குளம்
தொட்டு உளம் தொட்டவர்க்கு ஒரு கல்வெட்டு
து.சுந்தரம், கோவை
நம் பள்ளிப்படிப்பில், பேரரசர் அசோகர்
(அசோகர் மட்டுமல்ல, பல அரசர்கள்) சாலை ஓரங்கள் அனைத்திலும் நிழல் தரும் மரங்களை
நட்டுவித்தனர் என வரலாற்றுப் பாடத்தில் படித்ததுண்டு. அது போலவே, அரசர்கள் குளம்
வெட்டினர் என்பதும் வரலாற்றுப்பாடச் செய்தி. அவற்றை அறம் என்றே கருதிச் செய்தனர்.
சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், கரிகாலன்,
“காடுகொன்று
நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கி”
ஆண்டதாகக் கூறுகிறார்.(இவை
பரிபாடல் வரிகள்.) அரசரைப்பின்பற்றி அரசு அதிகாரிகளும் ஊர்ப்பெரியவர்களும், செல்வ
வணிகர்களும் குளங்கள் வெட்டி மக்கள் தொண்டாற்றினர். அரசர்காலத்து அத்தகைய மரபைப்
பிற்காலம் வரை தொடர்ந்து நிறைவேற்றியவர்கள் பலர். செல்வ வளமும், அறம் சார்ந்த
மனமும் நிறைந்தவர்கள் ஆங்காங்கே ஊர்களில் “குளம் தொட்டு” மக்கள்
உளம் தொட்டிருக்கிறார்கள்.
கி.பி. 19-ஆம் நூற்றாண்டில்
கோவைப்பகுதியில் ஒரு சிற்றூரில் குளம் அமைத்த செய்தியைச் சொல்லும் கல்வெட்டு
ஒன்றைப்பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. மருத்துவம் சொல்லும் கல்வெட்டு என்று ஒரு
கல்வெட்டைச் சரவணம்பட்டியில் செப்டம்பர் மாதம் பார்த்துவிட்டு வருகின்ற வழியில்,
விளாங்குறிச்சி சிற்றூர் வழியே வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். ஊரின் பெயரை
விளமரத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம். அல்லது வேளான்குறிச்சி என்பது
விளாங்குறிச்சி எனத்திரிந்ததாகக் கொள்ளலாம். ஊரில் அரசமரம் ஒன்றைச் சுற்றி
அமைக்கப்பட்டிருந்த மேடைப்பகுதியில் (சிற்றூர் என்றாலே ஓர் அரசமரமேடையோ அல்லது
ஆலமரமேடையோ நினைவுக்கு வராமல் போகாது) வயதில் மூத்தவர்கள் சிலர் அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தார்கள். பழங்கோயில் ஏதேனும் இருக்குமா எனக் கேட்க எண்ணம்
ஏற்பட்டது. உடனே, இரு சக்கர வண்டியை நிறுத்தி, அப்பெரியவர்களிடம்
பேச்சுக்கொடுத்தேன். அருகிலே படைவெட்டி அம்மன் கோயில் இருப்பதாகவும் அங்கே
கல்வெட்டு இருப்பதாகவும் சொன்னார்கள். தற்செயலாக ஒரு கல்வெட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி
ஏற்பட்டது.
படைவெட்டி அம்மன் கோயிலுக்குச்
சென்றேன். பிற்பகல் இரண்டு மணியிருக்கலாம். கோயில் திறந்திருந்தது. அக்கோயில்,
முதலியார் குலத்தவர்க்கான குலக்கோயில் என்று தகவல் பலகை குறிக்கிறது. கோயிலின்
செயலாளர் இராமகிருஷ்ணன் என்பவர் அங்கே இருந்தார். கோயிலின் சுற்றாலையில் இருந்த
கல்வெட்டைக் காட்டினார். மூன்று அல்லது மூன்றரை அடி உயரத்தில் நல்ல பருமனோடு கூடிய
பலகைக்கல். கல்லின் மேல்பகுதி உயரத்துக்குச் சமனாக நிலத்தடியிலும் கல்
பதிந்துள்ளது என அவர் கூறினார். கல்வெட்டின் அப்போதைய தோற்றத்தில் எழுத்துகள்
படிக்க இயலாதவாறு இருந்தன. வெள்ளைச் சுண்ணத்தைப்பூசிக் காயவைத்தபின்னர் படிக்க
இயன்றது. பதினொரு வரிகளில் எழுத்துகள்
பொறிக்கப்பட்டிருந்தன. கல்வெட்டின் பாடத்தைக் கீழே தந்துள்ளேன்.
வெள்ளையா
ன் முதலியார்
ஊர் மணியம்
சறுவதாரி வரு.
மாகளி 15 வி
ழங்குறிச்சி
குடியானவ
ர்கள் குழம் க
ட்டின உபை
யம் நஞ்சசெ
ட்டி கற்பகம்
நஞ்சசெட்டி, கற்பகம் இணையர்(தம்பதியர்)
விளாங்குறிச்சியில் வேளாண்மை செய்யும் குடியானவர்களுக்காகக் குளம் வெட்டிக்
கொடுத்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. 18-19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
கல்வெட்டுகளில் பெரும்பாலும் கலியுக ஆண்டு அல்லது சாலிவாகன ஆண்டு
குறிப்பிடப்படும். ஆனால், இக்கல்வெட்டில் அவ்வாறான குறிப்பு இல்லை. தமிழ் ஆண்டான
சர்வதாரி (கல்வெட்டில் சறுவதாரி) குறிப்பிடப்படுகிறது. சர்வதாரி ஆண்டு கி.பி.
1888-ஆம் ஆண்டுடன் பொருந்துவதால் கல்வெட்டின் காலம் கி.பி. 1888 எனக்கொள்ளலாம். கல்வெட்டில்
மார்கழி மாதம் ”மாகளி” எனக்குறிப்பிடப்படுகிறது.
அரசர் அல்லது ஆட்சியினர் சார்பாக இயங்கும் அதிகாரிகளை முன்னிலைப்படுத்தியே
கல்வெட்டுகளின் முற்பகுதி அமைந்திருக்கும். கொங்குச் சோழர், மற்றும் விஜய நகரர்
கல்வெட்டுகளில் அரசர் பெயரும், நாயக்கர் கல்வெட்டுகளில் மண்டலாதிபதியின் பெயரும்
குறிப்பிடப்படுவது போல இக்கல்வெட்டில் ஊர்த் தலைவர் பெயரை முன்னிலைப்படுத்திக் கல்வெட்டு
தொடங்குகிறது.
ஊர்த் தலைவராக (மணியமாக) வெள்ளையான்
முதலியார் பெயர் காணப்படுகிறது. ஊர்ப்பெயர் விழங்குறிச்சி எனச் சிறப்பு ‘ழ’கரத்தோடு
குறிக்கப்படுகிறது. இக்கல்வெட்டு, கோவைத்தொல்லியல் துறையினரால்
படியெடுக்கப்பட்டுள்ளது என்றும், “தினகரன்” நாளிதழார் இக்கல்வெட்டு பற்றிய செய்தியை
வெளியிட்டுள்ளனர் என்றும் இராமகிருஷ்ணன் கூறினார். இவர் கவிச்சிற்பி இளம்விழியன் என்னும் பெயரில்
ஒரு கவிஞராக அறியப்படுகிறார். இவர் இந்த அம்மன்மீது முப்பது பாடல்கள் கொண்ட “படைவெட்டியம்மன்
அந்தாதி” ஒன்று இயற்றியுள்ளார். பார்வைக்கு ஒரு பாடல்:
காசு பணமொன்றே கண்ணிற் தெரிவதென
மாசு மனத்து மனிதரிடை – பேசும்
நிறை மொழியாம் பைந்தமிழ்
என்நெஞ்சிற் பதிய
நிறைவாய் அருள்புரிவாய் நீ
குடியானவர்களின் நலம் கருதிய
நஞ்சசெட்டியின் தொண்டுள்ளம் குளம் தொட்டதால் (வெட்டியதால்) வேளாண்மக்களின் உளம்
தொட்ட சிறப்பை மேற்படி கல்வெட்டு உணர்த்துகிறது.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக