மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 27 ஏப்ரல், 2015

தொல்லியல்துறை அறிஞர் க.குழந்தைவேலன் அவர்களின் சொற்பொழிவிலிருந்து.


         அண்மையில் கோவை வாணவராயர் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் தொல்லியல் துறையில் பணியாற்றிய கல்வெட்டு ஆய்வறிஞர் திரு.க.குழந்தைவேலன் அவர்கள் கல்வெட்டுகள் பற்றி உரையாற்றினார். பயனுள்ள பல செய்திகளை நாம் அறிய முடிந்தது. சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டே எடுத்த சிறு சிறு குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இக்கட்டுரையைப் பகிர்ந்துகொள்கிறேன்.

         சொற்பொழிவாளர், மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் “கொங்கு நாட்டுப் பெருவழிகள்என்னும் தலைப்பில் கட்டுரை படித்தவர். “கல்லும் சொல்லும்”, “பாளையப்பட்டு வம்சாவளிகள்ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

         இனி, அவருடைய சொற்பொழிவிலிருந்து:

வரலாற்றுக்கு அடிப்படையாய் கல்வெட்டுகள் அமைகின்றன. இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் தமிழகத்தில் கிடைத்தவையே எண்ணிக்கையில் மிகுதி. தமிழ் நாட்டு வரலாறு, மொழி மற்றும் பண்பாட்டை அறிய அவை பெரிதும் துணை செய்கின்றன. பழந்தமிழர், பல்வேறு தாக்கங்களுக்கிடையில் மொழியைக் காப்பாற்றியுள்ளனர். மொழியில் பெயர்ச்சொற்கள் முதன்மையானவை. தமிழர், ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் வைக்கும்போது அப்பொருளின் வண்ணம், உருவம், பயன்பாடு ஆகியனவற்றின் அடிப்படையில் பெயர் அமைத்தனர். சங்க காலத்திற்குப் பின்னர் வந்த அரசர்கள் வடமொழிக்குத் துணை நின்றதாகத் தெரிகிறது. அரசர்களின் பெயரில் தமிழ் இல்லை என்பதைப் பாருங்கள். தமிழ் மொழியின் அடையாளம் இல்லை. கோயில்களே முதன்மையாய் இருந்த அக்கால கட்டத்தில், வடமொழிப்பூசையாளர் தம்மை நிலை நிறுத்திக்கொள்ளப் பல செயல்பாடுகளில் ஈடுபட்டனர். ஊர்ப்பெயர்களையும், கோயில்களின் இறைவர் பெயர்களையும் தமிழ் மொழியிலிருந்து  வடமொழியாக்கம் செய்தனர். ஆனால் மக்கள் வழக்கில் தமிழ் இருந்ததால் கல்வெட்டுகளில் மக்களின் வழக்காற்றுக்கேற்ப நல்ல தமிழ்ப்பெயர்கள் நிலை நின்றன. எடுத்துக்காட்டாக நடராசர் என்னும் வடமொழிச்சொல் தேவாரத்திலோ, கல்வெட்டுகளிலோ இல்லை. ஆடவல்லான், கூத்தன், கூத்தபிரான், நக்கன் ஆகிய பெயர்களே கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ஆடவல்லான் வடமொழியாக்கம் பெற்று நடராசர் ஆயிற்று. இதே போல், சிற்றம்பலம் சிதம்பரம் ஆயிற்று. தஞ்சைக்கருகில் உள்ள ஊர் திருநெல்லிக்கா. நெல்லிக்கு வடமொழியில் அமலா என்று பெயர். திருநெல்லிக்கா அமலேசுவரம் ஆயிற்று.

         முன்னரே குறிப்பிட்டவாறு, தமிழர் வண்ணம், உருவம், பயன்பாடு ஆகிய உள்ளடக்கங்களின் அடிப்படையில் பெயர் வைத்தனர். வள்ளி என்று ஒரு கிழங்கு பண்டு தொட்டு உள்ளது. தற்காலத்து வரவாகிய மரவள்ளிக்கிழங்குக்கு அதன் தோற்றம் கருதி இப்பெயர் அமைந்தது. சில இடப்பகுதிகளில் (குறிப்பாகக் கொங்குப்பகுதியில்) இக்கிழங்கு குச்சிக்கிழங்கு என அழைக்கப்படுகிறது. இதுவும் உருவம் கருதித்தான். குழந்தைக்கண்ணன் வெண்ணெய்ப்பிரியன். வெண்ணெய் கிடைத்ததும் கூத்தாடுவான். எனவே, அவன் தமிழில் வெண்ணெய்க்கூத்தன் ஆகிறான். வடமொழியிலும் அதே வெண்ணெயை அடிப்படையாக வைத்து நவனீதகிருஷ்ணன் என்கின்றனர். நவனீதம் என்பது வெண்ணெயின் வடசொல். மக்களுக்கு எது எட்டும்? எது புரியும்? வாமன அவதாரம் நமக்குத்தெரியும். குறுகிய வடிவம் உடையவன். எனவே தமிழர் குறளப்பன் என்றனர். வேணுகோபாலன், தமிழர்க்குக் குழலூதும் பிள்ளை. கல்வெட்டுகளில் இறைவர் பெயர்களெல்லாம் தமிழில். வடவர் மொழிமாற்றம் செய்தாலும் தமிழர் இடங்கொடுத்ததால்தான் இம்மாற்றம் நிகழ்ந்தது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாதல்லவா?

         கி.பி. முதல் நூற்றாண்டில்தான் சமற்கிருதம் வந்தது. அதற்கு முன்னர் பிராகிருதம் இருந்தது. பல்லவர் ஆட்சித் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் வட்டெழுத்துகளே இருந்தன. எழுத்துகளில் மாற்றம் ஏற்படப் பல்லவர்களே காரணம். அவர்கள் வடபுலத்தவர். அங்கிருந்த எழுத்து வரிவடிவத்தின் தோற்றத்தைத் தமிழில் புகுத்தினார்கள். பல்லவக் கல்வெட்டு எழுத்துகள் மேலும் கீழுமாக நீண்டிருக்கும். வடவரின் வல்லாண்மை. நாட்டியக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் பிறப்பிடம் தமிழகம். ஆனால் இக்கலைகள் பற்றிய தமிழ் நூல்கள் மறைந்து வடமொழி நூல்கள் தோன்றினாலும் அவை தமிழகத்தில்தான் கிடைத்தன.

         வடமொழியில் இறைவன் இருப்பிடத்தைக் கர்ப்பக்கிருகம் என்றனர். நாமும் தற்போது அதனைத் தமிழ்ப்படுத்தி கர்ப்பம்=கரு கிருகம்=அறை -> கருவறை என மாற்றிகொண்டிருக்கிறோம். ஆங்கிலச் சொல்லான “வாட்டர் பால்ஸ்”  என்பதை நீர் வீழ்ச்சி என்பது போல. அருவி என்னும் தமிழ்ச் சொல் நமக்குள்ளதை மறந்தோம். கல்வெட்டுகளில், கருவறைக்கு அழகான இயல்பான தமிழ்ப்பெயர் உண்ணாழிகை என்பது காணப்படுகிறது.  உள்+ நாழிகை - > உண்ணாழிகை. அகநாழிகை எனவும் மற்றொரு சொல் உண்டு.  நிலவின் வளர்பிறையும் தேய்பிறையும் பதினான்கு நாள்கள். கல்வெட்டுகளில் இவற்றை “பக்கம்என்னும் சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அஷ்டமி, நவமி என்பனவற்றை எட்டாம் பக்கம், ஒன்பதாம் பக்கம் என்று எழுதியிருக்கிறார்கள். அமாவாசை “காருவா” (கார்+உவா) என்றாகிறது. தற்போது ஆங்கிலத்தில் Personal  Assistant  என நாம் சொல்லுவதைக் கல்வெட்டில் அணுக்கன் என்று குறித்திருக்கிறார்கள். அணுக்கி என்பது பெண்பாற்சொல். நெருங்கி இருத்தலால் இப்பெயர் வந்தது. இவ்வாறு நல்ல தமிழ்ச்சொற்கள் கல்வெட்டுகளில் உள்ளன. நாம் பயின்று வழக்கத்தில் கொண்டுவரவேண்டும். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: அள் என்பது வேர்ச்சொல்லாக இருக்கலாம். அள் -> அண் எனத்திரிகிறது. அண்மை, அணி, அணு, அணுகு ஆகிய சொற்களை நோக்குக. இப்போது பரவலாகக் கையாளும் “அள்ளக்கைஎன்னும் சொல்லும் “அள்”  வேரிலிருந்து பிறந்ததாய் இருக்கவேண்டும். “அள்” , பக்கத்தைக் குறிக்கும். கொங்குத் தமிழில் மக்கள் வழக்கில் “இந்தப்பக்கம்”, “அந்தப்பக்கம்என்பன “இந்தள்ளை” , “அந்தள்ளைஎன வழங்குவதையும் நோக்குக. (திரு. கணேசன் அவர்களைப்போல்  சொல்லாய்வு செய்யும் முயற்சி.)

         சாதிப்பெயர்கள் பழங்கல்வெட்டுகளில் இல்லை. தொழிலின் அடிப்படையில் பெயர்கள் வழங்கின. முதலி, பிள்ளை என்பன அரசு நிர்வாகத்தில் உயர்மட்டத்தில் இருந்த முதன்மையைச் சார்ந்து அமைந்த பெயர்கள். பதவிப்பெயர் என்றும் சொல்லலாம்.

         கல்வெட்டுகளில் பல்வேறு பெருவழிகளைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதியமான் பெருவழி, இராசகேசரிப்பெருவழி ஆகியன குறிப்பிடத்தக்கவை. சேலம் ஆத்தூர் அருகேயுள்ள ஆறகழூரிலிருந்து காஞ்சி வரை சென்ற பெருவழி மகதேசன் பெருவழி என்னும் பெயர் பெற்றிருந்தது. அக்கல்வெட்டில் இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள தொலைவு 27 காதம் என்பதைக் குறிக்க காதம் என்றெழுதி அதன் பக்கத்தில் இரண்டு பெரிய புள்ளிகளையும், அவற்றைத்தொடர்ந்து ஏழு சிறு புள்ளிகளையும் செதுக்கியிருக்கிறார்கள். இரண்டு பெரிய புள்ளிகள் இருபது என்னும் எண்ணிக்கையையும், சிறு புள்ளிகள் ஏழு என்னும் எண்ணிக்கையையும் குறிப்பன. ஒரு காதம், 11 கி.மீ. தொலைவு எனக் கருதப்படுகிறது.

-------------  உரை முடிவு  --------------------

         உரை முடிவில் பலரும் பல ஐய வினாக்களை எழுப்பினர். சில விளக்கங்கள் பறிமாறப்பட்டன. அவற்றிலிருந்து சில செய்திகள்:

  • தகடூர் (தர்மபுரிப்பகுதி) கொங்கு நாட்டைச் சேர்ந்ததல்ல. தகடூர் நாடு என்னும் பெயரமைந்த தனி நாடு.
  • கொங்கு நாடு ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒரு பகுதி வரை அமைந்திருந்தது.
  • கிரந்த எழுத்து - பல்லவர்கள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு அளவில் வடமொழிச்சொற்களைப் பயன்படுத்த உருவாக்கினார்கள். ஆனாலும், கல்வெட்டுகளில் வடமொழிச்சொற்களைத் தமிழ்ப்படுத்தியே எழுதியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக செங்கம் நடுகற்களில் “ஸிம்ஹ விஷ்ணு”  என்பதைச் “சிங்கவிண்ண”  என்று எழுதியிருக்கிறார்கள். (இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பு: விஷ்ணு, விண்ண என மாற்றம் பெற்றதுபோல் விஷ்ணு கோவிலும் (பெருமாள் கோவில்) “விண்ணகரம்”  எனக் கல்வெட்டில் பயில்கிறது.)
  • அசோகர் காலத்தில் பிராமியைப் பொதுமக்கள் பயன்படுத்தவில்லை எனத்தெரிகிறது. ஆனால், தமிழகத்தில் பொதுமக்களும் பயன்படுத்தினர். சான்று: சமணக் குகைத்தளங்களில் உள்ள பிராமிக்கல்வெட்டுகளைப் பொதுமக்களில் பலர் வெட்டுவித்திருக்கிறார்கள். பெருங்கற்கால வாழ்விடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • கொங்கு நாட்டுக்கல்வெட்டுகள் இருபதில் பெருவழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • கோயில் திருப்பணி, குறிப்பாகக் “கும்பாபிஷேகம்”  தமிழில் நடைபெற்றதா எனபதற்கான குறிப்புகள் இல்லை. ஆனால், கும்பாபிஷேகம் தமிழ்ச் சொல்லால் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆனைமலைக் குடைவரைக் கோயிலான நரசிங்கப்பெருமாள் கோயில் கல்வெட்டில் (வட்டெழுத்தில் அமைந்த கல்வெட்டு) பராந்தக பாண்டியனின் உத்தரமந்திரியான மாறங்காரி என்பவன் இக்கோயிலைக் கட்டுவித்தபோது, பணிகள் முடியுமுன்னே இறந்து போகிறான். அவனுடைய தம்பி, மாறன் எயினன் என்பவன் உத்தரமந்திரி பொறுப்பேற்றதும் பணிகளை முடித்துக் கும்பாபிஷேகம் செய்கிறான். கும்பாபிஷேகம் செய்தான் என்பது கல்வெட்டில் நீர்த்தெளித்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இராசகேசரிப் பெருவழி (கோவைக்கருகே உள்ளது), இந்தியாவிலேயே உள்ள பழைய பெருவழியாகும். இன்றும், அப்பெருவழியின் மூலவழி மூன்று கி.மீ. தொலைவு உள்ளது.
  • கல்வெட்டுகளில் பறையன் என்னும் சொல் வேளாளர் பெயரோடு சேர்ந்து காணப்படுகிறதே? திரு. பூங்குன்றன் அவர்களின் விளக்கம்: பறையன், பாணன், கடம்பன், துடியன் என்பன முல்லைத்திணைக்குரிய பெயர்கள். முல்லைநிலப் பறையர் குடிகள் வேளாளர்களாக மாறியபின் பறையன் என்னும் பெயரை அடைமொழியாகக் கொண்டனர்.
  • சமணக் குகைத்தளங்கள் பள்ளி, பாழி என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. பள்ளி என்னும் இந்தச்சொல் கல்விகற்கும் இடம் என்பதைக்குறிக்கிறதா ?  - இல்லை. பள்ளி என்பது படுக்குமிடத்தை அல்லது தங்குமிடத்தை மட்டுமே குறிக்கும். அங்கே கல்வி கற்க மக்கள் வந்தார்கள். அவர்கள் “மாணாக்கன்” , “மாணாக்கிஎனக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்கள்.
  • கல்வெட்டு எப்படி எழுதியிருப்பார்கள் ? முதலில் கல்லில் செம்மண் குழம்பு கொண்டு எழுதிப் பின்னர், கல்தச்சர் என்னும் சிற்பாச்சாரிகள் உளி கொண்டு வெட்டினர்.


கட்டுரை ஆசிரியர் குறிப்பு : பல்லவர்களின் கிரந்தக் கல்வெட்டு, பல்லவர்களின் தமிழ்க்கல்வெட்டு, “மாணாக்கிஎன்னும் சொல் வந்துள்ள வட்டெழுத்துக்கல்வெட்டு, கும்பாபிஷேகம் பற்றிய ஆனைமலைக் கல்வெட்டு ஆகியவற்றின் ஒளிப்படங்களை இங்கே பார்வைக்குத் தந்துள்ளேன்.

 பல்லவர் கிரந்தக்கல்வெட்டு :


கல்வெட்டுப்பாடம் :

                                                                       அமேயமாய :
                                                                       அப்ரதிஹதசாஸந
                                                                       அத்யந்தகாம
                                                                      அவநபாஜந :
பல்லவர் தமிழ்க்கல்வெட்டு : 


 கல்வெட்டுப்பாடம் :

                                                 ஸ்ரீதிருக்கழுக்குன்றத்து பெருமான்
                                                னடிகளுக்கு களத்தூர் கோட்டத்
                                                து ....................   திருக்கழுக்குன்ற
                                                த்து ஸ்ரீமலை மேல்
                                                (மூ)லட்டானத்து பெருமான்
                                                னடிகளுக்கு வழிபாட்டுப்புறமா
                                                க வாதாபிகொண்ட நரசிங்கப்
                                                போத்த(ர)சர் (வை)த்தது


ஆனைமலைக் கல்வெட்டு :



 கல்வெட்டுப்பாடம் :

                                                                கோமாறஞ்சடையற்கு உ
                                                                த்தரமந்த்ரி களக்குடி வை
                                                                த்யந் மூவேந்தமங்கலப்
                                                                பேரரையன் ஆகிய மாறங்
                                                                காரி இக்கற்றளிசெய்து
                                                                நீர்த்தெளியாதேய் ஸ்வர்க்காரோ
                                                                ஹணஞ்செய்தபின்னை அவ
                                                                னுக்கு அநுஜந் உத்தர
                                                                மந்த்ரி பதமெய்தின பாண்டி
                                                                மங்கலவிசைஅரையன்
                                                               ஆகிய மாறன்னெஇ
                                                               னன்முகமண்டமஞ்செ
                                                               ய்து நீர்த்தெளித்தான்


 ஐவர்மலை வட்டெழுத்துக்கல்வெட்டு - மாணாக்கி குறித்தது :



கல்வெட்டுப்பாடம் :

                                                           ஸ்ரீபெரும்பத்தி
                                                           ஊர் பட்டிநிக்குர
                                                           த்தியர் மாணாக்கிய
                                                           ர் அவ்வணந்திக்
                                                           குரத்தியர் செய்
                                                           வித்த தேவர்



கட்டுரையாக்கம் : து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி: 9444939156. 

1 கருத்து:

  1. அள்ளை பற்றி சொல்லியிருந்தீர்கள். அதே போல் பள்ளை என்பதும் உடலின் பக்கவாடு, விலா. அதில் இருந்து வந்த வார்த்தை பள்ளி கொள்ளுதல். சமன துறவிகள் பள்ளி கொண்ட இடத்தில் கல்வி சொல்லப்பட்டதால் அது பள்ளி என்று பெயர்பெற்றது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு