மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகள்-3

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில்தஞ்சைப்பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகளின் சில படங்கள் அழகுற வெளியிடப்பட்டிருந்தனகல்வெட்டு எழுத்துகளைச் சிற்பிகள் வடித்ததில் இருந்த அழகும்தெளிவும் கல்லின் சிவப்பு வண்ணப் பின்னணியில் பொலிந்தனகல்வெட்டு எழுத்துகளில் பயிற்சி இல்லாதவர்கள் கூடப் படங்களைப் பார்த்துக்கொண்டே படித்துவிடக்கூடும்ஒரு பன்னிரண்டு ஒளிப்படங்களில் உள்ள எழுத்துப்பொறிப்புகளின் பாடங்களை அவற்றில் உள்ள வரிகளின்படி தந்துள்ளேன். (சற்றே படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க). கண்டும் படித்தும் மகிழ்க:

குறிப்பு:  அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்ட எழுத்துகள் படத்தில் காணப்படாவிட்டாலும்கல்வெட்டில் உள்ளவையேபொருள் எளிதில் விளங்கவேண்டி இங்கே காட்டப்பட்டுள்ளன.







கல்வெட்டின் பாடம்:

1  உடையார் ஸ்ரீராஜராஜ தே3வர் திருத்தமக்கையார்
2   மா…..ங்கள் சரடுஞ் சட்டமுஞ் செப்பாணிகளும் (அரக்கும் நீக்கி)
3  ல் நிறை எடுத்துங் கல்லில் வெட்டின த3க்ஷிண(மேரு)
4  ம் மட்டதாரை பொறிவும் முறிவும் ரக்தபி3ந்துவு(ம்)
5  (ளு)ங்குணவியன இருபத்திரண்டும் ஹளஹளம்
6  (உட்)படப் பரியனவும் தெரியனவும் ஆக எண்
7  (நிம்)போளமும் அம்புமுதுங்குளிர்ந்த நீருஞ் சிவ(ந்தநீரும்)
8  நிறை நூற்று ஒருபத்தொன்பதின் கழஞ்சே
9  …ற்று நாற்பத்தொன்பதும் மட்டதாரைச் ச

குறிப்பு:  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

சிறு விளக்கங்கள்:
கல்வெட்டு, இராசராசனின் தமக்கையாரான குந்தவை கோயிலுக்கு அளித்த அணிகலன்களின் (திருவாபரணங்கள்) கொடை பற்றிக்கூறுகிறது. குறிப்பாகப், பொன்னாலான அணிகலன்களில் பதிக்கப்பட்ட முத்துக்கள், வயிரம், இரத்தினம் ஆகியவற்றைப்பற்றி, அவற்றின் வகை, நிறை, எண்ணிக்கை, மதிப்பு உட்பட விளக்கமாகச் சொல்கிறது. அவ்வாறு குறிப்பிடும்போது, அவற்றைக் கட்டி இணைக்கும் சரடு (வடம்), பதிக்கப்பெறும் குழிவான பகுதி (சட்டம்), செம்பாலான ஆணிகள், அரக்கு ஆகியன நீங்கலாக உள்ள மதிப்பே குறிப்பிடப்பெறுகிறது.  அவற்றின் நிறை அளவிடப்படும்போது, தக்ஷிணமேரு விடங்கர்  என்னும் பொன்னாலான ஓர் எடைக்கல் பயன்பட்டது. இக்கல்வெட்டின் படத்தில், இதன் முழுப்பெயரும் காணப்படுவதில்லை; “தக்ஷிண” என்னும் குறைச்சொல் காணப்படுகிறது என்பதை நோக்குக.

மட்டதாரை என்பது வயிரத்தைக் குறிப்பது. பொறிவு என்பது புள்ளிகளையும், முறிவு என்பது விரிசலையும், ரக்த பிந்து என்பது சிவப்புப் புள்ளியையும் குறிப்பதால், மட்டதாரை என்னும் வயிரம் இந்தப் பொறிவு, முறிவுகளின்றி மேன்மையானவை என்பது பெறப்படும். குணவியன  என்னும் சொல் மேன்மையன என்னும் பொருளில் அமைகிறது.  இத்தகைய வயிரங்கள் இருபத்திரண்டு கொடுக்கப்பட்டன. ‘ஹளஹளம்  என்பது ஒருவகை இரத்தினத்தைக் குறிப்பதாகும். இந்த இரத்தினங்கள் பெரியன(பரியன)வாகவும், தெரிந்தெடுக்கப்பெற்றன(தெரியன)வாகவும் இருந்தன. இவற்றின் எண்ணிக்கை எண்பதுகளில் அமைந்தன என்று கொள்ளத்தக்க வகையில், கல்வெட்டின் ஆறாம் வரியில் இறுதியில் “எண்” என்னும் சொற்துண்டால் அறிகிறோம். இறுதி வரியான ஒன்பதாம் வரியில் காணப்படும் …ற்று நாற்பத்தொன்பதும் மட்டதாரை” என்னும் தொடரால் மட்டதாரை என்னும் வயிரம், நூற்று நாற்பத்தொன்பது எண்ணிக்கையுடையது எனக் கருத வாய்ப்புள்ளது. கல்வெட்டின் சரியான சொற்களைப் பார்த்தபின்னரே இது உறுதிப்படும்.

அடுத்து, நிம்போளம், அம்புமுது, குளிர்ந்தநீர், சிவந்தநீர்  ஆகியன முத்துக்களின் வகைகளைக் குறிப்பன. இம்முத்துக்கள் மொத்தம் நூற்றுப்பத்தொன்பது கழஞ்சு நிறை அளவில் இருந்தன எனவும் அறிகிறோம்.
  


துணை நூல்கள்:
1    சிவபாதசேகரனின் தஞ்சைக் கல்வெட்டுகள்-
      வித்துவான் வே.மகாதேவன் - சேகர் பதிப்பகம், சென்னை.
2    தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி- சாந்தி சாதனா - சென்னை.


-----------------------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக