மையில் ஜூலை மாதம் 18,19 தேதிகளில் விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தில் நடைபெற்றது. அதுபோழ்து, இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரான முனைவர் மகேசுவரன் வேதாரணியம்-யாழ்ப்பாணம் பண்பாட்டு உறவுகள் என்னும் தலைப்பில் அருமையானதொரு உரை நிகழ்த்தினார். அவ்வுரையைச் செவிமடுத்து மகிழ்ந்தவாறே சில குறிப்புகளை எழுதிவைத்துக்கொண்டேன். தெளிவான பேச்சு. ஓட்டமும் இல்லை; தொய்வும் இல்லை. சொல்லவந்த கருத்தின் பாதையினின்றும் அகலாமல் சீராக அமைந்த தமிழ் நடை.  என் குறிப்புகளின் அடிப்படையில் அவரது உரைக் கருத்துகளை இங்கு ஒரு சிறு தொகுப்பாகத் தந்திருக்கிறேன்.

         மகேசுவரன் அவர்கள் தம் சிறுவயது நினைவுகள் பற்றிக் குறிப்பிடும்போது, தாம் பள்ளியில் பயின்றபோது, சமயப்பாடங்கள் இருந்தன என்றும் தேவாரப்பாடல்கள் மனனமாகத் தெரிந்திருந்தன என்றும் கூறினார். பாடங்கள் வாயிலாக வேதாரணியம் கோவில் கதவு அடைக்கப்பட்டிருந்த நிலை, தேவாரப்பாடலால் கதவுத் திறப்பு நிகழ்ந்தமை ஆகியனபற்றி அறிந்துகொண்டதாகவும் சொன்னார். அவர் 1996-ஆம் ஆண்டு, பேராசிரியர் சுப்பராயலு அவர்களின் வழிகாட்டுதலில் ஆய்வுப்பணி செய்யத் தமிழகம் வந்திருந்தபோது வேதாரணியம் செல்லவேண்டியிருந்தது. அந்தக் காலகட்டம் அரசியல் காரணமாக மிகுந்த இடர் நிறைந்த சூழலைக்கொண்டிருந்த கட்டம். வேதாரணியம் மறைக்காடர் கோவிலின் யாழ்ப்பாணத்தார்க் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வு.

         முன்னர், வேதாரணியம் பற்றி ஓர் அறிமுகம். இத்தலம் மூர்த்தி, தீர்த்தம் ஆகியவற்றால் புகழ் பெற்றதொன்று. விடங்கர் தலங்கள் ஏழுள் ஒன்று.  இறைவன் சுயம்பு. பெண்தெய்வ வழிபாட்டுக்குச் சான்றாக இறைவி. வேதங்கள் வழிபட்ட தலம், இராமர் வழிபட்ட தலம் என்பதாகப் பலப்பல தொன்மங்கள் சார்ந்த ஆலயம். தேவார காலத்தில், அப்பர்,சம்பந்தர் ஆகியோர் பாடிய தலம். வேதங்கள் வழிபட்டுத் திரும்பிச் சென்றபோது கோவிலின் முதன்மை வாயில் அடைக்கப்பட்டுவிட்டதாக ஒரு தொன்மக்கதை. மக்கள் பக்கத்திலுள்ள வாயிலின்வழி கோவிலுக்குள் சென்று வழிபட்டுக்கொண்டிருந்த நிலையில் அப்பரும்,சம்பந்தரும் இக்கோவிலுக்கு வந்திருந்தனர்; வேதங்கள் வழிபட்ட கோவில் வாயிலுக்கு இந்நிலையா என ஆற்றாது சம்பந்தர், அப்பரைப் பதிகம் பாடிக் கதவைத் திறக்கும்படி வேண்ட, அப்பர் தேவாரப்பதிகம் பாடிக் கதவம் திறந்தது. மீண்டும் மூடவும் திறக்கவும் வேண்டி சம்பந்தர் பாடவேண்டும் என அப்பர் கேட்கச் சம்பந்தர் ஒரு பாடல் பாடியதும் கதவம் மூடிக்கொண்டது என்பது தலத்தின் பெருமை. (கட்டுரை ஆசிரியரின் குறிப்பு : அப்பர் பத்துப் பாடல்கள் பாடியபின்னரே திறந்த கதவம், சம்பந்தர் ஒரேயொரு பாடல் பாடியதும் மூடிக்கொண்டது ஏன்? இக்கேள்விக்குச் சுவையானதொரு விளக்கம் என்னவெனில் இறைவன் அப்பர் பாடல்களைப் பெருவிருப்புடன் கேட்டதுதான். இது நான் எங்கோ கேள்வியுற்ற செய்தி. தமிழ்ப் பேராசிரியர்கள் உறுதிப்படுதலாம். தவறு எனில் சுட்டலாம்.) இத்தலத்துக்குப் பல தலபுராணங்கள் (தலவரலாறு) இருக்கக் காண்கிறோம். வேதாரணிய புராணம், திருமறைக்காடு புராணம் மறைசை அந்தாதி ஆகியன ஒரு சில. மறைசை அந்தாதி என்னும் நூல் இலங்கையைச்சேர்ந்த சின்னத்தம்பி நாவலன் என்னும் புலவரால் பாடப்பெற்றது. இக்கோவிலின் கல்வெட்டுகள் முதலாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன், இராசேந்திரசோழ தேவன் ஆகிய சோழ அரசர்கள் காலத்தைச் சேர்ந்தவை. இவை தவிர, விசயநகர அரசர்கள், மராத்திய மன்னர்கள் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகளும் இக்கோவிலில் காணப்படுகின்றன.

         கல்வெட்டுகளில், இறைவனின் பெயர் திருமறைக்காட்டுடையார் எனக் குறிக்கப்பெறுகிறது. இவ்வூர் அமைந்த நாட்டுப்பகுதி கல்வெட்டுகளில் உம்பளநாடு என வழங்கப்படுகிறது. இதற்கு இசைவாக இப்பகுதியில் கோடியக்காட்டில் உப்பு விளைவித்தலே வேளாண்தொழிலாக இருந்துவந்துள்ளது.

         அடுத்து, யாழ்ப்பாணம் பற்றி. யாழ்ப்பாணம் நிலவியல் வடிவில் ஒரு குடாப்பகுதி. யாழ்ப்பாணக்குடா நாட்டுக்குத் தொன்மையான வரலாறு உள்ளது. ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சியில் தொடங்கிப் பின்னர் போர்த்துகேயர் (போர்த்துகீசியர்கள்), ஒல்லாந்தர் (ஹாலந்து நாட்டினர்), .ஆங்கிலேயர் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்த இப்பகுதி புவியியல் அண்மை (Geographical proximity) என்னும் கருத்தளவில் தமிழகத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் நெருங்கியுள்ளது. தமிழகத்தின் கோடியக்காட்டிலிருந்து இலங்கையின் மாநகல்துறை, வல்வெட்டித்துறை, பரிசில்துறை ஆகிய இடங்களுக்கு உள்ள தொலைவு மிகக்குறைவு. இவ்விடங்களுக்கிடையே மரக்கல ஊடாட்டம் இருந்துள்ளது. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : “மரக்கல ஊடாட்டம் என்னும் தொடர் என்ன அழகான தொடர்! போக்குவரத்துக்கான தொடர்பை “ஊடாட்டம் என்னும் சொல் மிக அழகாகச் சொல்கிறது. இலங்கைத் தமிழர்கள் தமிழின்மேல் கொண்டுள்ள பற்றும், தமிழைக் கையாளுதலில் கொண்டுள்ள நேர்த்தியும் நம்மைவிடச் சற்று மிகுதி எனத் தோன்றுகிறது.)


         இலங்கை-இந்தியா மற்றும் தமிழகம்-இலங்கை இவற்றுக்கிடையிலான கடல்வழிப்பயணங்கள் பண்டுதொட்டு இருப்பவை. அசோகமன்னனின் மகள் சங்கமித்திரையில் தொடங்கி 1949 வரை கடல்வழிப்பயணங்கள் பயண இடையூறின்றி நடந்தேறியுள்ளன. தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையே பயணவண்டிகள் இயங்கிவந்துள்ளன.

         இலங்கை, ஏழு தீவுகளை உள்ளடக்கியது. அவற்றுள் ஒன்று நெடுந்தீவு. இத்தீவில் பால்பண்ணைகள் மிகுதியும் இருந்தன. வேதாரணியம் கோவிலுக்கு திருமுழுக்குக்கு (அபிஷேகம்) வேண்டிய பால் நெடுந்தீவிலிருந்தே வந்தது. வேதாரணியம் கோவிலின் கோபுரவிளக்கு வெளிச்சம் நெடுந்தீவில் தெரிந்தது என்று கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் போக்குவரத்துக்கு மாட்டுவண்டிகள் நிறையப்பயன்பாட்டில் இருந்தன. இவ்வகை வண்டிகளுக்கு வேதாரணியத்திலிருந்தே மாடுகள் வரவழைக்கப்பட்டன. இவை முதலில் மாநகல்துறைக்குக் கொண்டுவரப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு  அனுப்பப்பட்டு வண்டிகளில் பூட்டப்பட்டன. . இவ்வகை மாடுகள் “வடக்கன் மாடுகள் என யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்டன. இவ்வகை மாடுகள் வெள்ளை நிறங்கொண்டும் நீண்ட கொம்புகளைக்கொண்டும் இருந்தனவென்று தெரிகிறது.

         வேதாரணியத்துடனான யாழ்ப்பாணத்தொடர்புக்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்ப்பெயர்களும் மக்கள் பெயர்களும் சான்றுகளாய் நிற்கின்றன. வேதவன், மறைக்காடன் ஆகிய பெயர்கள் பரவலாக உள்ளதைக்காணலாம். யாழ்ப்பாணத்தில் இருந்த புகையிலை வளர்ப்பு வேதாரணியத்திலிருந்து வந்ததாகும். 

         யாழ்ப்பாணம்-வேதாரணியம் ஊர்களுக்கிடையே மண உறவுகள் மிகுதியும் இருந்துள்ளன என் அறிகிறோம். வேதாரணியத்தில் “யாழ்ப்பாணத்தார் தெரு என்னும் பெயரில் ஒரு தெரு இருந்துள்ளது. வேதாரணியத்தில் “வீரகத்திச்சேதகன் விநாயகர் கோவில் என்னும் பெயரில் கோவில் இருந்துள்ளது. இக்கோவிலைப்பற்றிய குறிப்பு மறைசை அந்தாதி நூலில் காணப்படுகிறது.

         வேதாரணியம் பகுதியில் சிவன் கோவில்களில் இருந்த சைவப்பிராமணர்கள் யாழ்ப்பாணத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். இவர்கள் சைவக்குருக்கள்மார் என அழைக்கப்பட்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் இறப்புச் சடங்குகளை நிறைவேற்றித்தருவதற்காக வரவழைக்கப்பட்டனர். இதை “அபரக்கிரியைஎன வழங்குவர். இவர்களின் வந்துபோதல் நிகழ்வு நாளடைவில் யாழ்ப்பாணத்திலேயே குடியமர்தலில் முடிந்து இரண்டுமே தொடர்ந்தன.  குருக்கள்மார் தவிரப் பிறரும் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளனர். இவ்வகையினர் பின்னர் வேதாரணியத்துக்குப் பெயர்ந்து வாழ்ந்ததால் இவர்கள் யாழ்ப்பாணத்தார் என வேதாரணியத்தில் அழைக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தார் தெருவும் அமைந்தது. வேதாரணியத்தில் யாழ்ப்பாணத்தார்க் கல்வெட்டு என்னும் பெயரில் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. கல்வெட்டின் பனுவல் (Text) கீழ்வருமாறு :
(கட்டுரை ஆசிரியர் குறிப்பு : Text  என்பதற்குப் “பனுவல்”  என்று சொற்பொழிவாளர் குறிப்பிடுவது இலங்கை வழக்காகலாம். ஆனால், தமிழகத்தில் “பாடம்என்னும் வழக்கே உள்ளது. சுவடிகளின் மூலத்திலிருந்து இலக்கியங்களைப் பதிப்பித்த உ.வே.சா. அவர்களும் சுவடிகளின் மூலவரிகளைக் (Text) குறிப்பிடுகையில் “பாடம்”, “பாடபேதம்”  ஆகிய சொற்களையே கையாளுவார். “பனுவல்என்பது தமிழகத்தில் உள்ள நடைமுறையில் ஒரு நூலையே குறிக்கும்.)

யாழ்ப்பாணத்தெருவாசிகள் கல்வெட்டு :

வரணி மாணி
க்கவாசகப் பண்
டார   பிள்
ளை சிவப்பிரகாச
பண்டாரம்

மேற்குறித்த கல்வெட்டுப்போலவே, யாழ்ப்பாணத்திலும் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் வேதாரணியத்திலிருந்த யாழ்ப்பாணத்தெரு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. யாழ்ப்பாணக்கல்வெட்டுப்பாடம் கீழ் வருமாறு :

யாழ்ப்பாணக்கல்வெட்டு :

வரணிசோ
ளங்கச் செ
....    ராயமு
தலியார் மகன்
வீரகத்திச் சேதக









வரணி ஆதீனமும் வேதாரணியமும்

மேற்படி கல்வெட்டுகளில் வருகின்ற “வரணி”  என்பது யாழ்ப்பாணத்தருகே இருக்கும் ஒரு ஆதீனத்தைக்குறிக்கும். வரணி, யாழ்ப்பாணத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்த ஓர் ஊர். வரணி கிராமம் குருக்களின் குடியிருப்பாக இருந்துள்ளது. வரணி ஆதீனத்தைச் சேர்ந்த தில்லைநாயகத் தம்பிரான் என்பவர் வரணியிலிருந்து வேதாரணியத்துக்கு வந்து தொண்டாற்றியிருக்கிறார். இவர் கட்டுமரத்தில் பயணம் செய்து வேதாரணியம் வந்து சேர்ந்ததாகக் குறிப்புகள் உள. இவருக்கு, முதலாம் சரபோசி மன்னர் காலத்தில் மராத்திய அரசு உதவி கிடைத்தது. காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு. இந்த  வரணி மடத்துக்குச் சொந்தமாக ஒரு மடம் தில்லையிலும் இருந்துள்ளது. மாணிக்கசுவாமிகள் மடம் என்னும் பெயரில்  வரணி ஆதீனத்துக்குச் சொந்தமான ஒரு மடம் வேதாரணியத்தில் இருந்தது. அதே போல, வேதாரணியத்தில் தற்போதும் யாழ்ப்பாணத்தார் தெரு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





கட்டுரை ஆக்கம் : து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி ; 9444939156.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக