மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 1 அக்டோபர், 2014

சித்தநாயக்கன்பாளையம் கல்வெட்டு

சித்த நாயக்கன்பாளையம் கல்வெட்டு
                                                       து.சுந்தரம், கோவை.


          கோவைக்கருகில் பாப்பம்பட்டி-செலக்கெரிச்சல் சாலையில் பாப்பம்பட்டியை அடுத்து அமைந்துள்ள ஒரு சிற்றூர் சித்தநாயக்கன்பாளையம். இங்கு மாகாளியம்மன் கோவில் என்னும் பெயரில் ஓர் அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. சற்றே பழமையான கோவில் எனினும் பழமையின் காலத்தைக்கணிக்கும் ஆதாரங்கள் இல்லை. பழங்கல்வெட்டுகள் எவையும் இங்கு காணப்படவில்லை என்றாலும், இன்றைக்கு நூற்று இருபத்தேழு ஆண்டுகளுக்குமுன் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது கட்டுரை ஆசிரியரின் நண்பரான, இவ்வூரைச்சேர்ந்த கே.ரங்கசாமி என்பவர் இக்கோவிலின் கட்டளைதாரர்களில் ஒருவர். இவர் கொடுத்த தகவலின்படி, கட்டுரை ஆசிரியர் கோவிலுக்குச்சென்று ஆய்வு செய்ததில் தெரியவரும் செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன.

         ஊர்ப்பெரியவர்கள் சொன்ன செய்திகளின்படி, கோவில் பழமையானது. ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்யப்பட்டுள்ளதால், கோவிலின் பழமையைக்குறிக்கும் கட்டுமானங்கள் காணப்படவில்லை. இக்கோவில், சித்தநாயக்கன்பாளையத்தைத் தவிர இதன் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள செலக்கெரிச்சல், லட்சுமிநாயக்கன்பாளையம், திம்மநாயக்கன்பாளையம், வீரணபூசேரிபாளையம் ஆகிய ஊர்களுக்கும் பொதுவானது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும்போது தேரோட்டமும் உண்டு. கோவிலுக்குத் தேர் இருப்பதைக்கொண்டு, கோவிலின் பழமையையும், சிறப்பையும் ஓரளவு அறியலாம்.

         கல்வெட்டு ஒரு தனிக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. நீள்சதுர வடிவத்தில் நிற்க வைத்த கல்லின் முகம் (எழுத்துகள் பொறிக்கப்பட்ட பரப்பு) நன்கு சமப்படுத்தப்பட்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில், கலியுக ஆண்டு, சாலிவாகன ஆண்டு, அறுபது ஆண்டுகளைக்கொண்ட  வட்டத்தின் தமிழ் ஆண்டின் பெயர் மற்றும் ஆங்கில ஆண்டு ஆகிய அனைத்து ஆண்டுகளின் விவரங்களும் குறிக்கப்பட்டுள்ளதால் கல்வெட்டின் காலத்தைத் துல்லியமாகக் கணிக்க முடிகிறது. கலியுக ஆண்டு 4988; சாலிவாகன (சக ஆண்டு) ஆண்டு 1808; ஆங்கில ஆண்டு 1887; தமிழ் ஆண்டு விய வருடம். மேலும், கல்வெட்டில் தை மாதம் 23-ஆந்தேதி, வெள்ளிக்கிழமை ஏகாதசியும், மிருகசீரிஷ நட்சத்திரமும் கூடிய சுபதினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

         இவை எல்லாவற்றையும் கணக்கிடும்போது, கல்வெட்டு எழுதப்பட்ட காலம் 4-2-1887 எனத் துல்லியமாகத்தெரியவருகிறது.

மேற்குறித்த நாளில், சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மோவூரு சித்த நாயக்கன் என்பாரின் மகனான ரவணப்ப நாயக்கர் என்பவர் இக்கோவிலுக்கு ஊஞ்சல் மண்டபம் ஒன்றைக் கட்டிக்கொடுத்துள்ளார். கூடவே ஊஞ்சலுக்கான கயிற்றையும் அதாவது பித்தளையால் ஆன சங்கிலியையும் பிரதிஷ்டை செய்துள்ளார் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. கோவிலில், பித்தளையால் ஆன சங்கிலி இன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

         மேற்குறித்த கல்வெட்டு தவிர, கோவிலின் அருகில் சாலை ஒரத்தில் அமைந்துள்ள சுமைதாங்கிக்கல் ஒன்றில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதைக் காண நேர்ந்தது. சுமைதாங்கிக் கற்களையே காண்பது அரிதாகிவிட்டிருக்கும் தற்காலத்தில், எழுத்துகளோடு ஒரு சுமைதாங்கிக்கல்! எழுத்துகளை ஆராய்ந்ததில் அதில் “ கொண்டார் சன்னவ நாயக்கர் மகன் சாம நாயக்கர் “  என்னும் வாசகம் காணப்பட்டது. இந்தச் சுமைதாங்கியின் பின்னணி சுவையானது. ஏறத்தாழ 70 75 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு சமூகச் சூழலை நினைவுபடுத்தும் வரலாற்று எச்சமாக இது திகழ்கிறது. அக் காலகட்டத்தில், சூலூர், செலக்கெரிச்சல் பகுதிகளில் வெற்றிலைச் சாகுபடி பெருமளவில் இருந்ததாம். வெற்றிலையை வணிகப்பொருளாகக் கொண்டு வணிகம் செய்துவந்த வெற்றிலைக்காரத்தேவர்கள், வெற்றிலைப் பொதிகளோடு நடந்துவந்து சித்தநாயக்கன்பாளையத்தில் ஒன்று கூடிப் பின்னர் சுற்றுவட்டத்தில் உள்ள ஊர்களை நோக்கிப் பயணப்படுவார்களாம். இவ்வாறு சுமையோடு வரும் வியாபாரிகள் சுமைகளை இறக்கி, இளைப்பாறிப் பின்பு சுமைகளைப் பிரித்துப் பல ஊர்களுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனராம். இவ்வியாபாரிகளின் சுமைக்களைப்பைத் தீர்க்கும் வகையில் சாம நாயக்கர் ஓர் அறப்பணியை ஆற்றியுள்ளார். இச் சுமைதாங்கி, இன்றும் அவர் பெயரைத் தாங்கி அவரை நினைவுபடுத்துவதோடு, மீண்டும் காட்சிக்குக் கிடைக்காத ஒரு வரலாற்றுச் சூழலையும் நமக்கு நினைவு படுத்துகிறது! ஊர் மக்கள் இவ்விரண்டு கல்வெட்டுகளையும் பாதுகாப்பது தம் கடமை என்று உணர்ந்து கல்வெட்டுகள் சொல்லும் செய்திகளைத் தம் சந்ததிகளுக்கும் முன்னெடுத்துச் செல்வார்களாக.








து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக