மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

பேரூர்ப் பகுதியில் சில தொல்லியல் தடயங்கள்


முன்னுரை
பேரூரை அடுத்து அமைந்துள்ள ஒரு சிற்றூர் மத்திபாளையம். அங்குள்ள பெருமாள் கோயிலில் புலிகுத்திக்கல் ஒன்றைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்ததாக நண்பர் பாஸ்கரன் சொன்னதோடு அதைப் பார்த்துவரலாம் என்றழைத்தார். அவர் அழைப்பை ஏற்று, 7-10-2017 அன்று அவருடன் பயணப்பட்டேன். பயணம் பற்றிய ஒரு பகிர்தல் இங்கே.

மாதம்பட்டி
பேரூரிலிருந்து சிறுவாணி செல்லும் சாலையில் மாதம்பட்டி என்னும் ஊர் உள்ளது. பட்டி”  என்னும் பின்னொட்டுக் கொண்ட ஊர்கள் கோவைப்பகுதியில் அமைந்திருப்பது வெகு இயல்பு. காரணம், கோவைப் (கொங்கு) பகுதி மலை சூழ்ந்த ஒரு முல்லை நிலப்பகுதி என்பது நாம் அறிந்த ஒன்று. முல்லை நிலங்களில், கால்நடை வளர்ப்பிடங்கள் பட்டி என்றழைக்கப்பட்டன. பேரூர்க் கோயிலின் இறைவன் பெயர் பட்டீசுவரர் என அமைந்தது முல்லை நில அமைப்பால்தான். மாதம்பட்டியை அடுத்து வருகின்ற ஒரு பிரிவுச் சாலையில் எங்கள் பயண இலக்கான மத்திபாளையம் அமைந்திருந்தது. இங்கே ஒரு செய்தியைக் குறிப்பிடவேண்டும். நாம் பயணம் செய்யும் ஒரு சாலையிலிருந்து வேறொரு சாலை கிளைத்துப் பிறிதொரு ஊருக்குச் செல்வது நாம் எங்கும் காணுகின்ற ஒன்று. கிளைச் சாலை என்று அதைப் பொதுவாக அழைத்தாலும், கிளை பிரியும் அந்த இடத்தைத் தமிழகத்தின் பல பகுதிகளில் பலவாறாக அழைக்கும் வழக்கு உள்ளது. கோவைப்பகுதியில் பிரிவு”  என்னும் பெயரால் அழைக்கிறோம். அந்த இடத்தில் கைகாட்டும் பலகை ஊர்ப்பெயரை மட்டுமே சுட்டும். ஆனால், சிவகங்கை மாவட்டம் திருமலை என்னும் ஊருக்கு ஒருமுறை நான் சென்றபோது, ஒரு பிரிவுச் சாலையில் கைகாட்டிப்பலகை ஊர்ப்பெயரோடு “விலக்கு”  என்னும் பின்னொட்டுச் சொல் ஒன்றையும் கொண்டிருந்தது. இவ்வழக்கு (கோவைப்பகுதியில் காணப்படாமையால்) சற்று வியப்பை ஏற்படுத்தினாலும் மிக்க பொருத்தமுடையதாகத் தோன்றியது. பிரிவும், விலக்கும் ஒரே பொருள் கொண்ட இரு வேறு சொற்கள்தாமே. கட்டுரையின் மையக் கருத்திலிருந்து சிறிது விலகிவிட்டதும் புலனாகிறது.

அன்னியூரம்மன் கோயில்



மாதம்ப்ட்டியை அடைந்ததுமே, நண்பர், தாம் இங்கு ஒரு பழங்கோயிலைப் பார்த்ததை நினைவுகூர்ந்தார். அதைப் பார்த்துவிட்டே மேலே செல்லலாம் என்றார். அந்தப் பழங்கோயில் சாலையோரத்திலேயே அமைந்திருந்தது. அன்னியூரம்மன் கோயில் என்று வழங்கும் அக்கோயிலின் வாயில் பூட்டப்பட்டிருந்தது. கோயிலைக் காணும் ஆவலினால், கோயிலின் பூசையாளரின் இருப்பிடத்தைக் கேட்டறிந்து அவரைக் கையோடு அழைத்து வந்து, கோயிலைத் திறக்கச் சொல்லிப் பார்வையிட்டோம். நுழைவு வாயிலைக் கடந்ததும் ஒரு முற்றம். மூங்கில் விட்டங்களையும், தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரையையும் நான்கு கல் தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கும் அமைப்பு. அதன் கீழ், ஒரு மேடையின் மீது அம்மனின் ஊர்தியாகிய சிம்மத்தின் சிற்பம். அதை அடுத்து, ஒற்றைக் கருவறையில் இரண்டு அம்மன் சிற்பத் திருமேனிகள். செங்கற் சுவர்களாலான கருவறை. அதன் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டது. இது புதுக்கோயிலின் தோற்றம். கருவறையில் ஒரு அம்மன் சிற்பத் திருமேனி அன்னியூரம்மன்; மற்றது கருகாளியம்மன். இரண்டு அம்மன்களில் அன்னியூரம்மன் பழங்கோயிலின் கருவறையிலிருந்து கொணர்ந்து இங்கு எழுந்தருளிவிக்கப்பட்டது. மற்றது, இவ்வூர்க் கவுண்டர்களுக்குக் குலக்கடவுளான கருகாளியம்மன். இரண்டு அம்மன்களுக்கு அருகில் இரண்டு சிறிய பிள்ளையார்ச் சிற்பங்கள்.

                      புதுக்கோயிலும் பூசையாளரும்

பழங்கோயில்

                                        பழங்கோயில் பல்வேறு தோற்றங்கள்












புதிய கோயிலின் பக்கவாட்டுப்பகுதியில் சிதிலமுற்ற பழங்கோயிலின் கட்டுமானம் காணப்பட்டது. முழுதும் செங்கற்கட்டுமானம். வெளித்தோற்றம் கருவறையையும், அதை ஒட்டிய சிறு அந்தராளத்தையும் அடையாளம் காட்டியது. இக்கருவறைக் கட்டுமானம் ஒரு காலத்தைச் சேர்ந்தது எனில், கருவறையை அடுத்துள்ள முன்மண்டபம் போன்ற கட்டுமானம் இன்னும் பிற்காலத்தைச் சேர்ந்ததாகத் தோற்றமளித்தது. மண்டபப் பகுதிக்குள்ளும், கருவறைக்குள்ளும் நுழைய இயலாதவாறு முழுக்க இருண்ட இடிபாடுகள். வௌவால்களின் குடியிருப்பு. கருவறை, அந்தராளம், விமானம் ஆகிய அனைத்துமே செங்கற்கட்டுமானம்தாம். ஒரு தள விமானம், சாலை அமைப்புக்கொண்டது. கருவறையின் முப்பக்கச் சுவர்களிலும் சாலை அமைப்புக் கொண்ட தேவ கோட்டங்கள். விமானத்தின் கூரைப்பகுதியில் கொடுங்கையை நினைவூட்டும் ஒரு வேலைப்பாடு. விமான தளத்தின் நான்கு மூலைகளிலும் அம்மனின் சிங்க ஊர்திச் சிற்பங்கள். தளத்தின் இரு பக்க மையப்பகுதியில்  ஆண் தெய்வச் சிற்பம் ஒன்றும் பெண்தெய்வச் சிற்பம் ஒன்றும் காணப்பட்டன. ஆண்தெய்வச் சிற்பம் தட்சிணாமூர்த்தியாகலாம்; பெண்தெய்வச் சிற்பம் காளியாகலாம். முன் மண்டபத்தின் நிலைக்கால்கள் கற்களால் ஆனவை.

                       முன் மண்டபத்தின் நிலைக்கால்

                       பிற்காலக் கட்டுமானம்



புலிகுத்திக்கல் சிற்பம் கண்டுபிடிப்பு
பழங்கோயில் கட்டுமானத்தைச் சுற்றிலும் சிறு சிறு செடிகளும் புதர்களும் மண்டிக்கிடந்தன. அவற்றுக்கிடையில், புலிகுத்திக்கல் சிற்பம் ஒன்று காணப்பட்டது. இச்சிற்பத்தின் இருப்பு இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, எங்கள் பயண இலக்கு ஒன்றாயிருக்க, புதுக் கண்டுபிடிப்பு ஒன்று வெளிப்பட்டது எங்களுக்கு வியப்புக் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தரைக்கு மேல் நான்கு அடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்ட ஒரு தடித்த பலகைக்கல் சிற்பம். வீரனின் முழு உருவமும் புலியின் முழு உருவமும் செதுக்கப்படவில்லை. வீரனின் தொடைப்பகுதி வரையிலும், புலியின் முன்னங்கால்களின் அருகில் நெஞ்சுப்பகுதி வரையிலும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மீதிக் கீழ்ப்பகுதி தரையின் கீழ் இருக்கக் கூடும். உறுதியாகச் சொல்வதற்கில்லை. இவ்வகைப் புலிகுத்திக்கற்களில் வழக்கமாக வீரனின் சிற்பம் இடப்பக்கமும், புலியின் சிற்பம் வலப்பக்கமும் இருக்கும். இங்குள்ள நடுகல்லில் இந்த அமைப்பு மாறியுள்ளது. வீரனின் இடக்கையிலிருக்கும் வாள், புலியின் வாய்ப்பகுதியில் நுழைந்து தலைப்பகுதியில் வெளிப்படுகிறது. வீரன் தன் இன்னொரு கையிலும் ஓர் ஆயுதத்தை ஏந்தியுள்ளது போல் காணப்படுகிறது. இச்சிற்பத்தில், புலியின் வால் காணப்படவில்லை. வீரன் தலைக்கொண்டை பெரிதாக நீண்டுள்ளது. செவியொன்றில் பெரிதாக ஓர் அணிகலன். இடையில் குறுவாள் உள்ளது. தொடை வரையிலும் ஆடை மடிப்புகள் காணப்படுகின்றன. வீரனின் இடப்பக்கம் ஒரு பெண்ணின் முழு உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் கொண்டை, கணுக்கால் வரையுள்ள ஆடை ஆகியன தெளிவாகக் காணப்படுகின்றன. வீரன், புலி, பெண் ஆகிய மூன்று உருவங்களும் ஒரு சேர இருப்பதால், இச்சிற்பம் புலியோடு போரிட்டு இறந்துபட்ட வீரனுக்கும், அவனைத் தொடர்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட (சதிக் கோட்பாடு) விரனின் மனைவிக்கும் சேர்த்து எழுப்பப்பட்ட, நடுகல்லும், சதிக்கல்லும் இணைந்த ஒரு நினைவுக்கல் சிற்பம் என அறிகிறோம். சிற்ப உருவங்கள், காலப்போக்கினால் சற்றே பொரிந்து காணப்படுகின்றன.

                      புதர்களுக்கிடையே புலிகுத்திக்கல்





இச்சிற்பத்தின் இன்னொரு சிறப்பு என்னவெனில், சிற்பம் வடிக்க முதலில் கல்லின் பின்புறம் முயன்று பார்த்துக் கைவிட்டமை புலப்படுகிறது. வீரனின் மடிந்த காலகளும், புலியின் தலைப்பகுதியும் சிற்ப உருவின் ஒரு முன்வரைவு (SKETCH)  போலக் காணப்படுவதனின்றும்  இதை உணரலாம். மாதம்பட்டி, ஒரு கால்நடை வளர்ப்பிடமாக அமைந்திருந்த ஊர் என்பதற்கு இந்தப் புலிகுத்திக்கல் சிற்பம் சான்றாய் அமைகிறது.

                     புலிகுத்திக்கல்லின் பின்புறம் - முன்வரைவு

புலிகுத்திக்கல்லின் பின்னணியில் ஒரு தொன்மப் புனைவு
மாதம்பட்டி அன்னியூரம்மன் கோயிலின் பூசையாளர் நாச்சிமுத்து என்பவர். ஆறாவது தலைமுறையாகப் பூசைப்பணி. இவரது தந்தை அர்த்தநாரி என்பவர், இந்தப் புலிகுத்திக்கல்லின் பின்னணியில் இருக்கும் ஒரு தொன்மப் புனைவினைச் சொல்லியிருக்கிறார். புலிகுத்திக்கல் வீரனின் பெயர் தொம்பிலிய கவுண்டர். மாதம்பட்டியை அடுத்துள்ள ஆலந்துறையில் ஒரு பெண்மணி. ஆலந்துறை இராமக்கா என்னும் பெயருடையவள். தொழில் முறையில் இவள் ஒரு மருத்துவர் குடும்பத்தவர். வடமொழியில் வைத்தியன் குடி. மங்கலவர் என்றும் அழைக்கப்பெறுவர். மதுரை-ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில் பராந்தக பாண்டியனின் உத்தர மந்திரியாய் இருந்தவன் களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரரையன் ஆகிய மாறங்காரி”  என்று குறிப்புள்ளது. ஆலந்துறை இராமக்காவும் இதுபோன்ற ஒரு வைத்தியக் குடியினள்  ஆகலாம். இப்பகுதியின் அரசு நிருவாகத்தில் ஏதோ ஒரு பதவியில் இருந்தவள் எனலாம். காரணம், செவிவழித் தொன்மக்கதையில் இவள் இப்பகுதியின் வரித்தண்டல் வருமானத்தைக் கோவன்புத்தூரிலிருக்கும் அரசு அதிகாரிக்கு அனுப்புவதாகக் குறிப்பு வருகிறது. இராமக்கா வட்டார வழக்குப்படி பண்டிதகாரி என்று அழைக்கப்பெறுவதோடு மாந்திரீகம் அறிந்தவளாகவும் குறிக்கப்பெறுகிறாள். மருத்துவத்தை நாட்டுப்புறங்களில் “பண்டுதம்/பண்டிதம்எனக்குறிப்பிடும் வழக்குள்ளது. இராமக்காவின் அணுக்க அலுவலன் நடுகல் வீரன் தொம்பிலிய கவுண்டன். இருவரிடையே அணுக்க நட்பு இருந்துள்ளது. நடுகல் தொடர்பான கதை நிகழ்வில், இராமக்கா தொம்பிலிய கவுண்டனிடம் வரித்தண்டல் பணத்தைக் கொடுத்துக் கோவன்புத்தூரில் சேர்ப்பிக்க அனுப்புகிறாள். பயண ஊர்தியாக ஒரு புலி. இராமக்காவின் மாந்திரீகத்தின் ஆற்றலால் புலியின் வாய் கட்டப்பட்டுள்ளது. தொம்பிலிய கவுண்டன் கோவன்புத்தூர் சென்று கடமை முடித்துத் திரும்புகையில் காலம் தாழ்கிறது. வழியில் மாதம்பட்டியில் புலிக்குப் பசி. பசிக்குப் பலியாக எதுவுமில்லை; எவருமில்லை. புலி, தொம்பிலிய கவுண்டனிடம் உணவு வேண்டுகிறது. அவன் சொல்கிறான், “என்னிடம் கொடுக்க எதுவுமில்லை. நான் மட்டுமே இருக்கிறேன்.”  புலி அவ்னைக் கொன்று தின்கின்றது. ( இராமக்காவின் மாந்திரீகக் கட்டு எவ்வாறு விலகியது? புலி எப்படிப் பேசியது? விடை அறியா வினாக்கள்.)

தொம்பிலிய கவுண்டன் இறந்துபட்ட நிகழ்வு கேட்டு இராமக்கா மாதம்பட்டி வருகிறாள். அணுக்க நட்பின் மேலீட்டால், அவளும் இறந்து போகிறாள். (சதி?) புலிகுத்திக்கல்லின் தொல்லியல் சார்ந்த வரலாற்றுண்மைக்குச் சற்றும் இயைந்து போகாவிடினும், நடுகல்லில் உள்ள வீரன், புலி, பெண் ஆகிய மூவருக்கும் பொருந்துமாறு இந்தப் புனைவு அமைந்திருப்பதைக் காணலாம். என்றாலும், நாட்டார் வழக்காற்று ஆய்வாளர் தொ.மு.பரமசிவம் அவர்களின் கூற்றுக்கொப்ப, சில வரலாற்றுச் செய்திகள், நாட்டார் வழக்காறுகளிலும், தொன்மப் புனைவுகளிலும் ஊடாடி  உள்ளுறையாய் நிற்கின்ற வாய்ப்பு இருக்கக் கூடும்.

புலிகுத்திக்கல்லின் காலம்
தண்டல் பணத்தைக் கோவன்புத்தூர் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தல், தண்டல் அதிகாரியாக இராமக்கா, தண்டல் பணத்தை எடுத்துச் சேல்லும் ஊழியர் (அல்லது ஊர்க்கவுண்டர்?)  என்னும் கருதுகோள்கள், 17-ஆம் நூற்றாண்டின் மைசூர் அரசர்கள், அல்லது 18-ஆம் நூற்றாண்டின் ஐதர் அலி, திப்பு சுல்தான், அல்லது 19-ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயர்  ஆகியோரின் ஆட்சிக்காலத்தோடு பொருந்துவதாக உள்ளது எனக்கருதலாம். 18-ஆம் நூற்றாண்டுவரை புலிகுத்திக்கற்கள் கொங்கு நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் கருதத்தக்கது.

------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக