மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 5 மே, 2015



பூராண்டம்பாளையம் பரமசிவன் கோயில் கல்வெட்டு
                                                     து.சுந்தரம், கோவை

         கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் பூராண்டம்பாளையம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரில் ஒரு பழமையான சிவன் கோயில் உள்ளது எனக் கேள்விப்பட்ட கட்டுரை ஆசிரியர், அச்சிவன் கோயிலில் கல்வெட்டு ஏதேனும் கிடைக்கக்கூடும் என்று அங்கே சென்றார். கோயிலின் தோற்றத்தில் பழமை புலப்படவில்லை. 1999-ஆம் ஆண்டு புது வண்ணம் பூசப்பட்டுக் குடமுழுக்கு நடைபெற்றதால் தற்போது பழமையின் சுவடு ஏதுமின்றிப் புதுமையான தோற்றம் பெற்று விளங்குகிறது. உள்ளே நுழைந்ததும் இடப்புறம் ஒரு பசுமாட்டின் உருவச் சிலையும், வலப்புறம் ஒரு குதிரைச் சிலையும் காணப்படுகின்றன. பசுவின் உருவம் சிலை என்னும் எண்ணம் தோன்றாதவாறு உயிர்ப்புடன் தோற்றமளிக்கிறது. குதிரையின் தோற்றமும் அழகானது. விளக்குக் கம்பத்தைத் தாண்டி கோயிலின் முக மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியன உள்ளன. பூசையாளர் சதாசிவத்துடன் பேசும்போது அவர், கருவறையில் நாம் வழக்கமாகக் காணும் சிவலிங்க வடிவில் இறைவன் இல்லை என்றும் ஐந்து வேல்களே மூலவராகக் காட்சியளிப்பதாகவும் கூறினார்.

         கல்வெட்டுகள் எவையேனும் உள்ளனவா எனக் கேட்டபோது, பழமையான கல்வெட்டுகள் இக்கோயிலில் இல்லை என்றும் பிற்காலத்துக் கல்வெட்டு ஒன்று தூணில் இருப்பதாகவும் கூறி அவர் அந்தத் தூண் கல்வெட்டைக் காட்டினார். அக்கல்வெட்டு முகமண்டபத்தில் இருந்த ஒரு தூணில் இருந்தது. முகமண்டபம் சற்றே பழமையான தோற்றத்தில் கல் தூண்களோடு காணப்பட்டது. எல்லாத்தூண்களும் கருமை நிறத்தில் எண்ணை வண்ணம் (Oil Paint) பூசப்பட்டுக் கரிய நிறத்தில் தோற்றமளித்ததால். கல்வெட்டு எழுத்துகள் இருப்பது பார்வைக்குப் புலப்படவேயில்லை. தூணை மிக நெருங்கிப் பார்த்தபின்னர்தான் எழுத்துகள் புலப்பட்டன. ஆயினும், பார்க்கும் அந்த நிலையிலேயே எழுத்துகளைப் படிக்க இயலவில்லை. வெள்ளைச் சுண்ணம் பூசியபின்னரே படிக்கமுடிந்தது. கல்வெட்டு  நூற்றுப்பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 1897-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் சாலியவாகன சகாப்தம் 1819-ஆம் ஆண்டு, கலியுக சகாப்தம் 4998-ஆம் ஆண்டு, ஆங்கில ஆண்டு 1897 ஆகிய மூன்று ஆண்டுகளும் குறிக்கப்பட்டுள்ளன. இவை தவிர அறுபது ஆண்டுகள் நிறைந்த தமிழ் வட்ட ஆண்டான ஏவிளம்பியும் குறிப்பிடப்பெறுகிறது. ஆங்கிலத் தேதி மே மாதம் 30 எனவும், தமிழ்த்தேதி சித்திரை 19 எனவும் விளக்கமாகக் காலக்குறிப்பு உள்ளது.



             கல்வெட்டின் பாடம்       

               சாலியவாகன 
       சகாத்த வரு 1819
       கலியுக சகாத்த
       வரு 4998 இத
       ன் மேல்ச் செ
       ல்யாகி(வ)ருகு
       ர 1897 வரு மே
       மசம் 30
       தேதிக்கிச்ச
       ரியான தமி
       ள் ஏவி
       ளம்பி வரு
       சித்திரை
       19 தேதி பூரா
       ண்டம் பா
       ளையம் ப
       ரம சிவனு
       க்குக் கம்
       பம் உபயம
       க இலட்சுமி
       நாயக்கன்பா
       ளையம் குருவ
       ப்ப நாயக்கன்
       மகன் வெங்
       கிடசாமி (நாய)
       க்கனால் வெ
       ச்சது
       சிவமயம்

தூண் கொடையாக அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. அருகில் உள்ள இலட்சுமி நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த குருவப்ப நாயக்கன் மகன் வெங்கிடசாமி நாயக்கன் என்பவர் இத்தூணை (கம்பம்) அளித்துள்ளார்.
  
         கருவறையில் இறைவனாக ஐந்து வேல்களே வழிபடப்பெறுகின்ற தனிச்சிறப்பை இக்க்கோயில் பெற்றுள்ளது என முன்னரே பார்த்தோம். இது பற்றிப் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளாரும், பேரூர்த்தமிழறிஞர் முனைவர் ந.இரா. சென்னியப்பன் அவர்களும் கூறுகின்ற கருத்துகள் வரலாறு, சமயம், இலக்கியம், மக்கள் மரபு ஆகியனவற்றை இணைக்கும் பாங்குள்ளவை.
அவற்றில் சில :
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் கற்கருவிகளையும் உலோகக்கருவிகளையும் பயன்படுத்தி வந்துள்ளான். உலோகக் கருவிகளுள் இரும்பாலான வேல் அகழாய்வுகளில் பல இடங்களில் கிடைத்துள்ளது. அக்காலத்தில் வேல் சிறந்த கருவுயாகப் பயன்பட்டு இருக்கவேண்டும். பழங்கால ஓவியங்களில் கையில் வேல் வைத்துக்கொண்டிருப்பது போன்ற ஓவியங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் வெள்ளருகம்பாளையத்திற்கு அண்மையில் உள்ள வால்கறடு என்ற பகுதியில் கற்கால மனிதர்கள் வரைந்த  ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கையில் வேல் கொண்டு விலங்கின் மேல் எறிகின்ற நிலையில் ஓர் ஓவியம் உள்ளது. எனவே மிகப்பழங்காலந்தொட்டு வேல் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வருகிறது.

வேல் என்னும் சொல்லுக்கு ஏமம் (அதாவது பாதுகாப்பு) என்பது பொருள். விலங்குகளாலும் பகைவர்களாலும் வந்த தாக்குதலை, துன்பத்தை எதிர்கொண்ட இயல்பான ஆயுதமாக “வேல் விளங்கியது என எண்ணலாம். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்கு “வேலன் என்ற ஓர் பெயரும் உண்டு. வேலை வழிபடுவது வேலனை வழிபடுவதாகவும், முழு முதலான சிவப்பெரும் பொருளை வழிபடுவதாகவுமிருந்து வந்துள்ளது. உருவம், அருவம், அருவுருவம் என வழிபாடுகள் மூவகையின. இலிங்கத்திருமேனிகள் அருவுருவ வழிபாட்டில் அமைவன. ஐந்து வேல்களை நட்டுவைத்து வழிபாடாற்றும் அருவுருவ வழிபாட்டுப் பழமையான மரபு கொங்கு நாட்டில் பின்பற்றப்படுகிறது. இவ்வழிபாட்டினை “பரமசிவன் வழிபாடு என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஐந்து வேல் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களைக் குறிக்கும். ஐந்து முகங்களாவன : ஈசானம், தற்புருடம்(தத்புருஷம்), அகோரம், வாமம், சத்யோசாதம்(சத்யோஜாதம்). சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதையில் புகாரிலிருந்த பல கோயில்களைப்பற்றி அறிய முடிகிறது. அவற்றுள் ஒன்று வேற்கோட்டமாகும். அக்காலத்தில் வேல் தனியாக வைத்து வழிபடப்பட்டது என்பதற்கு இது சிறந்த சான்றாகும். வேல் வைத்து வழிபடும் பரமசிவன் வழிபாடு கொங்குநாட்டின் இருபத்தொரு இடங்களில் நடைபெறுகின்றன. அவற்றுள் பூராண்டம்பாளையம் பரமசிவன் கோயிலும் ஒன்று. 


இக்கோயிலின் இன்னொரு சிறப்பு இங்குள்ள சுடுமண் சிற்பங்களாகும். மண் சார்ந்த தொழில்கள் தமிழகத்தில் பண்டு தொட்டு இருந்துள்ளன. மட்பாண்டக்  கலையும், சுடுமண் சிற்பக்கலையும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சிறப்பான நிலையில் இருந்துள்ளன என்பதற்குப் பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கல் பதுக்கைகள், கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள் ஆகியனவற்றின் அமைவிடங்களில் நடத்தப்பெற்ற அகழாய்வுகளின் போது கிடைத்த கருப்பு சிவப்பு ஓடுகள், மட்கலங்கள், மற்றும் சுடுமண் சிற்பங்கள் ஆகியன சான்றுகளாய் நிற்கின்றன. கோவை போளுவாம்பட்டியில் அகழாய்வில் கிடைத்த சுடுமண் சிற்பம் குறிப்பிடத்தக்கது. முதுமக்கள் தாழிகள் மண்ணால் செய்யப்பட்டவையே. தமிழ் எழுத்துகளின் மிகப்பழமையான வரி வடிவமான “தமிழிஎனப்படும் “தமிழ் பிராமிஎழுத்துகள் மட்கலங்களில் கிடைத்துள்ளன. இக்கலையில் தேர்ந்தவர்கள் பழங்காலத்தில் “மண்ணீட்டாளர், கலம்செய் கோ என்றும்,  பின்னாளில் குலாலர், குயவர் என்றும் அழைக்கப்படுகின்றனர். சிற்பக்கலைக்குரிய செய்பொருள்கள் பத்தில் மண்ணும் ஒன்று என்பதைத் திவாகர நிகண்டு,
 
        கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
     மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
     கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
     பத்தே சிற்பத்தொழிலுக்குறுப்பாவன

என்று குறிப்பிடுகிறது.
தெய்வங்களுக்கு மண்சிலை வைத்து வழிபடுவது தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். சிறுதெய்வக்கோயில்களில் ஐயனார், முனியப்பன், மதுரைவீரன், மாரியம்மன், காளியம்மன், பேய்ச்சியம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வ உருவங்களும், குதிரை,யானை,காளை ஆகிய தெய்வ வாகனங்களும் பெரிய வடிவத்துடன் கலை நேர்த்தியுடன் செய்யப்படுகின்றன. இச் சுடுமண் கலை வடிங்களைத் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடனாக வாங்கிவைத்து வழிபடும் வழக்கம்  நாட்டுப்புற மக்களிடம் உள்ளது. குலாலர் தளம்  (இணையம்).
“கிராமத் திருவிழாக்களில் இடம்பெறும் புரவியெடுப்பு, அம்மன் திருவிழா போன்றவற்றுக்குத் தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட பிரதிமைகள் தயாரிக்கப்பட்டு நெருப்பிலிட்டுச் சூடு செய்யப்பெறும். இவை தொன்மையான தமிழ்க்கிராமங்களில் நிகழ்பவை. தமிழாசான் (இணையம்).

சுடுமண் சிற்பக்கலைகள் தமிழரின் கிராமியத் தெய்வங்களுக்குரியவையே தவிர ஆரியக்கடவுளருடையவை அல்ல.”  - சுகுணன் (வவுனியா).

          பூராண்டம்பாளையம் சிவன் கோயிலில் இத்தகு சுடுமண் சிற்பங்கள் இருப்பது சற்றே வியப்பை அளிக்கிறது. காரணம் குதிரை, யானை ஆகிய சிற்பங்கள் காவல் தெய்வங்களுக்கான கோயில்களிலும் அம்மன் கோயில்களிலும் பெரும்பாலும் காணப்படும். இச்சுடுமண் சிற்பங்கள் மிகப் பழமையானவை என்பதும் இவை கலை நுட்பத்துடன் அழகுறச் செய்யப்பட்டிருக்கின்றன என்பதும் எண்ணத்தக்கது. பெரிய வடிவத்தில் ஒரு யானையும் இரு குதிரைகளும்; சிறிய வடிவிலான இரு குதிரைகள். யானையின் குமிழ் போன்ற தலை முகடுகள், சிறிய கண்கள், சிறிய தந்தங்கள், பருத்த உடல், முதுகின்மேல் அம்பாரி எனப் பார்ப்பதற்கு அழகான காட்சி. துதிக்கை உடைந்த நிலையில் பிற்காலத்தவர் உடைந்த குறைப்பகுதியை நிறைவு  செய்ய முயன்றுள்ளனர். ஆனால் வடிவம் பொருந்தவில்லை. குதிரைகளின் தூக்கிய செவிகள், புடைத்த கண்கள், மூக்குத் துளைகள் என அழகான வடிவங்கள். சிற்பங்கள் அனைத்திலும் வேலைப்பாடுகளுடன் கூடிய நிறைய  அணிகலன்கள். பூசையாளர்,  இச்சிற்பங்கள் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறினார். காலம் கணிக்க இயலவில்லை. எனினும், இவை போன்ற பழமையான அரிதான சிற்பங்கள் கோவைப்பகுதியில் காண இயலா. இச்சிற்பங்களுக்கு அருகிலேயே பிற்காலச் சிற்பங்களின் தொகுப்பும் உள்ளது.

         அடுத்து, இக்கோயிலில் “ஐயன் கோயில்என்னும் பெயரில் ஒரு சமாதி வழிபடப்படுகிறது. அரசூரிலிருந்து இவ்வூருக்குச் சிறுவனாக வந்து சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர் இறையருள் பெற்று ஊர்மக்களின் நோயைத் தீர்த்துள்ளார். அவரே இங்கு வேல்களை நட்டுப் பூசை செய்யத்தொடங்கினார். இவ்வூரைச் சேர்ந்த எலமார் நாயக்கர் வழிவந்தோர் கோயில் அமைத்தனர். 
        















து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக