மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 3 ஜூன், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்


         சென்ற பாடத்தில் நான்கு கல்வெட்டுகளின் ஒளிப்படங்களைத் தந்து அவற்றைப்படிக்கும் முறையையும் சொல்லியிருந்தேன். நீங்கள் அவ்வாறு படித்திருந்தால் உங்கள் பாடத்தைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். சரியான பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

வரி 1 உடையார் ஸ்ரீராஜராஜதேவர் சேரமானையும் பாண்டியர்களையும் மலைநாட்டு எறிந்துகொண்ட பண்டாரங்களில் யாண்டு இருபத்தாறாவது நாள் முன்

வரி 2 னூற்று ஒருபத்தொன்பதினால் ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய பரமஸ்வாமிக்குக் குடுத்த பொன்னின் சின்னங்கள் ஆடவல்லான் என்னும் கல்லா

வரி 3 ல் நிறையெடுத்து கல்லில் வெட்டினபடி காளாஞ்சி ஒன்று பொன் ஐஞ்ஞூற்று எண்பத்து அறுகழஞ்சு காளாஞ்சி ஒன்று பொன் அறுநூ

வரி 4 ற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று எண்பத்து இரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று அறுபத்து எழு

வரி 5 கழஞ்சு குட ஒன்று பொன் முன்னூற்று ஐம்பத்து ஒரு கழஞ்சு குடம் ஒன்று பொன் இருநூற்றுத் தொண்ணூற்று நாற்கழஞ்சு கரண்டிகைச்

வரி 6 செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட பொன் நூற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் மூழலும் உட்பட பொ

வரி 7 ன் நூற்று எண்பத்து ஐங்கழஞ்சே முக்கால் இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் .... லும் உட்பட பொன் நூற்று நாற்பத்து எழு கழஞ்சு

வரி 8 தளிகை ஒன்று அடியுட்பட (பொன்) ஆயிரத்து ஒருநூற்று முப்பத்து ஐங்கழஞ்சரை  கல ...... நை ஒன்று மூக்கும் அடியும் உட்பட பொன் நானூற்று எ



சில விளக்கக் குறிப்புகள் :

  • நீலவண்ணத்தில் காட்டப்பட்டுள்ள எழுத்துகள் கிரந்த எழுத்துகள். அவற்றின் வடிவத்தை இக்கட்டுரையின் இறுதியில் காண்பித்திருக்கிறேன்.
  • அருஞ்சொற்பொருள் :

உடையார் = அரசர்
எறிந்து = வென்று
பண்டாரங்கள் = கருவூலங்கள்
ஈஸ்வரம் = சிவன்கோயில்
பரமஸ்வாமி = இறைவன்
சின்னங்கள் = பொருள்கள்
ஆடவல்லான் என்னும் கல் = எடைக்கல்
காளாஞ்சி = தாம்பூலக்கலம்
கழஞ்சு = நகை எடைகளில் ஒன்று
கரண்டிகை = பானை போன்ற கலம்
இலைச்செப்பு = வெற்றிலைச்சிமிழ்
மூழல் = மூடி
தளிகை = தட்டு அல்லது உண்கலம்

  • கல்வெட்டின் செய்தி :

முதலாம் இராசராசன் சேர பாண்டியரை வென்று அவர்களின் கருவூலங்களிலிருந்து  கொணர்ந்த செல்வங்களைக்கொண்டு தஞ்சைப்பெரியகோயிலுக்குப் பொன்னால் செய்யப்பட்ட பல பொருள்களைக் கொடையாக அளித்தான். கொடை அளிக்கப்பட்ட ஆண்டு இராசராசனின் இருபத்தாறாவது ஆட்சியாண்டு; (கி.பி. 1011) அவ்வாண்டில் முன்னூற்றுப் பத்தொன்பதாவது நாளும் கூட.

  • சில நுட்பங்கள் :

நாம் முன்னூற்றுப் பத்தொன்பது என்று தற்போது குறிப்பதைக் கல்வெட்டு முன்னூற்று ஒருபத்தொன்பது என்றும், நாம் நூற்றுப்பத்து என்று கூறுவதைக் கல்வெட்டு நூற்று ஒருபத்து என்றும் குறிப்பதை நோக்குக.

வெற்றிலைச்சிமிழுக்கு நான்கு கால்களை யாளியின் உருவத்தில் அமைத்த கலை வடிவத்தின் அழகை நோக்குக.

அரசன் ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து ஆட்சிக்காலம் ஆண்டு மற்றும் நாள் கணக்கீடு பெறுவதைக் காண்க.

  • கிரந்தம் பற்றிய குறிப்புகள் :

கல்வெட்டில் வரும் கிரந்த எழுத்துகளைக் கீழே இணைத்துள்ளேன். இவ்வாறு, அவ்வப்போது காணுகின்ற கிரந்த எழுத்துகளைத் தனியே தொகுத்து வைத்துக்கொள்வது நலம். பின்னால் கல்வெட்டுகளைப் படிக்கும் நேரத்தில் அடையாளம் கண்டு படிக்கத் துணை செய்யும்.
 
------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

1 கருத்து: