மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 19 நவம்பர், 2014

நெகமம் பத்ரகாளியம்மன் கோவில் கல்வெட்டு
                                                        து.சுந்தரம்,கோவை

         அண்மையில், நெகமம் (கோவைக்கும் பொள்ளாச்சிக்கும் இடையில் அமைந்துள்ள ஓர் ஊர்) அருகே பட்டணத்தில் கண்டெடுக்கப்பட்டு கோவை தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு ஒன்றில் நெகமம் ஊரில் வணிகர்களுடைய சங்க அமைப்பு இயங்கியிருக்கலாம் என்று கருதத்தக்க சான்றுகள் இருந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தோம். நெகமத்தில் இதற்கான சான்றாகக் கல்வெட்டுகள் எவையும் கிடைக்காத சூழ்நிலையில், தற்போது ஒரு சான்று கிடைத்துள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் நெகமம் மற்றும் நெகமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகையில், நெகமம் சந்தைக்கு மிக அணித்தாயுள்ள பத்ரகாளியம்மன் கோவிலை ஆராய்ந்து பார்க்கும்போது, கோயிலின் கருவறைக்கு அடுத்தாற்போல் உள்ள அர்த்தமண்டபத்தின் நிலைக்கால் ஒன்றின்மீது எழுத்துகள் காணப்பட்டன. கற்களால் அமைக்கப்பட்ட நிலைக்கால்கள் முழுவதும் காவி வண்ணத்தில் வழவழப்பாக ஆயில் பெயிண்ட் “ என்னும் எண்ணை வண்ணப்பூச்சால் எழுத்துகளின் சீர்மையான வடிவம் மறைந்துவிட்டிருந்தது. கல்வெட்டை ஒளிப்படம் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் பின் வரும் செய்திகள் புலனாயின.

நெகமம் பத்ரகாளியம்மன் கோவில் - கல்வெட்டுப்பாடம்
                                                        



.................தேவற்(கு)
........... (யா)ண்டு ஒ
ன்பதாவது
நியமத்து
வியாபாரி
(தேவன்) பி                         
ள்ளனான அ
திராசராச சீ
லை செட்டி
யிட்ட திருனி
லை காலிரண்
டும் அதிரா
ச(ராச) சிலை
(செட்டி) தன்
மம்


         நெகமம் என்னும் ஊர்ப்பெயர் கல்வெட்டில் “நியமம்  என்று குறிக்கப்பட்டிருக்கிறது. வணிகக்குழுக்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஓர் அமைப்பே “நிகமம்  ஆகும். அது போன்ற ஒரு வணிகச்சங்கம் நெகமத்தில் இயங்கிவந்துள்ளது இதனால் உறுதிப்படுத்தப்படுகிறது. “நியமத்து வியாபாரி என்று கல்வெட்டு வரியில் வருவதாலும் நெகமம் ஒரு வணிக நகரமாக இருந்தது என உறுதியாகக் கருதலாம். கல்வெட்டின் காலத்தை வழக்கமாகக் கண்டறிய, கல்வெட்டின் தொடக்க வரிகள்தாம் துணை நிற்கும். ஏனெனில், தொடக்கவரிகளில் ஆட்சியில் இருக்கும் அரசனின் பெயரும், அரசனது ஆட்சியாண்டும் அதாவது அரசன் பட்டத்துக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆயின என்னும் குறிப்பும் காணப்படும். இங்கே, கல்வெட்டின் தொடக்க வரிகள், கல் பொளிவின் காரணமாகச் சிதைந்து போயுள்ளமையால், அரசனின் பெயர் காணப்படவில்லை. ஆனால், அரசனின் ஆட்சியாண்டு ஒன்பதாவது என்னும் குறிப்பு உள்ளது. எனவே, கல்வெட்டின் காலத்தைத்துல்லியமாகச் சொல்ல இயல்வில்லை எனினும் கோவைப்பகுதியில்  கொங்குச்சோழனான வீரரசேந்திரனின் கல்வெட்டுகள் மிகுதியாகக் கிடைப்பதால் இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி. 1216 எனக் கருத வாய்ப்புண்டு. மேலும், கல்வெட்டின் எழுத்தமைதியை நோக்குமிடத்து, கல்வெட்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது எனக்கொள்வதில் தவறில்லை. கோவிலும் எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக்கொள்ளலாம்.
         அடுத்து, வியாபாரியின் பெயர் தேவன் பிள்ளனான அதிராசராச சிலை செட்டி  எனக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. அவருடைய இயற்பெயர் தேவன் பிள்ளன் என்பதாகும். சிறப்புப்பெயராக “அதிராசராச என்று கூறப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளாகவோ, அல்லது அரசின் சார்பாகவோ செல்வாக்குள்ள ஒருவருக்கு இது போல் இயற்பெயரோடு ஒரு சிறப்புப்பெயர் அமைந்துவருவது மரபாகக் கல்வெட்டில் காணப்படுகிறது. தேவன் கந்தனான தொண்டைமானேன், சோழன் கூத்தனான வீரராசேந்திர இருங்கோளனேன் ஆகிய பல பெயர்கள் இவ்வாறு கல்வெட்டுகளில் வருவதைப்பார்க்கிறோம். இங்கு நமது கல்வெட்டில், அதிராசராச  என்னும் சிறப்புப்பெயர் அரசனைக்குறிப்பதாகும். இது வீரகேரள அரசனான அதிராஜராஜன் என்பவருடைய பெயரால் அமைந்த சிறப்புப்பெயராகலாம். அடுத்து, “சிலைசெட்டி என்னும் பெயரில் அமைந்த செட்டி”  என்பது அவர் வணிகர் அல்லது வியாபாரி என்பதைத் தெளிவுபடுத்துகிறது. “சிலைசெட்டி  என்பது வணிகர்களில் ஒரு வகையினரைக் குறிக்கின்றது எனலாம். சேவூர் கபாலீசர் கோவில் கல்வெட்டில் “மாந்தோட்டத்தில் வியாபாரி ஈசானச் சிலைசெட்டி பொன்னம்பலக்கூத்தன்”  எனவும், (மேட்டுப்பாளையம்) வெள்ளியங்காடு பதினெண்பூமீசுவரர் கோயில் கல்வெட்டில் குலோத்துங்கச் சிலைசெட்டி”  எனவும் வருகின்ற தொடர்களை ஒப்புநோக்கலாம். வணிகர்கள் “பதினெண்பூமியார்”,  “நானாதேசியார்”,  “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்”  ஆகிய பல்வேறு வகையினராகக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறார்கள். அவர்களில் “சிலைசெட்டிகள் ஒரு உட்பிரிவினராக இருக்கலாம். அல்லது “சீலை செட்டி எனக்கொண்டால், அந்த வியாபாரி ஒரு துணி வணிகராக இருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது. நெகமம் பகுதியில் நெடுங்காலமாக நெசவுத்தொழில் நடைபெற்று வந்துள்ளது என்பது நாம் அறிந்த ஒன்று. துணி வணிகர் என்னும் கருத்துக்கு இது வலு சேர்க்கிறது என்றாலும் இக்கருத்து ஆய்வுக்குரியது.

         அடுத்து, திருனிலைக்காலிரண்டும் அதிராசராச சிலைசெட்டி தன்மம் என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் நிலைக்கால்களைக் கோவிலுக்குக் கொடையளித்துள்ளார் என்பது கல்வெட்டின் முதன்மைச்செய்தியாய் அமைகிறது. முடிவாக, ஒரு வியாபாரி கோயிலின் நிலைக்காலிரண்டு கொடையாக அளித்துள்ளார் என்னும் கல்வெட்டுச் செய்தியின் மூலம், நெகமம் ஒரு வணிக நகரமாக இருந்துள்ளது என்பது தெளிவாகிறது.


         கோவிலின் அதிட்டானப்பகுதியில் பழங்காலக் கல்வெட்டு ஒன்று காணப்பட்டது. அதன் எழுத்தமைதியைக் கருத்தில் கொண்டு அது கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனகருதலாம். எழுத்துகளின் தெளிவின்மை காரணமாகப் படிக்க இயலவில்லை. இருப்பினும் “பண்டாரத்தில் என்னும் தொடரைப்படிக்க முடிந்தது. ஏதோ ஒரு கொடைக்காகக் கோயில் பண்டாரத்தில் காசோ அல்லது பொன்னோ செலுத்தப்பட்டிருக்கலாம். அதன் ஒளிப்படம் இங்கே தரப்பட்டுள்ளது.



நன்றி :   சிலைசெட்டி”  என்பதைச் “சீலைசெட்டிஎனப் பாடம் கொண்டு துணி வணிகர் நெகமத்தில் இருந்தனர் என்னும் கருத்துத் தந்துதவிய மதுரை தொல்லியல் அறிஞர் திரு. சொ. சாந்தலிங்கம் அவர்களுக்கு நன்றி.

























து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலை பேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக