மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஆங்கிலேயர் கல்லறைகளுக்கு நடுவே ஒரு தமிழரின் கல்லறைக்கல்

                                          அக்டோபர் 19, 2014                                        
                                                          ஆங்கிலேயர் கல்லறைகளுக்கு நடுவே ஒரு தமிழரின் கல்லறைக்கல்


         இன்று, தினமணி நாளிதழின்  இணைப்புப்பகுதியான தினமணி கதிரில் வெளியான ‘ஒன்ஸ்மோர்பகுதியில் எழுத்தாளர் நரசய்யாவின் பேட்டியில் சென்னை தானப்ப முதலியார் பற்றிய செய்திக்குறிப்பைப் படித்தேன். படித்ததுமே, நான் 9-7-2012 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருந்த செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தைச் சுற்றிப்பார்த்ததும், தேவாலயத்தின் நுழைவு வாயிலுக்கருகேயுள்ள சுற்றுப்பகுதியில் தரையில் பதிக்கப்பட்டிருந்த கல்லறைக் கல்வெட்டுகளைக் கண்டு ஒளிப்படங்கள் எடுத்து வந்ததும் நினைவுக்கு வந்தன. அவை அனைத்துமே மறைந்த ஆங்கிலேய அதிகாரிகளின் நினைவாக ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள். அவற்றின் இடையில் தமிழில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று பார்வையைத் தனித்துக் கவர்ந்தது. வியப்புடன் அதை ஒளிப்படம் எடுத்துக்கொண்டதோடு அங்கேயே படித்தும் பார்த்தேன். தானியப்ப முதலியார் என்னும் பெயர் அதில் காணப்பட்டது. சென்னை மாநகரில் தானப்ப முதலித் தெரு இருப்பது நினைவுக்கு வந்தது. இது அவருடைய நினவுக்கல்தான் என்று தெரிந்தது. ஆனால், அவரைப்பற்றிய செய்திகள் எவையும் அறிந்திருக்கவில்லை.

         மேற்படி தினமணிச்செய்தியில், மதராசில் முதன் முதலாக விமானம் வாங்கியவர் தானப்ப முதலியார் என்றும், பிரெஞ்சு நாட்டவருடன் தொடர்புடையவர் என்றும், உரோமன் கத்தோலிக்கராக மதம் மாறி “லாசரஸ் தியேதிதி”  என்னும் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. என்னுடைய கல்வெட்டுகள் சேர்க்கையிலிருந்து அவ்வொளிப்படங்களை இன்று எடுத்துப்பார்த்தேன். அப்படங்களை இந்தப்பகுதியில் பகிர்ந்திருக்கிறேன். தானப்ப முதலியாரின் நினைவுக்கல்வெட்டின் பாடத்தைக் கீழே தந்துள்ளேன்.



          1691 (வரு) செல்லும்
          பிறமாதூத வருஷம் சித்திரை
          மீ 21 உ (தேதி) அகம்படிமுத
          லிகளில் புதுச்சேரி பறாஞ்ச
          கும்புனிக்கு காறணகற்தராயி
          ருந்த லாசுறு தமோத்த என்கு
          ற தானியப்பமுதலியார் மற
          ணமானார் அவரை சென்ன
          பட்டணத்திலே சந்தந்திரை
          யுட கோயிலிலே அடக்குனது
          அவர் தகப்பனாருட பெ
          .....................முதலியார் ...........




கல்வெட்டை ஆய்வுக்குட்படுத்தும்போது கீழ்க்கண்ட செய்திகளும், உறுதிப்படுத்தப்படவேண்டிய ஐயங்களும் கிடைக்கின்றன.

         கல்வெட்டின் உச்சியில் சிறிய எழுத்தில் “பரமண்டல.....”  என்னும் தொடர் காணப்படுகிறது. ஆங்கில ஆண்டு 1691, தமிழில் உள்ள எண் குறியீடுகளில் தரப்பட்டுள்ளது. ஆங்கில ஆண்டு தரப்பட்டுள்ளதேயன்றி ஆங்கில மாதமோ ஆங்கிலத்தேதியோ தரப்படவில்லை. ஆனால், தமிழ் ஆண்டு, மாதம், தேதி ஆகியன தரப்பட்டுள்ளன. கிழமை எது என்னும் குறிப்பு இல்லை. பிரமோதூத(Pramoda) ஆண்டு, சித்திரை தேதி 21. பிரமோதூத ஆண்டு “பிறமாதூதஎன்று மாறுபட்ட எழுத்தில் உள்ளது. இதற்கு ஈடான ஆங்கிலத்தேதி 19-5-1691 ஆகும். இதேபோல, பிரெஞ்சு என்னும் சொல் “பறாஞ்ச”  என்று மாறுபட்ட எழுத்தில் உள்ளது.  அவர் அகம்படி முதலிகள் வகுப்பினர் என அறிகிறோம். அகமுடைய முதலி என்று தற்காலத்தில் குறிப்பிடும் வழக்கு பின்பற்றப்படவில்லை. பழங்கல்வெட்டுகளில் பயிலும் “அகம்படி முதலிஎன்னும் சொல்லே ஆளப்பட்டுள்ளது. நாயக்கர் காலக்கல்வெட்டுகளில் நிர்வாக உயர் அதிகாரிகளைக் “காரியத்துக்கு கர்த்தர்எனக்குறிப்பிடுவது மரபு. அம்மரபை ஒட்டியே இங்கும் “காறணகற்தராயிருந்த  என்று குறிப்பிடப்படுகிறது. தானப்ப முதலியார் பிரெஞ்சு கம்பெனிக்குக் காரணகர்த்தராய் (உயர் பதவியில்) இருந்துள்ளார் என அறிகிறோம்.

         அடுத்து அவருடைய கிறித்தவப்பெயரை நோக்கும்போது, நரசய்யா அவர்கள் லாசரஸ் தியேதிதி”  எனக்குறிப்பிடுகிறார். ஆனால், கல்வெட்டில் “லாசுறு தமோத்த”  எனத்தரப்பட்டுள்ளது. இதில், தியேதிதி என்பது சரியான உச்சரிப்பு ஆகாது எனக்கருதவேண்டியுள்ளது. தமோத்த”  என்பதும் சரியான கிறித்தவப்பெயரின் உச்சரிப்பா என்னும் ஐயம் எழுகிறது. தமோத்த”  என்பதற்குச் சரியான ஆங்கில உச்சரிப்புப் பெயர் நமக்குத்தெரியவில்லை. மேலும் கல்வெட்டில், பழங்கல்வெட்டு மரபைப்பின்பற்றி மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடவில்லை; ஏகார, ஓகார நெடில் எழுத்துகளுக்கு குறிலைக்குறிக்கும் ஒற்றைக்கொம்பே எழுதப்பட்டுள்ளது. இதுவும் பழங்கல்வெட்டு மரபேயாகும்.

         அடுத்து அவரை அடக்கம் செய்த தேவாலயம் எது என்னும் ஐயம் எழுகிறது. நரசய்யா அவர்கள் செயிண்ட் மேரீஸ் தேவாலயம் என்று குறிப்பிடுகிறார். ஆனால், கல்வெட்டு குறிப்பிடும் தேவாலயம் “சந்தந்திரையுட கோயில்” .  இதிலும் மெய்யெழுத்துகளில் புள்ளி இல்லாமை நமக்கு ஐயத்தை ஏற்படுத்துகிறது. “சநதநதிரை”   என்ற கல்வெட்டுச் சொல்லைக்கொண்டு தேவாலயத்தின் பெயரை உறுதிப்படுத்துவது கடினம். ஆனால் கல்வெட்டின்படி மேரீஸ் தேவாலயம் இல்லை என்பது தெளிவு. “சநதநதிரை ஒருவேளை “சாந்தோம்”  தேவாலயமாக இருக்குமா? ஆய்வாளர்கள்தாம் தெளிவு படுத்தவேண்டும். கல்வெட்டின் இறுதியில் “தகப்பனாருட”  என்னும் தொடர் எதைக்குறிக்கிறது எனப்புலப்படவில்லை.



பின் குறிப்பு : ”செயிண்ட்’  என்னும் ஆங்கிலச் சொல்லைத் தமிழில், தமிழ் ஒலிப்பில் கொணரும்போது “சந்த்”  எனவும்,  அதேபோல் “ஆண்ட்ரூஸ்”  என்னும் ஆங்கிலச் சொல்லை “அந்திரை”  எனவும் குறிப்பிடுவதற்குப்பெரிதும் வாய்ப்பு உள்ளது. 
“சந்த்” + “அந்திரை” = “சந்தந்திரை”  என அமையும். எனவே, கல்வெட்டில் உள்ள “சந்தந்திரை” கோயில் என்பது செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தைக் குறிக்கும் எனலாம். தானப்ப முதலியார் செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார் எனக்கருத இடம்
உண்டு.




து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.




















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக