மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 4 ஜனவரி, 2020


கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள்
பல்லடமும்  கண்பும்


முன்னுரை

அவிநாசியில் இருப்பவர் ஜெயசங்கர் என்னும் இளைஞர். வரலாற்றில் பெரிதும் ஆர்வமுடைய அவர், சொந்தத் தொழில் ஒன்றில் உழைப்பைச் செலுத்திக்கொண்டே  தமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கல்வெட்டு, வரலாறு எனக் கற்றல், தேடல் பணியில் ஈடுபடுகின்றவர். தொல்லியல்- கல்வெட்டு  என அமைந்த என் தேடல் களப்பணியில்  உடன் பயணம் செய்துகொண்டு வருபவர். கொங்குப்பகுதியில் பல கல்வெட்டுகளை நாங்கள் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறோம். அவரது இருப்பிடம் திருமுருகன் பூண்டியை ஒட்டிய கிராமப்பகுதி. நினக்கும்போதெல்லாம் திருமுருகன்பூண்டிக் கோயிலுக்குச் சென்று அவ்வப்போது கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை ஒளிப்படம் எடுத்துப் படிக்கவும், ஐயம் கேட்கவும் என்னைப் பேசியில் அழைத்துப் பேசுவதுண்டு. சென்ற மாதம், 2019, டிசம்பரில் ஒரு நாள் அவ்வாறு அவரிடமிருந்து ஓர் அழைப்பு. தாம் எடுத்திருந்த ஓர் ஒளிப்படத்தைப் பார்த்த அவருடைய நண்பர், படத்தில் இரண்டு சொற்களைக் கண்டுகொண்டு அது பற்றிக்கேட்டிருக்கிறார். அந்த நண்பர்  “தினமலர்”  நாளிதழ் செய்தியாளர். “நந்தவானம்”,  “பல்லோடம்”  ஆகியனவே அச்சொற்கள்.  ஜெய்சங்கர் அச்சொற்கள் குறித்த பொருளைச் சொல்லவே செய்தியாளர், அது பற்றிய செய்திகளை நாளிதழில் வெளியிடும் எண்ணத்துடன் செய்திக் குறிப்பு வேண்டுமென்று கேட்டிருக்கிறார். ஜெயசங்கர் என்னைத் தொடர்புகொண்டுள்ளார்.  ஒளிப்படத்தை அனுப்பிவைக்குமாறு நான் சொல்லி ஒளிப்படமும் எனக்குக் கிடைத்தது.

வழக்கமாகப்  புதுக்கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தால்  மட்டுமே நாளிதழ் செய்தியாளர்கள் செய்தியை வெளியிட முன்வரும் வேளையில்,  இதுபோல் செய்தி கேட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.   கல்வெட்டிலும் ,  மக்கள் அறிய வேண்டிய புதிய செய்திகள் இருந்தன.  அது பற்றி எழுதிச் செய்தியும் நாளிதழில் வெளிவந்தது.  நாளிதழுக்குக் கொடுக்கப்பட்ட கல்வெட்டின் ஒளிப்படம் முழுக்கல்வெட்டின் ஒரு பகுதியே. முழுக்கல்வெட்டு வரிகளும் உள்ள வேறொரு ஒளிப்படததை அனுப்பச் சொல்லி முழுக்கல்வெட்டையும் படித்தேன்.  இது பற்றிய ஒரு பகிர்வே இந்தப் பதிவு.

திருமுருகன்பூண்டி

முன்னர் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திலும் தற்போது திருப்பூர் மாவட்டத்திலும் அமைந்த சிற்றூர் திருமுருகன்பூண்டி. இங்குள்ள திருமுருகநாதசுவாமி கோயில் பழமைச் சிறப்புக்கொண்டது. சைவசமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் வருகை தந்து தேவாரப் பாடல் பாடியிருக்கின்ற பெருமை பெற்ற கோயில் இது. சுந்தரர் வாழ்ந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றண்டு என வரலாற்று அறிஞர்கள் வரையறை செய்துள்ளார்கள். எனவே, பூண்டிக்கோயிலின் பழமையையும் கி.பி. எட்டாம் நூற்றாண்டு எனலாம். இத்தகு வரலாற்றுப் பழமையுள்ள பூண்டிக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் கொங்குப்பகுதியை ஆண்ட கொங்குச் சோழர் காலத்தவை. அதாவது, கி.பி. 12-ஆம் நூற்றாண்டு. கோயிலின் பழமை, கல்வெட்டுச் சிறப்பு ஆகியவை கருதி இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையினர் இக்கோயிலை மரபுச் சின்னமாக அறிவித்துப் பாதுகாக்கின்றனர்.  கோயிலில் எந்தவொரு புதிய பணியும் செய்வதற்கில்லை.

கல்வெட்டு எழுத்துகளைக் கற்றுக்கொண்ட புதிதில், பேரூர், திருமுருகன்பூண்டி, அன்னூர்  ஆகிய கோயில்களுக்குச் சென்று கோயிற்சுவரின் எதிரே நின்றுகொண்டு கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்தவாறே  நோட்டுப்புத்தகமொன்றில் கையால் விளம்பியது இப்போது நினைவுக்கு வருகிறது.  பார்வைப்படி (EYE COPY) என்று இதைக்கூறலாம். திருமுருகன்பூண்டிக் கோயிலில் விளம்பிய கல்வெட்டின் பார்வைப்படி ஒன்றையும் அதன் மூலக்கல்வெட்டின் ஒளிப்படத்தையும் கட்டுரையின் இறுதியில்  காட்டியுள்ளேன்.

திருமுருகன்பூண்டிக்கோயில் கல்வெட்டுகள்

சுந்தரர்
இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உண்டு. பல்வேறு செய்திகள். சேர அரசரான சேரமான் பெருமாள் நாயனாரைச் சுந்தரர் சந்தித்துப் பொன்னோடும் பொருளோடும் திரும்பும் பயணத்தில் இக்கோயிலுக்கு வந்தமையும், இறைவன் அவரைச் சோதிக்கும் முகத்தான் அவரிடமிருந்த பொன்னையும் பொருளையும் கள்ளரைக்கொண்டு பறித்த நிகழ்வையும் நேரடியாகப் பதித்த கல்வெட்டு இல்லையாயினும், தேவாரத்தில் வைப்புத் தலம் குறிப்பிடப்படுவதைப்போல், கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட கொடை நிலம் ஒன்றின் எல்லைகளைக் குறிப்பிடுகையில் கள்ளர் பறிப்பைச் சுட்டிச் செல்லும் கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் உண்டு. இதை “வேடு பறி”  எனக்குறிப்பிடுவார்கள்.

”..பட்ட பாறைக்கு (வடக்)கும் ஆளுடைநம்பியை திருமுருகன்பூண்டி ஆளுடையார் அடிச்சுப் பறிச்சுக்கொண்ட பெரியபாதை..க்குக் கிழக்கும்”

என்பது கல்வெட்டு வரி.

தேவரடியாருக்குச் சிறப்பு
இக்கோயிலைச் சேர்ந்த தேவரடியார்களுக்குச் சில சிறப்புரிமைகள் வழங்கப்பட்டதைச் சொல்லும் கல்வெட்டும் இங்கு உண்டு. அரசன் நேர்ப்பட ஆணை பிறப்பித்துச் செயல்படுத்தும் ஓலையை “நம் ஓலை குடுத்தபடியாவது”  என்று குறிப்பிடும் இக்கல்வெட்டுக் கூறும் உரிமைகளாவன:  திருநாள்களின்போது தேவரடியார்கள் பிச்சவேடம் பூண்டு முன் அரங்கு ஏறும் உரிமை;  திருத்தேரில் ஆசனங்கள் ஏறும் உரிமை;  திருவாதிரையின்போது திருவெம்பாவைப் பாடலுக்கு ஆடும் உரிமை; கருவறை வரையிலும் செல்லும் உரிமை; பரிவட்டம் பெறும் உரிமை.  சவுண்டய நங்கை, திருவுண்ணாழியர் நங்கை, ஆலால சுந்தர நங்கை   என்பன அப்பெண்களின் பெயர்களாகும்.

“முன்னரங்கு ஏறக் கடவார்களாக”,  “ஆசநங்களேறக் கடவார்களாக”, ”திருவெம்பாவைக்கு கைநாட்டி மூன்றாம் அறை முதலாயுள்ள அறையுங் கடக்கக் கடவார்களாக”,  “பரிவட்டம் பெறக்கடவார்களாக” 

என்பவை கல்வெட்டு வரிகள்.  கருவறையைக் கல்வெட்டு ”மூன்றாம் அறை” என்று குறிப்பிடுவதைக் காண்க.  கருவறை, இடை நாழி,  அர்த்த மண்டபம் ஆகிய மூன்று அறைகளே அந்நாளில் இருந்த,  எளிய கொங்குக் கோயில்களின் அமைப்பாகும்.

சனி நீராடு
நாம் சனி நீராடுதலைப் போற்றியதொருகாலம்.  அதாவது எண்ணெய்க் குளியல்.  நமக்குச் செய்வதை இறைவனுக்குச் செய்து மகிழ்தலை வழிபாட்டு மரபுச் சடங்கின் ஒரு பகுதியாக நடத்திக்கொண்டு வருகிறோம்.  சனிக்கிழமைதோறும்  இறைவனுக்கு எண்ணெய்க்காப்புக்கு வேண்டிய முதலாகப் பழஞ்சலாகை அச்சு என்னும் காசினை மூவேந்தவேளான் பதவியிலிருந்த ஒருவன் கொடையளிக்கிறான்.

அம்மன் திருமுன் (சன்னதி)  எழுப்பப்படல்
சோழர் காலத்தில், கோயில் எடுப்பிக்கும் தொடக்கத்தில் அம்மன் திருமுன்னைச் (சன்னதி) சேர்த்துக்கட்டுவிக்கின்ற மரபு இல்லை என்பதாக அறிகிறோம்.  திருமுருகன்பூண்டியில் கி.பி. 1242-ஆம் ஆண்டில்,  அம்மன் திருமுன் எழுப்பப்படுகிறது. அம்மன் என்னும் வழக்குச் சொல் பிற்காலத்தது. இடைக்காலத்தில்,  அம்மனைக் குறிக்கத் “திருக்காம கோட்ட நாச்சியார்”  என்னும் வழக்கே இருந்துள்ளது.  அம்மன் திருமுன் (சன்னதி) எழுப்பப்பட்டதைக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். திருமுருகன்பூண்டிக்கோயிலில், திருக்காம கோட்ட நாச்சியாரை எழுந்தருளுவித்தவர்கள்   சாலிய நகரத்தார், வாணிக மடிகையார், அக்கசாரிகையார், சேனாபதிகள், சமக்கட்டுத் தெரிந்த கைக்கோளர் ஆகியோர் ஆவர்.  சாலிய நகரத்தார் என்பார்  துணி வணிகர் ஆவர். வாணிகமடிகையார் என்பார் கடைத்தெருக்களில் வணிகம் செய்தவர் ஆவர்.  அக்கசாரிகையார் என்பார் நாணயச் சாலைகளில் பணிபுரிந்த பொற்கொல்லர் ஆவர்.  அக்கசாலி, அக்கசாலை என்பனவும் இவர் குறித்த  பெயர்களே. (அக்கம் = ஒரு நாணயம்). சமக்கட்டு என்பது சமர்க் கட்டு என்பதன் மரூஉ ஆகலாம். (சமர் = போர்).   தெரிந்த கைக்கோளர் என்பார் தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கோள வீரர் படையினர் ஆவர்.  இவர்கள், அம்மனுக்குச் சூட்டிய பெயர்  “இடுகு நுண்ணிடை மங்கையார்”  என்பதாகும். என்ன ஒரு அழகான தமிழ்ப் பெயர்! சுந்தரர் தம் தேவாரப் பாடல் ஒன்றில், கல்வெட்டில் குறிக்கப்பட்ட “இடுகு நுண்ணிடை மங்கையார்” என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார். மற்றொரு பாடலில் ”முயங்கு பூண்முலை மங்கை” என அம்ம்னைக் குறிப்பிடுகிறார்.  ஆனால், மக்கள் மொழி தமிழாக இருக்கும் பூண்டிக்கோயிலில், வடமொழி வேதச் சமயத்தார் கோயிற்புராணத்தில் வலிந்து “ஆலிங்க பூஷண ஸ்தனாம்பிகை” என மாற்றி எழுதியுள்ளனர்.  சுந்தரர் இதை அறியார். 

இன்னொரு கல்வெட்டில், சந்தி விளக்கெரிக்கக் கொடை அளித்த தேவரடியார் ஒருவரின் பெயர் “உமையாள் மை விரவு கண்ணி”  என்னும் அழகான தமிழ்ப் பெயராகும்.

பல்லோடம் பற்றிய கல்வெட்டுகல்வெட்டில் பல்லோடம் மீண்டும், கட்டுரைத் தலைப்புக் குறித்த கல்வெட்டுக்குத் திரும்புவோம். கல்வெட்டின் பாடம் கீழுள்ளவாறு :

கல்வெட்டுப் பாடம்


1   ஸ்வஸ்திஸ்ரீ கோனேரின்மைகொண்டாந்  ஆளுடையா[ர்]
2   திருமுருகந்பூண்டி நாயந்நா[ர்]க்கு வீரசோழந் திருநந்தவானம்
3   செகிற ஆண்டார் பலவிளக்க பிச்ச[ரு]க்கு வாயறைக்கால் நாட்
4   டு பல்லோடம் மாந அதிரா[சா]திராச நல்லூர் நம் இறைக்கண்
5   பு இராசகேசரியால் நால்ப்பத்தெண் கலம் . . . . . .
6   வது முதல்லாகவுங் காண்ண . . . . .
7   [செம்பி]ல்லும் சிலையில்லும் வெட்டிக்கொள்வா
8   [ராக]  நம் ஓலை குடுத்தோம் இவை செம்பியந் உத்தர ம
9   [ந்திரி]  எழுத்து பந்மாஹேச்வர ரக்ஷை.


குறிப்பு:
சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம். 


                                      பூண்டிக் கல்வெட்டில் பல்லடமும் கம்பும்
பூண்டிக்கல்வெட்டு -  தினமலர் நாளிதழ்ச் செய்தி 

கல்வெட்டுச் செய்திகள்

இக்கல்வெட்டு, அரசன் நேர்ப்பட ஆணை பிறப்பித்த ஓலையைக் குறிப்பதால், அரசன் பெயரைக் குறிப்பிடாமல் கோனேரின்மைகொண்டாந் என்று கூறுகிறது. திருமுருகன்பூண்டிக் கோயில் கல்வெட்டுகள் பெரும்பாலும் வீரராசேந்திரன் காலத்தவையாதலால், இக்கல்வெட்டினையும் அவனது காலத்துக்கே சேர்க்கலாம். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1207-1256. எனவே கல்வெட்டின் காலம் 13-ஆம் நூற்றாண்டு.

இக்கல்வெட்டில், கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லடம் ஊரைப்பற்றிய ஒரு செய்தி உண்டு. பல்லடம் என்று தற்போது வழங்கும் ஊர், 12-ஆம் நூற்றாண்டளவில் பல்லோடம் என்னும் பெயரால் வழங்கியது. பல்லோடம் தன் இயற்பெயரை முற்றும் இழந்துவிடாமல் சிறியதொரு மாற்றத்துடன் பல்லடம் என இன்றுவரை தக்கவைத்துக்கொண்டு பழமையை நினைவு கூறும் வகையில் உள்ளதில் நாம் பெருமை கொள்ளலாம்.  மேற்குறிதத கல்வெட்டில் பல்லடம் இரண்டு பெயர்களால் குறிக்கப்படுகிறது. ஒன்று இயற்பெயரான பல்லோடம்; இன்னொன்று, அரசன் பெயரால் அமைந்த சிறப்புப் பெயரான அதிராசாதிராச நல்லூர் என்பதாகும். பல்லடம் கொங்கு நாட்டின் 24 நாட்டுப்பிரிவுகளில் ஒன்றான வாயறைக்கால் நாட்டில் அமைந்திருந்தது.

அதிராசாதிராச நல்லூர் என்னும் சிறப்புப் பெயர், அரசன் பெயரால் வந்தது. கல்வெட்டுகள் வழியாக நாம் அறியவரும் செய்திகளில், ஓர் ஊரானது “நல்லூர்”  என்னும் அடைமொழிப்பெயரை எவ்வாறு பெறுகிறது என்பது முக்கியமானது. ஓர் ஊரானது, மழையின்மை காரணமாக வறட்சி கொள்ளும்போது – பஞ்சம் நீங்கி மக்கள் வாழ அரசன் பெரும் கொடைகள் அளித்துப் போதிய நீர் மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் ஊரை மீட்டெடுத்தல் நடைபெற்று வந்துள்ளது. அப்போது, அர்சன் தன் பெயரால் “நல்லூர்”  எனப்பெயரிடுதல் வழக்கம். ஊரின் இயற்பெயரோடு சேர்த்து இந்தச் சிறப்புப் பெயரும் இணைந்திருக்கும்.  காலப்போக்கில் சிறப்புப்பெயர் மறைந்துவிட்டது எனலாம். எனவே, பல்லடத்தில் வறட்சி  ஏற்பட்டுள்ளதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

மேற்குறித்த கல்வெட்டு இன்னொரு வகையில் சிறப்புப் பெற்றுள்ளது. பல்லடத்தில் கம்புப் பயிர் விளைச்சலே நிகழ்ந்துள்ளது என்பதை இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். கல்வெட்டில் கம்பு என்பது “கண்பு” என்று குறிக்கப்பட்டுள்ளது. நெல் விளையும் ஊர்களில் அரசனுக்குச் செலுத்தும் இறை (வரி), நெல்லாக இருக்கின்ற சூழலில் பல்லடத்தின் இறை வருவாயான கம்பு அரசனுக்குச் செலுத்தப்பட்டது என்பதும், அவ்வாறு பல்லடத்தில் விளைந்த கம்புப் பயிர் நாற்பத்தெட்டுக் கலம் வருவாயை அரசன், திருமுருகன்பூண்டிக்கோயிலுக்கு நந்தவனம் அமைத்துப் பராமரிக்கும் பணிக்கு வழங்கினான் என்பதும் கல்வெட்டு வயிலாக நாம் அறியவரும் செய்தியாகும். கொடை நல்கும் அரசனின் ஆணை, நேரடி ஆணையாக இருப்பதை “நம் ஓலை குடுத்தோம்”  என்னும் கல்வெட்டுத் தொடர் குறிப்பிடுகிறது. நந்தவனத்துக்கு, முன்பிருந்த அரசன் வீரசோழனின் பெயர் இடப்பட்டதையும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

பூண்டிக்கோயிலின் இறைவன், திருமுருகன்பூண்டி நாயனார் என்று குறிப்பிடப்படுகிறார்.  கம்பு அளப்பதற்கு இராசகேசரி என்னும் பெயருடைய மரக்கால் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதையும் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.

பார்வைப்படியாக விளம்பிய கல்வெட்டு

கல்வெட்டின் பார்வைப்படிபார்வைப்படி

கல்வெட்டின் பாடம்

1   ஸ்வஸ்திஸ்ரீ  வீரராசேந்
2   திர தேவற்கு யாண்டு 40
3   வது வைகாசி திங்க[ள்] வடபரிசா
4   ர நாட்டில் சேவூரில் வெள்ளா
5   ள வகையரில்  தேவந் தேவநேந்
6   ஆளுடையா[ர்] திருமுருகந்பூண்டி
7   நாயநாற்கு சந்தியா தீமம்  ஒந்று
8   க்கு சீபண்டாரத்தில் ஒடுக்கின
9   பழஞ்சலாகை அச்சு ஒன்றுக்
10  கும் சந்திராதித்தவரை செல்
11  வதாகக் கல்வெட்டுவித்தே
12  ந்  இது பந்மாஹேச்வர (ர)
13  க்ஷை


குறிப்பு:
சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம். 


கல்வெட்டுச் செய்தி

திருமுருகன்பூண்டிக்கோயிலில் சந்தி விளக்கு எரிக்கச் சேவூரில் இருக்கும் வெள்ளாளன் தேவன் தேவன் என்பவன் பழஞ்சலாகை அச்சு என்னும் காசு ஒன்றைக் கொடையாக அளிக்கிறான். தீபம் என்பதைப் பிழையாக  தீமம் என எழுதியிருக்கின்றனர்.  கல்வெட்டின் காலம் வீரராசேந்திரனின் 40-ஆம் ஆட்சியாண்டான கி.பி. 1247. 
இவ்வாறாகப் பல்வேறு சிறப்புச் செய்திகளைப் பூண்டிக் கல்வெட்டுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.துரை. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக