திங்கள், 3 ஆகஸ்ட், 2015கொங்கில் குரக்குத்தளி சுக்ரீசுவரர் கோவில்

(வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக வணிகர் பற்றிய கல்வெட்டு உள்ள கோவில்)

         திருப்பூருக்கும் ஊத்துக்குளிக்கும் இடையே அமைந்துள்ள சர்க்கார் பெரியபாளையம் என்னும் ஊர் பலபேருக்குத் தெரியாத ஓர் ஊராக இருக்கக்கூடும். அதுபோலவே, அவ்வூரில் அமைந்திருக்கும் சுக்ரீசுவரர் கோவிலும் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இக்கோவில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினரின் கண்காணிப்புக்குக் கீழ் அமைந்துள்ளது என்பதிலிருந்தே கோவிலின் முதன்மையையும் (முக்கியத்துவத்தை) வரலாற்றுச் சிறப்பையும் எளிதில் உணரலாம். இச்சிவன் கோவிலை வைப்புத்தலமாகத் தம் தேவாரத்தில் சுந்தரர் பாடியுள்ளார். கொங்கில் குறுப்பில் குரக்குத்தளியாய் என்பது சுந்தரரின் தேவாரப்பாடல் வரிகள். இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும். இது, மிக அழகான, தெளிவான கட்டடக்கலைக்குப் பெயர்பெற்ற  ஒரு கோவிலாகும். ஆரவாரமற்ற அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள இக்கோவில் கொங்குப்பகுதியில் உள்ளோர் தவறாது பார்க்கவேண்டிய இடமாகும்.

கல்வெட்டுச் சிறப்புகள்

         கல்வெட்டுச் சிறப்புகளைக்கொண்டுள்ள இக்கோவிலில் மொத்தம் பத்து கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் ஒரேயொரு கல்வெட்டு, கொங்குச்சோழனான வீரராசேந்திரன் காலத்தது. மற்ற ஒன்பது கல்வெட்டுகளும் கொங்குப்பாண்டியர்களின் கல்வெட்டுகளாகும். கொங்குச்சோழர் ஆட்சி முடியும் தறுவாயில் கோவில் கட்டப்பட்டுக்  கொங்குப்பாண்டியர் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலமாதலால், கொங்குப்பாண்டியரின் கல்வெட்டுகள் மிகுதியாக இருப்பதில் வியப்பேதுமில்லை. கி.பி. 1267 முதல் கி.பி. 1309 வரையிலான காலத்தில் கொங்குப்பாண்டியர் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. அதன்பின்னர், ஒரேயொரு கல்வெட்டு மைசூர் உம்மத்தூர் அரசரான வீரநஞ்சராயர் காலத்தில் தனிக்கல்லொன்றில் பொறிக்கப்பட்டதாகும். இதன் காலம் கி.பி. 1499.

கல்வெட்டுகளில் இவ்வூர், முகுந்தனூர் என்று குறிக்கப்பெறுகிறது. வீரசோழவளநாடு என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது. இறைவன் குரக்குத்தளி ஆளுடைய நாயனார் என அழைக்கப்படுகிறார். குரங்கு வழிபட்ட இடமாதலால் குரக்குத்தளி எனப்பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. சுக்ரீவன் வழிபட்டதால் சுக்ரீசுவரர் கோவில் எனப்பெயர் அமைந்ததாயும் ஒரு வழக்கு உள்ளது.

வணிகக்கல்வெட்டின் சிறப்புகள்   

(அ) பல்வேறு வணிகக் குழுக்கள்

         கோவிலின் அர்த்தமண்டப வடக்குச் சுவரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வணிகக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கொங்குச்சோழனான சுந்தரபாண்டியனின் நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 1289) பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு ஏறக்குறைய சுவர் முழுதும் பரவியுள்ளது. மொத்தம் 24 மிக நீண்ட வரிகளைக்கொண்ட ஒவ்வொரு வரியும் 130 அல்லது 140 எழுத்துகளையுடையதாய்    பெரியதொரு கல்வெட்டு. தென்னிந்தியா முழுதும் இயங்கிவந்த வணிகர்கள் ஒரு பெரிய வணிக அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதை இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். இவ்வணிகக் குழுக்களைச் சேர்ந்த அறுபத்துநான்கு பேர் இவ்வூரில் கூடி குரக்குத்தளி நாயனாருக்கு வைகாசித்திருவிழா எடுத்துக்கொண்டாட முடிவு செய்து அதற்கான செலவுகளுக்காக ஏற்றுமதி, இறக்குமதி, தலைச்சுமை போன்ற பண்டங்களுக்கு சுங்கம் விதித்து அப்பணத்தைக்கொண்டு இத்திருநாள் நடத்த முடிவு செய்தனர். தம் இசைவைத் தெரிவித்து 64 வணிகர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். இவர்களில்  நால்வர் வட்டெழுத்தில் கையொப்பமிட்டுள்ளனர் என்பது கல்வெட்டில் இருக்கும் செய்திகளில் குறிப்பிடத்தக்கதாகக்  கருதப்படுகிறது. மற்றவர்கள் தமிழ் எழுத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

         கல்வெட்டின் தொடக்கத்தில் இவ்வணிகர்களின் மெய்க்கீர்த்தி சொல்லப்படுகிறது. அரசர்க்கு இருப்பதைப்போல இவ்வணிக அமைப்புக்கும் சொந்தமாக ஒரு மெய்க்கீர்த்தி உண்டு. மெய்க்கீர்த்தி என்பது அரசர்களின் மெய்ப்புகழையும் வரலாற்றையும்  அவரது வீரச்செயல்களையும் புலப்படுத்தும். அரசரின் மெய்க்கீர்த்திபோலவே, வணிகரும் தமக்கென மெய்க்கீர்த்தியை வைத்திருந்தனர் என்பது சிறப்பானது. இம்மெய்க்கீர்த்தியில் இவர்களது தெய்வமாக ஐயபொழில்புரத்து பரமேச்வரி பட்டாரகி குறிப்பிடப்பெறுகிறது. ஐயபொழில் என்பது கருநாடகத்தில் இருக்கும் அய்ஹொளெ   நகரத்தைக்குறிக்கும். இங்குதான் வணிகர்களின் தலைமையகம் செயல்பட்டது. வணிக அமைப்பு “சமையம்”  என்று தமிழ்க்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறுகிறது. இச்சமையத்தில் எல்லா வணிகக்குழுக்களும் அடக்கம். பல்வேறு வகையான வணிகக்குழுக்கள் பற்றிய பெயர்கள் மேற்படி வணிகக்கல்வெட்டில் சுட்டப்பெறுகின்றன. அவை பதினெண்விஷயத்தார், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், பெருநிரவியார், ஐந்நூற்றுவர், நானாதேசிகள், சித்திரமேழிகள், செட்டிகள், நாட்டுச்செட்டிகள், நகரத்தார், மணிக்கிராமத்தார் முனைவீரக்கொடியார் ஆகியனவாகும். கல்வெட்டில், பதினெட்டு (18) வணிகர் பட்டணம், முப்பத்திரண்டு (32) வேளாபுரம், அறுபத்துநாலு (64) கடிகைத்தாவளம் ஆகியன பற்றிய குறிப்பும், பூம்புகார், திருவாரூர், கொடுங்கொளூர், எழில்பாச்சில் முதலான பன்னிரண்டு நகரங்கள் மற்றும் கொங்கில் ஒன்பது மாநகரங்கள் ஆகியன பற்றிய குறிப்பும் வருகின்றன. கொங்குப்பகுதியில் இருந்த அவ்வொன்பது மாநகரங்களில் குடிகொண்டு இனிது
உறைந்தனர் எனக்கல்வெட்டு வரி சொல்கிறது. வணிகர் தங்கியிருந்து வணிகம் செய்த பட்டணங்கள் மாடவீதிகளைக்கொண்டிருந்தன என்றும் கல்வெட்டு வரி தெரிவிக்கிறது. கடிகைத்தாவளம் என்பது காவலோடு கூடிய நிலையான சந்தையையுடைய வணிகநகராகும். அது போன்ற வணிகத்தாவளங்கள் அறுபத்துநான்கு இருந்துள்ளன. இத்தாவளங்களில் காவல் பணியில் ஈடுபட்ட வீரர்கள் “முனைஎன்னும் பெயராலும் “முனைவீரக்கொடியார்என்னும் பெயராலும் அழைக்கப்பட்டனர்.

         ஒருபக்கம் நிலையான இடத்திலிருந்து வணிகம் நடைபெற்றுள்ளதுபோல் வணிகப்பொருள்களை ஊர் ஊராக எடுத்துச்சென்று வணிகம் செய்துள்ளதையும் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். அவ்வகையான வணிகப்பொருள்கள் ஊருக்குள் வரும்போதும் ஊரைவிட்டு வெளியே போகும்போதும் வரிகள் வசூலிக்கப்பட்டுள்ளன. வணிகப்பண்டங்களை கழுதைகள் சுமந்தன. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: வணிகப்பண்டங்களைக் கழுதைமேல் ஏற்றிச் செல்லும் வணிகர் கூட்டம் “சாத்துஎன அழைக்கப்பட்டது. அவ்வகை வணிகர் “சாத்து வணிகர்என அழைக்கப்பட்டனர். அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடுஎன்பது பெரும்பாணாற்றுப்படை நூலின் வரியாகும். வணிகப்பண்டங்கள் மாட்டு வண்டிகளில் எடுத்துச்செல்லப்பட்டுப் பல்வேறு ஊர்களில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன. வண்டிகள் வரிசையாகச் சென்ற காட்சியைச் சிறுபாணாற்றுப்படை நூல் காட்டுகிறது. “நோன் பகட்டு உமணர் ஒழுகை  என்பது சிறுபாணாற்றுப்படை வரியாகும். உமணர் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட உப்பு வணிகர் மாடு (பகடு) பூட்டிய வண்டிகளில் ஒழுகையாகச் செல்வதை (ஒழுகை=சகட ஒழுங்கு) இவ்வரி குறிக்கிறது.) 
             
   வேளாபுரம் முப்பத்திரண்டு இருந்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுவதைப்பார்த்தோம். ஐந்நூற்றுவர் என்னும் வணிகக்குழுவினர் இருந்து வியாபாரம் செய்யும் துறைமுக ஊரே வேளாபுரமாகும். செட்டிகளும் செட்டிவீரபுத்திரர்களும் ஐந்நூற்றுவர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்த ஒரு குழுவினர் என அறிகிறோம். இவர்களில் செட்டிவீரபுத்திரர்கள் என்பார் வீரர் குழுவினர் ஆவர். கல்வெட்டில் மலைமண்டலத்துப் பல நகரங்கள்”  என்னும் தொடர் காணப்படுகிறது. மலைமண்டலம் என்பது கேரளப்பகுதியைக் குறிக்கும். இக்கல்வெட்டின் இறுதியில் சபை எடுத்த முடிவுக்கு இசைவு தெரிவித்துக் கையொப்பமிட்டவர்களில் நான்கு பேர் இம்மலைமண்டலத்தைச் சேர்ந்தவர் என்றும் இந்நாலவர் மட்டும் அவர்களது வழக்கப்படி வட்டெழுத்தில் கையொப்பம் இட்டுள்ளனர் என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.
நானாதேசிகள் என்போர் வெளி நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்தவர்கள் எனக்கருதலாம். இவர்கள் திசைஆயிரத்து ஐந்நூற்றுவர் எனவும் வழங்கப்படுவர்.

(ஆ) வணிகப்பண்டங்களும் அவற்றுக்கு விதிக்கப்பட்ட சுங்கவரிகளும்

·         ஏறுசாத்து, இறங்குசாத்து :  ஊரிலிருந்து வெளியூருக்குக் கொண்டு செல்லும் வணிகச் சரக்குகள் ஏறுசாத்து எனவும், வெளியூரிலிருந்து ஊருக்குள் கொண்டுவரப்படும் வணிகச்சரக்குகள் இறங்குசாத்து எனவும் வழங்கப்பட்டன. இவ்வகைச்சரக்குகளுக்குப் பொதி ஒன்றுக்குப் பணம் ஒரு மா, சுங்கவரியாக விதிக்கப்பட்டது. (மா என்பது ஒரு தங்க எடை)
·         புடவைக்கட்டு ஒன்றுக்கு பணம் இரண்டு மா.  (புடவை என்பது ஆடையைக்குறிக்கும்)
·         நூல் பொதி ஒன்றுக்கு பணம் இரண்டு மா.
·         பாக்கு பொதி ஒன்றுக்கு பணம் அரை மா.
·         பசும்பை ஒன்றுக்கு பணம் அரை மா. (பசும்பை-தோளில் எடுத்துச்செல்லும் மூட்டை அல்லது பை)
·         கருஞ்சரக்குகளுக்கு பணம் அரை மா. (கருஞ்சரக்கு-மிளகு போன்ற உலர்ந்த பொருள்)
·         யானைக்கு பணம் ஒன்று.
·         குதிரைக்கு பணம் அரை.
·         சந்தனக்கட்டுக்கு பணம் கால்.
·         விடு புடவை சமக்கட்டுகளுக்கு பணம் கால்.
·         சேக்களுக்கு பணம் ஒரு மா. (சேக்கள்-காளைகள்)
·         கிடாக்களுக்கு பணம் ஒரு மா. (கிடா-ஆண் ஆடு)

      

கையெழுத்திட்ட வணிகர்கள் :

         அறுபத்து நான்கு வணிகர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என முன்னரே பார்த்தோம். அவர்கள் யார் யார் எனக்கல்வெட்டு குறிப்பிடுவதைப்பார்ப்போம்.

 • சுந்தரப்பெருமாள் இவர் பதினெண்விஷயப் பெருநிரவியார் குழுவைச்சேர்ந்தவர்.
 • ஆட்கொண்ட நாயகர்
 • பிள்ளை நாட்டு செட்டி
 • ஏராளபுரத்து வியாபாரி கூத்தன் கண்ணன் (ஏராளபுரம் என்பது தற்போதுள்ள எர்ணாகுளமாகும்.)
 • உறையூருடையான் பெரியய்யதேவன்
 • ஏராளபுரத்து அல்லூருடையான் கயிலாயனான வணிகை மாதா
 • அருவியூரான் கலசைப்பாடி உடையான் காளை பெருமாள்
 • நாவலூர் உடையான் திருநிலை அழகியான் அதிரைவீசாடுவான்
 • திருமலை நாட்டு பெருமங்கலமுடையான் உலகன் உய்யவந்தான் சேரமான் தோழன்
 • திருவாலூர் இவணங்குடையான் தொண்டகநாயன் பெரிய்யநாயன்
 • வணிகையராதித்தன்
 • திருவாலூர் வியாபாரி கடுவங்குடையான் திருஅண்ணாமலைப்பெருமான்
 • பாண்டிமண்டலத்து சுந்தரபாண்டியபுரத்து சிரியப்பிள்ளை
 • வெள்ளூரான கோதண்டராமபுரத்து பால்வாய் உடையான் சொக்கனார்
 ( பால்வாய் உடையான் என்பது ஞானசம்பந்தரைக் குறிக்கும்   பெயராகலாம்) 
 • மீமலை அவையா உடையான் மாதுயரந்தீர்த்தான் சுந்தையன்
 • ஜயங்கொண்டசோழபுர முதலிகைப்பள்ளியுடையான் நீராலமுடையான் பொசிவாசிகொண்டான்
 • விக்கிரமசோழபுரத்து மாத்தூர் உடையான் பஞ்சநெதிவாணன்
 • பாண்டி நாட்டு சுந்தரபாண்டிபுரத்து திருஞானசம்பந்தன்
 • பாண்டிமண்டலத்து சீகல்லபுர நாட்டு குலசேகரபுரத்து பேர் இலத்துடையான் சீகயிலாயமுடையான் அந்தியும் பகலும் ஆடுவான்
 • ஏராளபுரத்து வியாபாரி மாணிக்கன் புந்தியில் உறைவான்
 • குலவாய் நாட்டு சுந்தரபாண்டியபுரத்து மங்கலமுடையான் ஓதாதுணர்ந்தான்
 • பாண்டிமண்டலத்து நகரம் தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்கசோழ பட்டணத்து வெளியாற்றூர் உடையான் உத்தமாண்டன் சொக்கனார்
 • பாண்டிமண்டலத்து நகரம் தெலிங்ககுலகாலபுரமான குலோத்துங்கசோழ புரத்து பாம்பையன் உடையான் அருள்பெற்ற நம்பியான ஆடும் பெருமாள்
 • கொடும்பாளூர் மணிக்கிராமத்து வெண்ணை சொக்கனான அழகிய்ய உடையான் பொன்னப்பிள்ளை
 • கொடும்பாளூர் மணிக்கிராமத்து தனபாலன்
 • பாண்டிமண்டலத்து நெடுபரமுடையான் சொக்கனார்
 • பாண்டிமண்டலத்து சுந்தரபாண்டியபுரத்து உய்யக்கொண்டான் பெரிய்ய நாயன்
 • தொண்டைமானார் இராகொபுரத்து வல்லியூர் உடையான் கூத்தன் உலகுதொழ நின்றான்
 • கூத்தன் உடையான்பிள்ளை திருவானன் ஆன திருஞானசம்பந்தன்
 • தாமரைப்பூண்டி உடையாந் சூரியனாந சம்பந்தப்பெருமாள்
 • கங்கைகொண்டசோழபுரத்து கொளம்பாக்கமுடையான் செநசுயன்
 • கருவூருடையான்
 • பதினெண்விஷயத்தாரில் உடையாந் திருவானைக்காவுடையாந்
 • கட்டியகையந்
 • அம்பலத்தாடுவார்
 • கருப்பூர் உடையாந் இளையாந் அம்பலத்தாடுவான்
 • இராசராச வளநாட்டுஅரசூருடையான் அடிகள் சமையச்சக்கரவத்தி நீலகண்டன்
 • பாண்டிமண்டலத்து ஐபொழில் விக்கிரமசோழபுரத்து வெண்டவளந்தான்
 • நீற்பழநியுடையான் அடிகள் ஆழ்வாந் பெருங்கருணைப்பெருமாள்
 • திரிபுவனமாதேவியுடையான் பெரியான்
 • பாண்டிமண்டலத்து கொடும்பாளூர் தம்பிராந் தோழன்
 • எறிபடநல்லூர் வடபாடியில் சேந்தமங்கலமுடையான் சிய்யன் சுந்தரப்பெருமாள்
 • சுந்தரசேகரபுரமான தேசிஉகந்த பட்டணத்து மருதநாதபுரமுடையான் சுந்திதேவப்பெருமாள் ஆன திருவிடையான்
 • வெள்ளூர் உடையான் பெரிய்யான் சொக்கனார்
 • அய்ந்நூற்றுவன் பெருநிரவியார் மணிய்ய சக்கரவத்தி
 • வடக்கிலூரான வீரபாண்டியபுரத்து வியாபாரி சேந்தன் சேந்தநாந அமரகோன்
 • உடைய நாயகர்
 • கதாபுரத்து கோட்டைக்கரைஉடையான் வண்ணக சூரியன் சக்கரவத்தி அழகியான்
 • பாண்டிமண்டலத்து தேசி ஏவணமுடையான்
 • தனசந்
 • கொடும்பாளூர் சேரமான் தோழன்
 • கொடும்பாளூர் மணிக்கிராமத்து வியாபாரி ஆண்டக்கன் சொக்கனார்
 • பாண்டிமண்டலத்து கீழ்க்குண்டாற்று வீரநாராயணபுரத்து திரு.. உடையான் அரங்குள .. பெருமாள்
 • ...ழாப்பள்ளியுடையான் கயிலைப்பெருமாள் மலைப்பெருமாள்
 • நீர்ப்பழனி உடையான் அரசன் மணியனான மாறி ஆடுவான் (மாறி ஆடுவான் என்பது கால் மாற்றி ஆடும் நடராசப்பெருமானைக் குறிப்பதாகலாம்)
 • பாண்டிமண்டலத்து இராசநாராயணபுரத்து  திருவெண்பூர் உடையான் தேவன் திருவானமாமலை உடையான்
 • கண்ணனூருடையான் பெரியான் அமரகோன்
 • சமைய மந்திரி அமர்கோன் (சமைய மந்திரி=கூட்டம் கூடுவோர்)
 • சாங்கியன் கீழையான் அறப்பித்தந் திருஅண்ணாமலை உடையானான சூரியன்
 • களத்தூர் கிழவன் இம்மைய் திருவான்கள....ப்பிள்ளை
 • கண்ணார் அமுதன் கூத்தன் தேவன் 
 • புழங்குடையான் சந்திரன் அழகியபாதன்

   ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியளர், கோவை.
அலைபேசி : 9444939156.

  

2 கருத்துகள்: