மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 10 செப்டம்பர், 2018


                                               கொங்குநாட்டின் தடுப்பணைகள்

முன்னுரை

புலவர் செ.இராசு ஐயா. வரலாற்று ஆர்வலர், வரலாறு படிப்போர், வரலாறு ஆய்வோர், தொல்லியல் ஆர்வலர், கல்வெட்டுகளை ஆய்வோர் ஆகியோர் எனப் பல்வேறு துறையினரில் புலவர் ஐயாவை அறியாதார் இலர்.  பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணி தொடங்கித் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் கல்வெட்டுத்துறைத்  தலைவராக உயர்ந்து மிளிர்ந்த ஆய்வறிஞர். கொங்குநாட்டுப் பெருமைகளை எடுத்துச் சொன்ன வல்லவர். நூற்றுக்கணக்கான நூல்களின் ஆசிரியர். பணியில் நிறைவு பெற்றும், முதுமைத்தளர்ச்சி காரணமாக ஓய்வில் இருப்பினும், அறிவுப்பணியில் (எழுத்துப்பணி) ஓய்வறியா இளைஞர். சென்ற மாதம் (ஆகஸ்ட், 2018) ”தினமலர்”  நாளிதழில் அவரது கட்டுரைச் செய்தி ஒன்று வெளியானது; தமிழகத்தின் இன்றைய மீமிகு தேவையான நீர்மேலாண்மை பற்றிய கட்டுரை அது. “தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம்” என்னும் தலைப்பில் அவரது கட்டுரையைப் படித்ததும், கல்வெட்டு ஆய்வுப்பணியில் எனக்குள்ள முனைப்பு பின்னும் ஊக்கமுற்றது. புலவர் ஐயாவின் கட்டுரை பற்றிய ஒரு கருத்துப்பதிவு இங்கே.




கொங்கு மக்களின் நீர்மேலாண்மை உணர்வு

கொங்கு மக்கள் நீர்மேலாண்மையில் காட்டிய அக்கறையுணர்வு அவர்கள் கட்டிய தடுப்பணைகள் வாயிலாக அறியலாகும். தடுப்பணைகள் வழியாகப் பாசன வசதி, தடுப்பணைக்கால்வாய்கள் வழி வட்டார ஏரி குளங்கள் நீர் பெறும் வசதி ஆகிய நன்மைகள் விளையும். தடுப்பணையின் பயனை நன்குணர்ந்த கொங்கு மண்டல மக்கள், எட்டு ஆறுகளில் மொத்தம் தொண்ணூறு தடுப்பணைகள் கட்டியுள்ளனர். நொய்யலாற்றில் மட்டும் முப்பத்திரண்டு தடுப்பணைகள் கட்டியுள்ளனர். இன்றைய கொங்கு மக்கள் அக்கறையோடு செயல்பட்டால் இந்த  முப்பத்திரண்டு தடுப்பணைகளையும் மீட்டெடுக்கலாம். இச்செய்திகளைப் புலவர், கொங்கு ஆவணங்களான இராமபத்திரன் பட்டயம், தென்கரை நாட்டுப் பட்டயம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிட்டுள்ளார்.

எட்டு ஆறுகள்-தொண்ணூறு தடுப்பணைகள்

செய்திக்கட்டுரையில் சுட்டப்பெறும் எட்டு ஆறுகளும் அவற்றின் அணை எண்ணிக்கையும் கீழே:

நொய்யல் – 32
அமராவதி (ஆன் பொருனை) – 20
மீன்கொல்லி – 18
நல்லமங்கை – 6
பவானி – 4
உப்பாறு – 4
நன்காஞ்சி – 4
குடகனாறு – 2

இந்தத் தடுப்பணைகள் பற்றிய செய்தியை உள்ளடக்கிய செப்பேட்டின் பக்கத்தையும் ஒளிப்படமாகப் புலவர் தந்துள்ளார். செப்பேட்டுப் பாடத்தைக் (வாசகத்தை) கீழே காட்டியுள்ளேன்.

செப்பேட்டுப் பாடம்:

1       றை நாடு ஆக 42 நாடு யிதில் வானியாறு காவேரியாறு நொய்யலாறு நல்லமங்
2 கையாறு ஆன்பொருனையாறு மீன்கொல்லியாறு சிற்றாறு குடைகையாறு நன்
3   காஞ்சியாறு நல்லாறு உப்பாறு ஆக நதி 11 யிதில் வானியாற்றில் நாலணை
  யும் நொய்யலாற்றில் முப்பத்திரண்டணையும் உப்பாற்றில் நாலணையும் மீன்கொ
5       ல்லியாற்றில் பதினெட்டணையும் ஆன்பொறுனையாற்றில் யிறுவது அணையும் நன்காஞ்
6 சியாற்றில் நாலணையும் நல்லமங்கையாற்றில் ஆரணையும் குடகு(ற)னாற்றில் ரண்
7       டணையும் ஆக அணை 90 ………….. 17 குளமும் ……….



கல்வெட்டுகளில் காணப்படும் சில கூடுதல் செய்திகள்

ஆறு இல்லாதவிடத்து ஆறு தோற்றுவித்தனர்; குளம் இல்லாதவிடத்துக் குளம் தோண்டுவித்தனர்; முயல் பாய்கின்ற இடத்தில் கயல் (மீன்) பாயும்படி நீர்நிலை உண்டாக்கினர்.  இச்செய்தியைக் கூறும் கல்வெட்டு செய்யுள் நடையில், இலக்கிய நடையோடு அமைந்துள்ளது மிகவும் சிறப்புக்குரியது. கல்வெட்டின் வரிகளாவன:

“ஆறு இல்வழி ஆறு தோற்றுவித்தும்
குளம் இல்வழி குளம் தொடுவித்தும்
முயல் பாய் இடம் கயல் பாயப்பண்ணியும்”

நீர்நிலைகளின் கரை “சிறை” எனப்பட்டது. கோவை பேரூருக்கு அருகில் “தேவி சிறை”  என்னும் பெயரில் ஓர் அணை இருந்ததாகப் பேரூர்க் கல்வெட்டு கூறுதலைக் காண்க. ஓர் ஊரினர் கோவில் பண்டாரத்தில் (கருவூலத்தில்) கடன் பெற்று ஊரின் ஆறு, குளங்களின் கரையை உயர்த்தியும் அகலப்படுத்தியும் வலுப்படுத்தினர். கரைகளுக்குக் ”குலை” என்னும் பெயரும் வழங்கியது. நீர் நிலைகளைத் தொடர்ந்து தூர் வாரி, அவற்றின் ஆழம் குறைவுபடாமல் காத்தனர். ஊர் மக்கள் அனைவரும் தூர் வாருதலைக் “குழி குத்துதல்”  என்னும் சொல்லால் குறித்தனர். ஊர்மக்களில் 12 வயதுக்கு மேற்பட்டோரும், 80 வயதுக்கு உட்பட்டோரும் கட்டாயம் குழி குத்துதல் பணியில் பங்கேற்கவேண்டும் என்று ஒரு கல்வெட்டு கட்டளையிடுகிறது.  









துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.



1 கருத்து:

  1. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நான் ஆரம்ப காலத்தில் பணியில் சேர்ந்தவன் என்ற நிலையில் அப்போது முதல் ஐயாவை அறிவேன். எந்த ஒரு செய்தியையும் நுணுக்கமாக அணுகுவார். ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து அறிவுரை கூறுவார். ஊக்கம் தருவார். இவரைப் போல சிலரால் தான் என்னைப்போன்றோரால் ஆய்வில் ஈடுபட முடிந்தது. அண்மையில்கூட பௌத்தம் தொடர்பாக வெளிவந்த கட்டுரையை எனக்குப் பயன்படும் என்று கூறி அனுப்பிவைத்திருந்தார்.

    பதிலளிநீக்கு